kanja drugசுதந்திரப் போரட்டத்திலும் சரி இராணுவப் பணிக்கு தங்களை அதிக அளவில் ஈடுபடுத்திக் கொண்டதிலும் சரி, தேசத்தின் முன்னோடியாய் திகழ்ந்தது வேலூர் மாவட்டம் என்பது வரலாறு. அவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க இந்த மாவட்டத்தில் கொடி கட்டிப் பறக்கிறதா கஞ்சா போதை என்னும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

அண்மைக்காலங்களில் ஒரு சில இளைஞர்களின் நடவடிக்கைகளும் அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் தடைச் செய்யப்பட்டதாக சொல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தமிழகம் முழுவதும் தீவிரமாக அதிகரித்துள்ளதையடுத்து போலீஸ் தீவிர வேட்டை, கஞ்சா விற்பனையாளர் கைது என்பது போன்ற பத்திரிக்கைச் செய்திகள் அவ்வப்போது வந்தாலும் கஞ்சா போதையில் சாலையில் சுற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறதாக சமூக ஆர்வலர்கள் பலர் தங்களுடைய ஆதங்கத்தை கொட்டித்தீர்க்கின்றனர்.

போலிஸாரின் நடவடிக்கை காரணமாக பல இடங்களில், சோதனை செய்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தாலும், விற்பனை குறைந்தபாடில்லை. கஞ்சா எங்கிருந்து தமிழகத்திற்கு சப்ளை ஆகிறது, வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரும் மொத்த வியாபாரிகள் மற்றும் அவர்களின் பின்னணியில் உள்ள நபர்கள் கண்டறியப்பட வேண்டும்.

ஒருவர் பின் ஒருவராக செயின்போல் நீளும் இந்த கஞ்சா விற்பனையாளர்கள், ஏஜெண்டுகள் என அனைவரும் கைது செய்யப்பட்டால் மட்டுமே இதற்கான நிரந்தர தீர்வாக அமையும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

இந்த தேசத்தின் அவமானமாக கருதப்படும் இந்த கஞ்சா போன்ற போதைப் பழக்கங்கள் மக்களுக்கு தற்காலிக மகிழ்ச்சியைக் கொடுத்து இவர்களை தன்வசப்படுத்துகின்றது. அந்த தற்காலிக மகிழ்ச்சியில் சிக்கும் இவ்வாறான நபர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு நிரந்தர அடிமையாகின்றார்கள்.

ஒருபுறம் ஒட்டுமொத்த மனித குலத்தின் மீது தாக்கம் செலுத்திவரும் இன்றைய இணைத்தளங்கள், செல்பேசித் தொழில்நுட்பம், சமூக ஊடகங்களின் அபாயகரமான அம்சங்களின் அடிமைகளாகி வரும் இளைஞர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக உள்ளனர். கஞ்சா வியாபாரிகளின் முக்கிய இலக்கும் இவ்வாறான எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய இளைஞர்கள் தான். ஒருமுறை இதற்கு பழக்கப்படும் இவர்கள் அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் சிக்கித் தவித்து அவர்களது சிந்தனை சீரழிக்கப்பட்டு, உளவியல் ரீதியாக பாதிப்படைகின்றனர்.

இந்த போதை வலையில் இவர்கள் எப்படி சிக்குகின்றனர் என்ற அடிப்படையை அலசினால், முதலில் நண்பர்களின் உந்துதலில் ஆரம்பித்து பிறகு அவர்களின் வற்புறுத்துதல்களையும் தாண்டி அப்படி என்னதான் இருக்கிறது என்ற நோக்கோடு ஒரு முறை மட்டும் பயன்படுத்துவோம் என்று ஆரம்பிக்கும் இவர்களின் போதைப்பழக்கங்கள் மாதத்திற்கு ஒரு மூறை (Occasionally), வாரத்திற்கு ஒருமுறை (Periodically), மாறி பின்னர் வழக்கமான பயன்பாடு (Regular Use), அதன் பின்னர் போதை இல்லாமல் இருக்கவே முடியாத கட்டாயப் பயன்பாட்டு (Compulsive Use) என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பதின்பருவத்தில் நண்பர்களின் தூண்டுதலால் விளையாட்டாகத் தொடங்கும் இந்த பழக்கம் வருங்காலத்தில் தன் உயிரையே பறிக்கும் நிலைக்குச் செல்லும் என்பதை இவர்கள் அறிவதில்லை.

பல்வேறு இளைஞர்கள் சமூக அக்கறையோடு செயல்படும் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு சிலர் மட்டும் இவ்வாறான குடி, கஞ்சா போன்ற போதைப் பழக்கங்களில் அடிமையாவதால் இச்சமூகத்திற்கு என்ன ஆகிவிடப் போகின்றது, ஒரு தனிநபரால் சமூகம் பாதிக்காது என்று அவர்களை சாதாரணமாக கடந்து விட முடியாது.

அது ஆரம்பத்தில் மேலோட்டமாக தனிநபருக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல அவர் சார்ந்த ஒட்டுமொத்த குடும்பமும் இவரின் செயலால் சமுதாயத்தின் முன் கூனிக்குறுகி நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அந்த ஒரு குடும்பத்தை பாதிக்க ஆரம்பித்து ஒரு காலக்கட்டத்தில் இந்த ஒரிரு குடும்பங்களை போல் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்படும்போது அது ஓட்டுமொத்த சமுதாயத்தின் மீதான பாதிப்பாகவே பார்க்கப்படுகின்றது.

கஞ்சா போன்ற போதைப் பழக்கம் உடனடியாக தடுக்கப்பட வேண்டும், போதைப் பொருட்களால் இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதை தடுக்கப்பட இதற்கான சட்டத்திட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.

போதைப் பொருட்களின் தீமையையும், அதன் பின்விளைவுகளையும் அரசு இவ்வாறான இளைஞர்களிடமும் அவர்களின் பெற்றோரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.கஞ்சா போன்ற போதையின் பிடியிலிருந்து இளைஞர்கள் மீட்கப்பட மறுவாழ்வு மையங்கள் மாவட்டம் தோறும் ஏற்படுத்தப்பட அதற்கான முயற்சியை அரசு மேற்கொள்வதும் இதை முழுவதுமாக ஒழிப்பதும் அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.

- S.G.அப்சர் சையத்

Pin It