தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லையே என்றும் அந்த நிறுவனங்களில் பேராசிரியர் நியமனங்களில் பட்டியலினத்த வருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் அநீதி இழைக்கப்படுகிற தென்றும் நாம் பரவலாக விவாதம் செய்திருக்கிறோம். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள், மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை 2019 அமலாக்கத்தால் எவ்வாறு இடஒதுக்கீடு இல்லாமலும், அடித் தட்டு மக்களுக்கு எட்டாக்கனியாகவும் மாற்றப்படப் போகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
அண்மையில் தமிழ்நாட்டை ஆளுகின்ற அ.தி.மு.க. அரசு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்காக அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சண்முகம் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோரையும் நிதித்துறை, சட்டத்துறை, உயர் கல்வித் துறை செயலர்களையும் உள்ளடக்கிய குழு ஒன்றை அமைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனுடைய பலன்கள், கேடுகள் குறித்து எந்தவிதமான விவாதமும் பொது வெளியில் எழவில்லை. ஒரு சில தோழர்கள் மட்டும் முகநூலில் பதிவிட்டுள்ளனர். ஊடக விவாதங்கள் சில நடந்தன. தேசியக் கல்விக் கொள்கை 2019 கேடான கூறுகளுடன் நடைமுறைக்கு வருகிறதே என்ற கவலை எதிர்கட்சிகளுக்கும் தோன்றியதாகத் தெரியவில்லை.
அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு “அண்ணா உயர்சிறப்பு கல்வி நிறுவனம்” (Anna Institute of Eminence) என்ற ஒன்றும் “அண்ணா பல்கலைக்கழகம்” (Anna University) என்று மற்றொன்றும் உருவாக்கப்படும் என உயர்கல்வித் துறை செயலர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது. அண்ணா உயர் சிறப்பு கல்வி நிறுவனம் நிர்மாணிக்க மத்திய அரசு பங்களிப்பு 75 விழுக்காடு நிதி எனவும், தமிழக அரசு பங்களிப்பு 25 விழுக்காடு நிதி எனவும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த “உயர் சிறப்புக் கல்வி நிறுவனம்” என்ற பெயரில் அமைக் கப்படும் நிறுவனம் தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்ற எண்ணம் பலருக்குத் தோன்றலாம். Institute of Eminence (IoE) எனப்படும் உயர் சிறப்பு நிறுவனம் என்றால் என்ன? மத்தியில் ஆளும் பா.ச.க. அரசு இத்தகைய உயர் சிறப்பு நிறுவனங்களை உருவாக்க ஏன் முனைகிறது? இந்த முனைப்புக்கும் தேசியக் கல்விக் கொள்கை 2019-க்கும் தொடர்பு உண்டா? இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டால் அடித்தட்டு மாணவர்க்கு உதவியாக இருக்குமா? இடஒதுக்கீடு தொடருமா? என பல கேள்விகள் எழலாம்.
தேசியக் கல்விக் கொள்கை 2019-க்கு முன்பே டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலை மையிலான குழு 2016-இல் வரைவு அறிக்கை ஒன்றை அரசுக்குத் தந்தது. அந்த அறிக்கை யில் உயர்கல்வித் துறையில் 100 உயர்கல்வி சிறப்பு மையங்களை நிறுவ வேண்டுமெனவும், தனியாரோ, புரவலர்களோ முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய விரும்பினால் அவர்களுக்கு முழுச் சுதந்தரம் தரவேண்டுமெனவும், உள்நாட்டி லிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பேரா சிரியர்களை நியமிக்க உரிமை தரலாமென வும், பயிற்றுவிக்கும் பாடங்களை முடிவு செய்ய முழு அதிகாரமும், பயிற்சிக் கட்டணம் முடிவு செய்துகொள்ள முழு சுதந்தரமும் தரப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது அந்த வரைவு அறிக்கை. உயர் கல்வி வணிகத்துக்கான முன்னறிவிப்பைக் கூறியது அந்த அறிக்கை. தனியார் முதலீடு செய்யும் உயர்கல்வி நிறுவனங்களில் எங் கிருந்தும், வெளிநாட்டில் இருந்தும் பேரா சிரியர்கள் நியமித்துக் கொள்ளலாம். கல்விக் கட்டணத்துக்கும் கட்டுப்பாடு இல்லை என்றால் பொருள் என்ன? உலகக் கல்விச் சந்தையில் போட்டியிடும் நோக்கத்துக்கு ஊக்கமே தவிர ஒடுக்கப்பட்டவர்க்கான கல்வி குறித்த அக்கறையின்மையின் வெளிப் பாடுதானே!
பின்னர் மற்றொரு அறிக்கையைப் பார்ப் போம். இந்த அறிக்கையைத் தந்தவரும் கல்வியாளரல்ல. “உயர் கல்வித் துறையில் கூட்டிணைவு நிறுவனங்களின் பங்கேற்பு” (Committee on Corporate Sector Participation in Higher Education) என்ற குழுவின் தலைவராக இருந்தவர் இன்போசிஸ் என்ற மென்பொருள் நிறுவனத் தலைவர் நாராயணமூர்த்தி. இன்போசிஸ் நாராயணமூர்த்தி தன்னுடைய அறிக்கையில் கூட்டிணைவு நிறுவனங்கள் நிறுவும் பல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கம் இலவசமாக நிலம் தரவேண்டும், வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும், இடஒதுக் கீட்டை வலியுறுத்தக் கூடாது எனக் கூறப் பட்டது.
டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் அறிக்கை மற்றும் நாராயணமூர்த்தி அறிக்கைக்கு முன்பாகவே வாஜ்பேயி தலைமை அமைச்ச ராக இருந்த போது இரண்டு கூட்டிணைவு நிறுவன முதலாளிகளான பிர்லா மற்றும் அம்பானி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் கல்வி வணிகத்தை மேம்படுத்தவே ஆலோசனை வழங்கியது. “உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை நிறுவு வதில் வணிக மற்றும் தொழில் நிறுவனங் களுக்கு முக்கியப் பங்கு உண்டு” என பிர்லா அம்பானி அறிக்கை கூறியது. மேலும் “தொழில்சார் சமூகத்துக்குப் பொருளாதாரக் கட்டமைப்பு எவ்வளவு இன்றியமையாத தோ, அதைப் போல அறிவுசார் சமூகத்துக்குக் கல்விக் கட்டமைப்பு” (Educational Infrastructure) இன்றியமையாததாகும். இதை அடைய அரசு படிப்படியாகப் பல்கலைக்கழகங்களுக் கான நிதி ஆதாரத்தைக் குறைக்க வேண்டும். இந்தப் பல்கலைக்கழகங்கள் மாணவர் கல்விக் கட்டணங்களை உயர்த்துவன் மூலமும், நன்கொடைகள் மூலமும், முன்னாள் மாணவர் பங்களிப்பு மூலமும் தம் பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும் எனவும் பிர்லா அம்பானி அறிக்கை பரிந்துரைத்தது.
இந்த அறிக்கைகள் யாவுமே கல்வியா ளர்கள் அடங்கிய குழுவால் அளிக்கப்பட வில்லை என்பது நமக்குப் புரிகிறது. 1995-இல் நிறுவப்பட்ட உலக வர்த்தகக் கழக நிபந்தனைகள்படி கல்வியைக் குறிப்பாக உயர்கல்வியை வணிகச் சந்தையில் எவ்வாறு நிலைநிறுத்துவது என்பது குறித்த சிந்தனை யின் அடிப்படையிலேயே இந்தக் குழுக்களை மத்திய அரசு அமைத்து சமயோசனைகள் பெற்று இன்று நடைமுறைப்படுகிறது. அரசு நிர்வகிக்கும் உயர்கல்விப் பல்கலைக்கழகங் களும் இந்த கல்விச் சந்தையில் போட்டியிட அரசு பல்கலைக்கழகங்களையும் மத்திய அரசு இறக்கிவிடும் முயற்சியே “உயர்நிலை பல்கலைக்கழக” முத்திரை IoE.
2019-இல் வெளிவந்த கஸ்தூரிரங்கன் தலைமையில் ஆன தேசியக் கல்விக் கொள் கைக்குழு அறிக்கையில் நடைமுறை உத்திகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. உயர்கல்வி நிறுவனங்களை மூன்றாக வகைப்படுத்துவது கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரை. வகை 1 எனப்படும் ஆய்வுப் பல்கலைக்கழகங் கள், வகை 2 எனப்படும் பயிற்றுவிக்கும் பல்கலைக்கழகங்கள், வகை 3 தன்னாட்சிக் கல்லூரிகள் என்று பிரித்து முதல்வகைப் பல்கலைக்கழகங்கள் 5000 முதல் 25000 வரை மாணவர்களைச் சேர்க்கலாம் எனவும் பட்ட வகுப்பு முதல் ஆய்வு வரை நடத்த லாம் எனவும் பரிந்துரைத்துள்ளது. நிதி ஆயோக் தன்னுடைய 2017-இல் வெளியிட்ட பரிந்துரையில் வகை 1 பல்கலைக்கழகங் களுக்கே இனி நிதி உதவி செய்யப்படும் என கோடிட்டுக் காட்டியுள்ளது.
இந்தப் பின்னணிகளைப் புரிந்து கொண்டால்தான் Institute of Eminence (IoE) எனப்படும் மீச்சிறப்பு அல்லது உயர்நிலைப் பல்கலைக்கழகத் தரப் பின்னணியில் நடை முறை அமலாக்கத்தின் தாக்கங்களைப் புரிந்து கொள்ள முடியும்.
உயர்கல்வி நிறுவனங்களின் மேம் பாட்டுக்கு மாணவர்களின் ஆய்வு உதவிக்கு நிதி வழங்கிய பல்கலைக்கழக நல்கைக் குழுவைக் கலைப்பதெனவும், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரை இனி உயர்கல்வித் துறை அமைச்சர் என்று அழைப்பதெனவும், தேசியக் கல்வி ஆணையம் (Rashtriya Shiksha Ayog) எனும் உயர்மட்ட அமைப்பை நிறுவுவதெனவும் பல மாற்றங் களை மத்தியில் ஆளும் பா.ச.க. அரசு நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது. IoE எனப்படும் உயர்நிலைப் பல்கலைக்கழக நிலை என்றால் என்ன என்பது குறித்த வழி முறைகளைப் பல்கலைக்கழக நல்கைக்குழு 2017-இல் வெளியிட்டது.
2016-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை யில் “உயர்கல்வி நிறுவனங்களை உலகத்தரம் வாய்ந்த பயிற்றுவிக்கும் மற்றும் ஆய்வு நிறுவனங்களாக உயர்த்துவது எங்களின் கடப்பாடு ஆகும். பத்து அரசு மற்றும் பத்து தனியார் நிறுவனங்களை உலகத் தரம் வய்ந்த பயிற்றுவிக்கும் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களாகப் பரிணமிக்கும் வகையில் ஒழுங்காற்றுக் கட்டமைப்புகளாக உருவாக்கித் தரப்படும்” என்று அப்போதைய நிதி அமைச்சர் கூறினார். இந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்டதுதான் அண்ணா பல்கலைக்கழகம்.
IoE எனப்படும் உயர்நிலை நிறுவனம் எந்த வகையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய மேனாள் தேர்தல் ஆணையத் தலைவர் என். கோபால்சாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு “உயர்நிலைப் பல்கலைக்கழக” நிலை கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங் களில் இருந்து இருபதைத் தேர்ந்தெடுத் துள்ளது. அந்த இருபதில் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம்.
2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் IoE தீர்மானிக்கும் குழு, 10 மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிறுவனங்களைத் தேர்ந்தெடுத் துள்ளது. தனியார் சுயநிதி மற்றும் நிகர்நிலை நிறுவனங்கள் 10-ஐ தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.
ஐ.ஐ.டி. பம்பாய், ஐ.ஐ.டி. டெல்லி, ஐ.ஐ.டி. சென்னை, ஐ.ஐ.டி. கரக்பூர், இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனம் பெங்களூரு, பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் வாரணாசி, தில்லி பல்கலைக்கழகம், ஐதராபாத் பல் கலைக்கழகம் ஆகிய எட்டு மத்திய உயர்கல்வி நிறுவனங்களும்; கல்கத்தாவில் உள்ள ஜாதவ் பூர் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு மாநிலப் பல்கலைக்கழகங்களும் IoE நிலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தனியார், சுயநிதி நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் இராஜஸ்தான் BITS,, கர்நாட காவின் மணிப்பால் அகாடமி, பெங்களூருவில் உள்ள அமிர்த விஸ்வ வித்யாபீடம், ரிலையன்ஸ் நிறுவன ஜியோ பல்கலைக்கழகம், புதுதில்லி ஜாமியா ஹம்தார்த், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா தொழில்நுட்ப நிறுவனம், அரியா னாவில் உள்ள ஜிண்டால் பல்கலைக்கழகம், உத்தரப்பிரதேச ஷிவ் நாடார் பல்கலைக் கழகம், தில்லி பார்தி பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாட்டு வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் ஆகிய பத்துக்கு IoE நிலை வழங்கப்பட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் ஜியோவும், ஏர்டெல் பார்திக்கும் கட்டடங் கள் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியல்களில் தமிழ்நாட்டு அரசாங்க அண்ணா பல்கலைக்கழகம் IoE நிலைக்கு பரிந்துரைத்துள்ளது வரவேற்கத் தகுந்த செய்தி என்று தானே பார்க்கத் தோன்றும். மத்திய அரசின் ஆதிக்கத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சென்று விடு கிறதோ என்றும் விவாதங்கள் எழுகின்றன. IoE நிலை வேண்டுமென்றால் என்னென்ன நிகழும் என்பதை மத்திய அரசின் அறி விப்பும் பல்கலைக்கழக நல்கைக் குழு அறிவிக்கையும் விளக்கும்.
IoE நிலை பெறும் உயர்கல்வி நிறுவனங் கள் 30 விழுக்காடு வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பேராசிரியர்களில் 25 விழுக்காடு வெளி நாட்டுப் பேராசிரியர்கள் நியமிக்கலாம். தங்களுடைய கல்வித் திட்டமிடுதலில் 20 விழுக்காடு தொலைக்கல்வி வழி நடத்த லாம். கலைத்திட்டம் (Curriculam) மற்றும் பாடத்திட்டம் (Syllabus) ஆகியவற்றை வடிவமைக்க இலகுவான நடைமுறைகளைக் கையாளலாம். வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்கு வரம்பு இல்லை. மத்திய அரசு நிறுவனமாக இருந்தால் 1000 கோடி நிதி அளித்து உதவப்படும். மாநிலப் பல்கலைக்கழகமாக இருந்தால் 50 விழுக் காடு மட்டுமே மத்திய அரசு நிதி உதவி வழங்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகம் உயர்நிலை (IoE) அறிவிக்கப்பட்டு அதற்கான நடை முறையை செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு தலையாட்டி வருகிறது. இனி அண்ணா உயர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வெளி நாட்டுப் பேராசிரியர்களும், வெளிநாட்டு மாணவர்களும் படிக்கும் மேல்தட்டு வர்க்க பல்கலைக்கழகமாக மாறப் போகிறது; 30 விழுக்காடு மாணவர் இடம் காலியாகப் போகிறது; தற்போது தமிழ்வழி பி.இ. பட்டப் படிப்பில் எந்திரவியல், கட்டட வியல் பாடங்களுக்கு மட்டுமே. அதுகூட தொடர வாய்ப்பில்லை. மாணவர் கல்விக் கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்பு உண்டு.
இதுவரை மாநிலப் பல்கலைக்கழகங் களுக்குப் பல்கலைக்கழக நல்கைக்குழு வழங்கிய நிதி உதவி இனிமேல் இருக்காது. கல்விச் சந்தையில் உலக அளவில் (IoE) நிறுவனங்கள் மட்டுமே போட்டியிடப் போகின்றன. தமிழ்நாட்டு பல்கலைக்கழகங் கள் பலவும் (IoE) நிலை பெறத் துடிக்கின்றன. ஏன் சில அரசு, தனியார் கல்லூரிகளும் (IoE) நிலைக்குத் தயாராகின்றன. எதிர்காலத்தில் உயர்கல்வி தளத்தில் முதல்படி (Tire I) உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே நிலைத்து நிற்கும்.
கல்வியாளர்கள் இராதாகிருட்டிணன் மற்றும் கோத்தாரி தலைமையிலான குழுக் கள் உயர்கல்வி மேம்பாட்டுக்குப் பரிந் துரைத்தவை எல்லாம் இன்று தூக்கி எறியப் படுகின்றன. கல்விக்கான நிதி ஒதுக்கீடு கோத்தாரி கூறிய உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி. - GDP) 6 விழுக்காடு கூட ஒதுக்க தயாராக இல்லாத மத்திய அரசு 86 புதியக் கல்விக் கொள் கைப்படி சுயநிதிக் கல்லூரிகளை, நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களை வளர்த்தது. கல்வி வியாபாரிகள் பெருகி கல்வித் தந்தைகள் ஆகினர். இன்றோ அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களை உலக வணிகச் சந்தையில் போட்டியிடத் தயார் படுத்தும் முயற்சியில் மத்திய அரசும் மாநில அரசும் களமிறங்குகின்றன.
ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரமான கல்வியை இலவசமாக வழங்க வேண்டிய அரசு உயர்கல்வித் துறையில் IoE எனும் தீவுகளை உருவாக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டு உயர்கல்வித் துறையில் ஒரு தீவாகப் போகிறது.
மாநிலப் பட்டியலில் கல்வி திரும்ப வரவும், தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை உரிய நிதி உதவியை அனைத்து அரசு கல்வி நிறுவனங்களும் சமமாகப் பெறவும், போராடவில்லை எனில் எதிர்காலத்தில் உயர்கல்வி வாய்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுவதுமாக மறுக்கப்படும்.
- ப.சிவகுமார்