ஸ்தலபுராணம்

கோல்ஃப் க்ளப் மைதானத்தின்
விண்ணளந்த வலையில்
சிக்காமல் பறக்கும் தும்பிகள்
பயணிக்கும்
கான்கிரீட் ஆஞ்சநேயர்கள்
காத்தருளும்
பெருவழிச்சாலையெங்கும்
விரிந்த போன்சாய் மாமரங்கள்
நிற்கும்
கற்கால Bus stand
தாண்டினால் கிடைக்கும்
Coconut Breaking Place
உண்டிவில் குறி தவற
நரசிம்ஹா புண்ணியத்தில் வாழும்
பேன் பார்க்கும்
சூப்பர் குரங்குகள் கூட்டம்
க்ரிப்டனைட் குளத்தில்
சப்தமின்றி நீந்தும்
பாஷோவின் தவளை
கோவிலின் மொட்டை மாடியில்
தெய்வ தரிசனம்
மற்றும்
தீயொளித் தாரகை மலரவிழ
வீடுதிரும்புதல்.


ஒரு நாள் கூத்து

வெளிகளைக் கடந்து ஒலித்தது
உள்மௌனம்
காற்றைப் புணர்ந்தது
என் சிகரெட் புகை
பியர் குடித்ததால் வந்த
மெலிதான போதையில்
மிதந்தேன்
உன் வீட்டுப் பூனை
கொட்டாவி விடும் அழகை
வேடிக்கை பார்த்தேன்
காலத்தில் இருந்து
மற்றும் ஒரு நாளை
கடத்திக் கொண்டு
போய்ச் சேர்த்தேன்
அகாலத்தில்.

- நந்தா