தமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒப்பிடுகின்றபோது நாட்டார் வழக்காற்று மரபுகள் தாமாகச் சரிந்து பழமையை இழந்து வரும் பகுதிகளில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தில் நிற்கிறது. இதற்கு அடிப்படையான காரணங்கள் சிலவற்றை ஊகிக்கலாம்.

இந்த மாவட்டம் 1684 சதுர கிலோமீட்டர் பரப்பை உடையது. இங்கு மலைகளும் சமூகக் காடுகளும் அதிகம் மக்கள் வாழிடங்களின் நெருக்கமும் அதிகம். பெரும்பாலான கிராமங்கள் நகரத் தாக்கம் உடையவை. படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் உடைய மாவட்டம். இந்துக்கள் அல்லாதோரின் எண்ணிக்கையும் இங்கு அதிகம்.

இந்த மாவட்டம் 1956ஆம் ஆண்டு வரை கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இங்கே மறுமலர்ச்சிக் கிருத்தவர்களின் தாக்கத்தால் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அடிமை ஒழிப்பு (1853), மேலாடைக் கலகம் (1859), கோவில்களை அரசு கையகப்படுத்தியது (1810), கோவில்களில் எல்லா ஜாதியினருக்கும் நுழையும் உரிமை (1936), கோவில் தேவதாசி முறை ஒழிப்பு (1930), எனப் பலவற்றைச் சொல்லிக் கொண்டு போகலாம்.

ஆங்கிலக் கல்விமுறையும் அலோபதி மருத்துவமும் தமிழ் வழி அறிவியல் நூல்கள் அச்சானதும் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலேயே இந்த மாவட்டத்தில் நிகழ்ந்து விட்டன. இவை போன்ற சமூக மாற்றங்கள் இந்த மாவட்டத்தின் நாட்டார் வழக்காற்றியல் நிகழ்வுகளைப் பாதித்திருக்கின்றன. beggersஇந்த மாவட்டத்தில் அய்யா வைகுண்டர், ஸ்ரீ நாராயண குரு ஆகிய இரு ஞானிகளும் மக்களிடம் செய்த பிரச்சாரம், விழிப்புணர்வை உண்டாக்கியிருக்கிறது. நாராயண குரு, நாகர்கோவிலின் ஒரு பகுதியாகிய கோட்டாற்றில் வாழும் ஈழுவ சமுதாய மக்களின் வாழ்க்கை வட்ட சடங்குகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.

கோட்டாறு மக்களிடம் வழக்கில் இருந்த நாட்டார் தெய்வ வழிபாட்டு மரபை ஒழிப்பதில் நாராயண குரு தீவிரமாக இருந்திருக்கிறார். நாட்டார் தெய்வ உருவங்களைக் குருவே முன் நின்று உடைத்திருக்கிறார். இவை தொடர்பான சடங்குகளை நிகழ்த்த வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் பேய் நம்பிக்கையை உடைத்திருக்கிறார். இதன் காரணமாக நாட்டார் தெய்வவழிபாடு தொடர்பான கலைகளும் வழக்காறுகளும் இச்சமூகத்தில் இல்லாமல் ஆகிவிட்டன.

அய்யா வைகுண்டர், நாட்டார் தெய்வ வழிபாட்டைத் தீவிரமாகக் கொண்டிருந்த நாடார் மக்களின் ஒரு பிரிவினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதன் காரணமாக அய்யாவழி (அய்யா வைகுண்டரைப் பின்பற்றியவர்கள்) மக்களிடம் நாட்டார் தெய்வ வழிபாடு மறைய வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனால் இவ்வழிபாடு தொடர்பான சடங்குகளும் கலைகளும் அழியத் தொடங்கின.

இப்படியாக இந்த மாவட்டத்தில் மறைந்துபோன வழக்காறுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

நாட்டார் கலைகள்

சுவரோவியம்

ஓலைச்சுவடிகளில் ஓவியம்

தாள்களில் ஓவியம்

துணிகளில் ஓவியம்

துணிகளில் வரையப்பட்ட ஆவணம்

வழக்காற்றில் புழங்கிய சொற்கள்

புழங்கு பொருட்களும் பண்பாடும்

மருத்துவமும் உணவுப்பழக்கமும்

வாய்மொழிப் பாடல்கள்

மரபு சார்ந்த தொழில்நுட்பங்கள்

நாட்டார் வழிபாடுகள் சடங்குகள்

யாசகராக வந்த கலைஞர்கள்

நாட்டார் விழுமியங்கள்

ஆகியன.

இந்தக் காரணங்களில் இந்த மாவட்டத்திற்கு வந்த யாசகர்களான புலம்பெயர் மக்கள் இங்கே வராமல் இருந்ததற்கு உரிய சூழ்நிலை எழுபதுகளில்தான் உருவானது. இங்கே வந்த யாசகர் பற்றி பார்ப்போம்.

படக்காரன் என்பவரை நாஞ்சில் நாட்டினர் காவடிப் பண்டாரம் என்று அழைத்திருக்கிறார்கள். படக்காரன் என்ற பண்டாரம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பண்டாரம் ஜாதியினரின் உட்பிரிவினர் ஆவர். பெரும்பாலும் நாடோடியாகவே வாழ்ந்தனர். இவர்களில் சிலர் முருகன் கோவில்களில் காவடி எடுக்கும் சடங்குகளில் பங்குகொண்டு சன்மானம் பெற்றிருக்கின்றனர்.

இந்தப் பண்டாரங்களில் பெரும்பாலோர் தென் மாவட்டங்களில் காவடி எடுத்துக்கொண்டு நாடோடிகளாய் சுற்றியலைந்து யாசகம் பெற்று வாழ்ந்திருக்கின்றனர். இவர்களில் பெண்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்பது பற்றிய தகவல்களைச் சேகரிக்க முடியவில்லை.

படக்காரன் ஆகிய இந்த காவடிப்பண்டாரம் தோளில் பெரிய காவடி வைத்திருப்பார்; காவி வேட்டி மட்டும் உடுத்திருப்பார். படக்காரரின் காவடி பார்ப்பதற்கு பிரம்மாண்டமாய் எடை கூடியதாய் தோன்றினாலும் அதை எளிதாகத் தூக்க முடியும். படக்காரன் அதை லாகவமாக இடது தோளில் வைத்திருப்பார்.

காவடியின் உள்ளேயும் வெளியேயும், ஓலை அல்லது துணியில் வரையப்பட்ட ஓவியங்கள் இருக்கும். இந்த ஓவியங்கள் இயற்கையாகக் கிடைத்த பொருட்களாலும் மூலிகைச் சாயங்களாலும் வரையப்பட்டவை. ஒவ்வொரு படத்தின் கீழும் ஒரு தலைப்பு இருக்கும். எல்லா படங்களும் நரகத்தின் காட்சிகள்தாம். அதர்மம் செய்பவர் நரகத்தில் படும் அவல காட்சிகளே படத்தின் மையம்.

காவடியில் உள்ள படத்தின் காட்சிகள் கருட புராணத்தில் வரும் செய்திகளின் அடிப்படையில் வரையப்பட்டவை: அந்தப் படங்களின் தலைப்புகள்

தாமஸ்ர நரகம் (அடுத்தவர் மனைவியை அபகரிப்பது)

அந்தாமிஸ்ரம் (மனைவி கணவனை வஞ்சிப்பது)

ரெளரவம் (அடுத்தவரின் சொத்தை அபகரிப்பது)

மகா ரெளரம் (குருவை நிந்தித்தல்)

கும்பி பாகம் (சுயநலத்துடன் இருத்தல்)

காலசூத்திரம் (பெற்றோரைக் கவனிக்காமல் இருத்தல்)

அதிபத்திரம் (தெய்வத்தை நிந்தனை செய்தல்)

இப்படியான காட்சிகள் காவடி படத்திலிருக்கும்.

படக்காரன், ஊரின் முச்சந்தியிலும் சந்தையிலும் மக்கள் கூடுகின்ற இடங்களிலும் காவடியைச் சுமந்து கொண்டு நின்று பாடுவார். இவர் பாடுவதைக் கேட்க என்றே கூட்டம் கூடிவிடும். பெரும்பாலும் வயதானவர்கள் இவரது பாட்டைக் கேட்க வருவார்கள் பொறுமையாக நின்று கேட்பார்கள்.

காவடிக்காரர். சித்தர் பாடல்களையும் குறிப்பாக பாம்பாட்டி சித்தர், சிவவாக்கியார் பாடல்களையும் ராகத்தோடு பாடுவார். சித்திர புத்திர நாயனார் அம்மானை நூலில் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கும் அமராவதி செட்டியின் கதைப் பாடலிலிருந்து சில வரிகளைப் பாடுவார்.

கிங்கிலியர் அமராவதிச் செட்டிச்சியைச் செக்கிலில் இட்டு துன்புறுத்தும் காட்சியைத் திரும்பத் திரும்ப பாடுவார். இடையிடையே சில வாய்மொழி பாடல்களையும் பாடுவார். “காயமே இது பொய்யடா; காற்றடைத்த பையடா. மாயனார் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா." என்னும் பாடலை பலமுறை பாடுவார், இவர் பாடும் பாடல்கள் வாழ்க்கை நிலையாமை, நரகம் பற்றிப் பேசுவதாக இருக்கும்.

படக்காரர் காவடியுடன் தெருவில் பாடிச் செல்லும்போது யாரிடமும் யாசிக்க மாட்டார். ஒரு தெருவில் பாடி முடித்துவிட்டு அடுத்த தெருவின் முனையின் ஆரம்பத்தில் நின்று பாடுவார். சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்பே தன் பாட்டை நிறுத்தி விடுவார்தான் வசிக்கும் இடத்திற்கு காவடியுடன் போய்விடுவார். பொழுது சாய்ந்ததும் யாசகத்துக்கு வருவார்.

காவடிக்காரர் யாசகத்துக்கா வீடுகளுக்கு வரும்போது காவடியைத் தூக்க மாட்டார். அப்போது அவரது கையில் சிறிய கோணிப்பை இருக்கும். யாசகம் பொருள்களை அதில் வாங்கிக்கொள்வார். அவர் யாசகமாகப் பெறுவது அரிசியும் தேங்காயும்தான். சில சமயம் நாட்டுக் காய்கறிகளும் பழங்களும் கிடைக்கும் அபூர்வமாக சிலர் காசு கொடுப்பார்கள்.

பண்டாரம் சுத்த சைவம்; அவரே சமைப்பார். சமைத்த உணவை யாசகமாக வாங்கவே மாட்டார். கொடுப்பதும் இல்லை. இவர் பிராமணர் வீதிகளுக்கு யாசிக்கச் செல்லமாட்டார். அன்று பகல் தான் பாடிய வீதிகளில் மட்டும்தான் யாசிப்பார்; பிற வீதிகளுக்கு அவர் செல்வதில்லை.

நாஞ்சில் நாட்டு கிராமங்களுக்கு ஒரு வருஷத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் காவடிக்காரர் வருவார். ஒருவர் செல்லும் கிராமத்துக்கு இன்னொரு காவடிக்காரர் போகமாட்டார். சில சமயம் நான்காம் முறையும் வரலாம். கன்னிப்பூ, கும்ப பூ என்னும் பயிர் விளைச்சல் காலங்களில் வரும் யாசகர்களைப் போன்றவர் அல்லர் இவர். காவடிக்காரர் வருவதற்கு பருவகாலம் கிடையாது.

ஒரு ஊரில் 7 முதல் 10 நாட்கள் வரை படக்காரர் தங்குவார். ஊரில் உள்ள பாழடைந்த மண்டபம் பொது மண்டபம், சத்திரம் என ஏதாவது ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார். இந்த இடத்தில் சாதம் சமைப்பதற்குரிய வசதிகளை அவரே செய்துகொள்ளுவார். ஊர் எல்லையில் உள்ள நாட்டார் தெய்வக் கோவிலிலும் அவர் தங்குவதற்கு யாரும் மறுப்பு சொல்ல மாட்டார்கள்.

படக்காரர் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு ஊர் கோவிலின் முன் வாசலுக்கு வருவார். அப்போது வயதானவர்கள் ஊர் கோவிலின் வாசலிலே கூடி இருப்பார்கள். படக்காரர் தன் பயண அனுபவத்தைக் கதையாகச் சொல்வார். அவர் நல்ல கதைசொல்லி. முக்கியமாகத் தான் சென்ற ஊரில் நடந்த கோவில் விழா, கொடைவிழா, இறப்பு பிறப்பு செய்திகள், இயற்கை அழிவு, பயிர் விளைச்சல், பயிரைத் தாக்கிய நோய் எனப் பல விஷயங்களைச் சொல்லுவார்.

படக்காரர் தன் பயண அனுபவத்தைச் சொல்லும்போது கருடபுராணக் கதையைக் கலந்தே சொல்லுவார். அந்த ஊர் பெரியவர்கள் தங்கள் ஊரில் நடந்த விஷயத்தைச் சொல்லுவார்கள். இப்படியாக இவர்களின் சம்பாஷணை இரவு 11 மணி வரை நீண்டு போகும். இந்தச் சமயங்களில் ஊர் மக்கள் இவரை யாசகரைப் போல் நடத்தமாட்டார்கள். அவரும் தன்னை அன்னியராக நினைத்து உரையாடமாட்டார்.

படக்காரர் தன் அடுத்த பயணத்தைப் பற்றி பேசுவார். அப்போது ஊர் மக்களில் சிலர் அவர் செல்ல இருக்கும் ஊரில் உள்ள தங்கள் உறவினர்களைக் கேட்டதாகச் சொல்லுங்கள் என்பார்கள். தங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றியும் சொல்லுமாறு வேண்டிக்கொள்வார்கள்.

படக்காரரின் வரவு நாஞ்சில் நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நின்றுவிட்டது. முக்கியமாக படக்காரரை வரவேற்று ஆதரவு கொடுத்தவர்கள் மறைந்த பின்னர் அவர்களின் வரவு நின்றுவிட்டது. கே.என் சிவராஜ பிள்ளை என்னும் தமிழறிஞர் தன் சமகாலத்தில் கண்ட பட’க்காரனை.

பாதகம் செய்வார் பின் படும் பாட்டின் பாவனையை

சாதகமாய் ஓர் படத்தில் தாதித்து -காதகரை

செக்கில் இட்டு ஆட்டி சுடர் செங்கழுகில் மாட்டி தீ

வக்கிலிட வைப்பான் மதித்து

என்று கூறுகிறார் (நாஞ்சில் வெண்பா 1935).

இராப்பாடி என்பவர், நாஞ்சில் நாட்டின் கன்னிப்பூ, கும்ப பூ அறுவடை காலங்களில் கிராமங்களுக்கு வருவார். இரவு 12 - முதல் 3 மணிக்குள் வரும் யாசகர் இவர். ராப்பாடியை யாசகர் என்று சொல்வது சரியல்ல, ஊரில் உள்ளவர்களையும் உழவுத் தொழிலையும் வாழ்த்தி வெகுமதி பெறுகின்ற பாடகர்கள் அல்லது பாணர்கள் என்று இவரைச் சொல்லலாம். உழவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவே இதுதான்.

இராப்பாடி கருப்பு நிற அங்கி அணிந்திருப்பார். தலையில் கோமாளியின் கருப்புத் தொப்பி இருக்கும் அதன் உச்சி வளைந்து இருக்கும். கையில் சிற்றுடுக்கு வைத்திருப்பார். அதை அடித்துக்கொண்டு உச்ச ஸ்தாயியில் பாடுவார். பாட்டின் மையம் நாஞ்சில்நாட்டு நெல் வகைகள் பற்றியதாக இருக்கும்.

நாஞ்சில் நாட்டு நெல் வகைகளின் பட்டியலை ஒரே மூச்சில் பாடுவார். நெல் வகைகளின் பெருமை, அடுத்த பூவில் பெய்யப் போகும் மழையின் செழிப்பு, நீராதாரம் போன்றவற்றையும் பாடுவார்.

ராப்பாடிக்குத் துணையாக ஒருவர் வருவார், அவர் கையில் அரிக்கன் லாம்பு விளக்கும் (மண்ணெண்ணெய் விளக்கு) கோணிப்பையும் இருக்கும். ராப்பாடி ஒரு சந்தில் நின்று பாடி முடித்துவிட்டு அடுத்த வீட்டுக்குப் போகும்போது, துணையாக வந்தவர், ‘ராப்பாடிக்குப் படி போடுங்கோ ராப்பாடிக்குப் படி போடுங்கோ', என்று கேட்டுக்கொண்டே வருவார்.

 ராப்பாடியின் பாட்டு தூரத்தில் கேட்க ஆரம்பித்ததும் வீட்டில் இருக்கும் வயதில் மூத்தபெண் அவருக்கு படி கொடுக்க ஆயத்தமாகி விடுவார். முறத்தில் நெல்லும் கரித்துண்டும் வைத்து உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் தலையைத் திருஷ்டி கழிய சுற்றுவார். பின், முறத்தைக் கணவன் அல்லது மூத்தவரின் கையிலேயே கொடுப்பார். அவர் வீட்டு வெளித் திண்ணையில் முறத்தை வைத்து விட்டு வாசல் கதவை அடைத்து விடுவார்.

 இந்த நேரத்தில் ராப்பாடிக்குத் துணையாக வருபவர் முறத்தில் உள்ள நெல்லை கோணிப்பையில் கொட்டுவார். ராப்பாடியைப் பெண்கள் பார்க்கக் கூடாது என்பது நம்பிக்கை. இதற்கு கல்வெட்டிலும் கூட ஒரு சான்று உண்டு. சில சமயம் வயதானவர்கள் ராப்பாடியுடன் உரையாடவும் செய்வர். அது பெரும்பாலும் உழவுத்தொழில் தொடர்பான பேச்சாக இருக்கும். நான் 80-களில் சந்தித்த ராப்பாடி பாடிய பாடல்கள் சிலவற்றைப் பதிவு செய்தேன்.

முத்துமுத்துச் சம்பா | குடு மல்லிகை சம்பா |

மல்லிகை சம்பா மணமுள்ள சம்பா

சிறு நெல்லி சம்பா சீரகச் சம்பா

கோணச் சம்பா இரணியல் சம்பா

என்று அடுக்கிக்கொண்டே போனார் அவர். முப்பத்திமூன்று சம்பா நெல் வகைகளைப் பட்டியலிட்டார். அதோடு குறுவா வகையில் 11, முண்டான் வகை 6, பிற 41 என 91 நெல் வகைகளைப் பாடினார். நானே இதைப் பட்டியலிட்டேன்.

இராப்பாடி, நெற்பயிரைப் பாதிக்கும் பூச்சி வகைகள், வெட்டுக்கிளி வகைகள் ஆகியவற்றையும் பட்டியலிடுவார். செம்பனோய், அன்னத்துப்பூச்சி நோய், குருத்து நோய் என பயிர்களை அழிக்கும் நோய்களைப் பட்டியல் இடுவார். ஜோதிடரைப் போல இந்த நோய் வர வாய்ப்புண்டு என்றும் கூறுவார். அதோடு, மழை பெய்யும் வாய்ப்பு எப்போது வரும் என்பது பற்றியும் பாடுவார். இராப்பாடி பற்றி கே என் சிவராஜ பிள்ளை.

 ஓடிக் கழுது ஒளிக்குமே இருள் தன்னில் இராப்

 பாடி வந்து செல்ல பல குறிகள்... நாடியுளம்

 தேங்குவார் ஆங்கனாத் தேனார் எழுந்து பின்

 வாங்குவார் சொல்லி இசையால் வைத்து

என்று கூறுகிறார்.

சித்தூசி அல்லது சித்தோசி என்று அழைக்கப்பட்ட யாசகர், எண்பதுகளில்கூட நாஞ்சில் மண்ணுக்கு வந்திருக்கிறார். இவரும் வயல் அறுவடைக் காலங்களில் வரும் யாசகர் சுமார் நாலு கிலோ எடையுள்ள வெங்கல மணியைக் கையில் தூக்கிக்கொண்டே யாசகத்துக்கு வரும் இவர், நாஞ்சில் நாட்டில் மட்டும் சித்தோசி எனப்படுகிறார்.

தமிழகத்தில் இந்த யாசகரைக் கண்ட சங்கம் ஆண்டி, நாழி மணிக்காரர், பண்டாரம், மணியாட்டிக்காரர் என்றெல்லாம் அழைக்கின்றனர். கே.என்.சிவராஜ் பிள்ளை தன் நாஞ்சில் வெண்பா என்ற நூலில் இவரை

நீண்ட உடை தரித்து நெற்றி பிறை சூடி

பூண்ட ஒரு சங்கம் பொம்பாமென யாண்டுமெழு

பித்தோசை தந்த பெருமணியால் நெல் பெறுவீர்

சித்தூசியால் திறன்

என்று விவரிக்கிறார்.

சித்தோசி, நீண்ட வெள்ளை அங்கியை அணிந்து இருப்பார். இது மடிப்பு வைத்து வைக்கப்பட்டது. தலையில் காவி அல்லது வெள்ளை நிற தலைப்பாகை கட்டியிருப்பார். அதில் வெங்கலத்தாலான சூரியன், சந்திரன் உருவம் பொருத்தப்பட்டிருக்கும். அதன்மேல் மயிலிறகு, கையில் நான்கு கிலோ எடையுள்ள வெண்கலமணி, இன்னொரு கையில் நீண்ட கம்பு, தோளில் ஜோல்னா பை, எண்பதுகளில் நாஞ்சில் நாட்டுக்கு வந்த சித்தூசியின் கோலம் இது.

இவர், ஒரு வீட்டின் முன் வாசலில் நின்று பாடுவார். அரகரா அரகரா என்று சொல்லிவிட்டு மணியை அடிப்பார். பின்பு முருகன் அல்லது சிவனைப் பற்றிய பாடலை பாடுவார். மறுபடியும் மணியை அடிப்பார். பின் மணியை வாய்ப்பகுதி மேலிருக்கும்படி நிமிர்த்திக் காட்டுவார். வீட்டு எஜமானி அந்த மணி வாய்நிறைய நெல்லைப் போடுவார். அவர் அந்த நெல்லைத் தன் தோள் பையில் தட்டிவிட்டு பாட ஆரம்பிப்பார்.

மணி நிறைய போடம்மா உன் குடி வரை வாழ்த்த வேணும்

பட்டி பெருக வேண்டும் பால்பானை பெருகவேண்டும்

வாழ்த்துவது சிவனடியான் வரம் தருவார் சொக்கநாதர்

என்று வாழ்த்துவார்.

பின்னர் மணியை ஒருமுறை அடித்துவிட்டு தன் கையிலுள்ள கம்பால் மணியைச் சுற்றுவார். அப்போது சுருதிப் பெட்டியை இசைத்தது மாதிரி ரீங்காரம் கேட்கும். இதைக் கேட்க சிறுவர்கள் கூடுவார்கள். சித்தேசி அந்த வீட்டிற்கு வந்ததன் அடையாளமாகக் காவி குச்சியால் வீட்டு முன்பக்க சுவரில் தன் கையொப்பத்தை இடுவார். பின் அடுத்த வீட்டுக்குச் சென்று விடுவார்.

சித்தோசியுடன் பயிர் அறுவடை காலத்தில் வருபவர் சிலர் தங்கள் பாட்டில் நெல் வகைகளைக் கூறுவர். பயிர் தழைக்க வாழ்த்துவர். இவர்களின் தாய்மொழி தெலுங்கு. ஆனால் தமிழகத்தில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இவர்களைப் பதறு பாஷை பேசுபவர் என்று கூறுகின்றனர். தற்சமயம் இவர்கள் தங்களைத் தமிழர்களாகவே சொல்லிக்கொள்ளுகின்றனர். தெலுங்கு பேசுகின்றவர்கள் என்னும் அடையாளத்தை வெளிப்படுத்துவதில்லை.

இவர்களுக்கும் நெல்லுக்கும் உள்ள உறவு பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஒரு சமயம் சிவபெருமானைச் சனி பகவான் பிடித்துக்கொண்டான். அதனால் அவர் ஏழரை ஆண்டுகள் மணி அடித்து யாசகம் எடுத்தாராம் சனி விலகியதும் தன் கையில் இருந்த மணியை சித்தோசிகளுக்குக் கொடுத்துவிட்டாராம். அந்த வம்சாவளியினர் இவர்கள் என்ற ஒரு கதையுண்டு.

இந்த ஜாதியினரில் பெருமளவினர் திண்டுக்கல் பகுதியில் வாழ்கின்றனர். இப்போது இவர்களில் பலர் யாசகிக்கச் செல்வதில்லை பல்வேறு தொழில்களைச் செய்கின்றனர்.

கல்லுள்ளி மொங்கன் என்பவனும் நாஞ்சில் நாட்டுக்கு வந்த யாசகரில் ஒருவர் ஆவார். இவர் அறுவடைக் காலத்தில் வருவதில்லை. இவர் வருவதற்கு என்று கால வரையறையும் இல்லை. இவர் நாஞ்சில் நாட்டில் கல்லுளிமாங்கன், கல்லுளிமங்கன் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

இந்த யாசகர், தென்மாவட்டங்களில் சாட்டையடிகாரர், சாட்டையடி நாயக்கர் என்றும் அழைக்கப்படுகிறார். தமிழகத்தின் வட மாவட்டங்கள் சிலவற்றில் இவர்கள் உறுமிக்காரர் எனப்படுகின்றனர், தெலுங்கு மொழியில் உறுமுலுவர் எனப்படுகிறார்.

நாஞ்சில் நாட்டில் மட்டும் சாட்டையடி நாயக்கரைக் கல்லுளிமங்கன் என ஏன் அழைத்தார்கள் என்று தெரியவில்லை. குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து மௌனம் சாதிப்பவரை கொண்டான் கோட்டு மறவன் மாதிரி, குறவன் மாதிரி, கழுக்காரன் மாதிரி, கல்லுளிமாங்கன் மாதிரி என்றெல்லாம் கூறும் மரபு நாஞ்சில் நாட்டில் இருந்தது.

தமிழ் லெக்சிகன், கல்லுள்ள மாங்கன் என்பதற்கு அருவருப்பான செய்கையால் பிடிவாதம் காட்டும் பிச்சைக்காரன் என்று பொருள் கூறுகிறது. கல்லுளிமங்கன் போன வழி கதவுகள் எல்லாம் தவிடுபொடி என்பது ஒரு வழக்காறு. இதற்கு கல்லுளி பித்தன் என்ற சொல்லும் உண்டு கல்லுளிச் சித்தன் போனவழி கதவுகள் எல்லாம் தவிடுபொடி என்ற வழக்காறும் இருந்தது.

கல்லுள்ளிச் சித்தனும் கல்லுள்ள மாங்கனும் ஒருவரா? மனம் போன போக்கிலே போகும் இந்த நாடோடி யார்? சாட்டையடிகாரரை நாஞ்சில் நாட்டில் இப்படி ஏன் அழைத்தார்கள்? நாஞ்சில் நாட்டில் மட்டும் இத்தகைய வழக்குகள் இருப்பதன் காரணம் என்ன? எல்லாம் புரியாத புதிர்தான்.

குழந்தைகளைப் பயமுறுத்துவதற்குக் கல்லுள்ளிமாங்கன் வருகிறான் என்று சொல்லும் வழக்கம் எண்பதுகளில்கூட இருந்தது. இதை

கே.என்.சிவராஜ பிள்ளை தன் நூலில் பதிவு செய்திருக்கிறார் பாடல் கீழ்வருமாறு;

கல்லுள்ளி மொங்கனேர காசுக்கு இரண்டன்ன

செல்லுழிச் செல்லுமிச் செப்புவான் மெள்ள

உரைக்க அரியான் உருபு வான் பிள்ளை

வரைக்குமே கல்லுளி முன் வேர்த்து

இராப்பாடி, சித்தோசி யாசகர்கள் போன்றவர் அல்லர் சாட்டைக்காரர். இவர்கள் தங்களை வருத்துக்கொண்டு அடுத்தவரிடம் அனுதாபம் பெற்று யாசகம் பெறுவர். சாட்டையடிப்பவர் ஆண்களே. இளைஞர், சிறுவர், முதியவர் யார் வேண்டுமானாலும் சாட்டையடிக்கலாம். இதற்குப் பின்னணியாக உறுமி என்ற இசைக்கருவி இசைக்கப்படும். இதற்கு இவர்கள் வீராணம் என்று சொல்லுகின்றனர். சாட்டையடி காரனின் கூட்டத்தில் உள்ள பெண்களே உறுமியை அடிப்பர்.

சாட்டையடிகாரன் காலில் சலங்கை கட்டி இருப்பார். கற்றாழை நாரால் பின்னப்பட்ட சாட்டையைக் கையில் வைத்திருப்பார். அதைச் சுழற்சி உடம்பில் அடிப்பது போன்ற பாவனையை உண்டாக்குவார் சுழற்றி அடிக்கும்போது கேட்கும் சத்தம் பயமுறுத்தும். ஆனால் உடம்பில் சாட்டை படாது. அப்படி அடிக்கக்கூடிய பயிற்சி அவர்களுக்கு உண்டு.

இவர்களின், உடம்பில் ரத்தக்கோடுகள் இருக்கும் இது இயற்கையாக ஏற்கனவே கீறிய கோடுகளாக இருக்கலாம். சாட்டையடிகாரனின் உடம்பில் தெரியும் ரத்தக்கோடுகள்தாம் அவனுக்கு அனுதாபத்தைக் கொடுக்கும். அவன் யாசிப்பதற்கு இதுவே காரணம். இவர்கள் நாஞ்சில் நாட்டுக்கு ஒரு குழுவாக வருவர். தனித்தனியே பிரிந்து யாசிக்கச் செல்வர்.

சங்கரன்காளை எனப்படும் மாட்டுடன் வரும் யாசகர் நாஞ்சில் நாட்டில் 90-களில் கூட வந்திருக்கிறார். எதற்கெடுத்தாலும் தலையை ஆட்டும் குழந்தையை என்ன சங்கரன் காளை மாதிரி தலையை ஆட்டுகிறாய் என்று கூறும் வழக்காறு இப்போதும் நடைமுறையில் உள்ளது. நாஞ்சில் நாட்டில் சங்கரன் காளை என அழைக்கப்படும் யாசகர், தமிழகத்தில் பெருமாள் மாட்டுக்காரர், பூம் பூம் மாட்டுக்காரர், பூம் மாட்டுக்காரர், அழகர் மாட்டுக்காரர், புரூம் புரூம் மாட்டுக்காரர் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

சங்கரன் காளையை ஓட்டி வருபவர், காளை அல்லது கறவை மறந்த பசுவை அலங்காரம் செய்து ஓட்டிவருவார். காளையின் முதுகில் வண்ணத் துணிகள் அணிசெய்யும்; வெங்கல மணி தொங்கும்; கொம்பில் வண்ணக் காகிதங்கள் சுற்றப்பட்டிருக்கும்; மாட்டை ஓட்டி வருபவர் ‘உருமி’ என்ற இசைக்கருவியை அடித்துக்கொண்டு வருவார். அதை சிறு குச்சியால் மெல்லத் தடவுவார்; அது புரூம் என ஒலி எழுப்பும்.

சங்கரன் காளைக்காரர் வீட்டு வாசலில் நின்று உருமியைத் தேய்ப்பார். வீட்டு எஜமானி வந்ததும் காளையைப் பார்த்து அம்மா அரிசி போடுவாங்களா துணி போடுவாங்களா என்று கேட்பார். காளை தலையை ஆட்டும் இவங்களுக்கு நல்லது நடக்குமா என்று கேட்பார், காளை மீண்டும் தலையை ஆட்டும். உடனே அரிசியோ பணமோ யாசகமாகப் பெறுவார் பின் அடுத்த வீட்டுக்குச் செல்லுவார்.

சங்கரன் காளைக்காரர்கள் தங்களை பூவிடையர் அதாவது பூக்கட்டும் இடையர் என்று கூறிக் கொள்கின்றனர். தாய்மொழி தெலுங்கு. இப்போது இவர்கள் தஞ்சை மாவட்டத்திலும் வட ஆர்க்காடு பகுதியிலும் வாழ்கின்றனர். நாடோடி வாழ்க்கை இவர்களிடம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

சங்கூத்து பண்டாரம் என்னும் யாசகனும்

நாஞ்சில் நாட்டில் எழுபதுகளின் ஆரம்பத்தில் வந்தனர். இவர்கள் ராப்பாடியைப் போல் பயிர் அறுவடை காலத்தில் வருபவர்கள் அல்லர். பெரும்பாலும் மார்கழி மாதம் முன் இரவு நேரத்தில் சங்கை ஊதிக் கொண்டும் சேமக்கலத்தை அடித்துக்கொண்டும் முச்சந்தியில் நின்று பாடுவார்கள். திருப்பாவை, திருவெம்பாவை, நடராஜர் பத்து, ஸ்ரீ ராமர் தோத்திரம் போன்ற பாடல்களைப் பாடுவர். அடுத்த நாள் காலையில் அரிசி, காய்கறி என்பவற்றை யாசகமாகப் பெறுவர்.

ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்தான் இவர்கள் தங்குவார்கள். இவர்களின் தாய்மொழி தமிழ். படக்காரன் என்ற யாசகரிலிருந்து (இவரும் பண்டாரம்) சங்கூத்துப் பண்டாரம் வேறுபட்டவர். இவர் மக்களிடம் நெருக்கமாகி பழகாமல் ஒதுங்கியே இருப்பார் இவர்களைச் சங்கூத்துப் பண்டாரம் என்று சொன்னாலும் இவர்கள் தங்களை வள்ளுவப் பண்டாரம் என்று அழைத்துக்கொள்கின்றனர். இவர்களில் சிலர் சோதிடக் கலைஞர்.

நாஞ்சில் நாட்டில் சங்கூத்துப் பண்டாரங்கள் பாம்பு பஞ்சாங்கம் என்ற கும்பகோணம் பஞ்சாங்கம், இரத்தின நாயகர் சன்ஸ் வெளியிட்ட நடராஜப் பத்து போன்ற பிரசுரங்களை விலைக்கு விற்றிருக்கின்றனர். ஐம்பதுகளில்கூட இது நடந்திருக்கிறது.

பண்டாரம் பற்றிய ஒரு வாய்மொழிக் கதை

நாஞ்சில் நாட்டில் உண்டு. சங்கூத்துமண்காரம் ஒருவன் ஊர்ப்புற எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் படுத்துக்கிடந்தார். நள்ளிரவு நேரம். அன்று பண்டாரத்திற்கு அதிக வருமானம் இல்லை. அந்த நேரத்தில் இரண்டு திருடர்கள் வந்தார்கள். அவர்கள் அந்த ஊர் எல்லையில் உள்ள ஆட்டுக்கிடையில் ஆட்டைத் திருட வந்தனர்.

இரண்டு பேருக்கு மூன்று பேராக இருந்தால் திருட வசதியாக இருக்கும் என்று நினைத்த திருடர்கள், பண்டாரத்தைக் கூட்டுக்கு அழைத்தனர். பண்டாரம் சரி என்றார் ஆட்டைத் தெரிவு செய்தனர். ஒருவன் ஆட்டின் கால்களைப் பிடித்துக் கொண்டான். ஒருவன் தலையைப் பிடித்தான். ஒரு திருடன் பண்டாரத்திடம் சங்கைப் பிடி (ஆட்டின் கழுத்தை) என்றான். பண்டாரம் சங்கை எடுத்து ஊதிவிட்டான். கிடையில் படுத்துக்கிடந்த இடையர்கள் விழித்துக்கொண்டார்கள். அப்புறம் என்ன நடந்திருக்கும், தர்ம அடிதான்.

 பண்டாரங்கள் சாவுச் சடங்குகளிலும் சங்கூதச் சென்றனர். இதற்கு வருமானம் அதிகம் அதனால் ஒரு ஊரில் முகாமிட்ட பண்டாரத்தை அடுத்த ஊர்க்காரன் அழைப்பது என்பது நடைமுறையில் இருந்திருக்கிறது. இதனால் சங்கூதும் பண்டாரங்கள் மார்கழி மாதத்தைத் தொடர்ந்து இங்கே முகாம் அடித்திருக்கின்றனர்.

தேவாங்கு என்ற விலங்குடன் வந்த யாசகரின் வரவு அறுபதுகளில் நின்றுவிட்டது. தேவாங்கு இரவில் இரை தேடும் பாலூட்டி விலங்கு. 18 செ.மீ உயரம் வரை வளரும். 250 முதல் 350 கிராம் எடை உடையது. சிறு பூச்சி பல்லி இலை தழைகளை உண்ணுவது.

நாஞ்சில் நாட்டில் உடல் மெலிந்த நோஞ்சான் குழந்தையைத் தேவாங்கு போல் இருக்கிறாயே என்று சொல்லுவது வழக்கம் இது பட்டப்பெயராகவும் வழங்குகிறது. குழந்தையின் கழுத்தில் தேவாங்கைக் கொண்டு மஞ்சள் அல்லது கருப்புக் கயிற்றைக் கட்ட வைத்தால் அந்தக் குழந்தை புஷ்டியாகிவிடும் என்ற நம்பிக்கை உண்டு,

தேவாங்கை சிறிய பெட்டியில் வைத்திருப்பார் தேவாங்குக்காரர். ஒரு வகையில் கிளி ஜோதிட னைப் போன்றவர். இவர் தேவாங்குக்காரர் வீதி வழி வரும்போது தேவாங்கு கயிறு கட்டணுமா என சத்தமிட்டுக்கொண்டே வருவார். தாய்மார்கள் நோஞ்சான் குழந்தைகளை அவரிடம் எடுத்துக்கொண்டு வருவார்கள்.

அவர் தேவாங்கைக் கூண்டிலிருந்து வெளியே எடுத்து மடியில் வைத்துக்கொள்வார். அதன் கையில் கருப்பு அல்லது மஞ்சள் கயிற்றைக் கொடுப்பார். பழக்கப்பட்ட அந்த விலங்கு, கயிற்றை வாங்கி தாயின் மடியில் இருக்கும் குழந்தையின் கழுத்தில் கட்டும் இதற்கு அரிசியோ பணமோ தானமாகப் பெறுவர். இவரும் சமைத்த உணவை வாங்குவதில்லை.

பச்சை குத்தும் குறத்தி நாஞ்சில் நாட்டில் வந்ததைப் பற்றி மிகக்குறைவான சான்றுகளே கிடைத்தன. இவளது வருகை நாற்பதுகளில் நின்றுவிட்டது. உடலில் பச்சை குத்துவது என்ற வழக்கம் உலகம் முழுக்க இருந்திருக்கிறது. பழைய எகிப்து நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பச்சை குத்திய நிகழ்ச்சி பற்றி குறிப்பு உண்டு. தமிழகத்தில் பிராமணர் பச்சை குத்துவது இல்லை.

நாஞ்சில் நாட்டில் பச்சை குத்தியது பற்றிய செய்திகளைத் தோல்பாவைக் கூத்துக் கலைஞர் சுப்பையாராவ் தான் எனக்கு முதலில் சொன்னார். அதுவும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையுடன் நடந்த கதை சுப்பையாராவின் பல மனைவிகளுள் உப்பிலியக்குறத்தியும் ஒருத்தி என்று பலமுறை என்னிடம் சுப்பையா ராவின் தம்பி பரமசிவ ராவ் சொல்லியிருக்கிறார்.

தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் ஒரு ஊருக்குச் செல்லும்போது பச்சை குத்தும் உப்பிலிய குறத்தியும் செல்வாளாம். ஆனால் அது பொதுவான நிகழ்ச்சி அல்ல தோல்பாவைக்கூத்து நடத்திய சில குழுக்களிடையே உப்பிலிய குறத்தியர் தொடர்பு கொண்டிருந்தார்களாம்.

உப்பிலியக் குறவரின் மொழி நரிக்குறவர்கள் பேசும் மொழி போன்றது. அதில் மராட்டியக் கலப்பு உண்டு. தோல்பாவைக் கூத்து நடத்தும் கணிகர் ஜாதியினரின் தாய்மொழி மராட்டி. இதனால் கணிகள் ஜாதியினரின் உட்பிரிவினர் ஆன மண்டிகர் தோல்பாவைக் கூத்து கலை நிகழ்த்த முகாம் அடித்த இடத்தின் அருகே உப்பிலியக் குறவரும் தங்குவார். இவர்கள் எல்லோருமே சிறு விலங்குகளை வேட்டையாடுவது வழக்கம். மொழி, பண்பாடு இவற்றில் இவரிடம் சில ஒற்றுமையும் உண்டு.

உப்பிலிய குறத்தி, தான் தங்கிய ஊரில் பச்சை குத்த வேண்டியவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு கொள்வாள். உத்தேசமாக எத்தனை பேருக்கு பச்சை குத்த வேண்டும் என்று கணக்கிட்டுக்கொள்வாள் பின்னர், மூலப்பொருள்களைத் தயாரிக்க ஆரம்பிப்பர்.

பச்சை குத்துவதற்கு உரிய மூலப்பொருள்கள் | எல்லா ஊர்களிலும் கிடைக்கும். மஞ்சள் பொடியுடன் அகத்திக்கீரையை நன்றாக மசிய அரைத்து அழுக்கில்லாத வெள்ளைத் துணியிலே தேய்த்துக் கொள்வார்கள். இதை வெயிலில் காய வைப்பார்கள். காய்ந்த பின்னர் விளக்குத்திரி போல் சுருட்டி வைத்துக் கொள்வார்கள். ஆமணக்கு எண்ணெய் ஊற்றிய விளக்கில் அந்தத் திரியைப் பெரிதாக எரியும்படி செய்வார்கள்.

எரியும் திரியின் மேலே புதிய மண்சட்டி மூடியைக் காட்டுவர். சட்டி மூடியின் அடியில் விளக்குப் புகை முழுதும் படும்படி காட்டிக்கொண்டே இருப்பார்கள். திரி முழுதும் எரிந்து முடிந்ததும் தரும் சட்டியின் உள்பகுதியில் படிந்திருக்கும் கரியை பனையோலையால் சுரண்டி எடுத்து சேகரித்துக் கொள்வார். இந்தப் பொடியுடன் தாய்ப்பாலைக் குழைத்து ஒரு குழம்பு தயாரிப்பர் இதை இரண்டு அல்லது மூன்று ஊசிகளால் தோய்த்து உடம்பின் மேல் பாகத்தில் குத்துவார்கள். இதுவே பச்சை குத்தலின் முறை.

மஞ்சள் பொடியுடன் கரிசலாங்கண்ணி கீரை, கரியாத்தாழை, சித்திரப்பாலாடை, அறுகம்புல் என்பவற்றில் ஒன்றைச் சேர்த்து அரைத்து, துணியில் தடவி எரிப்பதும் உண்டு. இந்த மூலிகைகள் எல்லாமே நாஞ்சில் நாட்டில் கிடைப்பன. இதனால் பச்சை குத்து பவளுக்கு இவை எளிதாகக் கிடைத்துவிடும்.

உப்பிலியக் குறத்தி பச்சை குத்தும்போது பாடவும் செய்வாள். பெரும்பாலும் ஒப்பாரிப் பாடலின் சாயலில் சோகமாய் இருக்கும். தோல்பாவைக் கூத்துக்காரர்கள் ஊரில் முகாம் போடுவதை நிறுத்த ஆரம்பித்ததும் பச்சை குத்தும் வழக்கமும் நின்றுபோ­யிற்று.

கொடும்பாவி கொளுத்தல் என்ற செயல் நாஞ்சில் நாட்டில் மிக அபூர்வமாகத்தான் நடந்திருக்கிறது. 1959 - 1960-களில் ஒரு முறை, பின் 1976 இல் ஒரு முறை. இந்த நூற்றாண்டில் கொடும்பாவி கொளுத்தல் குறித்து வேறு நிகழ்ச்சி நடந்ததாகச் செய்தி இல்லை. தமிழகத்தின் அதிக மழை பெய்யும் இடங்களில் கன்னியாகுமரி மாவட்டம் இரண்டாவது வருவது. ஆகவே, கொடும்பாவி கொளுத்துதல் நிகழ்ச்சி நடக்க வாய்ப்பில்லை.

உழவுத் தொழில் சார்ந்த நம்பிக்கைகளில் ஒன்று கொடும்பாவி கொளுத்தல். உழவர்கள் இதில் அதிக கவனம் செலுத்தினர். மழை வேண்டி செய்யப்பட்ட கொடும்பாவி சடங்கு தனிப்பட்ட ஒருவர் செய்வதல்ல.

கொடும்பாவி கொளுத்த வேண்டும் என்று தீர்மானமானதும் கொடும்பாவி பொம்மையை வைத்து இழுப்பதற்குரிய வண்டியை முதலில் தயாரிப்பர். பின்னர் கொடும்பாவி பொம்மையைச் செய்வர். வைக்கோல், பழைய துணிகள், மூங்கில் கம்பு போன்றவற்றால் கொடும்பாவி பொம்மை செய்யப்படும். இது 120 முதல் 150 செ.மீ. நீளம் உடையதாய் இருக்கும். இதை வைத்து இழுக்கும்படியான அளவு வண்டியும் இருக்கும்.

 இந்த வண்டியில் கொடும்பாவிப் பொம்மையை மல்லாக்க வைப்பர். ஊரில் சிலரும் தொழிலாளிகளும் இந்தச் சடங்கில் கலந்துகொள்வர். இந்த வண்டியை இழுக்கும்போது துப்புரவுத் தொழிலாளிகள் சிலர் பறையடித்து ஒப்பாரி வைப்பர். ஊர் சிறுவர்கள் வண்டியின் பின்னே செல்லுவர். ஒப்பாரிப் பாடகனின் குரல் மிக சப்தமாகச், சத்தமாகவும் ஒலிக்கும்.

 ஊர்வலம் நில உடைமையாளர்களின் வீடுகளில் நிற்கும். அப்போது கொடும்பாவிக்குக் கொள்ளி வைப்பதற்காகக் கொண்டுவரும் மண்பானையில் ஊர் மக்கள் பணம் காசு போடுவார்கள். சில சமயம் துப்புரவுத் தொழிலாளிகளுக்குத் துணியும் கொடுப்பார்கள். வண்டி சுடுகாட்டை அடையும்.

 சுடுகாட்டில் ஏற்கனவே தோண்டப்பட்டிருக்கும் குழியில் கொடும்பாவி பொம்மையை வைப்பர். அதன் மேல் விறகை அடுக்குவர். ஒருவர் கொள்ளி வைப்பார். துப்பரவுத் தொழிலாளி பெண்கள் மாரடிப்பர் கொடும்பாவியின் மேல் எச்சிலும் உமிழ்வர்; வாய்க்கரிசி போடுவர்; கொடும்பாவியை திட்டிக்கொண்டே நெருப்பு வைப்பர்; பின்னர் எல்லோரும் விவசாயக் குளத்தில் குளித்துவிட்டு ஊருக்குச் செல்வர். ஊர் மக்கள் கொடுத்த பணத்தைத் துப்புரவுத் தொழிலாளர்கள் பங்கு வைத்துக்கொள்வார்.

நாஞ்சில் நாட்டில் யாசகர்களின் வரவு நின்று போனதற்கு பல காரணங்களைக் சொல்ல முடியும். கொடுப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. யாசகர்களும் தங்கள் நாடோடி வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். இவை முக்கியமான காரணங்கள்.

இந்த நாடோடி யாசகர்களுக்குப் பொதுவான சில குணங்கள் இருந்தன. நிச்சயமாக இவர்கள் சமைத்த ‘உணவை வாங்க மாட்டார்கள். தன்னுடைய திறமை அல்லது உடலை வருத்தல் போன்ற காரியங்களை வெளிப்படுத்தி யாசகம் பெற்றார்கள். யாசகம் பெறச் சென்ற ஊரில் பொதுவான பாழடைந்த ஒரு இடத்தில்தான் இவர்கள் தங்கினார்கள். ஒரு ஊருக்கு ஒரு யாசகர் வந்தால் இன்னொரு குழு அங்கே வராது. இவர்களில் எல்லோருமே பிராமணர் வீடுகளில் யாசகம் வாங்குவது இல்லை என்பது முக்கியமான செய்தி. இவர்களில் பலர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It