வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையட்டித் தன் கட்சி வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் அறிக்கையையும் அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது.

கூட்டணிக் கட்சிகளான இடதுசாரிகளுக்கு ஓர் இடத்தையும் ஒதுக்காமல், 40 இடங்களுக்கும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ள அக்கட்சி, உடன்பாடு ஏற்பட்டபின், சில வேட்பாளர்களைத் திரும்பப் பெறுவோம் என்றும் கூறியுள்ளது.

அறிவித்த வேட்பாளர்களை மாற்றுவது, திரும்பப் பெறுவது போன்றவையெல்லாம் அக்கட்சியின் வழக்கமான நடவடிக்கைகள்தாம். இதேபோல, ஒரு நிகழ்வு தி.மு.க. கூட்டணியில் இருக்கும் போது நடந்திருக்கு மானால், நம் ‘தோழர்கள்’ வெகுண்டு எழுந்திருப்பார்கள். இதுதான் கூட்டணி தர்மமா என்று கேட்டு, உடனடியாகச் செய்தியாளர்களை அழைத்துப் பேசியிருப்பார்கள்.

ஆனால் இப்போது இருக்குமிடம் தெரியாமல் அமைதியாக உள்ளனர். எதையேனும் பேசி, வரவிருக்கும் ஓரிரு இடங்களை யும் இழந்துவிடக் கூடாதே என்னும் கவலை அவர்களுக்கு!

அ.தி.மு.க. 43 பக்கங்களைக் கொண்ட தன் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழகத்தைப் போல, இந்தியாவையும் ‘ஒளிமயமாக்கி’ விடுவோம் என்று அவ்வறிக்கை உறுதி கூறுகின்றது. மக்கள் மனங்களில் மிகப்பெரும் அச்சத்தை ஊட்டக்கூடிய இவ்வரி களை அ.தி.மு.க. சிறிதும் அச்சமின்றி வெளியிட்டுள்ளது.

தமிழ் வகுப்புகள் இருந்த இடங்களுக்கு, ஆங்கில வகுப்புகளைக் கொண்டு வந்தது குறித்து மிகப்பெருமையாகப் பேசிக் கொள்கின்றது(பக்.6). அதனைக் ‘கல்விப் புரட்சி’ என்னும் தலைப்பின் கீழ் வெளியிட்டுள்ளது. நம் தமிழ்த் தேசிய வீரர்கள் எவரேனும், இதனை எதிர்த்து ஓர் ஆர்ப்பாட்டமாவது செய்வார்களா என்று தெரியவில்லை.

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை, சமூகநீதி பற்றிப் புதிய விளக்கம் ஒன்றைத் தந்துள்ளது (பக்.20). சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்னடைவாக உள்ள நிலையைச் சமன் செய்வதுதான் சமூகநீதி என்கிறது. பொருளாதாரப் பின்னடைவும் சமன் செய்யப்பட வேண்டியதே என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இவ்வறிக்கை, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கான முன் முயற்சியாகவே இவ்வரியைப் பயன்படுத்தியுள்ளது.

சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளைச் சாதியின் பெயராலேயே பெற முயல்வதுதான் இடஒதுக்கீட்டுக் கோட்பாட்டின் அடிப்படை. பொருளா தாரப் பின்னடைவைச் சரி செய்யத்தான், இலவசத் திட்டங்களும், ‘விலையில்லா’த் திட்டங்களும் அறிவிக்கப்படுகின்றன.

கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவிகள் ((Students Aid Fund)) செய்யப்படுகின்றன. ஆனால் இடஒதுக்கீடு என்பது, சமூக அளவிலும், கல்வித் துறையிலும் பின்தங்கி உள்ளோருக்கு ((Socially and educationally backward)) மட்டுமே உரியது-.

இடஒதுக்கீட்டுத் திட்டம், வறுமை ஒழிப்புத் திட்டமன்று. சாதி ஆதிக்க எதிர்ப்புத் திட்டம்.

இவ்வாறு, அண்ணாவிற்கும், திராவிட இயக்கத்திற்கும் எதிரான கொள்கைகளை, அண்ணாவின் பெயராலும், திராவிடத்தின் பெயராலுமே கொண்டுவர நினைக்கும் அ.தி.மு.க.விற்கு, வரும் நாடாளுமன்ற தேர்தலிலாவது நல்ல தீர்ப்பை மக்கள் வழங்க வேண்டும்.

Pin It