கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்துமத பாசிச ஆட்சி என்ற விருதைத் தட்டிச் செல்லும் பா.ஜ.க வின் அடுத்த குறி ‘தாஜ்மகால்’.

1949 ஆம் ஆண்டு பாபர் மசூதிக்குள் ஒரு சிலை இரகசியமாக வைக்கப்பட்டது. வைத்தவர்கள் இந்துமகா சபையினர். அடுத்த நாளே ஆரம்பித்து விட்டார்கள் ‘அது ராம் ஜென்ம பூமி’ என்று.

1992 ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் குறி அதுவாகத்தான் இருந்தது. டிசம்பர் 6 ஆம் நாள் கதையை முடித்துவிட்டார்கள். மசூதி இடித்துத் தள்ளப்பட்டது அவர்களால்.

இப்போது அவர்களின் குறி தாஜ்மகால்! - அது இந்தியவின் அடையாளம். 

tajmahal 620

உத்திரப்பிரதேசம் ஆக்ரா, யமுனை ஆற்றங்கரை அருகில் கட்டப்பட்டுள்ளது தாஜ்மகால். கட்டியவர் முகலாயப் பேரரசர்களுள் ஒருவரான ஷாஜகான்.

இவர் ஆட்சிக் காலத்தில் கி.பி.1632 தொடங்கி 1648 வரை முதல் கட்டமாகவும், அதைத் தொடர்ந்து 1654 வரை இரண்டாம் கட்டமாகவும் 22 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது தாஜ்மகால்.

சமர்கண்டிர் உள்ள தைமூரின் சமாதி, மன்னன் உமாயூனின் சமாதி, ஜும்மா மசூதி ஆகிய கட்டிடங்களின் வடிவ அடிப்படையில்

வெனிஸ் நகரச் சிற்பி வெரோனியா--

துருக்கிக் கட்டிடக் கலை வல்லுனர் உஸ்தாத் இதாஅஃபாண்டி -

லாகூர் கட்டிடக்கலை வல்லுனர் உஸ்தாத் அகமது -

ஆகியோரின் வடிவமைப்பில் கட்டப்பட்டது தான் தாஜ்மகால்.

முகலாய மரபுகளை உள்ளடக்கிய, பாரசீகக் கட்டிடக் கலையின் வடிவமைப்பு அது.

தாஜ்மகால் கட்டவேண்டும் என்று ஷாஜகான் முடிவெடுத்தபோது, அதற்காகத் தனக்குச் சொந்தமான  நிலத்தை, ஆக்ராவின் மையப்பகுதியில் கொடுத்து உதவியவர் ராஜா ஜெய்சிங். இவர் ஷாஜகானின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா ஜெய்சிங் கொடுத்த அந்த நிலப்பகுதி, பயன்பாடு அற்ற, பயன்படுத்தப்படாத பள்ளமாக இருந்துள்ளது, எனவே அதை 50 மீட்டர் உயரத்திற்கு, யமுனை ஆற்றின் கரை மட்டத்திற்கு மண், கற்கள், பாறைகள், இட்டு நிறப்பட்டு, மேடாக்கிய பின்னரே தாஜ்மகால் கட்ட  ஆரம்பித்துள்ளார்கள் என்பது வரலாறு தரும் செய்தி.

இதில் இருந்து அறியப்படும்  முக்கியச் செய்தி, தாஜ்மகால் கட்டப்பட்ட நிலம் பயன்படுத்தப்படாத பள்ளம்.

அங்கே சிவன் கோயில் இருந்தது என்பதும் அது இடிக்கப்பட்டது என்பதும் மிகப்பெரிய பொய்.

அப்படி இருக்கும் போது “சிவன் கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் தாஜ்மகால் கட்டப்பட்டு உள்ளது” என்று முதன்முதலாக ஒரு புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறார், பா.ஜ.க வின் தலைவர்களுள் ஒருவரான வினய் கட்டார்.

இது கலவரத்திற்கு வித்திடுவதாக அமைந்துவிடும் என்பதை அறிந்தே அவர் பேசியிருக்கிறார்.

உ.பி யின் சந்தாரை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சங்கீத்சாம் என்பவர், தாஜ்மகாலைக் கட்டிய ஷாஜகானைத்  தேசத்துரோகி என்கிறார்.

இஸ்லாமிய மன்னர் ஷாஜகான் கட்டியதால் தாஜ்மகாலை ஒழிக்க வேண்டும் என்பது இவரின் வாதமாக அமைகிறது.

அப்படியானால் அதே இஸ்லாமிய மன்னர் ஷாஜகானால் கி.பி.1638. முதல் 1648 வரையும் 10 ஆண்டுகளில் கட்டப்பட்ட கட்டிடம்தான் டில்லி செங்கோட்டை.

1857 சிப்பாய்க் கலகத்தின் போது மன்னன் பகதுர்ஷாவிடம் இருந்து ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்ட இச்செங்கோட்டை, அன்று ஆங்கிலேய இராணுவத்தளம்.

1947 ஆகஸ்ட் 14ஆம் நாள் நள்ளிரவில் இந்திய முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அக்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றினார். இன்றுவரை அது தொடர்கிறது.

வாஜ்பாயும், மோடியும் அங்கேதான் கொடியேற்றினார்கள்.

அந்த செங்கோட்டை இஸ்லாமிய மன்னர் ஷாஜகானால் கட்டப்பட்டது என்பதனால் அதை என்ன செயலாம்?

சொல்லவேண்டும் பா.ஜ.க!

சரி இந்திய நாடாளுமன்றத்தைக் கட்டியது யார்? இந்துக்களா கட்டினார்கள்?

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த சர் எட்வின் லுத்தியன்ஸ், சர் எர்பர்ட் பேக்கன் ஆகிய இரண்டு கட்டிடக்கலை வல்லுனர்களால் 1912 ம் ஆண்டு வட்ட வடிவக் கட்டிடமாக வடிவமைக்கப்பட்டு, 1921 தொடக்கம் 1927 வரையும் 6 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் அது.

இந்திய ஆட்சி அதிகார மையமாக இன்று செயல்படும் அந்த நாடளுமன்றம், ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது என்பதால், அதையும் என்ன செய்யலாம்?

ஒரே ஒரு கேள்வி!

இந்து என்று சொல்லப்படும் பார்ப்பனர்கள், இந்தியவில் எங்காவது, ஒரு இடத்திலாவது வரலாற்றுச் சிறப்பு மிகுந்த கட்டிடம் அல்லது கோயிலாவது கட்டி இருக்கிறார்களா?

இந்தியாவில் உள்ள கோயில்கள் அனைத்தும் சூத்திரர்களால் கட்டப்பட்டவைகளே ஒழிய பார்ப்பனிர்களால் கட்டப்பட்டவை இல்லை என்பதை நினைவில் வைத்து மேற்கண்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும் அவர்கள்.

இன்னொரு முக்கிய செய்தி இருக்கிறது,

பாபர், அக்பர், அவுரங்கசீப் ஆகியோர் தேச விரோதிகள்.

அவர்களின் பெயர்கள் வரலாற்றில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று சொல்லும் பா.ஜ.க சங்கீத்காம், “நாட்டின் உண்மையான, சிறந்த மனிதர்களாகவும், வீரர்களாகவும் விளங்கிய மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி, ஆகியோரின் வரலாற்றை பள்ளி, கல்லூரிகளில் சொல்லித்தர வேண்டும்” என்று முடிக்கிறார்.

அதாவது இந்தியாவின் உண்மையான வரலாற்றை அழித்துவிட்டு, இந்து வரலாற்றைப் புகுத்த வேண்டும், வரலாற்றைத் திருத்தி மாற்றி எழுத வேண்டும் என்பது பா.ஜ.க வின் கொள்கை என்பது இதன் மூலம் புலனாகிறது.

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க வின் மோடி அரசால் மக்கள் அமைதி இழந்துவிட்டார்கள்.

15 லட்சம் தருகிறேன் என்றார்

பணமில்லாப் பரிவர்த்தனை என்றார்

பணமதிப்பு நீக்கம் என்றார்

ஜி.எஸ்.டி வரியை போடுகிறேன் என்றார்

நீட் தேர்வு என்றார்

-இப்படியே வாட்டி வதைக்கும் மோடி அரசால் இதுவரை நாட்டுக்கு எதுவும் நன்மை ஏற்பட்டதில்லை.

மாறாக நாடு காடாகி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் மத அரசியலைக் கையில் வைத்துக் கொண்டு ‘இடிப்பு’ அரசியலை செய்து கொண்டு இருக்கும் மோடி, இதுவரை தாஜ்மகால் பிரச்சனையில் எதுவும் சொல்லாமல் இருக்கிறார். அதனால் அவரும் இதில் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

நாட்டில் அமைதி நிலவேண்டும் என்பதே அனைவரின் எண்ணம்.

ஆதலால் நேற்று பாபர்மசூதி, இன்று தாஜ்மகால் என்றால் நாளை என்ன என்ற கேள்வி எழுகிறது.

இந்த கேள்விக்கு ஒரே பதில்தான்!

அடுத்து  வரும் பொதுத் தேர்தலில் மோடியின் பா.ஜ.க ஆட்சியைத் தோற்கடிக்க வேண்டும்!

என்றும் பா.ஜ.க ஆட்சி வராமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் “தாஜ்மகால்” தான் அடுத்த “பாபர்மசூதி”!