ஒரு கற்பனைக்கு, இந்திய அரசு, உலகத்தரம் வாய்ந்த ஒரு தொழிற்கல்வி நிலையத்தை உருக்குவதாய் கொள்வோம். அத்தகைய சூழ்நிலையில், பின் வருமாறு ஒரு வாதம் கிளம்புவதாயும் கொள்வோம். அதாவது உலகத்தரம் மிக்க ஒரு தொழிற்கூட கல்வி நிலையத்தை அமைக்க ஆகும் பல்லாயிரம் கோடி ரூபாய்ச் செலவு, மாணவர்களின் தரம், அத்தகைய செலவு செய்து பயிற்றுவிக்கப்பட்டு வெளியேற்றபடும் மாணவர்களின் கல்வித்தரம் ஆகியவற்றை மனதில் கொண்டால், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.எஸ்,சி போன்ற, நிறுவனங்கள் இன்றைய அளவில் தங்களது மாணவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வித் தரத்தை மிகக்குறைவாக உள்ளதெனச் சொல்லி அவர்களை அங்கு சேர்க்க முடியாதெனச் சொல்லும் வாதம்.

இந்த வாதத்தில் இருக்கும் அராஜகப் போக்கு இப்போது புரிகிறதல்லவா? அதுபோன்றதொரு அராஜகமான வாதம்தான் நம்முன் இன்று வைக்கப்படுகிறது. ஐ.ஐ.டி போன்ற கல்வி நிலையத்தை காப்பவர்களாக காட்டிக் கொள்பவர்களாலும், தரத்தை தாரக மந்திரமாக உச்சாடனம் செய்பவர்களாலும், ஏற்கனவே பல மாநிலங்களில் செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீட்டினையும் அவற்றின் வெற்றிகளையும் யாருக்கும் இங்கே கேட்க நேர்மை போதவில்லை.

தமிழ்நாட்டின் நிலவரம்

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திரா போன்ற பல மாநிலங்களிலும் ஏற்கனவே இட ஒதுக்கீடு அமல் செய்யப்பட்டுள்ளது. கட்டுரையின் விரிவுக்கு பொருத்தமாய் நான் தமிழ்நாட்டை மட்டும் எடுத்துக்காட்டாக பயன்படுத்த விழைகிறேன். தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு செய்யபடும் விகிதாச்சாரம் 69% ஆகும். இதன் உட்பிரிவுகளை இங்கே தமிழக அரசின் இந்தச் சுட்டியில் காணலாம்.
www.tn.gov.in/policynotes/bc_mbc_welfare.htm

Caste Category Population (lakhs) % of Total % of Reserved
Backward Classes 287 46.2% 30%
Most Backward Classes 129 20.7% 20%
Scheduled Classes 118 19% 18%
Scheduled Tribes 7 1.1% 1%
Others 80 13% ---
Total 621 100% 69%

இட ஒதுக்கீட்டுக்குரியவர்கள் "பிற பிற்படுத்தப்பட்டோர்" (OBCs) என்று கூட்டாக பிற மாநிலங்களிலும், தமிழகத்தில் "பிற்படுத்தப்பட்டோர்" மற்றும் "மிகவும் பிற்படுத்தப்பட்டோர்" (BCs and MBCs ) என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

மேலே உள்ள அட்டவணையில், இருக்கும் மக்களின் எண்ணிக்கைக்கு சமமாகவோ அல்லது குறைவாகவோதான் இட ஒதுக்கீடு செய்யபடுகிறது என்பது எளிதில் புரியும். எனவே இட ஒதுகீட்டை இருக்கும் மக்களின் விகிதாச்சரப்படி பகிர்ந்து கொள்ளும் ஒரு முறையாகப் பார்க்க முடியும். இதில் "எதிர் சமூகக் கொடுமை" (Reverse Discrimination) என்று சொல்வதெல்லாம் எத்தனை பொய் என்று புரிகிறதல்லவா? அபபடிப் பார்த்தோமெனில், பிற்படுத்தபட்டோருக்கு மக்கள் தொகையைவிட குறைவான பங்கீடே கொடுத்துள்ளபடியால் அவர்களுக்கு வன்முறைகள் செய்ய நியாயம் வழங்குவதாக ஆகாதா?

அட்டவனையின் படி, பிறர்(Others) என்று சொல்லபடும், உயர்சாதியினரின் மக்கள்தொகை வெறும் 13% மட்டுமே. ஆனாலும் அவர்கள் 31% இடங்களை "பிறர்" என்ற பிரிவில் உல்லாசமாக அனுபவிப்பது எப்படி?

இதே அடிப்படையில் இதுவரை செய்ய்ப்பட்டு வந்துள்ள இட ஒதுக்கீட்டு முறையால், ஆக்கப்பூர்வமான, நன்மை பயக்கக்கூடிய விளைவுகளே உண்டாகியுள்ளன. எனவேதான் மாநிலம் முழுதும் பெரும்பான்மையான மக்களால் இட ஒதுக்கீட்டை ஆதரிக்க முடிகிறது. அரசின் மருத்துமனைகள் பல பிற மாநிலங்களை விட வெற்றிகரமாகவே இயங்கி வருகின்றன். அவ்வாறான மருத்துவர்கள், இட ஒதுக்கீட்டில் பயின்று வந்தவர்களே. மேலும் இட ஒதுக்கீட்டின் பயனாகவே பல மருத்துவர்களும், கிராமப்புறங்களில் வேலை செய்ய தேர்ந்தெடுகின்றனர்.

எனவேதான், இந்திய மருத்துவர்கள்-இன் அஸ்ஸோசியேஷனின் தமிழகப்பிரிவு "பிற பிற்பட்டோரின்" இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதில் நமக்கு வியப்பில்லை.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது, பிற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக எழும் சூழ்ச்சிஅரசியலை (Polemics) வெகு எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இவர்கள் எப்போதுமே இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்றி, வெற்றிகரமாக இயங்கி வரும் தமிழகம் போன்ற மாநிலத்தை குறித்து எப்போது எதுவுமே சொல்லாமலேயே வாதிப்பார்கள். ஏனெனில், எப்போதுமே இட ஒதுக்கீட்டில் படித்த மாணவர்களின் செயல் திட்டத்தால், உடைந்த பாலங்களோ அல்லது இட ஒதுக்கீட்டில் படித்த தரக்குறைவான(?) மருத்துவர்களினால் இறந்த நோயாளிகளோ எங்குமே இல்லை என்பதுதான் உண்மை. உண்மைக்கு புறம்பாக அதை மாற்றிச் சொல்வது வெறும் கற்பனைவாதம் மட்டுமே.

கிடைக்கப் பெற்றவர்களும் அற்றவர்களும்

ஆச்சரியமளிக்காத வகையில் அனைத்து உயர்சாதியினருக்கும் இந்த இடஒதுக்கீடு இனிப்பான விசயமல்ல. இத்தனைக்கும் அவர்களது மக்கள் தொகையைவிட அவர்களுக்கு இருக்கும் விகிதாச்சார காலி இடங்கள் அதிகமாக இருக்கும்போது கூட. பின் எதனால் பிரச்சினை என்று கோஷம் போடுகின்றனர்? இருக்கும் இடங்கள் மிகக்குறைவாக இருப்பதால், தம் பிரிவினருக்கு இடம் இல்லாது போகிறது என்பதனால். ஆனால் இது அனைத்து பிரிவினருக்கும் பொருந்தும் என்பதே உண்மை, மேல்சாதியினருக்கு மட்டுமல்ல. மேல்சாதியைச் சேர்ந்த நம்மில் பலருக்கு வாய்ப்பு கிட்டாத நண்பர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அதன் காரணமாக நம் கோபம் எல்லாம் இட ஒதுக்கீட்டின் மேல் பாய்கிறது. (சில இடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்ற மேல்சாதி மாணவர் கூட இட ஒதுக்கீட்டின் மேல் குற்றம் சுமத்துகிறார்). ஆனால் உண்மையில் கேட்கப்பட வேண்டிய கேள்வி, பிற பிற்படுத்தப்பட்டோரில் வாய்ப்பு கிட்டாத லட்சக்கணக்கானோரை என்ன செய்யலாம்?

ஆயிரக்கணக்கான விவசாயிகளின் மகள்களும் மகன்களும், ஆயிரக்கணக்கான நெசவுத் தொழிலாளிகளின் மகள்களும் மகன்களும், உயர்நிலை பள்ளிகளுக்குகூட செல்ல முடிவதில்லை. அப்படியே சென்றாலும் போதுமான பண வசதிகள் அவர்களது இல்லங்களில் இல்லை. நேரடி கவனம் செலுத்தக்கூடிய அதிகப்படியான கட்டணக் கல்விக்கு (Tuitions courses) அவர்களால் செல்ல இயலவில்லை. இதுதான் உண்மை. நாம் அவர்களை நமது தினசரி வாழ்வில் சந்திப்பதில்லை. நமக்கு அப்படியான பெரும்பாலான மாணவர்களைத் தெரியவே தெரியாது. ஆனல் அவர்களும் உண்மையாக மாணவர்கள்தான். அவர்களுக்கு இடம் கிடைக்காது போவதோடு மட்டுமல்லாமல், அவர்களால் ஒரு சமநிலையில் கூட போட்டி இட்டு வெல்ல வசதியற்ற மாணவர்கள். நாம் இவர்களையெல்லாம் தகுதியற்றவர்கள் என்று ஒரு கற்பனாவாதத்தால் தவிர்த்துவிடுவது அறிவான செயலா?

மேலே சொன்ன கணக்கின் படி, ஒவ்வொரு வாய்ப்புத் தவறிய மேல் சாதி மாணவனுக்கும், குறைந்தது 5 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வாய்ப்பற்று போய் உள்ளார்கள் என்பதுதான் உண்மை நிலவரம். இவர்களுக்காக பேச யாராவது உண்டா?

பொருளாதாரக் காரணி

மேலும் இடஒதுக்கீட்டில் படித்த மாணவர்களின் கல்வித்தரம் குறைவு என்ற வாதமும் வைக்கப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல. அண்ணா பல்கலையில் பயின்று அதீத வெற்றி அடையும் எண்ணற்ற மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் பயின்றவர்கள்தான். அவர்களுக்கு மட்டும் தரம் எங்கிருந்து வாய்த்தது?

மேலும், பிற்பட்டோரில் ஏற்கனவே வசதியுள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு போய்ச் சேராமல், தகுந்தவர்களுக்கு போய்ச் சேரவேண்டும் என்பதற்காக, "நுரைநிறை வர்க்கம்" [Creamy Layer]எனப்படுவோருக்கு இட ஒதுக்கீட்டில் வாய்ப்பை தவிர்ப்பது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எந்தக் காரணிகளால் "நுரைநிறை வர்க்கம்" வறையறுக்கப்படுகிறது என்பதை இங்கு அறியலாம்.
http://ncbc.nic.in/html/creamylayer.htm

உச்ச நீதிமன்றம், பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார வசதியைக் காரணம் காட்டி மறுப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கான காரணமாக, பணவசதி தற்காலிகத் தன்மையை உடையது என்றும், ஆனால் சாதிப் பிற்படுத்துமை மாற நீண்ட காலம் தேவை என்ற வாதத்தை வைத்துள்ளது.

வெறும் பொருளாதாரத்தை வைத்து மட்டுமே இட ஒதுக்கீடு அமைக்க வேண்டும் என்ற வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், சாதி கட்டுமானங்களற்ற சமூகத்துக்கு அந்த வாதம் சாலப் பொருந்தும். இன்றைய நமது சமூகச் சூழலில் சாதியினால் ஏற்படுத்தப்படும் உறவுகளால் தான் பொருளாதாரம் வெகுவாக கட்டமைக்கப்படுகிறது.

சாதியே ஒழிந்து விட்டதென்றும், முன்பு போல் சாதி இன்று வழக்கில் இல்லை என்றும் ஒரு சாரார் வாதம் செய்கின்றனர். அருமை நண்பர்களே! நீங்கள் ஒருமுறை நாளிதழ்களில் உள்ள திருமண விளம்பரங்களை ஒரு எட்டு சென்று பார்த்து விட்டு வாருங்கள். இத்தகைய காரணங்களால் தான், இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டும் பிற்படுத்தப்பட்டோரின் நிலை சமூகத்தில் மேலெழும்ப நீண்ட காலம் தேவைப்படுகிறது.

இன்னொரு முக்கியமான ஒன்று, சிலர் ஒரு சாதியை "கீழ் சாதி" என்று சொல்லிவிட்டால் மட்டும், அவர்கள் கீழ் சாதி என்று அங்கீகரிக்கப்பட்டு, அரசின் ஒதுக்கீடு முறைகளை கொள்ளையடித்து விட முடியாது. ஒதுக்கீட்டுக்கு தேவையான காரணிகளை அச்சமூகம் பூர்த்தி செய்தால் தான் அவர்களுக்கு ஒதுக்கீடு வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். அந்த காரணிகளை இங்கு பார்க்கலாம்.
http://ncbcnic.in/html/guideline.htm

முடிவு

இன்னும் கூட முகத்திலறையும் உண்மையென்னவெனில், மிகவும் தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவினரும், அவர்களது தொழிலும் நம்மிடையே உள்ளன எனபதுதான். இந்த வாதத்தை யாராலும் மறுக்கமுடியாது. ஆகையால் அறிவுள்ளவர்கள் எவராயினும், நம் சாதீய சார்புகளை விடுத்து, லட்சக்கணக்கான பிற்படுத்தப்பட்டோர் நமது அனைத்து சமூக,அரசு,கல்வித் தளங்களில் பங்கேற்க அழைக்கும் வண்ணம் இட ஒதுக்கீட்டை முழுமனதுடன் செயல்படுத்துவோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பிற்சேர்க்கை: மூலக்கட்டுரையின் சுட்டி:
http://www.tamilnation.org/caste/reservations.htm

-
கார்த்திகேயன் இராமசாமி

Pin It