1967 நக்சல் பாரி எழுச்சிக்குப் பின் அதிலிருந்து சித்தாந்த வேறுபாட்டுடன் பிரிந்த நபர்களால் உருவாக்கிய கட்சிதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாநில ஒருங்கிணைப்பு குழு.

சாரு மஜும்தாரின் அழித்தொழிப்பு பாதையில் இருந்து முற்றாக வேறுபட்ட மக்கள் திரள் பாதை என்கின்ற பாதையுடன் செயல்படத் துவங்கியது.

 அந்தக் கட்சி தன்னை நக்சல்பாரிக் கட்சி என்ற நகை முரணுடனே தன் தோற்றத்தை தொடங்கி மீண்டும் அதே நகை முரணுடன் தற்போது மூன்றாக பிளவு பட்டிருக்கிறது.

"புரட்சித்தலைவி" இறந்த பிறகு அஇஅதிமுக என்ற கட்சி அமமுக, உள்ளிட்ட சில சிறிய பிரிவுகளாக பிரிந்ததைப் போல இந்தக் கட்சியும் தனது அரசியல் மூளைச் சாவுக்கு பின்னே பிளவு ஏற்பட்டு இருக்கிறது.

அதிமுக எனும் கட்சியுடன் இந்தக் கட்சியை ஒப்பிடலாமா? இது ஒரு புரட்சிகரக் கட்சி அல்லவா? என்று நீங்கள் நினைத்தால் இது புரட்சிகரக் கட்சியா? இல்லையா? என்பதை உங்களுடைய பார்வைக்கு விட்டு விடுகிறேன்.

சீனாவின் மக்கள் திரள் பாதை, சோவியத் யூனியனின் போல்ஷ்விக் கட்சி ஆகிய கட்சிகளின் படிப்பினைகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக கோர்த்து தன்னுடைய அரசியல் நிலைப்பாடாக அறிவித்திருந்தது.

இக்கட்சியின் மக்கள் திரள் பாதை அமைப்புகளாக மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட அதன் தோழமை அமைப்புகள் செயல்பட்டு வந்தன.

ஜார் ஆட்சியின் கொடுங்கோன்மையில் தலைமறைவாக இருந்து வேலை செய்த தோழர் லெனின் மற்றும் போல்ஸ் வீக் கட்சியின் நிலைப்பாட்டை அந்த சூழலோடு ஒப்பிடும்போது, இங்கு அப்படி ஒரு நிலைமை இல்லாதிருந்த போதிலும் தங்களுக்கு அப்படி ஒரு பேராபத்து இருப்பதாக நினைத்துக் கொண்டு அப்படி ஒரு "ரகசிய கட்சியை" கட்ட வேண்டும் என்ற "நல்ல நோக்கத்தோடு" ரகசியமாக இருப்பதாக நினைத்து மிக மிக ரகசியமாக மக்களுக்கே தெரியாத ரகசியமாக தன்னை மறைத்துக் கொண்டது .

அக்கட்சியின் பெயரை வெளியே சொன்னாலே தங்களை காட்டிக் கொடுப்பவர்கள் என்றும், போலீசின் ஏஜெண்டுகள் என்றும், இந்த ஊர் அறிந்த ரகசியத்தை வெளியில் சொல்பவர்களை உளவாளிகள் என்றும், இன்னும் பல என்றும் தூற்றியும் தன்னுடைய தோழர்களுக்கு அதைக் காட்டி புல்லரிப்பு ஏற்படுத்துவதிலும், பீதியை ஏற்படுத்துவதிலும் கெட்டிக்காரர்களாக வளர்த்தெடுத்தது. (மாற்றுக் கருத்துக் கொண்ட தோழர்கள் கட்சியில் இருந்து வெளியேறும் போதும் ,வெளியேற்றிய பிறகும் இவர்களுடைய இழிவான, கேவலமான பழிவாங்கும் படலம் தனிக்கதை)

பாராளுமன்றத்தை பன்றித் தொழுவம் என்று லெனின் சொன்னார், டூமாவை புறக்கணித்தார், சட்டமன்றம் பாராளுமன்றத்தில் அதிகாரம் இல்லை, தேர்தல் பாதை திருடர் பாதை என்று தொடங்கி எது எதுவெல்லாம் சீன கம்யூனிஸ்ட் கட்சியில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அப்படியே காப்பி அடிக்கப்பட்டதோ, கற்பிக்கப்பட்டதோ அதுவே தற்போது பேராபத்தாக முடிந்திருக்கிறது.

தேர்தல் பாதை பற்றி மாற்றுக் கருத்து சொல்லும் தோழர்களும், ஊர் அறிந்த மிக மிக ரகசியம் எனும் கோமாளித்தனத்தை சற்று குறைக்கக்கூறிய தோழர்களையும் ஆபத்தான நபர்களாக, கண்டுகொள்ளாமல் ஒதுக்குவதும், உளவாளிகள் என்று அவர்கள் மீது அவதூறு பரப்புவதும், கட்சியின் கொள்கைக்கு எதிராகப் பேசுகிறார் என்று வன்மம் கொள்வதும் என இவர்கள் 100 பூக்களை மலர வைத்த கதையை ஆயிரம் தோழர்களிடம் கேட்டு அறியலாம்.

அப்படி நூறு பூக்கள் பூத்துக் குலுங்கிய இந்த தோட்டத்தில் புதிதாக பூத்த பூ தான் மக்கள் அதிகாரம் என்ற ஒரு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் மாபெரும் செயல் தந்திரம். அதுவே தற்போது இவர்களின் அரசியலின் பிளவுக்கும், விவாதிக்கும் பொருளாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.

அந்த மாபெரும் விவாதம் என்னவென்று ஓரிரு வரிகளில் பார்க்கலாம்.

1) புதிய ஜனநாயகப் புரட்சி (சீன காப்பி)

2) மக்கள் அதிகாரம் (சோவியத் காப்பி)

புதிய ஜனநாயகப் புரட்சி என்பது புரட்சி செய்து அதிகாரத்தைப் பிடித்த பிறகு தற்சார்பு பொருளாதாரம் பிறகு சோசலிசம் கம்யூனிசம் என்று போகும் வழி.

2) மக்கள் அதிகாரம் (சோவியத் காப்பி)

அந்த புதிய ஜனநாயக புரட்சி செய்வதற்கு முன்பு கட்சி அல்லாத பிற மக்களையும் அமைப்பாக்கி சோவியத் போல ஒரு அதிகார அமைப்பைக் கட்ட வேண்டும், அதன் மூலம் புரட்சி செய்ய வேண்டும் என்கின்ற ஒரு வழி. (இந்த அமைப்பிற்கு வரக்கூடிய மக்கள் கம்யூனிசத்தை ஏற்றுக் கொண்டு வர வேண்டுமா? அல்லது மக்கள் அதிகாரத்தின் கட்டமைப்பு நெருக்கடி கட்டமைப்பு மக்களுக்கு எதிராக உள்ளது, அதற்கு எதிராக இந்த அமைப்பு என்று ஏற்றுக் கொண்டால் போதுமா என்ற வாதம் ஒரு புறம்)

இப்படி இந்த மாபெரும் புதிய கண்டுபிடிப்பை அலசி ஆராய்வதற்கு முன்பு இந்த ரெண்டு வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கான தற்போதைய அரசியல், பொருளாதார, சூழல் என்ன என்பதை ஆய்வு செய்யும் பொறுப்பு இக்கட்டுரையை படிக்கும் உங்களுடையது.

 நாளையோ நாளை மறுநாளோ அடுத்த வாரத்திலோ புரட்சியை நிகழ்ச்சி நிரலுக்கு உடனடியாகக் கொண்டு வர வேண்டிய நிலை இருப்பதாக எண்ணிக் கொண்டு இந்த "தத்துவ" சண்டையில் இறங்கி ஆளுக்கு ஒரு பக்கம் கரை சேர்ந்திருக்கிறார்கள்.

இந்த மாபெரும் புதிய கண்டுபிடிப்பு தத்துவத்தின் பின் விளைவாய் கட்டமைப்பு நெருக்கடி போல ஏற்பட்ட ஒரு விளைவு தான் இந்தக் கட்சியின், அமைப்பின் அரசியல் நெருக்கடி.

இவர்கள் நடத்தும் அமைப்புகளின் தலைமை உள்ளிட்டவை குறித்து மக்கள் மட்டுமல்ல அதில் இருக்கும் பல தோழர்களும் அறியாதது தான். பிரச்சனை அதிலிருந்து தொடங்குகிறது. கட்சியின் முடிவுகளுக்கு விரோதமாக முடிவெடுக்கிறார்கள் என்று மக்கள் திரள் அமைப்பின் முன்னணியாளர்களை கட்சியிலிருந்து அவர்கள் நீக்குவதும், முன்னணியாளர்கள் பேச்சாளர்கள் என்ற பிம்பத்தில் இருந்து கிடைத்த செல்வாக்கோடு அவர்கள் இவர்களை கட்சியை விட்டு நீக்குவதும் இப்படி மாறி மாறி நீக்கி இவர்கள் விளையாடுவது வெளியில் வந்து தற்பொழுது "அவர்கள் வந்தால் நாங்கள் வரமாட்டோம்" என்று சந்தி சிரிக்கத் தொடங்கி இருக்கிறது. இது பார்ப்பவர்களையும் சற்று குழப்பியும் இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த கட்சியில் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான தோழர் கணேசன் என்ற அன்பழகன் இறந்த பின்பு வினை செய் என்கின்ற இணையதளத்தில் வெளிவந்த இரங்கற்பா மிகக் கேவலமானது.

 அரசியலின் மொத்த சில்லறைத்தனத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு கட்சியையும் அமைப்பையும் மூன்றாக பிளந்திருக்கும் இந்த நபர்கள் மக்களுக்கும், தோழர்களுக்கும் தாங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்கின்ற பொறுப்புணர்வு சிறிதுமற்ற கூட்டமாக உருக்கொண்டுள்ளனர்.

எண்ணற்ற தோழர்களின் தியாகத்தாலும், தொழிலாளி வர்க்கத்தின் தியாகத்தாலும், மக்களின் அர்ப்பணிப்பாலும் வளர்ந்த ஒரு கட்சியும் அதன் மக்கள் திரள் அமைப்புகளும் தத்துவமற்ற நடைமுறைக்கு ஒவ்வாத அரசியலற்ற நாய்ச் சண்டையை நடத்திக் கொண்டிருப்பது இவர்களின் ஜனநாயகத்தையும், கருத்து சுதந்திரத்தை, மாற்றுக்கருத்தை மதிக்கும் பண்பையும், புரட்சியை இவர்கள் நேசிக்கும் லட்சணத்தையும் தோலுரித்துக் காட்டுவதாகவே இருக்கிறது.

ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் வெட்கப்படுவது போல் தெரியவில்லை. தயவுசெய்து சிறிதேனும் வெட்கம் கொள்ளுங்கள் ‘தோழர்களே’.

- விமல்

Pin It