கணவனைக் கூடையில் வைத்து, தாசி வீட்டில் கொண்டுபோய் விட்டது வரை, பண்டபாத்திரம் போல் சந்தையில் கூவி விற்க அனுமதித்தது வரை, கணிகையரிடம் கைப்பொருள் அனைத்தையும் இழந்து வருபவனிடம், காலில் இருந்த சிலம்பையும் கழட்டி கொடுத்தது வரை, கணவனின் முட்டாள் தனத்தில் முளைத்த சந்தேகமாக இருந்தபோதும், தன்னை நிரூபிக்கத் தீக்குளித்தது வரை - பெண்களின் இடம் இந்தச் சமூகத்திற்கு மிகவும் வசதியான தாகவே இருந்தது.

என்றைக்குத் தன்னுடைய இருத்தலைப் பற்றிய தன்மதிப்பீட்டுச் சிந்தனை பெண்களிடம் ஏற்பட்டதோ, அன்றிலிருந்து அவர்கள் இந்தச் சமூகத்திற்குப் பிரச்சினைக் குரியவர்களாய் ஆகிப் போனார்கள். அவர்களை மீண்டும் தன் கட்டுக்குள் கொண்டு வருவதற்குப் பல்வேறு ஆயுதங்களை இந்தச் சமூகம் கையில் எடுக்கிறது. சாதிப் பெருமை, மதக் கட்டுப்பாடு, குடும்ப மானம், கலாச்சாரம், பண்பாடு போன்ற இன்னும் பலப்பல ஆயுதங்களைக் கொண்டு, பெண்ணின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது. அந்த வன்முறையானது, உடல் மீதானதாகவோ, உளவியல் சார்ந்த தாகவோ இருக்கிறது.

ஒரு பெண்ணின் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் அவள் இருக்கின்ற இடம், எடுக்கின்ற முடிவுகள் என்பவை, சமூகம் அல்லது குடும்பத்தோடு தொடர்புடையதாகவோ அல்லது அவற்றின் நீட்சியாகவோ மட்டுமே இருக்கும்வரை அந்தப் பெண்ணின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும். மாறாக, அப்பெண்ணின் சுய சார்புக்குரியதாக இருக்குமேயானால், அவள் மீது இந்தச் சமூகம் நிகழ்த்தும் வன்முறையை அவள் எதிர்கொண்டே ஆக வேண்டும்.

ஒரு பெண் வேலைக்குப் போவது, குடும்பத்தின் பொருளாதாரத் தேவை சார்ந்தது. எனவே, இரவு நேர வேலையாக இருந்தாலும் போய் வரலாம். அதில் ஒன்றும் சிக்கலில்லை. ஆனால் இரவு 9 மணிக்குத் தன் ஆண் நண்பரோடு பேருந்தில் பயணிக்கக் கூடாது. அப்படிப் பயணிக்கும் பெண், பாலியல் வன்புணர்வு செய்யத் தகுதியானவள்.

கலாச்சாரப் பெருமைமிகு இந்தியத் திருநாட்டின் தலைநகர் தில்லியில், ஓடும் பேருந்தில், கூட்டு வன்புணர்வுக்கு ஆளாகி உயிரிழந்த மாணவியின் நிலை நமக்கு அதைத்தானே உணர்த்துகிறது. தென் தமிழகத்தில், பள்ளிச் சீருடையுடன், புத்தகப் பை அருகில் இருக்க, இறந்து கிடந்தாளே புவனா - சேலம் சதிராயம் பாளையத்தில் 10 வயது குழந்தை 5 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு, கால்களுக்கிடையே ரத்தம் வழிந் தோட மருத்துவமனைப் படுக்கையில் பிணமாகக் கிடத்தப்பட்டிருந்தாளே - சிறுமியாக இருந்தாலும், பெண்ணை உடலாக மட்டுமே பார்க்கின்ற ஆணா திக்கச் சமூகத்தின் அழுகிப் போன சிந்தனையின் குறியீடல்லவா அக்காட்சிகள்.

ஒரு பக்கம் பெண்ணை வெறும் உடலாக மட்டுமே பார்க்கும் இச்சமூகம், மறுபக்கத்தில் சாதித் தூய்மையைக்காக்கின்ற அடையாளமாக வைத்திருக் கிறது. பெண்ணின் வழியாகச் சாதிக் கலப்பு நடந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது. விளைவு சாதிவிட்டுச் சாதி காதலித்துத் திருமணம் செய்யும்போது, ‘கவுரவக் கொலை’யைச் செய்து, சாதிச் சமநிலையைப் பேணிக் கொள்ள நினைக்கிறது.

ஒரு பெண் தான் வாழவேண்டிய இடத்தை, வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற உரிமையை தன்னிடம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு வேளை அப்படி நடந்தால், மகா பஞ்சாயத்து கூடும். 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்படும் அல்லது 13 பேர் கொண்ட கும்பல் அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்படும்.

இத்தனை அநீதிக்கும் நியாயம் கேட்கப் புறப்பட்டால், நம் முன்னால் நீதி வருவதில்லை, மாறாக முட்டியை உயர்த்திக் கொண்டு கேள்விகள்தான் வருகின்றன. அவள் ஏன் இரவு 9 மணிக்குத் தன் நண்பரோடு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள்? அவள் எதற்காக ஆண்களைக் கவரும் விதத்தில் உடை அணிந்திருந்தாள்? தாழ்த்தப்பட்டவளான அவள் எப்படி உயர்சாதிப் பையனோடு பழகலாம்? சேர்ந்து வாழ ஆசைப்படலாம்?

இந்தச் சமூகம் அனுமதிக்கின்ற எல்லைக்குள் நின்று, தனக்கானதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு, சமூக வரம்புகளைத் தாண்டிப் பயணிக்க முயன்றால், பயணம் பாதி வழியிலேயே முடித்து வைக்கப்படும்.

பெண் என்றால்... இப்படித்தான் இருக்க வேண்டும் எனப் பல விதிமுறைகள் இங்கே வகுக்கப்பட்டுள்ளன. முதலாவது அவள் ஓர் ஆணின் தேவைகளுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறாள். அவனுக்கு அடங்கி நடக்க விதிக்கப்பட்டிருக்கிறாள்.

எனவே ஓர் அடிமைக்கு சுய உரிமை இருக்கக் கூடாது. அந்த ஆணின் விருப்பங்களை நிறைவு செய்வதே, பெண் என்னும் பெருமையைத் தக்க வைத்துக் கொள்ளும் வழி. இதிலிருந்து ஒரு பெண் இம்மியளவும் அகன்று விடாமல், சாதி, மத, சாத்திர, சடங்குகள் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றன. குடும்பமும், திருமணமும் இந்தப் ‘புண்ணிய காரியத்தில்’ காலம் காலமாக மிகப்பெரிய பங்காற்றி வருகின்றன.

இன்றைய நவீன சூழலில், ஊடகங்கள் மேற்சொன்ன அனைத்திற்கும் காட்சி வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்கள், அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி என அறிவியல் கொடைகள் அனைத்துமே, ஆணின் நுகர்வுக்கான பண்டம் என்பதாகப் பெண்ணைச் சித்தரிப்பதில் சிறிதும் வெட்கப்படுவதில்லை. இந்த ஊடகங்களின் தாக்கம்தான் சமூகத்தில், பெண்களின் மீதான கேலி, கிண்டல், பாலியல் வன்முறைகளாக வெளிப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

“நூறா யிரக்கணக் காகச் செலவிட்டு

நூற்றுக் கணக்காய்த் திரைப்படம்  ஆக்கினர்

மாறான எண்ணத்தை மட்டக் கதைகளை

மக்களுக் கீந்தனர் அண்ணே - அது

தக்கது வோபுகல் அண்ணே” என்று கேட்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

கோடிக்கணக்காக பணத்தைக் கொட்டி, அதில், ‘அடிடா அவள... ஒதடா அவள’ என்று மட்டக் கதைகளைச் சொல்வதற்கா, படத்தொழில் பயன்படுத் தப்பட வேண்டும்?

தன் பக்கமுள்ள நியாயத்தைச் சொல்ல, ஒரு பெண் ஆணித்தரமாக வாதிட்டால், என்ன இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு இத்தனை ஆணவம் கூடாது - தன்னுடைய விருப்பம் இதுதான் என்று உறுதிபட வெளிப்படுத் தினால் ஒரு பெண்ணுக்கு இத்தனை திமிர் ஆகாது என்று திரைப்படங்களில் காட்டப்படும் வசனங்கள், நடைமுறையில் இன்னும் அழுத்தமாக எதிரொலிக் கின்றன.

ஆணவமும், திமிரும் ஆணுக்கு இருக்கும்போது, பெண்ணுக்கு இருப்பதில் என்ன தவறு? நடத்தை, ஒழுக்கம், கற்பு என்னும் கற்பிதங்கள் அனைத்தும் பெண்ணின் மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ள இந்தச் சமூகத்தில், அவற்றை எதிர்த்துக் கேள்வி கேட்கும் பெண், ‘நடத்தை’ சரியில்லாதவள், ‘ஒழுக்கம்’ கெட்டவள், ‘கற்’பில்லாதவள் ஆகிவிடுகிறாள். ஆணுக்கு நிகராக வேலைக்குப் போகிறாயா, போ... கொடுக்கப்படும் வேலையை மட்டும் பார்த்துவிட்டு, ஊதியத்தைப் பெற்றுக்கொள். அதற்கு மேல் போக எத்தனித்தால், சிறகுகள் வெட்டப்படும் என்று அச்சுறுத்துகிறது இந்தச் சமூகம்.

குடும்பம், மதம், சாதி, சமூகம் என அனைத்துமே ஆணுக்கானதாக இருக்கின்றன. அதற்குள் பெண் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ள கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. தனக்குரிய தேவைகள் தன்னுடைய சக உயிருக்கும் தேவையாக இருக்கும் என்னும் எளிய உண்மையை ஒவ்வொரு வரும் உணர முன்வர வேண்டும். பெண் என்பவள் ஆணைப்போலவே அத்தனை பலத்தையும், பலவீனத்தையும் தன்ன கத்தே கொண்டுள்ள ஓர் உயிர்.

சாதி ஆதிக்கமும், மதவாதமும் எப்படிப் புதுப்புது வடிவங்களை எடுத்து, தம்மைப் புதுப்பித்துக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றனவோ, ஆணாதிக்கமும் அப்படியே தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது.

“ஆண்...

ஒவ்வொரு வீட்டிலும்

ஒரு பார்ப்பான்”

என்று திண்டுக்கல் தோழர் விஜி சொல்வார். உண்மைதானே!

தன்னை உணர்ந்தால்தான், ஆதிக்கத் திலிருந்து விடுபடுதல் சாத்தியமாகும் என்பதைப் பெண்கள் முதலில் உணர வேண்டும்.

Pin It