ஓடிக் கொண்டே இருப்பதுதான் நதி. உலவிக் கொண்டே இருப்பதுதான் காற்று. ஆயிரம் தடைகள், தேர்தல்களில் ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றையும் தாண்டி, வளர்ந்து கொண்டே இருப்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

 கிளைகள் வார்டுகள் தொடங்கி, மாநிலம் வரையிலான உட்கட்சிச் தேர்தல்கள் அனைத்தும் முடிவடைந்து, கடந்த ஒன்பதாம் தேதி தி.மு.கழகத்தின் 14ஆவது பொதுக்குழு மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடைபெற்று முடிந்திருக்கிறது. தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர், தளபதி ஆகியோர் மீண்டும் அதே பொறுப்புகளை ஏற்றிருக்கின்றனர். 45 ஆண்டுகளாக ஒரு கட்சியின் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றிச் சாதனை புரிந்திருக்கிறார் தலைவர் கலைஞர். இப்போது 11ஆவது முறையாக மீண்டும் தலைவராகி தமிழ்நாட்டில் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்.

தி.மு.கழக அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மாவட்டங்களும் ஒன்றியங்களும் இன்னும் பலவாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. 34 மாவட்டச் செயலாளர்கள் என்ற எண்ணிக்கை இப்போது 64ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஈரோடு, சேலம் மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களுக்குமான 59 செயலாளர்கள் முறைப்படியான தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுள், 30க்கும் மேற்பட்டவர்கள் புதியவர்களாகவும், இளைஞர்களாகவும் அமைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட எல்லைகளின் அளவுகள் சுருங்கி உள்ள காரணத்தால், செயலாளர்கள் கூடுதல் பணியாற்ற ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது-. ஆரோக்கியமான போட்டிக்கும் இப்புதிய வடிவம் வழிவகுத்துள்ளது.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள், தி.மு.கழகம் அடுத்துப் பயணிக்க இருக்கும் திசையைத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளன. குறிப்பாக, முதல் தீர்மானம் மதச்சார்பற்ற கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைய வேண்டிய தேவையை எடுத்துக்காட்டுகிறது. நேரடியாகவே, மத்திய ஆட்சி குறித்தும், பா.ஜ.க. குறித்தும் அத்தீர்மானம் பேசுகின்றது.

'எங்களைப் பார்த்துத் தி.மு.க. பயப்படுகிறது' என்று பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறியிருப்பது, அவருக்கே நகைப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு கூற்றாக உள்ளது-. தமிழ்நாட்டைப் பொறுத்தளவு பா.ஜ.க. ஒரு சிறிய அளவிலான கட்சியே என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், மத்தியில் ஆட்சிப் பொறுப்பு அவர்களிடம் உள்ளது. அதனைப் பயன்படுத்தி நச்சு விதைகளை மக்கள் மனங்களில் தூவும் செயல்களை அவர்கள் தொடங்கிவிட்டார்கள். அதனைக் கவனமாக உள்வாங்கி, முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் நச்சு மரம் விரைந்து வளர்வதற்கு நாமும் காரணமாகி விடுவோம் என்னும் அக்கறையில்தான், அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தலைவர் அவர்களும், பேராசிரியரும் தத்தம் உரைகளிலும் அந்த ஆபத்தைக் குறித்து விரிவாகப் பேசியுள்ளனர். கடந்த சில மாதங்களாக மத வாதத்தை பா.ஜ.க.வினர் எப்படி உருவாக்கி வருகின்றனர் என்பதை ஒவ்வொரு எடுத்துக்காட்டாகக் கூறிப் பேராசிரியர் கடுமையாகக் கண்டித்திருக்கின்றார். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றுரைத்த திருக்குறளுக்கே தேசிய நூலாகும் தகுதி உள்ளதெனவும், பிறப்பில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் பகவத் கீதைக்கு அப்படி ஒரு தகுதி ஒரு நாளும் இல்லை என்றும் தன் உரையில் பேராசிரியர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

dmk 600

'ஜெயலலிதாவை விடத்தந்திரக்காரர்கள்' என்று பா.ஜ.க. வினரைப் பற்றிய தலைவரின் குறிப்பு அவருடைய உரையில் காணக் கிடைக்கிறது. மிகக்கவனமாகச் சொற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். நேர்நின்று எதிர்ப்பதை விட, தந்திரங்களால் அடுத்தவர்களை வீழ்த்துவதே அன்று தொடங்கி இன்று வரை, அவர்களின் இயல்பாக உள்ளது.

தங்கள் கட்சியின் தலைவர் ஒருவரை முன்னெடுக்காமல், காங்கிரஸ் கட்சியின் பட்டேலுக்குச்சிலை எடுப்பதெல்லாம் அந்தவகையைச் சார்ந்தது தான். காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்திக் கலங்கிய குட்டையில் மீன்பிடிகக அவர்கள் முயற்சிக்கிறார்கள். 

தமிழர்களின் வாக்குகளை வலைவிரித்துப் பிடிக்கும் புதிய தந்திரம்தான், தருண் விஜயின் தமிழ்ப்பற்றும், திருக்குறள் பற்றும்! திருக்குறள் 'திருப்பயணம்' நடத்தித் தமிழ் உணர்வாளர்களை எல்லாம், தங்கள் பக்கம் இழுத்துவிட முடியுமா என்று கருதுகிறார்கள். ஆனாலும், இது மிக மிகப் பழைய உத்தி என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். திராவிட இயக்கத்தை எதிர்த்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி., சிலம்பை முன்னிறுத்தி அன்று அறிஞர்கள் பலரைத் தன் வசம் வைத்திருந்தார். அன்றைக்குச் சிலம்பு, இன்றைக்குத் திருக்குறள்!

நிதி நெருக்கடியாலும், நிர்வாகத் திறன் இன்மையாலும் முடங்கிக் கிடக்கும் இன்றைய தமிழக அரசின் போக்கைக் கண்டித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது-. அது குறித்து ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு தமிழகம் முழுவதும் ஐயாயிரம் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனத் தலைவர் தன் விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். பொதுக்கூட்டங்கள், சிறு நூல்கள், துண்டறிக்கைகள் மூலமாகத் தொடர்ந்து தமிழக மக்களிடம் தொடர்பில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் கழகத்தின் திட்டம்.

திட்டங்களை மட்டுமின்றி, அடுத்த தலைமை தளபதியிடம்தான் என்பதையும் வெளிப்படையாகத் தலைவரும், பேராசிரியரும் அறிவித்திருக்கிறார்கள். புதிய பொலிவோடும், வலிவோடும் புறப்பட்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

Pin It