சூத்திரன் ஆளும் நாட்டில் வாழநேர்வதைக் காட்டிலும் அவமானகரமானது வேறெதுவுமில்லை என்றும் அப்படியான நிலையில் அந்நாட்டை விட்டு வெளியேறிப் போகுமாறும் பிராமணனுக்கு பரிந்துரைக்கிறது மனுஸ்மிருதி. மனுவின் இத்தகைய போதிப்பை உள்வாங்கி வளர்ந்த ஒரு சமூகத்தில் தலித்களை தங்களது ஊராட்சித் தலைவர்களாக ஏற்கமாட்டோம் என்று சூத்திரச் சாதிகள் சொல்வதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. சாதியப்படிநிலையில் தன்னைவிடவும் தாழ்ந்தவரின் ஆளுகை குறித்து உயர்சாதியாய் தன்னைக் கருதும் ஒருவன் வெளிப்படுத்த வேண்டிய ஒவ்வாமைக்கும் இகழ்ச்சிக்குமான ஆதிக்கண்ணி மனுவயமாக்கத்தில் புதைந்திருக்கிறது.

எந்தநிலையிலும் தனக்கு சமமாக இன்னொருவரை ஏற்க மறுக்கும் பிராமண மேலாதிக்க மனப்பான்மை தான் உயர்வு தாழ்வு, புனிதம் தீட்டு, நல்லது கெட்டது ஆகிய கருத்தாக்கங்களை உற்பத்தி செய்து சமூகத்தின் புழக்கத்திற்கு விட்டது. அது பொதுவெளியில் பிற சாதியை சமமாக ஏற்க மறுப்பதைப்போலவே வீட்டுக்குள் பெண்களை சமமாக ஏற்கவும் மறுக்கிறது. அதிகாரத்தின் துணையோடு திணிக்கப்பட்ட இக்கருத்துக்கள் நாளடைவில் சமூகத்தின் பொது உளவியலுக்குள் ஆழப்படிந்து இயல்பான சமூக நடைமுறையாக மாறியிருக்கிறது. யாவருக்குள்ளும் சமத்துவம் என்கிற சிந்தனையை சாத்தியமற்ற ஒன்றாக நிறுவுவதில் பிராமணீயம் அடைந்த இவ்வெற்றியில்தான் சமூகநீதியின் தோல்விக்கான காரணங்களைத் தேடவேண்டியுள்ளது.

paraiஅரசாங்க வேலை, உயர்படிப்பு என நகரங்களில் உருவான புதிய அதிகாரமையங்களை நோக்கி பிராமணர்கள் கிராமங்களைவிட்டு வெளியேறியபோது அங்கு சாதியத்தை பாதுகாக்கிற பொறுப்பை அவர்களுக்கு அடுத்தநிலையிலிருந்த சாதிகள் கைக்கொண்டன. இதன் மூலம் பிராமணர்களின் ஸ்தானம் தங்களுக்கு கிடைத்திருப்பதாய் அவை பெருமிதம் கொண்டன. இந்த பெருமிதத்தை தக்கவைத்துக் கொள்ள அவை பிராமணர்கள் கையாண்ட இகழத்தக்க பல ஒடுக்குமுறை வடிவங்களையே கையாண்டன. 

ஊரின் பொதுச்சொத்துக்கள் மீதும் இயற்கைவளங்கள் மீதும் தலித்துகளுக்குரிய உரிமை மறுக்கப்பட்டது. பொதுவிடங்களில் நடமாடவும் நீர்நிலைகளைப் பயன்படுத்தவும் கோவிலில் நுழைந்து வழிபடவும் தலித்களுக்கு இருக்கும் சட்டரீதியான உரிமைகள் நடைமுறைக்கு வருவதை ஊர்க்கட்டுப்பாடு என்பதன் பெயரால் முடக்கினர். தங்களது சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தலித்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்புகிறபோது தமது அரசியல் பொருளாதார செல்வாக்குகளால் அடக்குமுறைகளை ஏவி ஒடுக்கினர். விவசாய கூலிவேலைகளையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள தலித்துகள் தவிர்க்கமுடியாமல் நிலவுடைமையாளர்களான ஆதிக்கசாதியினரையே அண்டி வாழவேண்டியுள்ளது. எனவே தங்களுக்கு இழைக்கப்படுகிற அவமானங்களை அவர்கள் எதிர்க்கத் துணிவதில்லை. இன்றைய அவமானங்களுக்கு எதிராகக் கிளறும் ஆவேசம் நாளைய இருப்பை எண்ணி தணிந்துவிடுகிறது. 

ஊரென்றும் சேரியென்றும் பிளக்கப்பட்ட சமூகத்தில் இப்படி அப்பட்டமாக சாதித்துவேஷம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும்போதேதான் ஊராட்சித் தேர்தல்களில் இடவொதுக்கீடு வருகிறது. ஊராட்சிகளின் அதிகாரம் தலித்கள் கையில் ஒப்படைக்கப்படுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை சாதிவெறியர்களால். எனவே முடிந்தமட்டிலும் தங்களது ஏவலுக்கு கட்டுப்பட்ட தலித்களை பொம்மைத் தலைவர்களாக்கினர். கட்டுப்படாதவர்களை அவமதித்தனர். புறக்கணித்தனர். 

பல ஊராட்சி மன்றங்களில் தலித் தலைவர்கள் நாற்காலியில் உட்காருவதைக்கூட அவர்கள் அனுமதிப்பதில்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் ஊழியர்களும்கூட ஒத்துழைப்பதில்லை. எனவே தமிழ்நாடு முழுவதும் தலித்களுக்கு ஒதுக்கப்பட்ட 2959 ஊராட்சிகளில் பாப்பாப்பட்டி கீரிப்பட்டி நாட்டாமங்கலம் கொட்டாச்சியேந்தல் நான்கில் மட்டுமே பிரச்னை இருப்பதுபோலவும் மற்ற கிராமங்கள் சாதி பாகுபாடற்ற சமத்துவக்குடிகளாக மாறிவிட்டதென்றும் யாரும் நினைத்துக் கொள்ளவேண்டியதில்லை. ஏதோவொரு வகையிலான தீண்டாமைவெறி எங்கும் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது என்கிற புரிதலோடுதான் இந்த நான்கு பஞ்சாயத்துக்களின் பிரச்னையை அணுகவேண்டியுள்ளது. 

தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில், குற்றப்பரம்பரையென அறிவிக்கப்பட்டு காவல் நிலையங்களில் தினந்தோறும் கைரேகை பதிக்குமாறு இழித்துரைக்கப்பட்ட ஒரு சாதி, தன் சொந்தத் துயரத்திலிருந்து படிப்பினை பெற்று சாதியமுறைக்கு எதிரான சமூகமாக தன்னை வளர்த்துக்கொண்டிருக்க வேண்டும். அதுதான் அத்தகைய இழிவுக்கெதிராக பெருங்காமநல்லூரில் போராடிச் செத்த 17 பேருக்கும் செய்திருக்கக்கூடிய அஞ்சலியாகவும் இருந்திருக்க முடியும். ஆனால் உன்னை உயர்ந்தவனாக காட்டிக்கொள்ள மற்றவர்களை தாழ்நிலைக்கு வீழ்த்தவேண்டும் என்கிற பிராமணீயச் சிந்தனையின் செல்வாக்கிற்கு பலியாகி, சாதிப்பித்தும் போலிப்பெருமிதமும் கொண்டு அதைப் பாதுகாக்கும் அழிவுச்சக்தியாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

இந்தநாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரன் சுந்தரலிங்கத்தின் பெயரோடு ஒரு பேருந்து தங்கள் ஊருக்குள் வருவதைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாதபடிக்கு அதன் சாதிவெறி மூர்க்கமடைந்துள்ளது. இந்தவெறியை பாதுகாத்துக் கொள்ளும் உத்தியாக அது பல்வேறு கலவரங்களை திட்டமிட்டு நடத்தியுள்ளது. 1899 ல் சிவகாசியிலும் 1957ல் முதுகுளத்தூரிலும் அது நடத்திய சாதிக்கலவரங்கள், வன்முறையில் அதற்கிருக்கும் நாட்டத்தை வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்தின. 

தொண்ணூறுகளில் தலித் மக்களிடையே ஏற்பட்ட எழுச்சியை காணச் சகியாமல் தென்மாவட்டங்கள் முழுவதையும் கலவரத்தில் மூழ்கடித்தது அச்சாதி. தொடர்ந்து தலித்களை தன் கட்டுக்குள் கீழ்ப்படுத்தி வைத்திருப்பதையே பெருமையாக கருதும் ஒருசாதி, தலித்களை தங்களது ஊராட்சித் தலைவராக அவ்வளவு லகுவில் ஏற்றுக்கொள்ளுமா என்ன? தடுக்கமுடியாத ஆத்திரத்தில்தான் மேலவளவில் முருகேசனைக் கொன்றனர். உயர்சாதிக்காரனுடன் இழிசாதிக்காரன் சரியாசனத்தில் அமர்ந்தால் அவனது அந்த ஆணவச்செயலுக்காக சூடுபோடுதல், நாடுகடத்தல், பிருஷ்டத்தில் வெட்டுக்காயம் ஏற்படுத்துதல் ஆகிய தண்டணைகளை வழங்கவேண்டும் என்று சாதிவெறியர்களின் ஆழ்மனத்தில் பதுங்கி மனுஸ்மிருதி வழிகாட்டும்போது கொலைசெய்வதானது சாதிப்பெருமை காப்பதற்கான வீரச்செயலாகிறது. 

பாப்பாப்பட்டி உள்ளிட்ட நான்கு கிராமங்களில் ஆதிக்கசாதிகள் வேறு உபாயங்களை கைக்கொண்டு தலித்களிடம் அதிகாரம் செல்லவிடாமல் தடுத்துவருகின்றன. ஒரு தலித்தை தங்களது ஊராட்சித் தலைவராக ஏற்க மறுப்பதற்கு தீண்டாமையைத் தவிர வேறெந்த காரணத்தையும் சொல்லமுடியாது அவர்களால். தீண்டாமையை இவ்வளவு வெளிப்படையாக கடைபிடிக்கும் அவர்கள் மீது சட்டப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயங்குகிறது அரசு. (ஒருவேளை குறிப்பிட்ட சாதியின் பெரும்பான்மை ஆதரவு ஆளுங்கட்சிக்கு இருப்பதாலும்கூட இந்த கண்டுங்காணாத போக்கை அரசு கடைபிடிக்கக்கூடும். ஆனால் இதற்கு முன்பு மாநிலத்தை ஆண்ட கட்சியும் கூட இப்பிரச்னையில் ஆக்கப்பூர்வமாக தலையிடவில்லை என்பதுதான் உண்மை.) 

தேர்தல் தேதியை அறிவிப்பது, நடத்துவது, ராஜினாமாவை ஏற்பது, மீண்டும் தேர்தல் நடத்துவது என்பது மட்டுமே ஒரு அரசின் வேலையாக இருக்கமுடியாது. தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் விரும்பாத பலவிசயங்களை சட்டங்களின் மூலம் திணிக்கிற அரசு, இவ்விசயத்தில் சம்பிரதாயமான நடவடிக்கைகளில் மட்டுமே தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் சமூகநீதியைக் காப்பதில் அதற்குரிய அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது. 

எதன்பேராலும் ஒரு குடிமகனுக்குள்ள சமவுரிமை மறுக்கப்படுவதை ஒப்புக்கொள்ளாத அரசியல் சட்டத்தின் பெயரால் ஆளும் அரசானது இக்கிராமங்களில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதை தனது தலையாய பணியாக கருதி செயலாற்றவேண்டும். சுதந்திரமானதொரு தேர்தலை நடத்தி தேர்ந்தெடுக்கப்படுபவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்து அவர்கள் சட்டப்படியான தமது பொறுப்பை நிறைவேற்றத் தேவையான பாதுகாப்பை வழங்கும் அரசியல் உறுதிப்பாடு அரசுக்கு தேவை. 

ஆனால் சமூகநீதியைக் காக்கும் அரசியல் விருப்புறுதியை தமிழக அரசானது தானாக வெளிப்படுத்தப் போவதில்லை. ஆதிக்கச்சாதிகளின் சாதிவெறியை ஒடுக்குவதில் அதற்குரிய ஊசலாட்டங்கள் பிரசித்தமானவை. மட்டுமல்லாமல் தேர்தல் நெருங்கிவரும் இச்சமயத்தில் தனது ஆதரவுத்தளங்களில் முக்கியமான ஒன்றை பகைத்துக் கொள்ள ஆளுங்கட்சி அஞ்சும். ஆளுங்கட்சியின் குறுகிய நலன்களுக்காக தலித் மக்களின் சுயமரியாதையையும் சட்டப்படியான உரிமைகளையும் சாதிவெறியர்களுக்கு காவுகொடுக்கும் கொடுமை தொடரத்தான் போகிறது. எனவே, இப்பிரச்னையில் நியாயமானதொரு நிலைபாட்டை மேற்கொள்வதுடன் அதை செயல்படுத்தவும் தமிழக அரசின் மீது வலுவாக தாக்கம் செலுத்தக்கூடிய இயக்கம் கட்டப்பட வேண்டும். 

ஆனால் அப்படியொரு மகத்தான இயக்கம் உருவாகி பாப்பாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் பிரச்னையில் நாட்டின் கவனத்தை ஈர்ப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இப்பிரச்னையில் நாங்களும் கவனம் செலுத்தாமலில்லை என்று காட்டிக்கொள்ளும் பொருட்டு அடையாளப்பூர்வமாக அறிக்கைவிடும் சம்பிரதாயங்களைக்கூட பல கட்சிகள் செய்ய மறுக்கின்றன.

அப்படியிப்படி என்று இன்னும் ஒரு வருசத்தை தாட்டிவிட்டால் பத்தாண்டு சுழற்சி முடிந்ததென்று இப்பஞ்சாயத்துகள் பொதுத்தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுவிடுமானால் பிரச்னை தீர்ந்துவிடும் என்று அவை நம்புகின்றன. ஆனால் பிரச்னைகள் இந்த நான்கு கிராமங்களோடு முடிந்துவிடப் போவதில்லை. அடுத்து அறிவிக்கப்படவிருக்கும் தனித்தொகுதிகளிலும் இதே நிலை ஏற்படக்கூடும். தலித்களை போட்டியிடவிடாமல் தடுப்பதற்கும் அவர்களை தலைவர்களாக ஏற்க மறுப்பதற்கும் புதிய தொகுதிகளின் சாதிவெறியர்களுக்குத் தேவையான ஊக்கம் ஏற்கனவே ரத்தத்தில் கலக்கப்பட்டுள்ளது. 

பிரச்னையின் அபாயத்தை உணர்ந்து அக்கிராமங்களின் தலித்களுக்கு ஆதரவாக களத்திலிருப்பவை விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சி ஆகியவை மட்டுமே. சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களில் சமத்துவத்திற்கான போராட்டத்தில் இயல்பான கூட்டாளிகளாய் ஒருங்கிணைந்து களமிறங்க வேண்டிய இக்கட்சிகள் இப்போதைக்கு தத்தமது தனிமேடைகளில் நின்று சக்திக்குட்பட்ட வகையில் உண்ணாவிரதம் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் என கண்டன இயக்கங்களை நடத்துகின்றன. எனினும் நிலைமையில் முன்னேற்றமில்லை. புதிய அணுகுமுறைகள் தேவையாகின்றன. 

இன்றைக்கு எப்படிப் பார்த்தாலும் சாதி என்பது அரூபமான ஒரு நம்பிக்கை தான். இந்த நம்பிக்கை ஒருவனது சொந்த அறிவிலிருந்தோ ஆய்விலிருந்தோ தேர்ந்து கொள்ளப்படுவதல்ல. பிறப்பின் அடிப்படையில் கற்பிதமாய் ஒட்டவைக்கப்படுவதுதான். அதன்மீது ஒருவன் கொள்கின்ற பற்றே மற்றவர்களை தாழ்ந்தவர்களாகவும், தனக்கு சமதையானவனாக இன்னொருவனை ஏற்க மறுப்பதில்தான் தனது உயர்வு இருப்பதாகவும் கருதத் தூண்டுகிறது. தேவையற்ற இந்த நம்பிக்கையிலிருந்து உருவாகும் பெருமிதம் போலியானது என்பதை ஒருவன் உணரத் தலைப்படுகிறபோது அவன் சாதியத்திற்கு எதிரானவனாகிறான். 

எனவே தம்மை உயர்ந்த சாதியென்று கருதிக்கொண்டு தலித்கள் மீது தீண்டாமையை பிரயோகிக்கும் ஒருவனிடம் வெறும் கண்டனம் மட்டுமே மனமாற்றத்தை உருவாக்கிவிட முடியாது.

சாதிவெறியை, தீண்டாமையை ஒருவன் கைவிடும் முடிவானது மிகமிகத் தனியாக அவனுக்குள் நடைபெறும் மனப்போராட்டத்தினூடே கண்டடைய வேண்டிய இலக்காக இருக்கிறது. இம்முடிவை ஒருவன் எய்துவதற்கு மனநோயாளியை கையாளும் ஒரு வைத்தியனின் சகிப்புத்தன்மையோடு நாம் அவனை அணுகவேண்டியுள்ளது. அவனது நம்பிக்கை எத்தனை பிற்போக்குத்தனமானது என்பதையும் அதன்பேரால் இதுவரை நிகழ்த்தப்பட்ட காரியங்கள் யாவுமே நாகரீகச் சமூகத்தின் நடவடிக்கைகளிலிருந்து வெகுவாக பின்தங்கியவை என்பதையும் பக்குவமாக உணர்த்தவேண்டியுள்ளது.

சாதியத்தின் தோற்றத்தை, சாதியமுறையால் அவனது மூதாதையர்கள் பட்ட அவமானங்களின் வரலாறை, அவனும் அவனது மூதாதையரும் பிராமணீயச் சூதுக்கு இரையாகி சாதிவெறியால் நிகழ்த்திய மனிதவுரிமை மீறல்களையெல்லாம் அவனது மனசாட்சியை உலுக்கும் வண்ணம் உரையாட வேண்டியுள்ளது. தலித் மக்களை சமமாக பார்க்க மறுக்கும் அவனும் அவனைச் சார்ந்தவர்களும் நாகரீகச் சமூகத்தின் கண்களுக்கு காட்டுமிராண்டிகளாக தெரியும் கேவலத்தையும்கூட அவன் பெருமிதம் என்று ஒப்புக்கொள்கிறானா என்று கேட்பதற்கு அவனை நெருங்கவேண்டியுள்ளது. எதிர்நிலையிலிருந்து எந்த உரையாடலும் சாத்தியமற்றது என்பதிலிருந்தே இந்த அணுகுமுறை முன்வைக்கப்படுகிறது.

1. சகமனிதனை சமமாக மதிக்கும் பண்புடைய கலை இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள், திரைக்கலைஞர்கள், தொழிலதிபர்கள், கட்சித்தலைவர்கள், தொழிற்சங்கத்தினர், மாணவர்கள், மக்கள் ஒற்றுமையை விரும்பும் விதிவிலக்கான சில மடாதிபதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனிதவுரிமை ஆர்வலர்கள் மட்டுமல்லாது சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற பல்வேறு துறைசார் குடிமக்களையும் உள்ளடக்கிய தொண்டர்குழு ஒன்றை அமைப்பது. இக்குழு நான்கு கிராமங்களிலும் முகாமிட்டு களப்பணியாற்றும். 

parai2. தலித்துகளை ஊராட்சித் தலைவர்களாக ஏற்கவேண்டிய ஜனநாயகப் பண்பை வலியுறுத்தியும் தீண்டாமை உடனடியாய் கைவிடப்பட வேண்டிய குற்றம் என்பதை உணர்த்தியும் இக்கிராமங்களில் தலித்தல்லாதவர்களிடம் பிரச்சார இயக்கம் நடத்துவது. குழுவின் நோக்கத்தோடு உடன்படும் ஜனநாயக எண்ணம் கொண்ட உள்ளூர் நபர்களை கண்டறிவதும் அவர்களையும் தொண்டராக இணைத்துக் கொள்வதும் இயக்கத்திற்கு வலுவூட்டும். 

3. வழக்கமான பிரச்சார இயக்கங்களைப் போல மேடைபோட்டு பொத்தாம்பொதுவாக பேசி கலைவதாக இல்லாமல் இக்கிராமங்களின் ஒவ்வொரு தனிமனிதனையும் அணுகவேண்டும். அவனது சாதிப்பிடிமானத்திற்கான காரணங்களை அறிந்து அதை பலவீனப்படுத்தும் உரையாடலை நிகழ்த்தவேண்டும். இந்த நாடே தங்களை கவனிக்கிறது என்கிற கூச்சத்திலும் குற்றவுணர்ச்சியிலும் கணிசமானதொரு பகுதியினரிடம் மனமாற்றம் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு மனமாற்றம் கொண்டவர்களை பாதுகாப்பதை அரசின் பொறுப்பாக்க வேண்டும். 

4. நான்கு கிராமங்களின் குடிமக்கள் ஒவ்வொருவரையும் சந்திப்பதற்கான காலஅளவு அதிகபட்சமாக மூன்றுமாதங்கள் போதுமானது. அதற்குப் பிறகு, அரசு தேர்தலை நடத்தவேண்டும். 

5. பிரச்சார இயக்கத்திற்கு பிறகு நடைபெறும் தேர்தலில் இக்கிராமங்களின் தலித்தல்லாதவர்களது மனநிலையில் மாற்றமில்லாது போகுமானால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அரசாங்கம் கடுமையான வழிமுறைகளை கையாளவேண்டும். தேர்தலை சீர்குலைக்க முயன்றவர்களை, தொடர்ந்து தீண்டாமைக் குற்றமிழைப்பவர்களாக கருதி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் தண்டிக்கவேண்டும். இக்கிராமங்கள் சமூகத்தின் எல்லாத் தொடர்புகளிலிருந்தும் துண்டித்து ஒதுக்கப்படவேண்டும். தீண்டாமை என்பதன் வலியை அச்சாதியும் அறிவதற்கு இதைவிடவும் வேறு மார்க்கமில்லை. சமூகத்தின் ஆதாரவளங்களை பகிர்ந்துகொள்வதில் அவர்களுக்கிருக்கும் உரிமை முற்றாக தடை செய்யப்பட வேண்டும். 

6. சுழற்சிமுறையில் தலித்துகளுக்கு இத்தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நோக்கம் நிறைவேறவில்லையாதலால் அடுத்த பத்தாண்டுகளுக்கும் இவற்றை தனித் தொகுதிகளாகவே நீட்டித்து முறையாக தேர்தல் நடத்தி தலித்துகளுக்கு அதிகாரப்பகிர்வு கிடைப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். 

இந்த யோசனையெல்லாம் ஆகக்கூடிய காரியமா தோழரே என்ற முணுமுணுப்பு கேட்கிறது. ஆனாலும் வேறு மார்க்கமிருப்பதாய் தோன்றவில்லை. தீர்வு கிடைக்காத பிரச்னையை வெவ்வேறு கோணங்களில் அணுகிப்பார்க்க வேண்டியுள்ளது. விடாமுயற்சியும் சாதியத்தை வேரறுக்கும் அரசியல் உறுதிப்பாடும் அவமானங்களைத் தாங்கிக்கொண்டு பணியாற்றும் பக்குவமும் கொண்டவர்கள் எத்தனைப் பேர் முன்வரப் போகிறார்கள் என்கிற கவலையும்கூட தென்படுகிறது. 

ஆனால் அதற்காக தளர்ந்துவிட முடியாது. சாதியத்திற்கெதிரான போராட்டத்தில் இடதுசாரிகளுக்குள்ள அக்கறையை சிறுமைப்படுத்தி அவர்களை குற்றம் சாட்டுவதையே தலித்களுக்கு செய்யும் பெருந்தொண்டாக கருதும் அதியறிவுஜீவிகளின் ஆத்திரமூட்டலுக்கு பலியாகாத சகிப்புத்தன்மையோடு நாம் பணியாற்ற வேண்டியுள்ளது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று பேசத்தொடங்கும் கிறிஸ்தவனைப்போல, இடதுசாரிகள் மோசம் என்ற வார்த்தைகளோடு தனது தினப்படி வேலைகளைத் தொடங்கும் அவர்கள், தலித் அமைப்புகளும் இடதுசாரி அமைப்புகளும் ஒன்றிணைந்துவிடாமல் பார்த்துக்கொள்வதாய் தங்களது எஜமானனுக்கு செய்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகவே நம்மை ஏசுகிறார்கள்.

செய்வது இன்னதென்று தெரியாத அந்த அப்பாவிகளுக்காக நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் பொருட்படுத்த வேண்டியவர்கள் அல்ல. நகர்ப்புறங்களில் மறைந்துவிட்டதாக போக்குக் காட்டிக்கொண்டு தகுதி திறமை சுத்தம் புனிதம் போன்ற கருத்தாடல்களின் வழியே வெகுநுட்பமாக புழங்கும் தீண்டாமை, பாப்பாப்பட்டி போன்ற கிராமங்களில் மிக வெளிப்படையாக தெரிகிறது என்கிற புரிதலோடு சாதியத்திற்கு எதிரான புதிய அணிகளை உருவாக்குவதும் இயங்குவதும்தான் பொருட்படுத்த வேண்டிய உடனடிப்பணிகள்.

(செம்மலர் ஜூலை இதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்)
Pin It