தருமபுரி மாவட்டத்தில், சித்தேரி மலையின் அடிவாரத்தில் அமைதியாய் வாழ்ந்து கொண்டிருந்த வாச்சாத்தி மக்கள், 20 ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் இரவில், தங்கள் அமைதியை மட்டுமில்லை, வாழ்க்கையையும் சேர்த்தே பறிகொடுத்தார்கள். வீரப்பனைத் தேட வருகிறோம் என்று உள்ளே வந்த காவல்துறையும், வனத்துறையும் வந்த காரியத்தை விட்டுவிட்டுப் பந்தல் காலைப் பிடுங்குவது என்பதைப் போல, தங்கள் கடமையை மறந்துவிட்டு, அந்த ஊர்ப்பெண்களின் மீது பாய்ந்து பிராண்டினார்கள். எங்கே வீரப்பன், எங்கே வீரப்பன் என்று கேட்டு அந்த மக்களை அடித்து உதைத்தார்கள். அவர்களின் வீட்டுப் பொருள்களை எல்லாம் உடைத்துச் சிதைத்தார்கள்.

13 வயதுப் பள்ளிக் கூடச் சிறுமியிலிருந்து, எழுபது வயது மூதாட்டி வரை எவரும் அவர்களிடமிருந்து தப்ப முடியவில்லை. எல்லோரையும் சித்திரவதை களுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும் உள்ளாக்கினார்கள். மனிதநேய ஆர்வலர்களும், மனித உரிமை அமைப்புகளும் இந்தக் கொடூரத்தை வெளியில் கொண்டுவந்த பிறகு, 1992ஆம் இது குறித்த வழக்கு தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. ஏறத்தாழ 20 ஆண்டுகள் நடைபெற்ற அவ்வழக்கில் கடந்த 29ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, குற்றம் சாட்டப்பெற்ற 269 பேரும் குற்றவாளிகளே என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இறந்தவர்கள் போக, எஞ்சியுள்ள 215 பேருக்கும் ஓராண்டு முதல் 17 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், தண்டமும் அளிக்கப்பட்டுள்ளது. 

இவ்வளவு பேர் ஒரே வழக்கில் தண்டிக்கப்படுவதும், குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகளாக இருப்பதும் இந்த வழக்கில்தான் என்று கூற வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், கலங்கிய நெஞ்சத்திற்கும், கண்ணீருக்கும் இடையில் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். ஏதுமறியாத, வஞ்சகம் தெரியாத அந்தப் பழங்குடி மக்கள் அழுதபடியே தொலைக்காட்சியில் பேசிய காட்சிகள் எவர் நெஞ்சையும் உலுக்கும். 13 வயதில் தன் வாழ்வைப் பறிகொடுத்த செல்வியும், கண்ணீர் விட்டு அழுத காந்திமதியும் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் உணர முடிந்தது. எதிர்த்திசையில் தண்டிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீர்ப்பை விமர்சனம் செய்து கொண்டிருந்ததோடு நில்லாமல், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இரண்டு கண்ணீருக்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடு !

காவல்துறையும், வனத்துறையும் இவ்வளவு தூரம் கட்டுமீறிப் போயிருக்கிறது என்றால், அவற்றைக் கட்டுப்படுத்தாத அரசே காரணமாக இருக்க முடியும். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவது என்னும் பெயரில், ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களுக்கு எதிரான காவல் துறையின் வன்முறை இப்படிக் கட்டவிழ்த்து விடப்படுவதை நாம் பார்க்கிறோம். வாச்சாத்தி நிகழ்வும் அப்படித்தான் அவர் ஆட்சியிலே நடந்து முடிந்த ஒரு சோகம்.

இப்போதும் அதேபோக்கு தொடர்கிறது என்பதைத்தான் பரமக்குடி நமக்கு எடுத்துக் காட்டுகிறது. 

வன்முறை அளவுமீறிப் போகும்போது காவல்துறை கைகட்டிக் கொண்டு அதனை வேடிக்கை பார்க்க வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. ஆனால் கலவரங்களை எப்படி அடக்குவது என்பதற்கு பல்வேறு வரையறைகளும், விதிமுறைகளும் காவல்துறைக்கு உள்ளன. அவற்றுள் எதனையும் பின்பற்றாமல் தன் போக்கில் செயல்பட எந்தக் காவல்துறை அதிகாரிக்கும் உரிமையில்லை.

வாச்சாத்தியிலும், பரமக்குடியிலும் எந்த விதிமுறை பற்றியும் கவலைப்படாமல்தான் காவல்துறை செயல்பட்டிருக்கிறது. இரண்டு இடங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களே தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். அன்று மலைவாழ் பழங்குடி மக்கள், இன்று தாழ்த்தப்பட்ட மக்கள். தேடுதலுக்காக வாச்சாத்திக்குப் போன காவல்துறையோ, வனத்துறையோ எவ்விதமான நீதிமன்றத் தேடுதல் ஆணையையும் தம் வசம் வைத்துக் கொள்ளவில்லை. 

தானடித்த மூப்பாய், தடதடவென்று குடிசைகளுக்குள் நுழைவதும், அங்கிருக்கும் பொருள்களை அடித்து நொறுக்குவதும், பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்துவதும் அவர்களின் போக்காய் இருந்திருக்கிறது.

பரமக்குடியிலும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு எந்த மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்தார் என்பது இன்றுவரை விளக்கப்படவில்லை. முத்துராமலிங்கத் தேவர் குருபூசைக்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்கப்படுவதைப் போல, இமானுவேல் சேகரன் நினைவிட அஞ்சலிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதுதானே முறையாக இருக்கும். அதைவிட்டுவிட்டு தமிழக முன்னேற்ற முன்னணியின் தலைவர் ஜான்பாண்டியனை அந்த இடத்துக்குச் செல்லவே அனுமதி மறுத்ததும், கைது செய்ததும் முறையானவை அல்ல. அதனை எதிர்த்து மறியல் செய்த மக்களை லேசான தடியடி மூலம் அப்புறப்படுத்தியிருக்கலாம் அல்லது கைது செய்திருக்கலாம். அப்படி ஏதும் செய்யாமல், உடனடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய தமிழக அரசு, பழைய போக்கிலிருந்து இன்னும் மாறவேயில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

தடியடி, கண்ணீர்ப் புகை, முழங்காலுக்குக் கீழே துப்பாக்கிச் சூடு என்கிற வரைமுறை ஏதுமின்றி, நேரடியாக நெஞ்சில் சுட்டிருக்கும் கொடுமையை என்னவென்பது?

உழைக்கும் மக்களுக்கு எதிரான போக்கை ஜெயலலிதா எப்போது கைவிடப் போகிறார்? 

வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது. பரமக்குடி வழக்கு எப்போது தொடங்கப் போகிறது?

Pin It