திரைப்படங்களின் மீதான தணியாத காதலும், இடைவிடாத முயற்சியும், சிறந்த நடிப்பும் - நடிகர் கலையரசனை, வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளம் காட்டியிருக்கிறது. தி.மு.கழகத்தின் தொடக்க கால உறுப்பினரான காட்டூர் பா. கணபதி அவர்களின் பேரன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கருஞ்சட்டைத் தமிழருக்காக நடிகர் கலையரசன் அளித்த நேர்காணல்... - இலக்கியா

kalaiarasan 340கலைத்துறை பின்புலம் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த நீங்கள் நடிப்புப் பக்கம் வந்தது எப்படி?

நான் எஸ்.ஆர்.எம். கல்லூரியில பி.சி.ஏ. படிச்சிட்டிருந்தேன். அப்ப நான் நடனக்குழுவுல இருந்தேன். நிறையப் போட்டிகள்ல கலந்துகிட்டுப் பரிசுகள் வாங்கியிருக்கேன். சின்ன வயசுல இருந்தே, எனக்குக் கலைத்துறை மேல ஆர்வம் இருந்தது. எப்படியாச்சும் சினிமாவுக்குள்ள போயிடனும்னு இருந்தேன். விஸ்காம் படிகத்தான் ஆசைப்பட்டேன். ஆனா எங்கப்பா, கம்ப்யூட்டர் படிக்கச் சொல்லிட்டாரு. ஏன்னா, விஸ்காம் படிக்க நிறைய செலவாகும். என்னோட கல்-லூரி நண்பர்கள் கிரண், அருண், ஸ்ரீநி இவங்களோட சேர்ந்து, குறும்படக் கதைகளை தயாரிச்சு, அதைப்பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம். பின்னாடி, கல்லூரிப் படிப்பு முடிஞ்சதும், ஒரு புகைப்பட ஆல்பம் தயார் பண்ணிக்கிட்டு, சினிமா வாய்ப்பு தேடுற வேலையத் தொடங்கிட்டேன்-. விஜய் டிவியில, ‘கனா காணும் காலங்கள்’ தொடருக்கு முயற்சி பண்ணி, கிடைக்கல. ஆனா, கிரணுக்கு வாய்ப்புக் கிடைச்சிருச்சி.

அதுக்கப்புறம், குடும்ப சூழ்நிலை காரணமா வேலை செஞ்சிட்டே, சினிமா வாய்ப்புக்கும் முயற்சி செஞ்சிட்டே இருந்தேன். அப்பத்தான் என் நண்பன் அசோக் மூலமா, அர்ஜுனின் காதலிங்கற படத்துல கதாநாயகனோட நண்பனா நடிக்கிற வாய்ப்புக் கிடைச்சது. அந்தப் படத்தோட இயக்குனர் பார்த்தி பாஸ்கருக்கு நன்றி. அதுக்கப்புறம் மிஷ்கின் சாரோட நந்தலாலா, முகமூடி, என் கலைத்துறை அண்ணன் பா.ரஞ்சித் வாய்ப்புக் கொடுத்த அட்டக்கத்தி, விக்ரம் சுகுமாரனோட மதயானைக் கூட்டம், இப்ப ‘மெட்ராஸ்’ வரைக்கும் நல்ல படங்களா அமைஞ்சது.

மெட்ராஸ் ,படம் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக வாழ்வியல், அரசியல் சூழலைப் பேசுகிற படம். இந்தப் படத்தில் அன்பு கதாபாத்திரத்துக்கு மிகச் சரியாகப் பொருந்திப் போனது எப்படி?

இயக்குனர் ரஞ்சித் அண்ணா, என்னோட கதாபாத்திரத்தோட தன்மைய விளக்கினாரு. என்னோட தாத்தா பா. கணபதி, பெரியாப்பா திருநாவுக்கரசு, மற்றும் அப்பா ஹரிகிருஷ்ணன் எல்லாருமே கொஞ்சம் அரசியல் ஈடுபாடு உள்ளவங்க. ஒரு கட்சியோட தொண்டன் எப்படி இருக்கனும்னு நேரடியாவே பாத்துருக்கேன். எந்தப் பலனையும் எதிர்பாக்காம, தலைவனுக்காக என்ன வேணாலும் செய்யத் தயாரா இருக்குற தொண்டனா - அன்புவா மாற எனக்கு அது உதவியா இருந்துச்சுன்னு சொல்லலாம். அதோட, ஒடுக்கப்பட்டவங்க உள்ளிட்ட எல்லாரும் சமமான சமூக அந்தஸ்தோட வாழனும்கிறதுதான் என்னோட எண்ணமும். அதே கருத்தோட இருக்குற ரஞ்சித் அண்ணாவோட சேர்ந்து, மெட்ராஸ் படத்துல வேலை பாத்தத நான் ரொம்பப் பெருமையா நெனைக்கிறேன்.

ஒரு நடிகனாக உங்களுக்குக் கிடைத்த வரவேற்பு, அங்கீகாரம் பற்றி...

மெட்ராஸ் படத்துக்கப்புறம்தான், கலையரசன்னு ஒரு பையன்... நல்லா நடிக்கிறான்னு சினிமா உலகத்துல தெரிய வந்துருக்கு. ரசிகர்களோட கைதட்டல்தான ஒரு நடிகனுக்கான அங்கீகாரம்! முதல் நாள் தேவி தியேட்டர்ல படம் பாக்கப் போனேன். அன்புவ அந்த மக்கள் கொண்டாடினதப் பாத்து ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. உதயத்துல என்னக் கட்டிப்பிடிச்சிப் பாராட்டினாங்க மக்கள். அதுக்குக் காரணம், ஒவ்வொருத்தருக்குள்ளயும் ஒரு அன்பு இருக்கான். மக்கள் கொண்டாடினது கலையரசன இல்ல, அன்புவத்தான். என்ன நடிகனா ஏத்துக்கிட்ட மக்களுக்கும், அவங்ககிட்ட கொண்டுபோயி சேத்த, ஊடகங்களுக்கும், வாய்ப்புக்கொடுத்த இயக்குனருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.

மெட்ராஸ் படக்குழுவுக்குத் தனியா நன்றி சொல்லனும். ஒளிப்பதிவாளர் திரு முரளி, நடிகர் திரு கார்த்தி, ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர்கள் திரு ஞானவேல்ராஜா, திரு பிரபு, திரு பிரகாஷ், கலை இயக்குனர் திரு இராமலிங்கம், உதவி இயக்குனர்கள் உள்பட எல்லாருக்கும் நன்றி, நன்றி, நன்றி!!

உங்கள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கிறதா?

அப்பாக்கு விருப்பம் இருந்தாலும், ஒரு பக்கம் பயமும் இருந்துச்சி. இப்ப அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் எம்மேல நம்பிக்கை வந்திருக்கு. ஆரம்பத்துல இருந்தே எனக்கு ஆதரவு தந்த நல்லவன் எங்க அண்ணன் ராஜேஷ்குமார்தான். நன்றிண்ணா...அப்பப்ப செலவுக்குப் பணம் கொடுத்ததுக்கும் சேத்து. என்னோட மனைவி சண்முகப்பிரியா...அவுங்களுக்கு சினிமா புடிக்கும், ஆனா நான் நடிக்கிறது புடிக்காது. இருந்தாலும், என் விருப்பத்துக்கு மதிப்புக் குடுத்து, நான் வேலய விட்டுட்டு சினிமா வாய்ப்புத் தேடி அலைஞ்சப்ப பொருளாதார ரீதியாவும் என்னத் தாங்கிப் பிடிச்சது பிரியாதான். சினிமாக்காரனுக்கு நம்பி பொண்ணு குடுத்த மாமனார் சங்கர், மாமியார் பானு அப்புறம் என்னோட அண்ணன் சதீஷ், அக்கா மதுமதி, நண்பர்கள் எல்லோருக்கும் இந்த சமயத்துல நன்றி சொல்லிக்கிறேன்.

திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்றாலும், சமூக நிகழ்வுகளை ஒட்டி பொது மக்களிடம், குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் பெரிய அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனும்போது, உங்களைப் போன்ற கலைஞர்களுக்கு சமூக அறம் - பொறுப்பு - இருக்க வேண்டும் என்னும் கருத்து குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

madras karthi

ஒரு நடிகனா மட்டுமில்லாம, சாதாரண மனுசானாவும் என்னோட கருத்து இதான். சினிமா ஒரு பெரிய சமூக ஊடகம். மக்கள்கிட்ட நேரடியாப் போய்ச் சேருற சக்திவாய்ந்த ஊடகம் இது. அதனால, சினிமாத் துறையச் சேர்ந்தவங்க சமூகப் பொறுப்போட வேல பாக்கணும். இத வெறும் பொழுதுபோக்குன்னு மட்டும் நெனைக்காம, சமூக விழிப்புணர்வ ஏற்படுத்துறதுக்கான கருவியாவும் பயன்படுத்தனும். கலைவாணர், எம்.ஆர்.இராதா - இவுங்கள மாதிரியானவுங்கள முன்மாதிரியா எடுத்துக்கிட்டு, சினிமாவ அணுகுனா, நல்ல மாற்றத்த சினிமாவாலயும் ஏற்படுத்த முடியும்னு நம்புறேன்.

இப்போது என்னென்ன படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறீர்கள்?

உறுமீன், ஜின், மைலாஞ்சினு மூணு படங்கள்ல நடிச்சிட்டு இருக்கேன். வாய்ப்புக் குடுத்தவங்களுக்கு நன்றி, இனிமேலும் வாய்ப்புக் கொடுக்கப் போறவங்களுக்கும் நன்றி!

சாதாரண குடும்பத்தில் இருந்து வருபவர்களும் தடம் பதிக்கின்ற அளவுக்குத் தமிழ்த் திரைப்படத்துறை நெகிழ்வுத் தன்மை உடையதாக இருக்கிறதா?

கண்டிப்பா. இல்லன்னா, என்ன மாதிரி சாதாரண குடும்பத்துப் பையன் ஒரு நடிகனா வந்துருக்க முடியுமா? அந்த அளவுக்கு தமிழ்த் திரைப்பட உலகம் ஆரோக்கியமா இருக்கு. பின்னணியப் பாக்காம, திறமயப் பாத்து வாய்ப்புக் குடுக்கற, சினிமாவ தவமா பாக்குற இயக்குனர்கள், அவங்கள அடையாளம் கண்டுபுடுச்சிப் படம் எடுக்குற தயாரிப்பாளர்கள்னு தமிழ்த் திரைப்படத்துறை என்ன மாதிரி இளைஞர்களுக்கு நம்பிக்கை தர்றதா இருக்கு. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நம்ம இடத்தத் தக்க வச்சிக்கிறது நம்ம கையிலதாங்க இருக்கு.

வெளியில் இருந்து பார்த்ததற்கும், இப்போது ஒரு நடிகனாக உள்ளே இருந்து பார்ப்பதற்கும் என்ன வேறுபாட்டை உணர்கிறீர்கள்-?

முன்னாடி மாதிரி இல்லாம, இப்ப சினிமாவ பத்தின என்னோட பார்வை மாறியிருக்கு. வெளியில இருந்து பாத்தப்போ, சினிமாவால கெடைக்கிற பணம், புகழ் மட்டுந்தான் பெரிசா தெரிஞ்சது. உள்ள நுழைஞ்சதுக்கப்புறம், ஒவ்வொரு படைப்புக்கும், படைப்பாளிக்கும் பின்னாடி இருக்குற ஏக்கம், வலி, ஆதங்கம்னு பல உணர்வுகளப் புரிஞ்சுக்க முடியுது. ஒரு படம் வெளிவர்றதுக்குப் பின்னால, எத்தன பேரோட உழைப்பு இருக்குங்கறது புரிஞ்சப்போ, சினிமாதான் என்னோட வாழ்க்கைங்கற முடிவு இன்னும் உறுதியாயிருச்சு. 

Pin It