டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், ஜே.சி.குமரப்பா இருவரும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள். பேராசிரியர் செலிக்மேனிடம் பயின்றவர்கள். இவர்கள் இருவரையும் ஒப்பீடு செய்ய இயலாது. ஆனால், இருவரும் இந்திய நாடு உருவாக்கத்தில் மிக முக்கியப் பங்கை ஆற்றியவர்கள். இருவருக்கும் கனவுகள் இருந்தன, கருத்தியல் இருந்தது. அவைகளை நிறைவேற்றுவதற்காக பல்வேறு நிலைகளில் களமாடியவர்கள். அவர்களின் மறைவுக்குப்பின் அவர்களின் முன்னெடுப்புக்கள் தொடர்ந்தனவா, அவைகளின் தாக்கங்கள் என்னென்ன? என்பதுதான் அடிப்படைக் கேள்விகள்.
இந்த இருபெரும் கருத்தியலாளர்கள் பற்றி அவர்களுடைய கருத்தியல்கள் பற்றி அறிவுத்தளத்தில் நிறைய விவாதித்துவிட்டோம். இனிமேலும் விவாதித்துக் கொண்டே இருப்பது, நேரத்தை வீணடிப்பதாகும். களம் காத்திருக்கிறது நமக்காக எனவே கருத்தியலை,
களச் செயல்பாடாக மாற்ற நாம் தயாராக வேண்டும். அதற்கான வாய்ப்புக்கள் நாடு சுதந்திரம் அடைந்தபோது கிடையாது. ஆனால் இன்று அளவுகடந்த வாய்ப்புக்கள் மக்கள் முன் நிற்கின்றன. அவைகளைப் பயன்படுத்த மக்களைத் தயார் செய்வதுதான் இன்றைய சூழலில் படித்த நடுத்தர வ்ர்க்கத்தின் மிக முக்கியமான கடமை. அதைச் செய்ய நாம் தயாராக வேண்டும்.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 75 ஆண்டுகளும் (அவசரகால நிலையிலிருந்த இரண்டு ஆண்டுகளைத்தவிர) நாம் மக்களாட்சியில்தான் இருந்து வருகின்றோம். சுதந்திர நாட்டில் மக்களாட்சியில் இருக்கும் நாம் அனைவரும் சுதந்திரக்காற்றை சுவாசிக்கின்றோமா? சமத்துவத்தை அனுபவிக்கின்றோமே? ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதி கிடைத்துவிட்டதா? அனைத்துத் தரப்பு மக்களும் மானுட வாழ்க்கை எப்படி வாழ வேண்டுமோ அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்று மானுட வாழ்க்கையை மதிக்கத்தக்க மரியாதையுடைய வாழ்வாக வாழ்கின்றோமா? நம் தேசத்தின் தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தின்போது சுதந்திரம் கிடைத்தால் நம் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறப்போகிறது என கனவுச் சித்திரத்தை வரைந்து மக்களிடம் வாக்குறுதிகளாகக் கொடுத்தார்கள், அவைகளெல்லாம் நடைமுறைக்கு சுதந்திர நாட்டில் ஆட்சியாளர்கள் கொண்டுவந்தார்களா? நம் தேசத்தை கட்டமைக்க கருத்துக்கொடைகளை வழங்கிய நம் மகான்கள் நவீன இந்தியாவை உருவாக்க கனவு கண்டார்கள், அந்தக் கனவு மெய்ப்பட நம் தலைவர்கள் ஓர் அரசமைப்புச் சாசனத்தை தயாரித்து நம்மிடம் அளித்தார்கள். அதுதான் நம் குடிமக்களை, அரசாங்கத்தை வழிநடத்தும் வழிகாட்டுப் பட்டயம்.அன்று இந்தியாவின் விடுதலைக்கும், இந்திய நாட்டின் உருவாக்கத்திற்கும், புதிய சமூகத்தை கட்டமைத்து உருவாக்குவதற்கு சிந்தனைக் கொடைகளைத் தந்து நமக்கு நம் தலைவர்களால் வழிகாட்ட முடிந்தது. தங்கள் தியாகத்தின் விளைவாக ஒரு நாட்டை உருவாக்கி இந்த நாட்டின் கடைக்கோடி மனிதனும் பயன் அடையுமாறு ஒரு மக்களாட்சிக் கட்டமைப்பை உருவாக்கித் தந்தார்கள். நம்மிடம் தந்த மக்களாட்சியைப் பயன்படுத்தி அரசியல் சாசனத்தை முறையாக மக்கள் பங்கேற்போடு நடைமுறைப்படுத்தியிருந்தால், மிகப்பெரிய சமூக பொருளாதார மாற்றத்தை இந்திய சமூகத்தில் உருவாக்கி இருக்க முடியும்.
இந்த 75 ஆண்டு காலத்தில் மக்களாட்சி உருவாக்க வேண்டிய விளைவுகளை சமுதாயத்தில் உருவாக்கியதா என்பதுதான் இன்றைய பிரதானக் கேள்வி. ஆம் உருவாக்கியிருக்கிறது, யாருக்கு என்றால் இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களில் 80 கோடி மக்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு மாற்றங்களைத் தந்துள்ளது. இந்த 80 கோடி மக்கள் யார்? இவர்கள் அனைவரும் இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் உணவுப் பாதுகாப்பை பெற்று வாழ்பவர்கள். ஆடு மாடு மேய்ப்பவர்கள், காடுகளை பாதுகாக்கும் ஆதிவாசிகள், விவசாயக் கூலிகள், சிறு விவசாயிகள், கைத்தொழில் செய்து பிழைப்போர், கடற்கரையைப் பாதுகாக்கும் மீனவர்கள், தெருவோரம் கடைகள் வைத்து பிழைப்பு நடத்துவோர், துப்புரவுத் தொழில் செய்வோர், சிறு தொழில் மற்றும் வணிகம் செய்வோரிடம் பணி செய்வோர், இந்தியாவில் கட்டுமானப் பணிகளான அடுக்குமாடி கட்டிடம் கட்டுதல், சாலை அமைத்தல், விமான நிலையம் அமைத்தல், வணிக வளாகங்கள் கட்டுதல், பணிகளில் புலம்பெயர்ந்து உடல் உழைப்பில் ஈடுபட்டிருப்போர், வீட்டுப் பணியில் ஈடுபடும் பெண்கள் அனைவரும் அடங்குவர்.
மேற்கூறிய சமூகங்களின் பொருளாதார வாழ்வு மேம்பட்டதா, அவர்கள் வாழ்வுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைத்தனவா? அவர்களுடைய சுய மரியாதை பாதுகாக்கப்பட்டதா? அவர்களுடைய வாழ்க்கை மதிக்கத்தக்கதாக இருக்கின்றனவா? அவர்களுக்கு இந்த மக்களாட்சி தர வேண்டிய பயன்களைத் தந்ததா? என்று வினவி ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவைகளை எல்லாம் தரவேண்டியது நம் அரசாங்கம்தான். அந்த அரசாங்கம் அந்தப் பயன்களைத் தந்ததா? என்பதுதான் கேள்வி. அந்தக் கேள்விக்கு பதில் தேடி முனைந்தால் தெளிவாக நமக்கு பதில் கிடைக்கிறது. அரசாங்கம் செயல்பட்டிருக்கிறது. அதை மறுக்க இயலாது. யார் வாழ்வு வளம் பெற்றிருக்கிறதோ அவர்களுக்குப் பணி செய்திருக்கிறது. 140 கோடி மக்களில் 60 கோடி மக்களுக்கு வளமை சேர்க்க உதவி செய்திருக்கிறது அரசாங்கம். மீதமுள்ள 80 கோடி மக்கள் அரசின் பயனாளிகள். இந்தச் சூழலில்தான் யாருக்குப் பணி செய்தது நம் அரசு? என்ற கேள்வியை முன் வைக்கின்றோம், 60 கோடி மக்கள் அரசாங்கத்தை தங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். 80 கோடி மக்களுக்கு அரசை எப்படிப் பயன்படுத்துவது? என்று புரியவில்லை. எனவேதான் இன்றும் அவர்கள் பயனாளியாக இருந்து வருகின்றனர்.
நம் தேசத்தைக் கட்டுமானம் செய்த தியாகத் தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழும் காலத்தில் நமக்குக் கிடைத்திருப்பதுபோல் அறிவியல் தொழில்நுட்ப வசதிகள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் கண்டதெல்லாம் வறுமை, ஏழ்மை, அறியாமை, அடிமைத்தனம், மூடத்தனம், சுரண்டல் இவைகள்தான். உதாரணமாக இந்திய அரசமைப்புச் சாசனத்தை உருவாக்குகின்றபோது உலகில் உள்ள 60 அரசமைப்புச் சாசனங்களைப் படித்து இரவு பகலாக அவைகளிலிருந்து குறிப்புக்களை எடுத்து அதை வைத்துக்கொண்டு இந்தியாவுக்கு ஏற்ற ஓர் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்தார் பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். இதுதான் நம் நாட்டு மக்களுக்குக் கிடைத்த முதல் விடுதலைக்கான ஆயுதம். இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தித்தான் நம் நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களும் குடிமக்களாக மாற வேண்டும். நம் வாழ்க்கைக்கு, மேம்பாட்டுக்கு, சுதந்திரத்திற்கு, அமைதிக்கு, மகிழ்ச்சி வழிகாட்டும் ஓர் ஒப்பற்ற ஆயுதம் அல்லது கருவி. நம் தலைவர்கள் கண்ட கனவான நவீன இந்தியாவை உருவாக்கவல்ல பலம் பொருந்திய ஆயுதம் நம் அரசியல் சாசனம். ஆனால், அதைப் பயன்படுத்தத் தேவையான ஒரு பார்வையும் திறமையும் மக்களிடம் வளர்க்கப்படல் வேண்டும். இந்த ஆயுதத்தை வெற்றுக்காகிதத்தில் எழுதி வைக்கவில்லை, மக்கள் உபயோகித்து அதிகாரப்படுத்தி தங்களை விடுவித்துக் கொண்டு வாழ வழிமுறை காட்டும் கருவியாக்கித் தந்தார்.
இவரின் உழைப்பைப் பற்றிக் கூறுகையில் அரசமைப்புச் சாசன வரைவுக்குழு உறுப்பினர் ஒருவர் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். “வரைவுக்குழு என்று ஒன்று உருவாக்கப்பட்டிருந்தாலும், அதில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் அந்தப் பணியினை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களிடம்தான் ஒப்படைத்திருந்தனர். அந்தக் குழுவில் இருந்த ஒருசிலரால் அந்தக் குழுவின் கூட்டங்களுக்குக்கூட வர இயலவில்லை. சிலர் கூட்டங்களுக்கு வந்தாலும் அந்தப் பணியை அண்ணல் அம்பேத்கரிடம்தான் ஒட்டுமொத்தமாக சுமத்தியிருந்தனர். ஆனால் அந்தப் பளுவைச் சுமந்து இந்திய நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களும் சுதந்திர நாட்டில் உரிமைகளுடன் மரியாதையுடன் வாழ அரசமைப்புச் சட்டத்தில் வழிகண்ட பெருமை அவரையே சாரும்” எனப் பதிவிட்டார்.
இந்திய அரசமைப்புச் சாசனம் இந்திய மக்களுக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய ஆயுதம் சமூக மாற்றங்களைக் கொண்டுவர. நாடு சுதந்திரம் அடைந்தவுடன் சாதாரண மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு அரசமைப்புச் சாசனம்தான். கல்வியறிவு குறைந்த நிலையில் இந்த அரசியல் சாசனத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வைப்பது என்பதுதான் மிகப்பெரிய சவாலான பணி. அதை எப்படிச் செய்ய வேண்டும்? அதை யார் செய்ய வேண்டும்? என்பதுதான் முக்கியமான கேள்வி. நம் நாடு சுதந்திரம் அடைந்து 47 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசித்தவர்கள் தென் ஆப்ரிக்க கருப்பின மக்கள். அந்த நாட்டின் அதிபராக இருந்த நெல்சன் மண்டேலா ஒரு கருத்தைப் பதிவு செய்தார். உலகில் விடுதலை அடையும் எல்லா இனங்களும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளக் கூறிய அறிவுரைதான் அது.
“ஒரு நாடு சுதந்திரம் பெறுவதற்கு மிகப்பெரிய விலையை மக்கள் கொடுத்தாக வேண்டும். அது தவிர்க்க இயலாது. அதை பெரும்பாலும் சுதந்திரத்திற்காகப் போராடும் நாட்டில் மக்கள் உணர்வு கொண்டு செய்து விடுவார்கள், ஆனால் அதைவிட மிக முக்கியமான பணி தியாகம் செய்து அடைந்த சுதந்திரத்தைப் பேணிக்காப்பது. அதற்கு சுதந்திரப் போராட்ட காலத்தில் போராடியதைவிட ஒரு மடங்கு அதிகமாகப் போராட வேண்டியிருக்கும். காரணம் இந்தப் போராட்டம் என்பது சுதந்திரம் அடைந்த நாட்டில் உள்ள சமூகங்களுக்குள் நடைபெறும் போராட்டம் என்பதால். அந்தப் போராட்டம் நடைபெறவில்லை என்றால் சுதந்திரம் அடைந்த நாட்டில் ஒருசில சமூகங்கள் அடிமை வாழ்வை வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். எனவே சுதந்திரம் அடைந்தவுடன் பொதுமக்களுக்கு தாங்கள் சுதந்திரம் அடைந்த நாட்டில் வாழ்வதற்கான சிந்தனைப் போக்கு என்ன என்பதை கற்றுத் தர வேண்டும்.
ஆதிக்கத்தில் அடிமைகளாய் வாழ்ந்தவர்கள் அடிமை மனோபாவம், அடிமைச் சிந்தனையுடன் காலகாலமாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்களை சுதந்திர நாட்டில் வாழ்வதற்கான புதிய சிந்தனையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு முதல்படி, அரசியல் சாசனத்தை சாதாரண மக்களுக்கு விளங்கும்படி எடுத்துக் கூறி அதுதான் அவர்களைப் பாதுகாக்கும் ஆயுதம் என்பதனையும் அந்த ஆயுதத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற முறைமைகளையும் புரிய வைக்க வேண்டும். எனவே இந்தப் பணிதான் முதலில் நடக்க வேண்டிய பணி” என்று வலியுறுத்தி தென்னாப்பிரிக்காவில் செயல்பட வைத்தார். அந்தப் பணி என்பது அவ்வளவு சுலபமான பணி அல்ல. வறுமையிலும், அறியாமையிலும், பஞ்சத்திலும், பிணியிலும் சிக்குண்ட மக்களிடம் இந்தப் பணியைச் செய்வது மிகப்பெரிய சவால் நிறைந்த பணி. ஏழை பணக்காரர் பேதமின்றி சுதந்திரப் போராட்டத்தில் எப்படி மக்கள் ஈடுபட்டார்களோ, அதே நிலையில், அதே உணர்வுடன் நாட்டை உருவாக்கி, அனைவருக்குமான மேம்பாட்டைக் கொண்டுவர மக்களாட்சியை கலாச்சாரமாக வளர்த்தெடுக்க ஒரு மக்கள் போராட்டம் நடத்தப்பட்டாலன்றி, சாதாரண மக்களால் சுதந்திரக்காற்றை சுவாசிக்க இயலாது.
இந்தியா சுதந்திரம் அடைகின்றவரை பொதுமக்களைத் தொடர்ந்து போராட்ட சிந்தனையில் கொண்டுவந்து செயல்பட வைத்தனர் நம் தலைவர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பொதுமக்களை மேம்பாட்டுப் பணிகளுக்குத் தயார் செய்வதை மறந்து, அரசைப் பெருமளவில் கட்டமைக்க செயல்பட்டு, மக்களை அரசாங்கம் தரும் நலன்களைப் பெரும் பயனாளிகளாகவே வைத்துக்கொள்ள முனைந்து, மக்களை சுதந்திர நாட்டில் தங்களால் உருவான அரசுக்கு பயந்து வாழ பழக்கப்படுத்திவிட்டனர். இதன் விளைவு சுதந்திரமாக வாழ பழக்கப்படுத்தாமல், சார்ந்து வாழும் ஒரு மனோநிலைக்கு மக்களைக் கொண்டுவந்து விட்டனர். இதனால் மக்கள் பெருமளவு சுயமரியாதை இழந்தவர்களாகவும், தன்முனைப்பு அற்றவர்களாகவும் மாறி அரசிடமிருந்து வெகு தூரத்திற்கு விலகி நின்று செயல்படும் மக்களாக தங்களை உருவாக்கிக் கொண்டு விட்டனர். அரசும், அதனால் பெரும் பயன்களை அடையும் வர்க்கமும் மக்களை அதிகாரப்படுத்துவதற்குப் பதிலாக அதிகாரமிழந்த பயனாளிகளாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டின. வறுமையிலும், பஞ்சத்திலும், பிணியிலும் உழன்ற மக்கள் அரசை நம்புவதைத்தவிர வழியற்று நின்றனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து பல நாடுகள் விடுதலையடைய ஆரம்பித்தன. விடுதலை அடைந்த நாடுகள் அனைத்தும் மக்களாட்சியைக் கடைப்பிடித்து அரசாங்கத்தை அமைக்கப் போகிறோம் என பிரகடனம் செய்து மக்களாட்சியை நடைமுறைப்படுத்திய நாடுகளில் சாதாரண மக்கள் எந்த நன்மையையும் பெற இயலாது சுதந்திர நாட்டில் அடிமைகளாய் வாழ்வதைக் கண்ட நெல்சன் மண்டேலா மக்களாட்சிக்கான மக்கள் தயாரிப்புப் பற்றி அந்தக் கருத்தை பதிவு செய்தார். சுதந்திரம் என்பதை எப்படிப் போராடிப் பெற வேண்டுமோ அப்படித்தான் சமத்துவத்தையும் நாம் போராடிப் பெற வேண்டும். சுதந்திரத்திற்கு போராடி சுதந்திரத்தை அடைந்து விட்டோம் என அமர்ந்து விட்டால், சமத்துவம் நம் மடியில் தவழாது. அதைப் போராடித்தான் பெற வேண்டும். இதைத்தான் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்திய அரசமைப்புச் சாசனம் நமக்கு அரசியல் சமத்துவத்தை மட்டும்தான் வழங்கியுள்ளது.
சமூக சமத்துவம் என்பது சுதந்திர நாட்டில் மக்களாட்சியின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதைப்பெற மக்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட பட்டியலின மக்கள் போராட வேண்டும் என்பதை தெளிவு படுத்திவிட்டுச் சென்றார். இது எதன் மூலம் நடைபெறும் என்றால், மக்களாட்சி என்பதை தேர்தல் அதன் மூலம் ஆட்சியைப் பிடிப்பதற்கான வழிமுறை என்று எண்ணாமல் மக்களாட்சி என்பது ஒரு கலாச்சாரம், இதை நாம் செயல்படும் அனைத்து இடங்களிலும் சமத்துவத்தை கலாச்சாரமாகக் கொண்டுவந்து செயல்பட வைக்க வேண்டும். அதற்கு அரசியல் சாசனத்தைப் பயன்படுத்த வேண்டும். அதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நம் அரசியல், ஆட்சி, ஆளுகை நிகழ்வுகள் அனைத்தும் அதற்கு நேர் எதிர் திசையில் பயணித்துவிட்டன. நம் அரசியல், சமூக, கலாச்சார மத அமைப்புக்கள் அனைத்தும் மக்களாட்சிப் பண்புகளை கலாச்சார விழுமியங்களாக மாற்றி செயல்பட வைப்பதற்குப் பதில் சமூகத்தில் இருந்த எதேச்சாதிகார பிரபுத்துவ மனோபாவத்தை உள்வாங்கிக் கொண்டுவிட்டன. இதன் விளைவுதான் நம் மக்களாட்சி என்பதை நிறுவனங்களில் சடங்குகளாக்கி வைத்துவிட்டு, அதன் செயல்பாடுகளில் பிரபுத்துவத் தன்மையைப் புகுத்தி விட்டோம். இந்த நிலையினை நம் நாட்டு மக்களாட்சி பற்றி ஆய்வு செய்த அத்தனை ஆய்வு அமைப்புக்களும், நிறுவனங்களும் தங்களின் அறிக்கைகள் மூலம் தெரிவித்து விட்டன.
இந்த நிலையை அப்பட்டமாக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் இந்திய அரசமைப்புச் சாசனத்தை உருவாக்கும்போது, இந்திய அரசுக்கு ஆலோசகராக இருந்த கிரன்வில் ஆஸ்டின். இந்தியாவின் 50வது சுதந்திர தினம் கொண்டாடும் தருணம் வந்தபோது அரசமைப்புச் சாசனத்தை சீராய்வு செய்வோம் என ஒன்றிய அரசு பிரகடனப்படுத்தியபோது கிரன்வில் ஆஸ்டின் ஒரு கருத்தை இந்துப் பத்திரிகையில் ஒரு கட்டுரையாக எழுதி முன் வைத்தார். இந்திய அரசியல் சாசனத்தை ஆய்வு செய்யாதீர்கள், அந்தப் பணி தேவையற்றது. நாம் உருவாக்கிய அரசியல் சாசனத்தில் உள்ள முக்கியமான பகுதிகள் நடைமுறைப் படுத்தப்பட்டனவா என்பதை மட்டும் ஆய்வு செய்து பாருங்கள். அதுவும் குறிப்பாக இந்திய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட சிறப்புப் பகுதிகள் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளனவா என்பதை மட்டும் ஆய்வு செய்யுங்கள் என வலியுறுத்தினார். இதற்கான காரணங்களையும் முன்வைத்தார். இந்த அரசியல் சாசனத்தில் அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட பல ஷரத்துக்களைப் பயன்படுத்தவே இல்லை நமது அரசும் சமூகமும் என்பதை எடுத்துக் காட்டினார்.
இந்த நிலை வந்துவிடக்கூடாது எனச் சிந்தித்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை பெறுவதற்காகத்தான் தன் வாழ்நாள் முழுவதும் போராடினார். அந்த மறுக்கப்பட்ட பிரதிநிதித்துவம், 1992 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உறுதி செய்யப்பட்டது. அந்த அரசாங்கம்தான் புதிய உள்ளாட்சி அரசாங்கம். இந்த அரசாங்கம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பகுதி IX மற்றும் IXஅ வில் சேர்க்கப்பட்டு விட்டது. இதன் விளைவு என்பது மத்திய மாநில அரசுகள்போல் ஓர் அரசாங்கமாக உள்ளாட்சி உருவாக்கப்பட்டுவிட்டது.
இந்திய அரசாங்கத்தில் எந்த உயர் பதவியிலும் ஒரு தாழ்த்தப்பட்டவர் இருந்து செயல்பட்டு விடலாம். அது குடியரசுத் தலைவர் பதவியாக இருக்கலாம், ஆளுநர் பதவியாக இருக்கலாம், மத்திய மாநில அமைச்சராக இருக்கலாம், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினராக இருக்கலாம். எந்த இடத்திலும் அந்தப் பதவிகளின் செயல்பாடுகளுக்கு பெரும் தடைகள் வருவதில்லை. ஆனால், சமூகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மக்கள் அரசாங்கமான உள்ளாட்சியில் மிகப்பெரிய சவால்களைச் சந்தித்து வருகின்றனர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கும் மக்கள் பிரதிநிதிகள். காரணம், இவர்கள்தான் அடித்தளத்தில் ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில் செயல்பாட்டுக் களத்தில் தலைவர்களாக நின்று அதிகாரத்தை எடுத்து செயல்பட வேண்டியவர்கள்.
அம்பேத்கர் கிராமங்களைப் பற்றி கூறிய கருத்து இன்றும் எவ்வளவு துல்லியமானது என்பதை நிரூபிக்கும் வகையில்தான் களம் இருக்கிறது என்பதைத்தான் இன்றைய சூழல் காட்டுகின்றது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது என்பது பெரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பு என்பது அந்த சமூகத்திற்கு மிகப் பெரிய மாற்றங்களைச் செய்யவல்ல வாய்ப்பு. காரணம், இந்த உள்ளாட்சி அமைப்புக்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியப்பணியே கடையேனுக்கும் கடைத்தேற்றம் செய்தல்தான். இதுவரை மத்திய மாநில அரசுகளின் திட்டங்களால் ஏற்றம் பெறாத விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைக்கான பொருளாதார மேம்பாடும், சமூக நீதியையும் கொண்டு வருவதற்கான, புதிய வாய்ப்பு. அந்தப் பணியும் கூட அந்த மக்களின் பங்கேற்போடு நடைபெற வேண்டும் என்பதை கட்டாயக் கடமையாக வகுக்கப்பட்டுள்ளது. இன்றுவரை கேரளத்தைத்தவிர வேறு எந்த மாநிலத்திலும் அது செயல்படுத்தப்படவில்லை. காரணம் கேரளத்தைத் தவிர மற்ற பெரிய மாநிலங்களிலுள்ள கிராமங்கள் என்பது ஆதிக்க சக்திகளின் பிடியில் இருக்கிறது என்பதால்தான். இன்றைய உள்ளாட்சிகள் எதற்காக அரசாங்கமாக உருவாக்கப்பட்டதோ அவைகள் நடைபெறவில்லை என்றால், அது அரசியல்சாசனத்தை மீறும் செயல்தானே. இதைப் பற்றி ஏன் யாரும் விவாதிக்க முன் வருவதில்லை. இது அரசமைப்புச் சாசனத்தைப் அவமதிப்பதாகும். அதைப் பற்றிய எந்தப் பார்வையும் நம் அரசியல் கட்சிகளுக்குக் கிடையாது. பட்டியலின மக்களுக்காகச் செயல்படும் கட்சிகளும் அமைப்புக்களும்கூட இதற்கான விவாதத்தை முன்னெடுக்கவில்லை என்பதுதான் நாம் பார்க்கின்ற ஒரு சோக நிகழ்வு.
தமிழகத்தில் இன்று 3411 கிராமப் பஞ்சாயத்துக்களில் பட்டியலின மக்களின் பிரதிநிதிகள் தலைவர்களாக இருக்கின்றார்கள். அதேபோல் கிராமப் பஞ்சாயத்துக்களில் 27,751 வார்டு உறுப்பினர்களாகவும், ஒன்றியப் பஞ்சாயத்தில் 104 ஒன்றியக்குழுத் தலைவர்களாகவும், 1597 ஒன்றியக்குழு உறுப்பினர்களாகவும், 8 மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களாகவும், 170 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களாகவும் பட்டியலினத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளாக அமைப்புக்களுக்கு ஆளுகை செய்ய வந்துவிட்டனர். இதைத்தான் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிரதிநிதித்துவம் எனக் கேட்டு மன்றாடினார். அது இன்று உள்ளாட்சியில் நடந்துள்ளது. இந்த எண்ணிக்கை என்பது சாதாரண எண்ணிக்கை அல்ல. மாற்றங்கள் செய்யவல்ல எண்ணிக்கை. இந்த எண்ணிக்கை மாற்றங்களைக் கொண்டுவரும். எப்பொழுதென்றால் அவர்களுக்குத் தரப்பட்டுள்ள அதிகாரங்கள் பற்றிய புரிதலும், அவைகளை கைக்கொள்ளத் தேவையான ஆற்றல்களும் வளர்க்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் நாம் சமூகத்தில் மாற்றங்களைக் காணமுடியும். ஆனால் இதற்கான புரிதல் நமக்கு வந்துவிட்டதா என்பதுதான் நம் கேள்வி. இந்த மாபெரும் வாய்ப்பு ஓசையில்லாமல் போராட்டம் இல்லாமல் நமக்குக் கிடைத்துள்ளது. இந்தப் புதிய வாய்ப்பைப் பயன்படுத்தும் ஆற்றலை நாம் வளர்த்துக் கொண்டு செயல்பட்டோமா என்பதுதான் நாம் நமக்குள்ளே கேட்கும் கேள்வி.
இந்த உள்ளாட்சி அமைப்பு அரசாங்கமாக உருவாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் நம் உள்ளாட்சியை சாலை போட வந்தது, சாக்கடை போக்க வந்தது, கொசு மருந்து அடிக்க வந்தது, குடிதண்ணீர் கொடுக்க வந்தது, தெருவிளக்கு பராமரிக்க வந்தது, குப்பை கூட்ட வந்தது என்றுதான் மக்களிடம் கூறி வருகின்றோம். இந்த உள்ளாட்சி என்பது அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவர வந்தது என்பது யாரிடமும் நாம் எடுத்துக்கூறவில்லை. அது மட்டுமே அல்ல இந்த உள்ளாட்சி என்பது மக்களாட்சியை ஆழப்படுத்துவதற்கு வந்தது என்பதை நாம் யாரிடமும் தெரிவிக்கவில்லை. அப்படி மக்களாட்சியை ஆழப்படுத்துவது என்றால் என்ன? அதை எப்படிச் செய்வது என்பதைப் பற்றிய புரிதலை நாம் யாரிடமும் கூறவில்லை. இது ஒரு பங்கேற்பு மக்களாட்சி, மக்களை அதிகாரப்படுத்த வந்தது என்பதையும் நாம் யாரிடமும் தெரிவிக்கவில்லை. உள்ளாட்சியில் குடிமக்கள் பங்கேற்பதன் மூலம் ஒரு புது விவாத மக்களாட்சியை உருவாக்கலாம் என்பதையும் யாரிடமும் தெரிவிக்கவில்லை. இவ்வளவு சக்தி கொண்ட உள்ளாட்சியை சாதாரணமாக்கி அதிகாரிகள் கையில் கொடுத்துவிட்டு, அவர்கள் தரும் நிதிக்கு பணி செய்யும் முகவர்களாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகிவிட்டனர். இதில் உள்ள வாய்ப்புக்களை நாம் பயன்படுத்தத் தவறுகின்றோம் என்ற உண்மையே பலருக்குத் தெரியவில்லை.
இதனைத் தொடர்ந்து அடுத்த மிகப்பெரிய வாய்ப்பு மேம்பாட்டுக்கான உரிமைகள் சட்டத்தின் மூலம் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. அரசமைப்புச் சாசனம் உருவான காலத்தில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறையில் ஷரத்து 37லிருந்து 51 வரை கொடுக்கப்பட்டிருந்த பல மேம்பாட்டுக்கான பணிகளை இன்று உரிமைகளாக்கித் தந்துவிட்டது மத்திய அரசு. இந்த உரிமைகளை மத்திய அரசு சாதாரணமாகச் செய்து தரவில்லை. ஐ.நா.போன்ற உலகளாவிய நிறுவனங்களின் அழுத்தத்தினாலும், ஏழைகளுடன் உரிமை சார்ந்து பணி செய்யும் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த அழுத்தத்தினாலும் இந்த முன்னெடுப்புக்களை மத்திய அரசு செய்தது. அவைகள் அத்தனையும் பீரங்கி போன்ற ஆயுதங்கள். வன உரிமைச் சட்டம் 2006, தகவல் உரிமைச் சட்டம் 2005, ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் 2005, உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013, கல்வியுரிமைச் சட்டம் 2009, வீதிகளில் வணிகம் செய்வோர் வாழ்வாதார பாதுகாப்புச் சட்டம் 2014, மனிதக் கழிவுகளை கையாளும் முறை ஒழிப்பு மற்றும் தொழிலாளர் மறு சீரமைப்புச் சட்டம் 2013, ஆதிவாசி மக்களுக்காக பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டம் 1996 (PESA ACT) பட்டியலின மக்கள் பாதுகாப்புச் சட்டம் 1989, மானுட உரிமை பாதுகாப்புச் சட்டம் 1993, பாலின சமத்துவச் சட்டம் 2020, வீட்டுப் பணிசெய்வோர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுச் சட்டம் 2010 என கட்டுக்கட்டாக சட்டங்களை உருவாக்கித் தந்துள்ளது அரசாங்கம். இதில் பல சட்டங்களுக்கு பெரும் நிதி ஒதுக்கீடு தந்து அதற்கான திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் ஏழைகளுக்கான பாதுகாப்பை இவ்வளவு சட்டங்கள் மூலம் தந்தது கிடையாது. அது மட்டுமல்ல இவ்வளவு பெருநிதியில் வறுமை ஒழிப்புக்கு திட்டம் போட்டு செயல்பட்ட நாடும் இல்லை. இதுதான் பல ஆய்வு நிறுவனங்களை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. இதில் ஆதிவாசி பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டம் 1996 மட்டும் செயல்படுத்தப்பட்டிருந்தால் ஒட்டுமொத்த ஆதிவாசி மக்கள் முழுச் சுதந்திரம் அடைந்திருப்பார்கள். அந்தச் சட்டத்தைக் கொண்டுவந்ததும் மத்திய அரசு, அதை நடைமுறைப்படுத்த வேண்டியதும் மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுனர்தான். இந்தச் சட்டத்தில் ஓர் அங்குலம்கூட நகரவில்லை என்பதுதான் நாம் பார்க்கும் மிகப்பெரும் சோகம்.
ஆனால், இவைகளை நடைமுறைப்படுத்த மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? அதில் எதாவது அரசியல் விவாதம் நடத்தப்பட்டதா என்று வினவிப் பார்த்தால் நாம் அரசியல் அறியாமையின் உச்சத்தில் இருக்கின்றோம் என்பது நமக்குத் தெரிந்துவிடும். இந்தச் சட்டங்களும் திட்டங்களும் கொண்டு வரப்பட்ட பிறகு உலகெங்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்தியாவின் மீது இருந்தது. அதாவது இந்தச் சட்டங்கள் மூலம், திட்டங்கள் மூலம் மிகப் பெரிய சமூக பொருளாதார மாற்றங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உருவானது. இந்தப் புதிய உள்ளாட்சி அரசாங்கமாக உருவாக்கப்பட்டு, அதில் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அத்துடன் மேம்பாடு என்பதை உரிமையாக சட்டத்தின் மூலம் தந்து, கட்டுக்கட்டான உரிமைகளை மக்களுக்குத் தந்தது மத்திய அரசு. அந்த உரிமைகளையெல்லாம் தொகுத்து “ஒடுக்கப்பட்டோரின் ஆயுதம்” (வெப்பன்ஸ் ஆப் தி அப்ரஸ்டு) என்ற ஒரு கையேட்டை டெல்லியில் உள்ள ஒரு குடிமைச் சமூக அமைப்பு ஒரு கையேடாக வெளியிட்டு, விளிம்புநிலை மக்களை அதிகாரப்படுத்த உதவின. இந்தக் கையேடு தயாரித்ததன் நோக்கமே விளிம்புநிலை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தயார் செய்வதற்குத்தான். அதற்கான பயிற்சிகளை விளிம்புநிலை மக்களுடன் பணி செய்யும் நிறுவனங்கள் அந்த மக்களுக்கு நடத்த வேண்டும் என்பதற்காகத்தான்.
இந்த மக்களிடம் இருக்கும் பயனாளிச் சிந்தனையைப் போக்கி, உரிமைகளை வென்றெடுக்கும் மனோபாவத்திற்கு மாற்ற இந்தப் பயிற்சிகள் உதவிடும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்தக் கையேடு. அது மட்டுமல்ல, உரிமை சார்ந்து செயல்படும் நிறுவனங்களுக்கு அதற்கான நிதியினையும் நல்க நிதி நிறுவனங்கள் தயாராகிய நிலையில், அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை தடுத்திட சந்தை அரசின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் விளைவு உரிமை சார்ந்து செயல்படும் பெரும்பாலான நிறுவனங்களின் வெளிநாட்டு நிதிபெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அதன் விளைவு அந்தக் கையேடு புத்தகமாக மாறி அலமாரிகளை அலங்கரித்தது. கடைசியில் அந்தப் புத்தகம் நூலகங்களுக்குச் சென்றுவிட்டன. அந்தப் புத்தகத்தை களத்தில் பார்க்க முடியவில்லை. இருந்தபோதிலும் பல பன்னாட்டு நிதி நிறுவனங்கள் உரிமைகள் சார்ந்து செயல்படும் அமைப்புக்களுக்கும், மக்களாட்சி விரிவாக்கச் செயல்பாட்டிற்கும், அதிகாரப் பரவலாக்கத்திற்கும் செயல்படக்கூடிய நிறுவனங்களுக்கு நிதியளிப்புக்கு பெரிய அளவில் முன்னெடுப்புக்களைச் செய்தன. இந்தச் செயல்பாடுகளில் பெரிய அளவில் தாக்கம் உருவாகவில்லை. காரணம் அரசாங்கம் கொடுத்த நெருக்கடிகளுக்கு பல நிறுவனங்கள் ஆளான சூழலில் ஒருசில நிறுவனங்கள் மட்டுமே செயல்பட முடிந்தது, எனவே இந்தச் செயல்பாடுகளால் பெரும் தாக்கத்தை நம்மால் பார்க்க முடியவில்லை. தகவல் பெறும் உரிமை பற்றி மட்டும் ஒருசில நிறுவனங்கள் வெளிநாட்டு உதவியின்றி பயிற்சிகளை நடத்தி வருகின்றன. அரசியலும், ஆளுகையும் சந்தைக்குள் தோய்ந்து இருந்ததைக் கண்ட நிதி நிறுவனங்கள் இந்தியாவை விட்டே வெளியேறி விட்டன.
காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தலைவர்களுக்கான பயிற்சியில் மட்டுமே சமூக நீதிக்கான பஞ்சாயத்து செயல்பாடு பற்றி உள்ளாட்சித் தலைவர்களுக்கு பிரத்தியேகப் பயிற்சியளிக்கப்பட்டது. அதேபோல் அதற்கான பிரத்தியேகக் கையேடும் தயாரிக்கப்பட்டு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்ல, பட்டியலின மக்களுக்கு எவ்வளவு திட்டங்களை அரசுத் துறைகள் வைத்திருக்கின்றன, அவைகளை எப்படிப் பெறுவது என்பதனை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. பட்டியலின மக்கள் பிரதிநிதிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட வைக்கப்பட்டது. இவ்வளவு வாய்ப்புக்களும் இவர்களுக்குப் பயன்பட்டதா எனப் பார்க்க வேண்டும் என எண்ணி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. மதுரையில் செயல்படும் ஆதாரம் (எவிடன்ஸ்) என்ற நிறுவனம் அந்த ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வு அறிக்கை விரிவாக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. அந்த ஆய்வில் 33 வகையான புறக்கணிப்பு முறைகளை சமூகம் தலித்துக்களுக்கு எதிராகக் கடைப்பிடிக்கிறது என்பதை படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. அதிலும் 13 முறைகளில் தீவிரமாக தலித்துக்களை மேல்தட்டு சாதிய வர்க்க மக்கள் புறக்கணித்துச் செயல்படுகின்றனர். தலித் இன மக்கள் பிரதிநிதிகளால் சமூக நீதி பற்றி எந்த முன்னெடுப்பையும் செய்ய இயலவில்லை
பஞ்சாயத்துகளில் என்பதையும் பட்டியலிட்டுள்ளது. தலித் அல்லாத தலைவர்களாலும்கூட தலித் பிரச்சினைகள் முன்னெடுக்கப்படுவதில்லை, முன்னெடுக்க முடியவும் இல்லை. பெரும்பாலான கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு சமூக நீதி பற்றிய பார்வையற்று செயல்படுவதுதான் விந்தையாக உள்ளது. சமூக நீதிக்கு இயக்கம் கண்டு, அந்த இயக்கத்திலிருந்து உருவான கட்சிகள் அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்த பிறகு தமிழகத்தில் இந்தச் சூழல் என்றால் மற்ற இடங்கள் எப்படி இருக்கும் என்பதை நம்மால் யூகிக்கக்கூட முடியவில்லை.
அடுத்து ஜே.சி.குமரப்பாவின் தற்சார்பு கிராமங்களை உருவாக்குவதற்கு இன்று என்ன வாய்ப்பு உள்ளது என்று பார்த்தால், அனைத்து வாய்ப்புக்களும் நம் முன் நிற்கிறது. மத்திய மாநில அரசுகள் திட்டமிடுவதை நிறுத்திவிட்டன. ஆனால் கிராமத்திற்கு திட்டமிடுதலை ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தையும் மக்கள் பங்கேற்போடு செய்திட வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது. அந்த கிராமத் திட்டமிடுதலை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு வழிகாட்டிக் கையேட்டை மத்திய அரசு தயாரித்துத் தந்துவிட்டது. கிராம மக்கள் எப்படிப்பட்ட கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ, அவர்களின் கனவுக்கு வடிவம் கொடுக்கத்தான் அந்த மக்கள் பங்கேற்புத் திட்டம். முதலில் அதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இன்று அப்படிப்பட்ட கிராமங்களை உருவாக்குவது மிக எளிது. அதற்கு பணம் தேவை இல்லை, புரிதல்தான் தலைவருக்கும் மக்களுக்கும் தேவை. இதைப் பற்றிய விவாதம் எந்த இடத்திலும் இல்லை.
ஒரு கிராமப் பஞ்சாயத்திற்கு தோராயமாக வருகின்ற ஐந்து கோடி ரூபாயில் அதற்குத் தேவையான மறுகட்டமைப்பை உருவாக்கி விடலாம் மிக எளிதில். அதற்கான புரிதல் நம் கிராமப் பஞ்சாயத்துக்களுடன் பணி செய்யும் தொண்டு நிறுவனங்களும் இல்லை, அரசுக்கும் இல்லை. அதற்காக அரசியலைக் கட்டமைக்க நம்மிடம் அரசியல் கட்சிகளும் இல்லை. அது மட்டுமல்ல, தரகர்களை, ஒப்பந்தக்காரர்களை தலைவர்களாக நம் அரசியல் கட்சிகள் எங்கும் உருவாக்கி மக்கள் பணத்தில் லாபம் பார்க்க கற்றுக் கொடுத்துவிட்டனர். பசுமைக் கிராமத்தை உருவாக்கவோ, தற்சார்புக் கிராமத்தை உருவாக்கவோ, தூய்மைக் கிராமத்தை உருவாக்கவோ, தீண்டாமை இல்லா சமதர்மக் கிராமத்தை உண்டாக்கவோ பார்வையற்றவர்களாக நம் பஞ்சாயத்துத் தலைவர்கள் இருக்கின்றார்கள். உயிரிக் கிராமங்களை உருவாக்குவதற்கு பசுமைக் கிராமங்களை உருவாக்குவதற்கு, சமதர்மக் கிராமங்களை உருவாக்குவதற்கு நிறைய கையேடுகள் இருக்கின்றன. அதைப் படிப்பதற்குக் கூட ஆட்கள் இல்லை. இவைகள் பற்றி ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் நம் இளைஞர்கள் விவாதித்தார்கள். அதன் பிறகு செயல் என்ன? ஒருசில இளைஞர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நான் பணியாற்றியபோது, மறைந்த காந்தியவாதி கே.எம்.நடராஜன் அவர்களின் முன்னெடுப்பில் காந்திய தொண்டு நிறுவனங்களை இணைத்து காந்தியக்கனவை கிராமப் பஞ்சாயத்துக்களில் நிறைவேற்ற முடியுமா என விவாதித்து ஒரு முன்னெடுப்பைச் செய்தோம். அதற்குத் தேவையான அத்தனை கையேடுகளையும் தயாரித்து அத்தனை நிறுவனங்களுக்கும் அளித்தோம். அந்த நிகழ்வினைக்கூட காந்திகிராம அறக்கட்டளை தான் செய்தது. காந்திகிராம அறக்கட்டளையைத் தவிர வேறு எந்த நிறுவனமும் அந்த முயற்சியைத் தொடரவில்லை என்பது அடுத்த சோகக் கதை. ஆனால் இன்றும் அதற்கான வாய்ப்புக்கள் இல்லாமலில்லை. நாம் முயலவில்லை. அதற்கு முதலில் களப்பணியாற்ற தயாராக வேண்டும். அந்தத் தயாரிப்பு என்பது முதலில் கருத்தியல் சார்ந்தது. அடுத்து உத்திகள் சார்ந்தது. பார்வையும், யுக்தியும், முனைப்பும் நமக்கிருந்தால் இனிமேல் விவாதம் தேவை இல்லை.
எங்கெல்லாம் நல்ல திறன்மிக்க தலைவர்கள் பஞ்சாயத்துக்களில் உருவாக்கப்பட்டனரோ அங்கெல்லாம் அந்தத் தலைவர்கள் அபார சாதனைகளை நிகழ்த்தியது மட்டுமல்ல, சமூக ஒற்றுமையையும் நிலைநாட்டியுள்ளனர். அந்தக் கிராமங்களில் பட்டியலின மக்கள்மேல் இருந்த புறக்கணிப்பு குறைய ஆரம்பித்துவிட்டது. அது மட்டுமல்ல, அரசாங்கத்தில் பட்டியல் இன மக்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டங்களை முறையாகச் செயல்படுத்தி பல அடிப்படையான வசதிகளை அவர்கள் வாழும் பகுதிகளில் உருவாக்கித் தந்துவிட்டனர். பொது வினியோகக் கடையை உருவாக்குவது, தெருவிளக்கு அவர்கள் வாழும் பகுதிக்குக் கொண்டு வருவது, சாலை அமைப்பது, பாலர் பள்ளி உருவாக்குவது, கழிப்பிடம் கட்டித் தருவது, வீடுகட்டித் தருவது, வாழ்வாதாரத்திற்கான வசதிகளை உருவாக்கிப் பாதுகாப்பது, தொழில்திறன் பயிற்சியளிப்பது போன்ற எண்ணற்ற பணிகளைச் செய்து தந்துள்ளனர். இவர்களைப் போன்று மற்றவர்களும் திறம்பட செயல்பட வேண்டுமென்றால் அவர்களுக்கு முறையான பயிற்சியினைத் தரவேண்டும். அந்தப் பயிற்சியை அரசு பயிற்சி நிறுவனங்களால் தர இயலாது. எனவே முறையான பயிற்சியை தலித் மேம்பாட்டுக்காகப் பணி செய்யும் தொண்டு நிறுவனங்கள் இந்தப் பணியினை செய்திட முடியும். அதேபோல் பல கிராமப் பஞ்சாயத்துக்கள் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து பசுமைக் கிராமங்களையும், சூழலியல் கிராமங்களையும் உருவாக்கி வருகின்றனர். இந்த சாதனையாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. கிராமத்திற்குத் தேவையான காய்கறிகளை கிராமத்திலேயே பயிர் செய்து அனைவருக்கும் இலவசமாகக் கொடுத்துவிடலாம், அதற்குத் தேவை ஒரு புரிதல் மட்டுமே எனக்கூறி ஒருவர் அந்தத் திட்டத்தை புத்தகமாகவே எழுதி பதிப்பித்து விட்டார். மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தும் பொதுத்தளத்திற்கு விவாதப் பொருளாக மாறிவர வேண்டும். இதை யார் செய்வது என்பதுதான் கேள்வி. இதில் நம் ஊடகங்களுக்கு கல்வி நிலையங்களுக்கு அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. இதற்கான ஒரு விவாதத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். அதுதான் இன்றைய தேவை.
- க.பழனித்துரை, காந்தி கிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)