srilanka blast 645இலங்கைக்கான சுதந்திரம் 1948 மாசி மாதம் 4ம் நாள் கிடைத்ததாக ஒவ்வோராண்டும் பேரினவாதம் இலங்கையில் அத் தினத்தைப் மிகப் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றது. 2021 மாசி 4 ல் கொண்டாடப்படவுள்ள 73 வது வருட இலங்கைச் சுதந்திரமானது பிரித்தானியாவின் ஆதிக்க அதிகாரம் சிங்கள இனத்தின் கைகளில் திணிக்கப்பட்ட ஆண்டேயன்றி வேறல்ல.

இலங்கையின் சுதேச இனங்களாக, தனித்துவமான வரலாற்றைக் கொண்டியங்கிய தமிழ், சிங்கள இராட்சியங்களைச் சூறையிட்டு ஒன்றாக்கி தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர போர்த்துகேயர்களும், ஒல்லாந்தரும் பெரும் பிரயத்தனப் பட்டார்கள்.

அதன் பேரில் 1505 ஆண்டு நவம்பர் மாதம் போர்த்துக்கேய கொடிகளுடன் வந்த கப்பல்கள் கொழும்பு கடலில் நங்கூரமிட்ட அன்றுதான் தமிழரின் அடிமைத்தனம் ஆரம்பமானது.

பல நூறாண்டு காலமாக சுதந்திரப் பேரிகை கொட்டி மகிழ்ந்த சுதேச மனிதரகளைப் பிடித்தடக்கி இந்த தீவின் கௌரவமான சுதந்திப் பேரிருப்பை முடிவிற்கு கொண்டு வந்தது இந்தக் கப்பல்களின் வரவு.

முதன்முதலாக கொழும்புக் கடலோர பெருங்கற்பாறைகளில் தன் அன்னியக் காலடியைப் பதித்து இந்த இலங்கைத் தீவின் இறையாண்மையை மிதித்தவன் “லொரொன்சோ டி அல்மேதா”.

அவனதுக்குப் பின்னால் வந்த போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோர பிரதேசங்களின் அதிகாரத்தைப் பிடுங்கி தம்வசமாக்கிக் கொண்டார்கள். பத்துத் தசாப்தங்களாக தன் இரும்புக் பிடியை இலங்கைத் சுதேசிகள் மேல் விதித்து தம் அதிகார பலத்தால் உள்ளூர் வளத்தைச் சுரண்டிக் கொழுத்த போர்த்துக்கேயரை திகைக்க வைத்த பெரும் திருடர்களாக 1655 செப்டெம்பர் மாதம் ஜெராட் ஹல்ப் தலைமையிலான ஒல்லாந்தர்கள் இலங்கைத் தீவை சூழ்ந்துக் கொண்டார்கள்.

இப்படித்தான் மாறி மாறி அன்னியன் புணர்நத மண்ணாகிப் போனது இந்த அழகே உருவான இலங்கைத் தேசம். அன்று ஆரம்பித்த ஒல்லாந்தரின் கொடும் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்து 1796 ஆம் ஆண்டில் ஆங்கிலேயப் பெரும் பேய்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்து தமது அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

ஒல்லாந்தரின் பலமான கோட்டைகளில் தங்கள் கொடிகளைப் பறக்கவிட்ட ஆங்கிலேயர் சுதேசிகளின் மதமொழி கலாச்சாரங்களைச் சீரழித்து அவர்களைத் தங்கள் அடிமைகளாக்குவதில் கண்ணுங் கருத்துமாயிருந்தனர்.

ஏற்கனவே இருந்த செவ்விந்தியரின் கண்டமான அமெரிக்காவை தாங்களே கண்டுபிடித்ததாய் கதை சொல்லி தங்கள் கண்டமென வரலாறு எழுதியவர்கள் இந்து சமுத்திரத்தின் முத்தான இந்த தீவினையும் தங்கள் தேசமென கொண்டாடினார்கள்.

ஆட்சியைத் தக்க வைக்க தெருப்போட்டார்கள். பெருந்தோட்டங்கள் அமைத்தார்கள். இந்தியாவிலிருந்து தோட்டக் கூலிகளாக அப்பாவிகளை இழுத்து வந்தார்கள்.

கல்விக் கூடங்களை அமைத்துதங்களுக்கு உறுதுணையாய் இருக்க எஜமான விசுவாசமுள்ள அடிமைகளை உருவாக்கினார்கள். வரியினாலும், வன்கொடுமையாலும் தங்கள் ஆட்சியினைத் தக்க வைக்க முனைந்தார்கள். காலத்திற்குக் காலம் ஏற்ப்பட்ட சுதேசிகளின் பல கிளர்ச்சிகளை அடக்கிய ஆங்கிலேயே ஆட்சியானது இலங்கையில் 1948 வரை நிலைத்திருந்தது.

1947ல் இந்தியா தனக்கான சுதந்திரத்தைப் போராடிப் பெற்றுக் கொண்டது. அதற்காக இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கொடுத்த விலை கொஞ்சநஞ்சமன்று.

இந்த வேளையில்தான் இங்கிலாந்து இலங்கையைதக்க வைத்திருப்பதால் இனியும் தமக்கு எவ்வித இலாபமும் இல்லை என்றுணர்ந்த ஆங்கிலேயர் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி இலங்கையை சிங்களவரிடம் கைவிட்டார்கள்.

சுதந்திர இலங்கையின் முதலாவது அரசமைப்பை வரைந்தவர், பிரித்தானிய அரசாங்கத்தின் பிரதிநிதியான சோல்பரி பிரபு. இந்த அரசமைப்பின் உருவாக்கமும் அதன் நடைமுறைப்படுத்தலும் தான் இற்றைவரை இலங்கைத் தீவிற்குள் அமைதியின்மையின் அடிப்படைக் காரணம். சிறுபான்மைகள் மீதான அடக்குமுறை இலங்கையின் அரசமைப்புகளில் தொடர்வதற்கான மூலமும் இதுவே.

இந்த அரசமைப்பை வரைவதற்காக, பிரித்தானியாவில் இருந்து வந்த சோல்பரியும் அவர் குழுவினரும் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில், படித்த பிரபுத்துவ மேல்தட்டுச் செல்வந்தர்களின் கருத்துகளே மிகுந்த ஆதிக்கம் செலுத்தின.

இவர்களின் அபிலாசைகளில் வரையப்பட்ட அந்த அரசமைப்பானது, இலங்கையின் இனங்கள் தொடர்பில் உறுதியான எந்த வரையறையும் அற்ற வெறுமை கொண்டது. அதனால் தான் சுதந்திரத்துக்கு முன்பு தேர்தலில் வாக்களிக்க உரிமைப் பெற்ற மலையகத் தமிழரின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் சுதந்திர இலங்கையில் மிக இலகுவாகப் பறிக்க முடிந்தது.

சோல்பரி அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினரின் உரிமைகளின் பாதுகாப்பைக்கூட ஒரு வருடத்துக்கு உள்ளேயே தோற்கடித்த சிங்கள பேரினவாதம், எட்டு ஆண்டுகளுக்குள், தமிழ் பேசும் தேசிய இனங்களின் மொழி உரிமையை முற்றிலுமாக மறுதலித்து சிங்களம் மட்டுமே அரசமொழி என்கின்ற கொடும் சட்டத்தை உருவாக்கியது.

அதற்காக தமிழர் தலைமைகள் பிரித்தானிய அரசிடம் செய்த முறைப்பாடுகள் எந்தப் பயனுமற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக மிகப்பெரிய இனக்கலவரத்துள் இலங்கைத் தமிழர்கள் அழிந்தார்கள்.

இந்த அரசமைப்பின் சிங்கள - பௌத்த பேரினவாத அரசியலிலிருந்து இன்றுவரை இலங்கை வெளிவர முடியவில்லை. அதற்குப் பின்னர் 1972ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசமைப்பைப் பற்றி, தமிழ்ச் சிறுபான்மை மக்களிடையே மிகுந்தவலுவான எதிர்பார்ப்புகள் இருந்த போதிலும் சோல்பரி அரசமைப்பில் இருந்து அது எந்த விதத்திலும் வேறுபட்டு அமையவில்லை.

இலங்கைக்கு ஆங்கிலேயர் சூட்டிய பெயரான ‘சிலோன்’ என்பதை, ‘ஸ்ரீ லங்கா’ என்பதை மாற்றியதைத் தவிர இலங்கையைக் குடியரசாக அறிவித்த அந்த அரசமைப்பு இனரீதியானபிரச்னைக்கு எந்தத் தீர்வையும் கொண்டதாயிருக்கவில்லை.

மாறாக, அது சிங்களத்தையே அரச கரும மொழியாக ஏற்றதோடு, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கிக் கெளரவித்தது. உலகின் முதல் பெண் பிரதமர் என்று கொண்டாடிய சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் அமைந்த அந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம், தான் ஒரு சோஷலிச அரசாங்கமென அறிவித்தது தான் உலகமகா நகைச்சுவை. 1972இன் அரசமைப்பு, சோஷலிச இலக்கை நோக்கிய எந்த நகர்வையும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை.

அதற்குப் பின்னர் 1978ஆம் ஆண்டு, புதிய ஜனாதிபதி அரசமைப்பை உருவாக்கிய ஜே.ஆர். ஜெயவர்தன “ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர, மற்ற எல்லா அதிகாரங்களும் உள்ளபலம் பொருந்திய ஜனாதிபதி நான்” என்கின்ற கோசத்தோடு பதவியேற்றார்.

அதிகாரம் என்கின்ற பெரும்போதையில் மயங்கிய நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியான ஜே ஆரின் காலத்திலும் சிறுபான்மையைக் காக்கும் எந்த சுதந்திரமும் தமிழருக்கு கிடைக்கவில்லை. மாறாக இனக் கலவரங்களில் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள்.

இலங்கையில மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு பெரும் கட்சிகளோ அதன் வாரிசுகளோ ஜனநாயகத்தின் காவலர்களாக இருந்தவர்கள் அல்ல. இவர்கள் சிங்கள மக்களின் நலன் பேணியவர்கள்.

இன்னிலையில்தான் தமிழீழம் கேட்டுப் போராடிய தமிழர்களை 2009ல் அழித்தொழித்தது சிங்கள அரசு. தமிழர்களை அழித்தொழித்தவர்களையே மீண்டும் ஜனாதிபதியாக்கி மகிழ்ந்தார்கள் சிங்கள மக்கள்.

2015இல் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை மாற்றிய போதும் மக்கள், சிங்களத்தின் மற்றொரு முகத்தையே மீண்டும் நல்லாட்சி என்று நம்ப வைத்து நன்றாகவே ஏமாற்றினார்கள். அதற்குப்பிறகு இலங்கையில் வந்த ஆட்சியை தமிழரை அழித்த கோத்தபாயா அவர்களிடம் கையளித்து மகிழ்கிறது இன்றைய இலங்கை.

பிரித்தானியர் இலங்கைக்குச் சுதந்திரத்தை வழங்கும் போது இலங்கையின் அனைத்து இனத்தவர்களுக்குமே வழங்கினராயினும் துரதிர்ஸ்டவசமாக இலங்கையின் சுதந்திரம் பெளத்த சிங்கள மக்களுக்கான சுதந்திரமாகவே இற்றைவரை இருந்து வருகின்றது.

இலங்கையின் சுதந்திரம் என்பது இலங்கையில் வாழும் பெரும்பான்மைக்கான சுதந்திரம் மட்டுமே என்கின்ற மமதையில் சிங்கள ஏகாதிபத்தியம் இலங்கை நாடு தங்களுடையது, அதன் ஆட்சியும் தமக்கானது என்று மகாவம்ச உதாரணங்களோடு சிறு பான்மையினங்களை அழித்தொழிக்கின்ற பல நடவடிக்கைகளை இற்றைவரை தொடர்ந்து மேற்கொண்டவாறேயுள்ளார்கள்.

அதன் உச்ச அடையாளமாக தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக ஆக்கப்பட்டது மட்டுமல்லாமல் உரிமைக்காகப் போராடிய அவர்களை முள்ளி வாய்க்காலில் இனப்படுகொலை செய்தும் மகிழ்ந்தது இலங்கையின் இனவாத அரசு.

தமிழர்களைக் காலத்திற்குக் காலம் வஞ்சித்துத் தண்டிக்க வேண்டும் என்கின்ற பேரினவாத அரசின் நிலைப்பாட்டால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற பெரும் இனக்கலவரங்கள் இன்னமும் முடிந்தபாடில்லை.

எந்த சுதந்திரமுமற்ற மலையக மக்கள் வாழ்வோ தேயிலைத் தூருக்கு இரையாகிப் போவதாகவே இற்றைவரை தொடர்கிறது. திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் காலத்திற்குப் காலம் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான வன்முறைகளால் கொழும்பு மற்றும் தென் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் உயிர்கள் அவர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள், சொத்துக்கள், உடமைகள் அழித்து நாசமாக்கப்படுகின்றன.

இவ்வாறுதான் தமிழர் இருக்கும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று தமிழர்களை தேடி தேடி தாக்குதல் நடத்தியது மாத்திரம் அன்றி, தமிழர்களைகொன்றும் குவிக்கின்றது சிங்கள மேலாண்மை.. இவ்வாறன கொடூரக்கொலைகளைப் புரிந்து கொண்டே சிறுபான்மையினங்களும் இலங்கையின் சுதந்திர தினத்தை அனுஸ்டிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதுதான் இலங்கையின் கொடு அராஜகத்தின் உச்சம்.

அவர்களுக்கான சுதந்திர தினத்தில் சிங்கக் கொடியை ஏற்றி, நம் ஸ்ரீ லங்கா தாயே என்று கீதம் இசைப்பதில் தமிழர்கள் ஏன் ஒன்றிணைய வேண்டும் என்பது ஒவ்வோரு தமிழனுக்குமான கேள்வி! இதில் வேறுதமிழில் தேசிய கீதம் பாட வற்புறுத்துகின்றார்கள் அரச அடிவருடிகள் சிலர். தமிழிற்கும், தமிழர்க்கும் எந்த சுதந்திரமும் இல்லா நாட்டில் தமிழில் தேசிய கீதம் பாடி எதை எடுப்பது?

எங்கள் இனத்தை அழித்துவிட்டு அந்த இன அழிப்பை பெரு வெற்றித் திருநாளாகக் கொண்டாட அதற்குதமிழர்கள் சிங்கக் கொடியைத் தூக்கிப் பிடித்துத் தமிழில் தேசியம் பாடுதலால் என்ன நிகழ்ந்து விடப் போகின்றது? என்பதுதான் இன்றைய விடையறிய முடியாக் கேள்வி.

- மா.சித்திவினாயகம்

Pin It