எங்களூர் பொள்ளாச்சி. பொள்ளாச்சி சந்தை மிகவும் புகழ் பெற்றது. வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை கூடும். சுற்றுவட்டாரக் கிராம மக்கள் மட்டுமின்றி வால்பாறை தோட்டத் தொழிலாளர்களுக்கும், அருகில் உள்ள கேரளாவுக்கும் கொண்டு செல்லக் காய்கறிகள், மளிகைப் பொருட்கள், ஆடு மாடுகள், எருமைகள் எல்லாம் விற்பனையாகும்.ஏராளமான மக்கள் கூடிக்கலைவார்கள். அங்கு சந்தைக்கு அருகில் தெருக்களில் மோடி மஸ்தான் வித்தை காட்டுவான். பாம்புக்கும் கீரிக்கும் சண்டைவிடப் போவதாகக் கூறிக்கொண்டே இருப்பான். மகுடி ஊதுவான், தாயத்து விற்பான். இடையில் அவன்குழுவில் உள்ள ஒருவனைக் கூப்பிடுவான். அவன் பயந்து ஓட முயற்சிப்பதுபோல் பாவலா செய்வான். அப்போது மஸ்தான் கையில் உள்ள மண்டை ஓட்டைத் தரையில் ஓங்கி அடித்து .”ஏய்.....சைத்தான் கி பச்சா! .... எங்கே ஓடப்பாக்கரே?” என்று கத்துவான். அவ்வளவுதான், ஓட முயற்சித்தவர் துடிதுடித்து, வாயில் சிவப்பு நுரை பொங்க மஸ்தான் அருகே வீழ்வார் அப்போது. மஸ்தான் ஒரு துணியை அவன் முகத்தை மறைக்கும்படி போர்த்துவான். மஸ்தான் இப்போது ஒருகையில் உடுக்கை அடித்தபடியும், மறுகையில் மகுடியை வாயில் வைத்து ஊதியபடியும் கூட்டத்தை இரண்டு சுற்று சுற்றுவான்.கூட்டத்தில் உள்ளோர் அவனை அச்சத்துடன் பார்ப்பார்கள்.

modi cartoon 600

“டாய்... கையைக் கட்டாதே” என்று கூச்சலிடுவான். கைகட்டி நின்றவர்கள் எல்லாம் துள்ளி எழுந்து கையை அவிழ்த்துவிடுவார்கள். பின்னர், கீழே விழுந்துகிடப்பவனைப் பார்த்து,

“வா! இங்கே..” என்பான்.

“வந்தேன்” .. என்பான் வீழ்ந்து கிடப்பவன் . மீண்டும் ..

“வா! இங்கே!”

“வந்தேன்”

“கேட்டால்...”

“சொல்வேன்...”

“இந்த அய்யா என்ன கலர் சட்டை போட்டிருக்கார்?”

“நீலச் சட்டை” ... (அன்றைக்கு அந்த கலர் சட்டை போட்டவனைத்தான் கேட்பான்.)

“இந்த அய்யா கையில் என்ன வைத்து இருக்கார்?”

“பை வைத்து இருக்கார்.”

“என்ன கலர் பை?”

“மஞ்சா கலர்.... “

இப்படியாகப் போய்க்கொண்டிருக்கும் போது யாராவது வேலை நிமித்தமாகப் புறப்பட்டால்...

“ஏய்.... வாயில் ரத்தம் கக்கிக் கிடக்கும் இந்தப் பையனை எழுப்பாமல் எவனாவது இந்த இடத்தை விட்டுப்போனால்..... அவன் வழியிலே இவனைப் போலவே ரத்தம் கக்கிச் சாவான்... “ என்று மிரட்டுவான். அப்புறம் அவன் வைத்திருக்கும், “தாயத்து, சக்தி மிகுந்தது. ராத்திரிலே கட்டீட்டு போனா காத்து கருப்பு அண்டாது. திருடன் பக்கத்துலே வரமாட்டான். அதிர்ஸ்டம் வரும். லாட்டரிலே பணம் வரும்“ என்றெல்லாம் கூறி கையில் உள்ள காசைப் பிடுங்கிக்கொண்டு தாயத்தைக் கொடுத்துவிடுவான். கூட்டம் கலைந்த பின் பார்த்தால் கீழே வீழ்ந்து கிடந்தவனும் மஸ்தானும் ஒன்றாக எங்கள் டீ கடைக்கு வந்து டீ குடிப்பார்கள். அடித்தவன், வீழ்ந்தவன் எல்லாம் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதுதான் “ மோடி வித்தை” என்பதைச் சிறுபிள்ளைகளாக இருக்கும்போதே தெரிந்திருக்கிறோம்.

ஒன்றுமில்லை.....

இப்போது நவீன மோடி வித்தை நடப்பதைப் பார்த்ததும் மலரும் நினைவுகளாக அவையெல்லாம் நினைவுக்கு வந்தன!

இவா பதவி ஏற்புக்கு அவா வருவா...

அவா கோயிலுக்கு இவா அழைச்சு வந்து மரியாதை செய்வா..

நம்ம மீனவாளை அவா கைது செய்வா....

விட்டுடுங்கோன்னு இவா சொல்லுவா... அவா விட்டுடுவா...

மீனவாளை மட்டும் விடுங்கோ... படகை விடாதேள்ன்னு இவா சொல்லுவா.. அவாளும் அப்படியே செய்வா...

மீன்பிடிக்கப் போனவாளை போதை மருந்து கடத்துனாள்ன்னு கேஸ் போட்டு, அவாளுக்குத் தூக்குத் தண்டனையும் தருவா...

உற்றார், உறவினர், கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள்,, எல்லாம் விட்டுடுங்கோ.. விட்டுடுங்கோன்னு கத்துவா, கதறுவா....

இப்ப இவா ... விட்டுடுங்கோன்னு சொல்லுவா... அவாளும் விட்டுடுவா!

இப்ப இவா “தாயத்து!... தாயத்து...தாயத்துன்னு” அவா வியாபாரத்தைப் பார்த்துக்குவா....!

Pin It