கடந்த மாதம் திருவண்ணாமலையில் ஒரு நாளும், காரைக்கால் அருகில் உள்ள திருநள்ளாரில் ஒரு நாளும், லட்சக் கணக்கில் அங்குள்ள கோயில்களில் மக்கள் திரண்டார்கள். கார்த்திகை  அன்று, திருவண்ணாமலை தீபம் பார்க்கவும், சனிப்பெயர்ச்சி அன்று  கோயிலில் விளக்கு ஏற்றவும் திரண்ட  கூட்டம் அது!  சில தொலைக்காட்சிகள் அந்நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பினார்கள்.

‘பார்த்தீர்களா, பார்த்தீர்களா பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை......பகுத்தறிவும், பெரியாரின் கொள்கைகளும் இம்மண்ணில் தோற்று விட்டன என்பதையே இது காட்டுகிறது’ என்று எழுதிச் சிலர் அகம் மகிழ்ந்தனர். 

உண்மைதான். பக்தி கூடிவிட்டது. கோயில்களில் கூட்டம் நெருக்கி அடிக்கிறது. ஆண்டுதோறும் ஐயப்பன் கோயிலுக்குச் செல்வோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போகிறது. இவற்றையெல்லாம் நாமும் மறுக்கவில்லை. ஆனால் இது தொடர்பாக ஒரு வினா இருக்கிறது.

பக்தி கூடியுள்ளது என்று கொண்டாடும் நண்பர்களே, பக்தி கூடியதால், நாட்டில் கொலை, கொள்ளைகள் குறைந்துள்ளனவா? ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை இறங்கு முகமாக உள்ளதா? லஞ்சம், போதை எல்லாம் நாட்டை விட்டுப் போய்விட்டனவா? இல்லையே. பக்தி கூடியுள்ள அளவை விட, குற்றங்களின் அளவல்லவா மிகக் கூடுதலாக உள்ளது. இதிலே மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது?  நாட்டில் குற்றங்கள் பெருகிவிட்ட காரணத்தால் அறம் பாடிய வள்ளுவருக்கு அடியோடு தோல்வி என்று எவரும் கூறுவதில்லையே, ஏன்?

இவ்விவாதம் ஒரு புறமிருக்க, இந்த சனிப்பெயர்ச்சி பற்றிக் கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது. அது ஏன் சனியும், குருவும் (வியாழன்) பெயரும்போது மட்டும் இத்தனை பரபரப்பு? மற்ற கோள்களான செவ்வாய், புதன், வெள்ளி ஆகியன பெயரும்போது ஒரு சத்தமும் இல்லையே, எதனால்?

பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்களை உடையது என்று பொருள். திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்பவையே அவை.  திதி என்பது மாதம்தான். அமாவாசை தொடங்கி பௌர்ணமி வரையில் சுக்கில பட்சம் (அதாவது வளர்பிறை) என்பார்கள். பௌர்ணமி தொடங்கி அமாவாசை வரையில் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) ஆகும்.

astronomy 600

வாரம் என்பது ஏழு. ஞாயிறு தொடங்கி, சனி வரையில். நட்சத்திரம் என்பது அஸ்வினி தொடங்கி ரேவதி வரையில் மொத்தம் 27. விஷ்கம்பம் தொடங்கி, வைதிருதி வரையில் யோகமும் 27தான். கரணங்கள் 11. பலம் கரணத்தில் தொடங்கி, கிம்ஸ்துக்கணம் என்ற கரணத்தில் அது முடியும். இவற்றையெல்லாம் விளக்கிட வெகு நேரம் ஆகும். இவையும் சரியான கணக்குகள் இல்லை.

விண்மீன்கள் (நட்சத்திரம்) பல்லாயிரக்கணக்கில் உள்ளன. கதிரவனும் (சூரியன்) ஒரு விண்மீன்தான். ஆனால் 27 மட்டும்தான் பஞ்சாங்கக் கணக்கில் உள்ளது. 

பஞ்சாங்கமும் ஒன்றே ஒன்று அன்று. வாசன் திருக்கணித பஞ்சாங்கம், பாலன் திருக்கணிதப் பஞ்சாங்கம், கௌரி பஞ்சாங்கம், பாரத கணிதப் பஞ்சாங்கம், ராஷ்ட்ரிய பஞ்சாங்கம் எனப் பல உள்ளன. இவ்வற்றுள் ஒரு பஞ்சாங்கம் சனிப்பெயர்ச்சி நவம்பரிலேயே முடிந்துவிட்டதாகக் கூறுகிறது.

மீண்டும் பழைய கேள்விக்கே வருவோம். புதன், வெள்ளி போன்ற மற்ற கோள்கள் பெயரும்போது ஏன் மக்கள் கோயிலுக்குப் போவதில்லை?

ஏன் நம் வார, மாத இதழ்கள் அவற்றின் பலன் குறித்துத் தனியாக இலவச ஏடுகளை வெளியிடுவதில்லை?

இவ்வளவுக்கும், வியாழன், சனி ஆகிய இரு கோள்களை விடவும், புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய கோள்கள்தான் பூமிக்கு அருகில் உள்ளன. நமக்கு மிக அருகில் இருப்பது வெள்ளிதான். 4.2 கோடி கிலோமீட்டர் தூரம்தான். செவ்வாய் 7.8 கோடி கி.மீ. தொலைவிலும், புதன் 9.2 கோடி கி.மீ. தொலைவிலும் உள்ளன.  இவைகள் ஒரு ராசிக் கட்டத்திலிருந்து இன்னொரு ராசிக் கட்டத்திற்குப் பெயரும்போது நம்மைப் பாதிக்காதா?

வியாழனும் சனியும் எவ்வளவு தொலைவில் உள்ளன  என்பதை நாம் அறிவோம்.வியாழன் பூமியிலிருந்து 62.8 கோடி கி.மீ. தொலைவிலும், சனி பூமியிலிருந்து 127 கோடி கி.மீ. தொலைவிலும் உள்ள கோள்கள்.  அவ்வளவு தொலைவில் உள்ள கோள்களைக் கண்டு  அஞ்சி, ஏழரைச் சனி என்றெல்லாம் கூறும்போது,  ஏன் மற்ற கோள்களின் பெயர்ச்சி குறித்துக் கூடுதலாகப் பேசப்படவில்லை என்பதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு.

சனியில் ஓர் ஆண்டு என்பது பூமியில் ஏறத்தாழ 30 ஆண்டுகள். அதாவது, சனிக் கோள் சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும். மேஷம் தொடங்கி மீனம் வரையில் ராசிக்கட்டம்  என்று இவர்கள் 12 கட்டங்களை வைத்துள்ளனர். 30 ஆண்டுகளை 12 ராசிகளால் வகுத்தால் இரண்டரை வருகிறது. எனவே ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சனி இருக்கும் என்கிறார்கள்.

முன்னும் பின்னும் உள்ள ராசிகளில் இருக்கும் ஆண்டுகளையும் சேர்த்தால், மூன்று இரண்டரை ஆண்டுகள் மொத்தம் ஏழரை ஆண்டுகள் ஆகின்றன. அவ்வளவுதான், எல்லாம் வெறும் கணக்கு.

வியாழன் 12 ஆண்டுகளில் சூரியனைச் சுற்றி வந்து விடுகிறது. ஆதலால் ஒவ்வொரு ராசிக் கட்டத்திலும் சுமார் ஓர் ஆண்டு. புதன். வெள்ளி, செவ்வாய் போன்ற கோள்கள் மிக விரைவில் கதிரவனைச் சுற்றி வந்து விடுகின்றன. புதன் 88 நாள்களிலும், வெள்ளி 225 நாள்களிலும், செவ்வாய் 680 நாள்களிலும் கதிரவனைச் சுற்றி வந்து விடுவதால், ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு,  முறையே 7 நாள்களுக்கு ஒருமுறை, 19 நாள்களுக்கு ஒரு முறை,57 நாள்களுக்கு ஒரு முறை மாறிவிடுகின்றன.

நமக்கு மிக அருகில் இருக்கும் (3லட்சம் கி.மீ) சந்திரனோ 2 நாள்களுக்கு ஒரு முறை இடம்மாறிவிடுகிறது.  அதனால் 2 நாள்களுக்கு ஒருமுறையும், 7 நாள்களுக்கு ஒரு முறையும், 20 நாள்களுக்கு ஒரு முறையும் ராசி பலன் இலவச இணைப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்க முடியாது.  அடிக்கடி ராசி பலன் மாறும் என்றால், அது குறித்த அச்சமும் போய்விடும்.

எனவேதான், ஓர் ஆண்டுக்கு  ஒரு முறையும், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இடம் மாறும் வியாழன், சனி ஆகிய கோள்களுக்கு மட்டும் ராசி பலன் சொல்லப்பட்டு, ஒரு விதமான பரபரப்பு உருவாக்கப்படுகிறது.

சனி நம்மைப் பார்க்கிறது என்ற காலம் மாறி, சனியை நாம் பார்க்கும் காலம் வந்துவிட்டது. கஜானி -  ஹைஜென்ஸ் விண்கலம் 2005ஆம் ஆண்டு சனிக் கோளைச்  சென்றடைந்தது. தொடர்ந்து விண்கலங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. நாமோ, திருநள்ளாறு  நோக்கி மட்டுமே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!.   

Pin It