2024 ஆம் ஆண்டு ஒன்றியத்தின் பொதுத் தேர்தல் சில மாதங்களில் வரவிருக்கும் நிலையில் கூட, சனாதனத்தைத் திணிக்கும் வேலையை ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற பெயரில் அறிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

“குரு-சிஷ்ய பரம்பரை அல்லது குடும்ப அடிப்படையிலான பாரம்பரியத் திறன்களை, கைவினைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் தங்கள் கைகள் மற்றும் கருவிகளுடன் பணிபுரியும் திறன்களை வலுப்படுத்தி வளர்ப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று இதற்கு ஒரு விளக்கமும் தரப்பட்டுள்ளது.

அதாவது பரம்பரை, பரம்பரை என்ற அடிப்படையில், பாரம்பரியக் கைவினைத் தொழிலை வலுப்படுத்தி வளர்ப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாம்.

 இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.student at workசரி, யார் யாருக்கு எல்லாம் இந்த ‘யோஜனா?’

(1) தச்சு வேலை செய்பவர், (2) படகு தயாரிப்பவர், (3) பூட்டு தயாரிப்பவர், (4) சுத்தியல் உள்ளிட்ட கருவிகள் தயாரிப்பவர், (5) இரும்புக் கொல்லர், (6) பொற்கொல்லர், (7) மண்பாண்ட வேலை செய்பவர், (8) சிற்ப வேலை செய்யும் சிற்பி, (9) கல் உடைப்பவர், (10) செருப்பு (காலணி) தைப்பவர், (11) கொத்தனார் வேலை செய்பவர், (12) கூடை - பாய் - துடைப்பம் - தேங்காய் நார் மூலம் கால்மிதியடி தயாரிப்போர், (13) பொம்மை செய்பவர், (14) முடிதிருத்துவோர், (15)பூ மாலை தயாரிப்பவர், ( 16) சலவைத் தொழில் செய்பவர், (17) தையல் தைப்பவர், (18) மீன்பிடி வலை தயாரிப்பவர் ஆகிய பதினெட்டு வகையான தொழில் செய்யும் ‘சமூக’த்தவர்களுக்கு இந்த விஸ்வகர்மா திட்டம் ஊக்கப்படுத்தி, உதவி செய்யுமாம்.

நான்கு வருணங்கள் அடிப்படையில் அந்தந்த வருணத்தவர்கள், அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட வேலையைச் செய்ய வேண்டும் என்ற மநுஸ்மிருதி, பகவத் கீதை வழியில் அப்பட்டமான ‘குலத்தொழில்’ திட்டம் தான் இந்த விஸ்வகர்மா யோஜனா என்பது தெளிவாகத் தெரிகிறது.

1953 ஏப்ரல் மாதத்தில் ராஜாஜியால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘குலக்கல்வி’ திட்டத்தைத் தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். இத்திட்டத்திற்கு எழுந்த கடும் எதிர்ப்பால் குலக்கல்வித் திட்டம் திரும்பப் பெறப்பட்டது.

அன்று கல்வியில் கைவைத்துச் சுட்டுக் கொண்ட சங்கிகள், இன்று தொழில் என்று குலப்பிரிவுகளைத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.

இதைக் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து மக்களும் ஓரணியில் நின்று எதிர்க்க வேண்டும். எதிர்வரும் 6 ஆம் தேதி சென்னையில் திராவிடர் கழகம் முன்னெடுக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை வலுப்பெறச் செய்வோம்.

2024 தேர்தலில் மோடி ஆட்சியைத் தூக்கி எறிவோம்!

- இரா.விஜயலட்சுமி

Pin It