பல்வேறு சூழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளன. கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.

ஆட்சிகளைக் கலைத்துக் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வருவதன் மூலம், மறைமுகமாகத் தங்களின் ஆட்சிக்கு வித்திடுகிறது பா.ஜ.க. இன்னொரு புறம், தேவையற்றவைகளைப் பேசி, நம் கவனத்தைத் திசை திருப்புகிறது ம.தி.மு.க

அருணாச்சலப் பிரதேசத்தைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் காங்கிரஸ் அரசைக் கவிழ்த்துள்ளது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு. உத்தரகாண்டில் மொத்தம் 71 சட்டமன்ற உறுப்பினர்கள். அவர்களுள் 9 உறுப்பினர்கள் ஊசலாட்டத்திற்கு உள்ளாகினர். அவர்கள் தங்களை ஆதரிப்பதாகவும், இப்போது தங்களிடம் 35 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் கூறியது பா.ஜ.க. ஆனால் முதல்வர் ஹரிஷ் ராவத், தன்னால் பெரும்பான்மையை மெய்ப்பிக்க முடியும் என்றார். 28ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது.

அதற்குள்ளாக, முதலமைச்சர் 'குதிரை பேரம்' நடத்துவதாகச் சொல்லி, ஆட்சியைக் கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவந்துவிட்டனர்.

உத்தரகாண்டைக் கவிழ்த்த கையேடு, மணிப்பூர் காங்கிரஸ் முதல்வர் உகரம் இபோபி சிங்குக்கு எதிராக வேலைகளைத்  தொடங்கிவிட்டனர். முன்னாள் அமைச்சர் ஏ .கே.அந்தோணி தலைமையில் அம்பிகா சோனி, குலாம் நபி ஆசாத் முதலியோர் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து முறையிட்டும் பயன் ஏதுமில்லை.

தமிழ்நாட்டிலும், யாருக்கும் பெரும்பான்மை வராது, ஆட்சியைக் கலைத்துவிட்டு மறைமுகமாகத் தங்கள் ஆட்சியைக் கொண்டுவந்துவிடலாம் என்ற கனவில் பா.ஜ.க.வினர் உள்ளனர்.

இதற்கிடையே, தொடர்ந்து வைகோ, தி.மு.க. மீதான அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டுள்ளார். நாம் அதற்கான எதிர்வினை புரிய வேண்டியுள்ளது. அ.தி.மு.க. அரசின் அவலங்களை அம்பலப்படுத்த வேண்டிய தேர்தல் நேரத்தில், நாம் வைகோவிற்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. இது அ.தி.மு.க.வைக் காப்பாற்றத் திட்டமிட்ட திசை திருப்பலோ என்ற ஐயம் எழுகிறது.

கவனமாக இருந்து கழகம் தேர்தலில் வெற்றிபெற வேண்டிய நேரம் இது!  

Pin It