உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் 108 டாலருக்கு விற்ற போது அன்றைய இந்திய ஒன்றியப் பிரதமர் மன்மோகன் சிங் அரசு, ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரை ரூபாய் 400 விலையில் மக்களுக்குக் கொடுத்தது.

இன்று உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் 60 டாலருக்கு விற்கப்படும் நிலையில், இன்றைய பா.ஜ.க வின் மோடி அரசு ஒரு சிலிண்டரை ரூபாய் 200 என்று கொடுக்கலாம். ஆனால் ரூபாய் 1200 என்று கூடுதல் விலையில் மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இப்போது திடீரென்று 200 ரூபாய் குறைத்து விட்டோம் என்று தொலைக்காட்சியில் தோன்றி புளகாங்கிதம் அடைகிறார் அவர். இது பெண்களுக்கு அளிக்கப்படும் பரிசாம்..? அப்படியானால் 400 ரூபாயில் இருந்த சிலிண்டரின் விலையை 1200 வரை ஏற்றிக் கொண்டு வந்தாரே மோடி, அது எல்லாம் பெண்களுக்கு அவர் அளித்த தண்டனை என்று தானே பொருள்?

மோடியின் இந்தத் திடீர் அறிவிப்புக்குப் பின்னால் ஒரு பலமான காரணம் இருக்கிறது.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் மாநில சட்டமன்றங்களுக்கு நவம்பர், டிசம்பரில் தேர்தல் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து பொதுத் தேர்தல் வருகிறது. இந்நிலையில் ‘இந்தியா’ எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலுப்பெற்றும் வருகிறது.

“இரண்டு கூட்டம் நடந்தது, 200 ரூபாய் குறைந்து விட்டது” இது மம்தா பானர்ஜியின் ஏளனம்.

“சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் விரைந்து வருவதைக் காட்டுகிறது” சொல்கிறார் ப.சிதம்பரம்.

“ பா.ஜ.க வின் தந்திர வித்தை எல்லாம் மக்களிடம் பலிக்காது” என்கிறார் மல்லிகார்ஜுன கார்கே.

அதாவது பா.ஜ.கவுக்குத் தேர்தல் பயம் பிடித்து ஆட்டுகிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.

கடந்த தேர்தல்களின் போதும் இப்படித்தான் விலைக் குறைப்பு நாடகமாடி, தேர்தல் முடிந்தவுடன் விலையை ஏற்றிக் கொண்டே வந்தது மோடி அரசு.

இப்போதும் அதே நாடகம்!

எப்போதும் ஏமாற மாட்டார்கள் மக்கள்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It