ஒரு படைப்பிற்கு, படைப்பாளியை தருவது என்பது அப்படைப்பிற்கு ஓரு முற்றுப் புள்ளியை, முடிவான அடையாளத்தை தந்து, “எழுதுதலை” முடித்து வைக்கும் செயலாகும். - ரோலண்ட் பார்த்தெஸ் (“ஆசிரியனின் மரணம்” கட்டுரையில்)

குறுந்தொகையை உரையாடல்களின் தொகுப்பு என பொதுவாக வகைப்படுத்தலாம். தலைவியும் தோழியும் தலைவனும் தோழனும் தத்தமக்குள் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கவிதையும் ஏதோவோர் நாடகத்தின் உச்சக் காட்சியின் உறைகணமாக நிற்கிறது. அக்கணத்தின் உக்கிர உணர்வுகள் சொற்களாய் வழிந்தோடுவதுதான் மீண்டும் மீண்டும் குறுந்தொகையில் நிகழ்கிறது.

புறவயமான இச்சொற்களை சரடாகக் கொண்டு வாசக அகம் மேலேறி அதன் உச்சத்தை அடைகிறது. எனில் ஒவ்வொரு கவிதையும் ஒரு வாசல் மட்டுமே.. அதனூடே நாம் செல்லும் தூரத்தை நமது அகமே தீர்மானிக்கிறது. இந்நிலை குறுந்தொகைக்கு மட்டும் சொந்தமானது அல்ல. எவ்விதமான கவிதையும், புனைவும், கட்டுரையும் வாசகனால் வாசிக்கப்படும் பொழுது வாசக அகம் அந்த படைப்பிலிருந்து மேலெழும்பி வேறு தளங்களுக்கு செல்லவே செய்யும். இந்நிலையை ‘ரோலந்த் பார்தஸ்’ என்ற பிரென்ச் மொழியியலாளர் “வாசித்தல்-எழுதுதல்” என்கிறார்.

வாசகன் வாசகன் மட்டுமல்ல. அவனளவில் அவனது வாசிப்பும் ஒருவகை “எழுதுதலே”. வாசிப்பின் அலகிலா சாத்தியங்களினூடே அவன் நிகழ்த்தும் பயணம் அது.

ஒரு குறுந்தொகை கவிதை. கவிதையை தனிப்பரப்பாய் கொண்டால், இது ஒரு விவரணை மட்டுமே..

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே.
- தாமோதரனார்

சூரியன் அகன்ற வானத்தில்
பாவம் இந்தப் பறவை
நெடிந்துயர்ந்த மரக்கிளைகளில் காத்திருக்கும்
பிள்ளைகளின் உள்வாய்க்கு புகட்ட
இரை கொண்டு விரைகிறது

தலைவி கூற்றாக வரும் இக்கவிதை பிரிவின் துயரை, தலைவனின் நிலையை குறித்த வருத்தத்தை, தந்தையை எதிர்நோக்கி நிற்கும் தன் பிள்ளைகளின் ஏக்கத்தை, இப்பறவையைக் கண்டாவது அவன் திரும்பக்கூடாதா என்ற ஆதங்கத்தை பேசுகிறது. ஆனால் இதை தலைவியின் கூற்றாக மட்டும் ஏன் காண வேண்டும்? தலைவனின் ‘தனைப்போல் பறவை” என்ற கழிவிரக்க வெளிப்பாடாக, வெறும் கையுடன் திரும்பும் அவனது ஏக்கமாக, தூரம் வந்து விட்டவனின் பிள்ளைகள் குறித்த நினைவாக... இவை ஏதுமன்றி, கவிஞனின், அந்தி வேளையில் இரைகொண்டு விரையும் பறவையைக் குறித்த மென்சோகமாகவும் காணலாம் அல்லவா?

படைப்பு என்பது ஒவ்வொரு வாசிப்பிலும் நீட்சி கொள்ளும் பரப்பு. படைப்பாளி படைத்து முடித்தவுடன் அது தனி உருக்கொள்கிறது. இனி அதன் பயணத்தை அது தொடரும். அந்த படைப்பாளியின் மூலம் பிறந்தது அதற்கு ஒரு எதேச்சை மட்டுமே. படைப்பாளியே முக்கியமில்லை எனும் போது, உரையாசிரியர்கள் வகுத்த திணை, துறை, கூற்று இத்யாதிகள் குறுந்தொகையின் கவிதை அனுபவத்தை பெற அத்தனை முக்கியமா என தெரியவில்லை. கவிதையை வாசிக்க என வகுக்கப்பட்டுள்ள இக்கருவிகளின் முழு ஆழம் தெரியாததால் வரும் கூற்றாக இருக்கலாம் இது. ஆனால் குறுந்தொகையிலிருந்து இன்றைய நவீன வாசகன் எதைப் பெறுகிறானோ, அதை பெற, இவை தேவைப்படுவதில்லை. இப்படி சொல்வதன் நோக்கம் மேலும் ஓர் வாசிப்பிற்கான சாத்தியத்தை கண்டடைதலேயன்றி சங்கப் பாடல்களின் மீது நிகழ்த்தப்படும் மரபார்ந்த வாசிப்பை புறந்தள்ளுதல் அல்ல.

ஒரு சிறு உதாரணம்,

காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
- வெள்ளிவீதியார்

கால்கள் ஓய்ந்தன, கண்கள்
பார்த்துப் பார்த்து வலுவிழந்தன
அகண்டு இருண்ட வானத்து விண்மீன்களை விட
அதிகம், இந்த உலகத்தில் பிறர்.

என்ற பொருளுள்ள இக்கவிதை செவிலித் தாயின் கூற்றாக வருகிறது.

காதலனுடன் சென்றுவிட்ட மகளை தேடி அலைகிறாள் செவிலித்தாய். அக்கணத்தின் ஆற்றாமையாய் வெளிப்படுகின்றன இவ்வரிகள். உலகில் எங்கெங்கோ தேடிவிட்டேன். பிறரே கண்ணில் படுகிறார்கள் என்கிறார். இக்கவிதைக்கான விளக்கங்களை புறந்தள்ளி விட்டு கவிதையை மட்டும் நோக்கினால், இழப்பும் அதன் வலியும் மட்டும் பிரதானம் கொள்கின்றன என்பதை உணர்வோம்.

எத்தனை கவித்துவத்துடன் அந்த இழப்பின் வலி பதிவு செய்யப்படுகிறது.... எங்கெங்கோ தேடினேன். பிறர் மட்டுமே கண்ணில் பட்டனர். தேடப்படுவதன் இன்மை, பிறர் என்ற இருப்பின் மூலம் சுட்டப்படுகிறது. இக்கவிதையின் குவிமையம் “பிறர்” என்ற அந்த ஒரு சொல். கவிதையின் அத்தனை சொற்களும் சூரியகாந்தி மலர்களைப் போல, ஞாயிறெனச் சுடரும் அப்பிறரை நோக்கியே திரும்பியுள்ளன. அந்த “பிறரோ” தேடப்படும் ஏதோ ஒன்றை சுட்டி நிற்கிறது.

இக்கவிதையின் எல்லை செவிலித்தாயின் “பிறருடன்” மட்டுமே முடிவடைகிறதா என்ன? இழப்பும் அதன் வலியும் மகளைப்பிரிந்த தாய்க்கு மட்டுமே உரிய உணர்வுகளா? பிரபஞ்ச விரிவின் முன், பொம்மையை தொலைத்த குழந்தையின் அழுகையும் நாட்டை தொலைத்த மன்னனின் சோகமும் ஒன்றே என்பார் மார்க் ட்வைன். ஒவ்வொரு இழப்பும் பெரியதும் சிறியதுமாக இந்த ஆற்றாமை புள்ளியையே சென்று மோதி கதறுகின்றன. கவிதைக்குள் எல்லையற்று விரியும் ஆற்றாமையை ஒரு தாயினுடையதாக மட்டுமே சுருக்கவேண்டுமா?

மிலோராட் பாவின் எழுதிய கசார்களின் அகராதி (Dictionary of Khazhars) என்ற செர்பிய நாவலில் ஒரு இடம் வரும். ஒரு இளம் துறவி. அவருக்கு ஒரு ஜாடி கிடைக்கும். தவறுதலாய் அதனுள் மோதிரம் ஒன்று விழுந்துவிட, அதை எடுக்க ஜாடிக்குள் கையை விடுவார் துறவி. அந்த சிறிய ஜாடியின் அடித்தளத்தை தொடமுடியாதபடி அவரது கை ஏதோ ஓர் இல்லாத ஆழம் நோக்கி சென்றுகொண்டே இருக்கும். அந்த மாய ஜாடி உண்மையில் என்ன என தனது குருவிடம் வினவுவார் துறவி. அதற்கு குரு தரும் பதில் நமது கவிதை வாசிப்பிற்கும் பொருந்தும் என தோன்றுகிறது.

…yet, once I tell you what it is, it will no
longer be all the things it is not.
- Milorad Pavic (Dictionary of Khazhars)

- வெ.சித்தார்த்

Pin It