Reservation tamilசாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் மீதான இந்திய அரசின் நிலைப்பாடு என்பது வெகு விரைவான மாற்றமடைந்து வருவதுடன் இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவதற்கு நேரிடையாகவும் மறைமுகமாகவும் வெளிப்படையாய் எந்த ஒளிவுமறைவுமின்றி வினையாற்றி வருவது கண்கூடு. இந்த நிலை இப்போது மிக அபாயகரமான கட்டத்தைத் தொட்டிருப்பது அண்மையில் வெளி வந்திருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் வெளிப்பட்டிருக்கிறது.

டாக்டர் ஜெயசிறீ லஷ்மிணராவ் பட்டில் என்பவர் மகாராஷ்ட்ரா அரசின் மீது தொடுத்த வழக்கு இதுவாகும். மகாராஷ்ட்ரா அரசு தனது கல்வி நிலையங்களிலும் அரசு வேலைவாய்ப்புகளிலும் 16 சதவீத இடஒதுக்கீட்டை மராத்தா பிரிவு மக்களுக்கு ஒதுக்கீடு செய்தது. இந்த ஒதுக்கீடு தனியார் நிறுவனங்களுக்கும் செல்லும். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் இந்த இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தது.

ஆனால் மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கும் கேள்விகளில் வரலாறு அதிர்ந்து போய் நிற்கிறது. உண்மையில் இந்த வழக்கு செல்லும் இந்த திசையானது இதற்கு முன் மத்திய அரசு எடுத்திருக்கும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியேயாகும்.

குறிப்பாக 2018இல் அரசியல் சட்டத்தில் நுழைக்கப்பட்ட பிரிவு 342 A, சமுக ரீதியாகவும் மாநில ரீதியாகவும் பின்தங்கியோர் பட்டியலைத் தயாரிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு அளித்தது.

அப்போது மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தை அமைத்து விட்டது என்கின்ற செய்திதான் அதிக அளவில் பகிரப்பட்டதே அல்லாமல் இப்படியொரு சட்ட திருத்தம் செய்யப் பட்டிருக்கிறது என்பது பரந்து பட்ட அரசியல் திறனாய்வுப் பார்வைக்குள் வரவேயில்லை.

அடுத்து 103ஆவது சட்டத் திருத்தம் அரசியல் சட்டப் பிரிவு 15 மற்றும் 16 இல் மாற்றம் செய்து சாதி அடிப்படையில் ஒதுக்கீடு என்கின்ற கருத்தமைவைக் காலி செய்தது.

அதாவது, நேருவின் அமைச்சரவை அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது, பொருளாதாரம் என்கின்ற அலகை அடிப்படையாகக் கொண்டு பின்தங்கியோர் என்பதை அளவிட முடியாது என்று தீர்மானித்ததோ, அதனை மாற்றி பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு ஒதுக்கீடு அளிக்கலாம் என்று மாற்றியமைத்த திருத்தமாகும் இது.

இதன் அடிப்படையிலேயே 10 சதவீத இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இடதுசாரிகள் இன்று வரை இதனை ஆதரித்து நிற்கின்றனர்.

இப்போது நாம் மேலே கூறியுள்ள மராத்தா இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 342 A சட்டப் பிரிவுதான் அவர்களுக்குத் துணை நிற்கப் போகிறது. அதாவது ஒரு மாநில அரசுக்குத் தனது மாநிலத்தில் வாழும் மக்களில் யார் பின்தங்கிய பிரிவினர் என்பதையறிந்து அவர்களுக்கான சிறப்பு சலுகையளிக்கும் அதிகாரம் இனிமேல் இல்லை என்பதே இந்த வழக்கு நிலை நிறுத்தப் போகும் உண்மையாகும். 

இந்தியாவின் அரசியல் சட்டம் தனது முதல் திருத்தத்தைப் பெற்றது, தனது மாநில மக்களிடையே பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு வழங்கிடும் உரிமையை மாநிலங்களுக்கு வழங்குவதற்காகதான். குறிப்பாகத் தமிழகத்தில் தலைவர் பெரியார் நடத்திய போராட்டத்தின் பயனாக இச்சட்டத் திருத்தம் ஏற்பட்டது என்பது வரலாறு. இன்று அவர் மறைந்து 45 ஆண்டுகள் கழித்து இந்தத் தீர்ப்பு அந்த திருத்தத்தின் பயனைச் செயலற்றதாக்கப் போகிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கல்வி உரிமையை மாநிலங்களிடமிருந்து மத்திய அரசு நேரிடையாக நாடாளுமன்றத்தில் சட்டமியற்றுவது மூலமாகவும் நிர்வாக ஆணைகள் மூலமாகவும் பறித்தெடுத்துக் கொண்டது.

படிப்படியாக அமுலாகிக் கொண்டிருக்கும் தேசிய கல்விக்கொள்கை 2016, அனிதாக்களின் கனவுகளின் சடலத்தின் மீது கட்டியெழுப்பப் பட்டுக் கொண்டிருக்கிறது. அதே போல் இடஒதுக்கீடு உரிமையை மாநிலங்களிடமிருந்து பறித்தெடுக்க நீதிமன்றங்களைப் பயன்படுத்துகிறார்கள். இன்று ஆள்பவர்களின் ஒரு முகம் நாடாளுமன்றம் என்றால் இன்னொரு முகம் நீதிமன்றமாக இருக்கிறது.

இதில் நாம் உணர்த்த விரும்பும் உண்மை மிக எளிமையானது. இக்கட்டுரையைப் படிக்கும் ஒரு வாசகர் ஒருவேளை அதிகாரம் மத்திய அரசிடம் மாற்றப்பட்டால் என்ன என்று நினைக்கக் கூடும். ஆனால் நாம் கவைலைப்படுவது வெறும் அதிகார மாற்றத்தைக் குறித்து அல்ல. கல்வி மாநில அரசிடமிருந்து மத்திய அரசிடம் போகிறது என்று சொன்னால், அதன் இறுதியான பொருள் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கப் போகிறார்கள் என்பதே ஆகும்.

அதேபோல் இடஒதுக்கீடு உரிமை மாநில அரசிடமிருந்து மத்திய அரசிடம் போகிறது என்று சொன்னால், இடஒதுக்கீடுகளை இரத்து செய்கின்ற செயற்பாடு தொடங்கி விட்டது அல்லது சாதி அடிப்படையை எடுத்து விட்டு பொருளாதார அடிப்படையைப் புகுத்துவதன் மூலம் மீண்டும் நூறாண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் பார்ப்பனர்கள் வசம் மட்டுமே கல்வி மற்றும் கல்வி சார்ந்த பொருளாதார அதிகாரம் இருக்கும் விதமாகச் சமுதாயத்தை மறுகட்டமைப்பு செய்வது என்று பொருளாகும். இடஒதுக்கீடு எத்தனை ஆண்டுகளுக்குத் தொடர்வது என்கின்ற கேள்வியை நீதிமன்றங்கள் கேட்பதின் பொருள் என்ன என்பதை தாழ்த்தப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சுனாமி பேரலை போல் வந்து கொண்டிருக்கும் இந்த பேராபத்தைத் தடுக்கும் ஆற்றல் உள்ள கட்சி எது என்பதே இன்றைய கேள்வியாக நிற்கிறது. சுருக்கமாக இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை ஒரு பருந்துப் பார்வையில் பார்க்கும் போது முதலில் மாநிலக் கட்சிகளாகிய அதிமுக கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதைப் பற்றி பேசுகிறது.

ஆனால் அவர்கள் ஆட்சியில் மத்திய அரசை எதிர்த்து இது குறித்து அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதும் நீட் தேர்வு தமிழகத்தில் வருவதற்கு வழிவிட்டவர்கள் இவர்கள்தான் என்பதையும் நாம் மறக்க முடியுமா? பாமக தேர்தல் அறிக்கையில் இந்த கோரிக்கைகளின் சாயலே இல்லை.

அமமுகவும் இது குறித்து எதுவும் முன்வைக்கவில்லை. கமலகாசன் இடஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வெளிப்படையாகவே முன்வைக்கிறார். தேசியக் கட்சிகளைப் பற்றி கூற எதுவுமில்லை. தேசியக் கட்சிகள் தங்கள் பழைய பார்வைகளை அடியோடு மாற்றியாக வேண்டிய முக்கியக் கட்டத்திற்கு வந்து விட்டார்கள் என்பதை அவர்கள் இன்னும் உணரத் தொடங்கவேயில்லை.

இந்த நிலையில் மாநில உரிமைகள் இடஒதுக்கீடு இவற்றின் குரலை உரத்துக் கூறுகின்ற வகையில் அமைந்திருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை நம்பிக்கை வெளிச்சம் தருகிறது. அது மட்டுமன்றி திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை நாம் மேற்கூறியிருக்கும் அம்சங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளை வலிமையாகக் கொண்டுள்ளது.

தேர்தல் முடிவுகளும் தொடரப் போகும் ஆட்சியும் நமது நம்பிக்கையை மெய்ப்பிக்க வேண்டும். தமிழக மக்கள் விழிப்போடிருக்க வேண்டிய காலகட்டம். இதற்கான போராட்டம் என்பது இன்றைய சமூக நீதிக் களத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். நம் ஒவ்வொருவருக்கும் இதில் பங்கிருக்கிறது. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தொடர்ந்த அடிமைத்தனத்தை எதிர்த்து நம் தலைவர்கள் பெற்றுத் தந்த உரிமையை ஒரு நூற்றாண்டுக்குள் தொலைக்கப் போகிறோமா நாம்?

- தோழர் ஓவியா, புதிய குரல்

Pin It