கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

"தேசியக் கல்விக் கொள்கை-2020-ஐ, எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை, மாறாக ஒரு சில மாநிலங்களே சிறிய அளவிலான மாற்றங்களை மட்டுமே பரிந்துரைத்துக் கடிதங்கள் கொடுத்திருப்பதாக ஒன்றியக் கல்வித்துறை இணைஅமைச்சர் திரு சுபாசு சர்க்கார் தெரிவித்துள்ளார்.."

இது அக்டோபர் 11 நாளில் வெளிவந்த தினமணி நாளிதழ் கொடுக்கும் செய்தி.

இந்தி எதிர்ப்பும், இரு மொழிக் கொள்கையையும் கொண்ட தமிழ்நாட்டுக்குத் தேசியக் கல்விக் கொள்கை ஏற்புடையதல்ல.

அதனுடைய முக்கிய நோக்கமே இந்திய அளவில் உயர் கல்வி பெறும் மாணவர்களை 2035 ஆவது ஆண்டுக்குள்ளாக 50 விழுக்காடு அளவுக்கு உயர்த்துவதும், 2050 ஆவது ஆண்டுக்குள்ளாக 100 விழுக்காடு அளவுக்கு எட்டுவதுமாக இலக்கு வைத்துக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கிறது.

தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் கட்சிகளான திமுக, அதிமுகவுக்கிடையே பல்வேறு கருத்து, கொள்கை முரண்கள் இருந்தாலும், மொழிக் கொள்கையில் மும்மொழித் திட்டத்தை ஒருமித்த கருத்தோடு ஏற்றுக் கொள்வதில்லை என்று அறிவிக்கின்றன. தேசியக் கல்விக் கொள்கையின் முதன்மை நோக்கமே தாய்மொழிக் கல்வியோடு ஏதாவது ஒரு இந்திய மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும் என்பதே ஆகும். இந்தி என்று நேரடியாகச் சொல்லாமல், ஏதாவது ஒரு இந்திய மொழி என்று மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் செயலாகவே இது பார்க்கப்படுகிறது. மேலும் ஐந்தாம் வகுப்பில் இருந்து ஏதாவது தொழிற்கல்வியையும் இணைத்தே கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும், ஐந்து, மூன்று, எட்டாம். வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வின் அடிப்படையில் தேர்ச்சிகள் அமையும் என்கிற முடிவும் இயல்பான கல்விச் சூழலிலிருந்து மாணவர்களை ஒருவிதப் பதட்ட மனப்பான்மைக்கு இட்டுச் சென்று விடும் என்றே தோன்றுகிறது

ஒருவர் அவரின் தேவைக்கேற்ப எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம், அது அவர்களின் உரிமை சார்ந்தது. ஆனால் இந்தியைக் கட்டாயம் கற்றே ஆக வேண்டும் என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய ஒன்றிய அரசின் இறுதி இலக்கு என்பது "ஒரே நாடு ஒரே மொழி" என்ற அடிப்படையில் இந்தியாவின் பொது மொழியாக இந்தியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதே. இந்தியை ஏற்றுக் கொண்ட வட மாநிலங்கள் குறிப்பாக குசராத், உ.பி, பீகார் கூடத் தங்களது தாய்மொழியை மறந்து, இந்திக்கு அடிமையான நிலையைப் பார்க்கிறோம். அந்த நிலை தமிழ்நாட்டிற்கோ, தமிழுக்கோ வந்துவிடக் கூடாது என்பதாலேயே, இங்கு இந்தி எந்த வடிவத்தில் திணிக்கப்பட்டாலும், அதைத் தமிழ்நாடு தீவிரமாக எதிர்க்கிறது. மேலும் உயர் கல்வியைப் பொறுத்தவரை இந்தியாவின் எந்த மாநிலத்தையும்விட தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்பதைப் பல்வேறு புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

மேலும், மாநிலங்களின் அடையாளங்களை, வரலாற்றை, பண்பாட்டை என அனைத்தையும் தேசியக் கல்விக் கொள்கை சிதைக்கவே செய்யும் என்பதையும் அறியலாம்.

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் நிலை 26.3 விழுக்காடாக உள்ளது. அதுவே உ.பி, பீகார் போன்ற மாநிலங்களில் 20 விழுக்காடுகளுக்கும் குறைவாகவே உள்ளன. ஆனால் தமிழ்நாடு சில வளர்ந்த நாடுகளை விடக் கூடுதலாக 51.4 விழுக்காடு என்ற அளவில் உள்ளது. 2035இல் இந்தியாவின் இலக்கே, 50 விழுக்காடு என்ற அளவில் தான் உள்ளது.

ஆகையால் தமிழ்நாட்டுக் கல்வி முறை என்பதோ, மொழிக் கொள்கை என்பதோ சிறந்த மாணவர்களை உருவாக்கப் போதுமானதாக உள்ளது. தேவைப்படும் அளவில்.இன்னும் கூடுதல் தரத்துடன் கல்வியாளர்கள் குழுவைக் கொண்டு தரமான கல்விச்சூழலை மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையைத் தேவைப்படும் மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும். கல்வியில் சிறந்த தமிழ்நாட்டிற்குத் தேவையில்லை என்பதே தமிழர்களின் பொதுக் கருத்தாக உள்ளது.

- தமிழ்முகம்