கேந்திர வித்யாலயா கல்வி நிறுவனங்களில் இனி ஜெர்மன் மொழி கற்றுக்கொடுக்கப்பட மாட்டாது. மாறாக சமஸ்கிருதம் அல்லது பிற இந்திய மொழிகளுள் ஒன்று மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படும் என்று பா.ஜ.க. மத்திய அரசின் அமைச்சர் ஸ்மிருதி இரானி ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இக் கல்வியாண்டு முடியும் மார்ச் மாதம் வரைகூடப் பொறுக்க முடியாமல், கல்வியாளர்களைக்கூட கலந்தாலோசிக்காமல் அவசர முடிவாக பா.ஜ.க. அரசு ஏன் இப்படி அறிவிக்க வேண்டும்?

அண்மையில் விஸ்வ இந்துப் பரிசத் தலைவர் அசோக் சிங்கால், இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் சமஸ்கிருதம். அதைக் கட்டாயமாக்கச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவ முகம் விஸ்வ இந்து பரிசத். அரசியல் முகம் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.சின் முக்கிய கொள்கைத் திட்டங்களுள் இந்தியாவை சமஸ்கிருத மயமாக்குவது என்பதும் ஒன்று. இதன்மூலம் அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவிப்பின் நோக்கம் புரிகிறது.

1938இல் இராஜாஜி இந்தியைத் திணிக்க எடுத்த முயற்சி தந்தை பெரியாரின் போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. 1950களில் மீண்டும் இந்தித் திணிப்பு அறிவிப்பு. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் போராட்டக்களம் இறங்கியதால் பின்வாங்கியது அன்றைய காங்சிரஸ் தலைமையிலான நேரு அரசு.

1959 ஆகஸ்ட் 7ஆம் நாள் மக்களவையில் பேசிய பிரதமர் நேரு, இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும்வரை, இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தார். ஆனால் 1965இல் அவரே மீண்டும் இந்தித் திணிப்புக்கு முயல, ரணகளமானது தமிழகம்.

இப்பொழுது பா.ஜ.க. இந்தியைத் திணிக்க முயலவில்லை. மாறாக நேரடியாகவே சமஸ்கிருத்தைத் திணிக்க முன்வந்துவிட்டது.

ஈரானின் அவெஸ்தாவுடன் ரிக் வேதம் தொடர்புடையது என்பது உறுதியாகியிருக்கிறது. ஆகவே ரிக் வேத சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் இல்லை. இந்திய மொழிகளின் தாய் தமிழ்தான், அது செம்மொழி.

தலைவர் கலைஞர் முயற்சியால் சென்னையில் உருவாக்கப்பட்ட செம்மொழி நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன் துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட ஒளவை நடராசனைத் தமிழக அரசு நீக்கியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

இது மத்திய அரசின் சமஸ்கிருத மயமாக்கலுக்கு உறுதுணை செய்வது போல் அமைவதால், இத்தகைய நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் கைவிட வேண்டும்.

மக்கள் மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தயாராக வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Pin It