தாய் மதத்திற்குத் திரும்பும் கிறிஸ்துவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், இஸ்லாமியர்களுக்கு 3 லட்சம் ரூபாய் என்று வெளிப்படையாக ஏலம்  போட்டு மனிதர்களை இழிவுபடுத்தும் நிகழ்வு இப்போது இந்தியாவில் அரங்கேறியுள்ளது. கட்டாய மதமாற்றம் செய்வோம் என்றும் 2021க்குள் இந்தியாவை இந்து நாடாக மாற்றுவோம் என்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே எதிராகவும், ஏளனம் செய்யும் விதமாகவும் பேசியுள்ளார், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.

தாய் மதத்திற்குத் திரும்புவோரை (எது தாய் மதம், சைவமா, வைணவமா, சாக்தமா, காணபத்யமா, கவ்மாரமா, சவ்ரமா) எந்தச் சாதியில் கொண்டுவந்து சேர்க்கப் போகிறோம் என்பதை அவர் சொல்லவில்லை. சாதியில்லாமல் இந்து மதம் இல்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

வளர்ச்சித் திட்டங்களை வாரி இறைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், இந்துத்துவக் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதிலேயே தங்கள் கவனம் முழுவதையும் குவித்துள்ளனர். அந்த மதவெறிப் போக்கைக் கண்டிக்கும் திராணியற்றவர்கள், இங்கே வேறு விதமாக நடப்புகளைத் திசை திருப்புவதில் குறியாக உள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக, கொங்கு மக்கள் கட்சி கோவை ஈஸ்வரன் தொடங்கி, எல்லா இந்துமதக் கோஷ்டிகளும் ஒரு வினாவை எழுப்பிக் கொண்டுள்ளனர். கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ளும் கலைஞர், ஏன் இந்து மத விழாக்களில் கலந்து கொள்வதில்லை என்பதே அவ்வினா.  இதற்குக் கலைஞர் விடை சொல்வாரா என்று கேட்கிறார் தொலைக்காட்சியில் ஒரு பா.ஜ.க. நண்பர்.  இதற்கெல்லாம் விடை சொல்லக்  கலைஞர் தேவையில்லை, நாங்களே போதும்.

மத  மறுப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு என எடுத்துக்கொண்டால், எங்களுக்கு எல்லா மதங்களும் ஒன்றுதான். ஆனால் இந்து மதத்திற்கும், வேறு மதங்களுக்கும் இடையிலான சில வேறுபாடுகளை நாம் மறந்துவிட முடியாது. அவற்றுள் முதன்மையானது வருண-சாதி அமைப்பு. வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒன்று அது. மதம் மாறியவர்கள் கூட இன்றும் சாதிப் பிடிப்பு உள்ளவர்களாக இருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் அது இந்து மதத்தின் கொடை என்பதை யாரால் மறுக்க முடியும்?

மற்ற மதங்களில் பிரிவுகள் இல்லையா என்று சிலர் கேட்கின்றனர். இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அந்தப் பிரிவுகள் சாதி போன்ற பிரிவுகள் அல்ல. இந்து மதத்தில் உள்ள சைவம், வைணவம், சாக்தம் போன்ற பிரிவுகள் அவை. அவையெல்லாம் பிரிவுகள். சாதி என்பதோ, ஏற்றத் தாழ்வு.

இந்து மதத்தில் உள்ள வருண-சாதிப் பிரிவுகள் நம்மைச் சூத்திரன், பஞ்சமன்,சண்டாளன் என்று இழிவு படுத்துவதைப் போல வேறு எந்த மதத்தின் எந்தப் பிரிவும் நம்மை இழிவு படுத்துவதில்லை. கிறித்துவர்கள் நம்மைக் கை குலுக்கி வரவேற்பார்கள். இஸ்லாமிய நண்பர்களோ நம்மைக் கட்டித் தழுவியே வரவேற்பார்கள். ஆனால் அவாள் எட்டி நின்று  'தீட்டுப் படாமல்' அன்றோ பேசுவார்கள்!

மற்ற மதங்களை ஏன் எதிர்க்கவில்லை என்றால், எந்த மதம் என்னை இழிவு படுத்துகிறதோ அந்த மதத்தைத்தானே நான் எதிர்க்க நினைப்பேன். மற்ற மதங்களை ஏன் எதிர்க்க வேண்டும்?

சாதிகளைக் கடந்து எல்லோரும் இந்துக்களாக ஒன்று படுவோம் என்கிறார் கொங்கு ஈஸ்வரன். சாதிகளைக் கடந்து விட முடியுமா உங்களால்? நண்பர் ஈஸ்வரன் அவர்களே, சாதிகளை எப்படிக் கடக்கப் போகின்றீர்கள்? எல்லோருக்கும் பூணூல் அணிவித்தா அல்லது எல்லோரது பூணூலையும் அறுத்தா? எல்லோரும் கருவறைக்குள் செல்லலாம் என்றா அல்லது எவருமே கருவறைக்குள் செல்லக்கூடாது என்று தடுத்தா? எல்லோரும் சங்கர மடத்தில் பீடம் ஏறலாம் என்று கூறியா அல்லது இனிமேல் சங்கர மடமே வேண்டாம் என்று முடிவெடுத்தா?

ilavarasan dhivya 600

சாதிகளைக் கடந்து விடலாம் என்று முடிவெடுத்துவிட்ட பின், வழக்கறிஞர் அருள்மொழி கேட்டதுபோல, பெருமாள் கோயிலில் பூசாரியும், முனியாண்டி கோயிலில் பார்ப்பனரும் இனிமேல் பூஜை  செய்யலாம் என்று முடிவெடுப்பீர்களா?

சங்கர மடத்தை விடுங்கள்........

வேறு மடங்களிலும் கூட குறிப்பிட்ட சாதியினர்தானே மேலிருந்து கீழ் வரை  உள்ளனர். ஒவ்வொரு வீட்டுத் திருமணத்திலும் அந்தந்த சாதிக்கே உரிய சடங்கு சாங்கியங்கள்தானே இருக்கின்றன? சுயமரியாதைத் திருமணம் மட்டும்தானே பொது அடையாளங்களைக் கொண்டுள்ள ஒரே திருமணம்!

பெண்களின் கழுத்துகளில் தொங்கும் தாலிகளில் சாதி அடையாளம் உண்டா, இல்லையா? ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறும் 'நல்லது, கெட்டது'  எல்லாவற்றிலும், சாதி அடையாளம் இல்லாத ஒரே ஒரு நிகழ்வைக் காட்ட முடியுமா?

இவ்வளவு சாதிச் சேற்றைப் பூசிக்கொண்டு, சாதி அடையாளங்களைக் கடக்கப் போகின்றோம் என்று சொல்வது உங்களுக்கே வேடிக்கையாகத் தெரியவில்லையா?

சாதி அடையாளங்களை உங்களால் கடக்க முடியுமென்றால், ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் உங்களால் கொண்டுவர முடியுமென்றால், பிறகு இந்து மதத்தின் மேல் எங்களுக்கு என்ன கோபம்?

இந்து மத எதிர்ப்பு என்பது, ஒரு மதத்திற்கு எதிரான போராட்டம் அன்று. அது ஜனநாயகத்திற்கும், சமத்துவத்திற்கும் ஆதரவான போராட்டம்!       

Pin It