anitha 350இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் ஒரு சமச்சீர்வை ஏற்படுத்துவது என்று சொல்லித்தான் இங்கே 'நீட்' புகுத்தப்படுகிறது. அது எத்தனை பொய் என்பதைப் பார்ப்போம். தமிழ்நாடு மட்டுமின்றி இன்றும் அசாம், கர்நாடகா, கேரளா, மே.வங்கம், ஆந்திரம், காஷ்மீர் எனப் பல மாநிலங்களிலும் ‘நீட்’டுக்கு எதிர்ப்புத் தோன்றியுள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள்,வணிக நோக்கில்லாத கல்வித்துறையினர், மாநில நலன்களில் அக்கறையுள்ள கட்சியினர் என எதிர்ப்பு உருவாகி யுள்ளது. இந்த வகையில் இன்று இந்தியத் துணைக் கண்டம் ஒரு வகையில் இந்தி பேசும் மாநிலங்கள் X இந்தி பேசாதவை என இரு கூறுகளாக எதிர் எதிர் நிலையில் நிற்கின்றன.

டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் CBSE போன்ற கல்வி வாரியப் பாடத் திட்டங்களில் பயின்ற உயர் சாதி, உயர் வர்க்க மாணவர்களே இதன் மூலம் பயன் பெறுவர் என்கிற பிற மாநிலத்தவரின் அச்சம் இன்று உறுதியாகியுள்ளது. சாதி, வர்க்கம் என்கிற வேற்றுமைகளுக்கு அப்பால் இப்போது மொழி, வாழும் நிலப் பகுதி, நகர்ப்புறம், கிராமப் புறம் எனும் முரண் ஆகிய அடிப்படையிலான ஒதுக்கல்கள் இதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. அடித்தள மக்களின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ள பெருமைக்குரிய மாநிலக் கல்வி வாரியங்கள் இன்று மதிப்பிழந்துள்ளன.

நீட்டுக்கு ஆதரவாகச் சொல்லப்பட்ட வாதங்கள் என்ன மாதிரியானவை? பல்வேறு விதமான தனித்தனி நுழைவுத்தேர்வுகளிலிருந்து மாணவர்களை இத்தகைய பொதுத் தேர்வு காப்பாற்றும் என்பது ஒன்று மற்றது மருத்துவச் சேர்க்கையில் இப்போதுள்ள மிகப் பெரிய ஊழல்கள், கொள்ளைகள் முதலியன ஒழிக்கப்படும் என்பது. மற்றபடி ஒரே மாதிரி தரமான மருத்துவ வர்க்கம் ஒன்று இந்தியா பூராவும் உருவாகும் என்பது மூன்றாவதாகச் சொல்லப்பட்ட வாதம்.

எல்லாம் அபத்தம். ஒரு நுழைவுத் தேர்வு என்பது எப்படி ஒரே மாதிரி தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும்? திறமான, சீரான மருத்துவக் கல்வியும், பயிற்சியும்தான் ஒரே தரமான சிறந்த மருத்துவர்களை உருவாக்க முடியுமே ஒழிய ஒரு நுழைவுத் தேர்வு எப்படி அதைச் சாதிக்க முடியும்?

சேர்க்கையில் உள்ள ஊழல்களை ஒழிக்க வேண்டும் என்றால் உரிய விதிகளை உருவாக்கி, கடுமையான கண்காணிப்புகள், மீறும் நிறுவனங்களைக் கடுமையாகத் தண்டிப்பது ஆகியவற்றின் மூலம்தான் அதைச் சாதிக்க வேண்டுமே ஒழிய இப்படி இன்னும் ஒரு மோசமான ஒதுக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதைச் சாதிக்க முடியாது, சாதிக்கவும் கூடாது. தேவையானால் ஒவ்வொரு மாநிலத்திற்குமான நுழைவுத் தேர்வுகளைக் கட்டாயமாக்கலாம். பல மாநிலங்களில் அத்தகைய நுழைவுத் தேர்வுகள் சிறப்பாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. இதையெல்லாம் செய்யாமல் ஊழலை ஒழிக்கிறேன் என்கிற பெயரில் இப்படியான ஏழை எளிய அடித்தள சாதிகளைச் சேர்ந்த, கிராமப்புற, இந்தி பேசாத மக்களைப் பழிவாங்கும் ஒரு முறையைக் கட்டாயமாகப் புகுத்துவதை எப்படிச் சகிப்பது? கோடிக்கணக்கான ரூபாய்களை ‘கேபிடேஷன் ஃபீ’ ஆக வசூலிப்பதைக் கடும் கண்காணிப்புகளை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. ஆனால் உயர் பணத் திமிர் மிக்க ஒரு மேல்தட்டு 5 சத மக்களின் பிரச்சினை. இதைக் காட்டி ஏழை எளிய அனிதாக்களைப் பலி கொடுக்கக் கூடாது.

ஏன் ‘நீட்’டில் நம் மாணவர்கள் தோல்வி அடைகின்றனர்?

பல நுழைவுத் தேர்வுகளை ஒரே நேரத்தில் எழுத வேண்டிய சுமையை மாணவர்களுக்குக் குறைக்க நீட் போன்ற பொது நுழைவுத் தேர்வு தேவை என்கிற வாதத்தில் ஏதும் நியாயம் இருக்கிறதா எனப் பார்க்கலாம்.

‘நீட்’ தேர்வை விரும்பித் தேர்வு செய்பவர்களைப் பொருத்தமட்டில் யார் அந்த மாணவர்கள், அப்படி எழுதுகிறவர்கள் எத்தனை வீதம் பேர் என்பதற்கு உரிய தரவுகள் இல்லை. எனினும் அதுவும் ஒரு மிகச் சிறிய வீதத்தினர்தான். அவர்களும் கூட சமூகத்தின் மேல் தட்டிலிருந்து வருபவர்கள்தான். சென்ற ஆண்டு அனைத்திந்திய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் (AIIMS) நடத்திய இந்தப் பொது நுழைவுத் தேர்வில் பங்கு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சம். இது அப்போது மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர் தொகையில் வெறும் பத்து சதம்தான். அப்போது இந்தப் பொதுத்தேர்வு கட்டாயம் இல்லை என்பதால் மற்ற 90 சதம் மாணவர்களும் ‘நீட்’ எழுதுவதில் ஆர்வம் காட்டவில்லை. பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சியுற்று பல்வேறு படிப்புகளுக்கும் மேற் செல்கிறவர்களின் மொத்த எண்ணிக்கையுடன் இதை ஒப்பிட்டால் பொதுத்தேர்வை, அதாவது ‘நீட்’டை விருப்ப பூர்வமாகத் தேர்வு செய்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பதை விளக்க வேண்டியதில்லை.

சரி அப்படிப் பொது நுழைவுத் தேர்வைத் தேர்ந் தெடுத்த அந்தச் சிறு தொகை மாணவர்கள் யார்? அவர்கள் CBSE போன்ற மத்தியக் கல்வி வாரியப் பாடத் திட்டங்களில் படித்த மேல்தட்டினர்தான். இன்று 1176 மதிப்பெண்கள் வாங்கிய அனிதா எனும் கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்த ஒரு தலித் பெண்ணுக்கு நீட் தேர்வில் வெற்றி பெற இயலாத காரணத்தால் மருத்துவக் கல்வி வாய்ப்புப் பறி போனதை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் எப்படி புறக் கணிக்கத்தக்க ஒரு சிறிய மேல்தட்டினரின் நலனுக்காக மற்ற 90 சதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏன் தற்கொலை நோக்கித் தள்ளப்படுகிறார்கள் என விளங்கும்.

சரி. ஏன் CBSE மாணவர்கள் மட்டும் ஏன் எளிதில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறுகிறார்கள்? மாநிலக் கல்வி வாரியங்களில் படிப்பவர்களால் அது சாத்தியமில்லாமல் போகிறது? வேறொன்றுமில்லை. ‘நீட்’ தேர்வு CBSE பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது என்பதுதான் இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில். சிஙிஷிணி பாடத் திட்டத்தில் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுவதால் அந்தப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள் நீட்டில் வெற்றி பெற முடிகிறது. மற்றவர்களுக்கு அது சாத்திய மில்லாமல் ஆகிறது.

அடுத்த கேள்வி: இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்கள் மற்றும் இதர ICSC போன்ற இதர கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு CBSE பாடத் திட்டத்தின் அடிப்படையில் ‘நீட்’ தேர்வை நடத்துவது ஏன்? இப்படியான சந்தர்ப்பங்களில் மிக அதிக மாணவர்கள் பயன்பெறுமாறு அதிக மாணவர்கள் படிக்கிற ஏதேனும் ஒரு பாடத் திட்டத்தைத் தேர்வு செய்வதுதானே நியாயம்? இந்தியா முழுவதிலும் உள்ள CBSE பாடத் திட்டத்தில் வாசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில் மாநிலக் கல்வி வாரியப் பாடத் திட்டத்தில் படிக்கிற மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லையா? இந்தியா முழுவதும் மொத்தமாக 12ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர் களின் எண்ணிக்கையையும், CBSE மாணவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் ‘நீட்’ தேர்வு என்பது எந்த அளவுக்கு உயர் தட்டு, உயர் சாதி, நகரங்களை மையமாகக் கொண்ட ஒரு தேர்வுமுறை என்பதும் நம் அனிதாக்கள் ஏன் தற்கொலையை நோக்கித் தள்ளப்படுகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

CBSE பாடத் திட்டமே சிறந்தது என்பது உண்மைதானா?

தமிழகத்தின் சமச்சீர்க் கல்வி முறை, அதன் கேள்வித் தாள் வடிவம், தேர்வு முறை, பாடத் திட்டம் எல்லாம் குறைகளற்றவை என நான் சொல்லவில்லை. நிச்சயம் அவற்றில் குறைபாடுகள் உண்டு. நாங்களே பலவற்றைச் சுட்டிக் காட்டியுள்ளோம். 11 ம் வகுப்புப் பாடங்களை நடத்தாமலேயே 12ம் வகுப்புப் பாடங்களை நடத்துவதற்குத் தோதாக நமது கல்வி முறை உள்ளது, கேள்வித்தாள் வடிவம் மனப்பாட முயற்சி களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக உள்ளது முதலானவற்றை இப்படிச் சுட்டிக் காட்டியுள்ளோம். அரசும் கல்வித்துறையும் இப்போது அவற்றைக் கணக்கில் கொண்டு சில மாற்றங்களையும் இந்தக்

கல்வி ஆண்டு முதல் கொண்டு வந்துள்ளன. குறைகளைக் கண்டறிந்து திருத்திக்கொள்ளும் திறமையும் வல்ல மையும் நமக்குண்டு. இப்படி நம் கல்வி முறையில் சில குறைகள் உள்ளன என்பதற்காக CBSE தான் இந்தியாவில் உள்ள கல்வி முறைகளிலேயே சிறந்த முறை எனவும், அதில் குறைகளே இல்லை எனவும் நம்புவது போன்ற அபத்தம் ஏதுமில்லை. ஆனால் அப்படியான நம்பிக்கை நமக்குள் சிலரிடையே உள்ளது.

2009ல் அறிவியலாளர் அனில்குமார் மற்றும் IIS யில் பணியாற்றிய டிபாகர் சட்டர்ஜி ஆகியோர் CBSE உடன் இந்தியாவில் உள்ள சில மாநிலக் கல்வி வாரியங்களை ஒப்பிட்டு ஒரு ஆய்வு செய்திருந்தனர்,

இயற்பியல், வேதியல், உயிரியல், கணிதம் ஆகிய நான்கு அறிவியல் பாடங்களிலும் மேற்கு வங்கக் கல்வி வாரிய மாணவர்களும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் ஆந்திர மாநில மாணவர்களும் CBSE மாணவர்களைக் காட்டிலும் சிறப்பாக உள்ளதை அவர்கள் நிறுவினர் (Current Science, 2009). இதில் நாம் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் மேற்கு வங்கமோ இல்லை ஆந்திரப் பிரதேசமோ ‘நீட்’டில் அப்படி ஒன்றும் பிரமாதமாகச் செய்துவிடவில்லை. ஆக, ‘நீட்’டில் பிரமாதமாகச் செய்வது என்பது அவர்களின் கல்வித் திறமைக்கும் பாடப் புரிதலுக்கும் நிரூபணமல்ல. சிஙிஷிணி வடிவத்தில் ‘நீட்’ தேர்வு கட்டமைக்கப்பட்டுள்ளதன் விளைவுதான் அம் மாணவர்கள் ‘நீட்’டில் நன்றாகத் தெரிவது.

ஏதோ CBSE., MCI (இந்திய மருத்துவக் கவுன்சில்) எல்லாம் லஞ்ச ஊழல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்றெல்லாம் நம்பினாலும் அப்போதும் நாம் முட்டாள்கள்தான்.

MCI இன் முன்னாள் தலைவர் கேடன் தேசாய் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல் கொடுத்த போது லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர். சென்ற ஆண்டு CBSE ஏற்பாடு செய்திருந்த All India Pre-Medical Test இப்படியான குற்றச்சாட்டுகளால் ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

CBSE வாரியத்துக்கும் அதன் பாடத் திட்டத்துக்கும் இப்படியான ‘நீட்’ ஆதரவு தாராளமாக இருப்பதன் விளைவாக இன்று இந்தியாவெங்கும் சிஙிஷிணி பாடத் திட்டத்தை ஏற்கும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை ஊதிப் பெருத்துள்ளது. இந்த வகையில் இப்போது ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது மாநிலக் கல்வி வாரியங்களைச் செல்லாக் காசாக்கும் முயற்சியாகிறது. மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் தம் பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருந்த பெற்றோர்கள் இனி அவர்களை CBSE பள்ளிகளைத் தேடிச் சென்று மிக அதிகமாகப் பணம் கொடுத்துச் சேர்க்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் கல்விக் கொள்கைகள் ஒரே சீராக இந்தியா முழுவதும் திணிக்கப் படுவதற்கும், கல்விக் கொள்ளைகள் அதிகமாவதற்கும், ஏழை எளிய மக்களின் கல்விச் செலவுகள் அவர்களால் தாங்க முடியாத அளவிற்கு அதிகரிப்பதற்கும் மாநிலங் களின் கல்விக் கொள்கைகளும் அணுகல் முறைகளும் பலவீனமாவதற்கும் வழி வகுக்கப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இப்படி CBSE பள்ளிகளில் அதிகம் பணம் கொடுத்துப் படிக்க வழி இல்லாமல் தொடர்ந்து மாநிலக் கல்வி முறையில் படிக்கும் ஏழை எளிய. அடித்தட்டுச் சாதிகளைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் இனி மருத்துவப் படிப்பை லட்சியமாகக் கொண்டார் களானால் என்ன ஆகும் என்பதற்குத்தான் அனிதாவின் இறப்பு நம் முன் இரத்த சாட்சியமாக அமைந்துள்ளது.

anitha neet strike 600‘நீட்’ கட்டாயமாவதன் கொடு விளைவுகள் மாணவர்களுக்கு மட்டுமல்ல..

இந்தப் ‘பன்மை விடைக் கேள்விகள்’  (Multiple Choice Question) நிறைந்த கேள்வித்தாள் என்கிற CBSE யின் தேர்வு வடிவம் அப்படி ஒன்றும் மாணவர்களின் திறனை மதிப்பிட்டு விடுவதற்கான ஆகச் சிறந்த வடிவம் எனச் சொல்லிவிட முடியாது. அறிவியல் கருத்தாக்கங் களை தர்க்கபூர்வமாகத் தருவிக்கும் விரிவான தர்க்க அடிப்படையில் விளக்கம் அளிக்கும் (concept development) முறையும் முக்கியமானதே. தமிழ்நாடு, மேற்கு வங்கம் முதலிய மாநிலங்கள் இத்தகைய தேர்வுமுறையையே நீண்ட காலமாகப் பின்பற்றி வருகின்றன. என்னைப் பொருத்தமட்டில் இரண்டுக்கும் சம அளவில் முக்கியத் துவம் அளிக்க வேண்டும். மாணவர்களை அவர்களுக்குப் போதிக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் ஒரு முடிவு சரியானதா தவறானதா எனச் சிந்திக்கத் தெரிந்தால் போதும் என நாம் எதிர்பார்க்கக் கூடாது. கணினிகள் கூட அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்து விடக் கூடும். மாறாக ஏற்கனவே உள்ள எல்லா நம்பிக்கை களையும் சந்தேகிக்கும் திறன் உடையவர்களாக மாணவர்களை ஆக்குவதே அறிவியல் வளர்ச்சிக்குத் துணை செய்யும்.

நான் அடிக்கடி கூறும் ஒரு எடுத்துக்காட்டை இங்கு முன்வைக்க விரும்புகிறேன். மரத்தில் இருக்கும் ஆப்பிள் காம்பு அறுந்தால் கீழே விழ வேண்டியது இயல்புதானே என நியூட்டன் நினைத்திருந்தாரானால் அவரது புகழ் பெற்ற புவி ஈர்ப்புத் தத்துவம் கண்டு பிடிக்கப்பட்டிருக்க இயலாது. இப்படியான counter inductive சிந்தனை முறை அம்மைவதாகக் கல்வி முறை அமைய வேண்டும். எனவே ஆம் / இல்லை; சரி / தவறு என்கிற ரீதியில் கேள்வித் தாள்களை அமைத்து கணினிகளின் உதவியால் மாணவர்களை மதிப்பிடும் சிஙிஷிணி முறையே சிறந்தது என்பதாக நம்புவது சரியல்ல.

இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘நீட்’ என்பது புதிதல்ல. CBSE பாடத் திட்டத்தில் படித்த வடநாட்டு இந்தி மொழி மாணவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளிப்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த ‘மருத்துவக் கல்விக்கான அனைத்திந்திய முன் தேர்வு’ (AIPMT) என்பதன் நீட்சிதான் இன்றைய ‘நீட்’. இந்த AIPMT தேர்வு CBSE பாடத் திட்டத்தின்படி சிஙிஷிணியால் நடத்தப்பட்டது என்பது மட்டுமின்றி அது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர் களுக்கு இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் 15 சத ஒதுக்கீடு இருந்தது. இதைப் பெரும்பாலும் வட இந்திய ஆங்கிலோ -

ஹிந்தி மேல்தட்டினரே பறித்துக் கொண்டிருந்தனர். ஒப்பீட்டளவில் வட நாட்டு இந்தி பேசும் மாநிலங் களில் மருத்துவக் கல்லூரிகள் குறைவு. அந்த வகையில் பிற மாநிலங்களில் வட மாநிலத்தவரைத் திணிப்பதில் இது பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. இதில் CBSEயில் பயின்ற மேல் தட்டினரே பெரிதும் பலனடைந்தனர்.

‘நீட்’ தேர்வைக் கட்டாயமாக்குவதன் மூலம் இந்த நிலை மேலும் அதிகரிக்கும். அதாவது மேல்தட்டு நகர்ப்புற மாணவர்களின் கூடாரமாக மருத்துவக் கல்லூரிகள் ஆவது உறுதி.

இன்னொன்றையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ‘நீட்’ இப்போது இந்திய அளவில் கட்டாயமாக்கப்பட்டு, அதற்கு உச்சநீதிமன்றமும் ஆசி வழங்கி, ‘நீட்’டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட நளினி சிதம்பரம் கூறியது போல இனி ‘கடவுளிடம் முறையிட்டாலும் கூட’ ஆகப் போவது ஒன்றுமில்லை என ஆகிவிட்டது. ஆனால் இப்போதும் கூட AIIMS, PGI, JIPMER ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் ‘நீட்’ டிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் சிறப்பான தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுமாம். அதென்ன? இன்னும் உயர் மட்டத்திலுள்ள மேல் தட்டு நகர்ப்புற ஆங்கிலோ ஹிந்தியர்களுக்கான நிறுவனங்களாக ஆக்கும் முயற்சியாக அது அமையலாம்.

இவை எல்லாம் எங்கு கொண்டு போய் விடும்?

இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்காக சென்னைப் புறநகரில் உள்ள ஒப்பீட்டளவில் சற்றே மலிவான ஒரு மருத்துவ மனையில் பத்து நாட்கள் நான் சிகிச்சைக்கு வந்தவருடன் தங்க நேரிட்டது. அங்கு நான் சந்தித்த அனுபவங்கள் குறித்து ஒரு பதிவு செய்திருந்தேன். சுமார் முப்பதாண்டு களுக்கு முன் அதே போல ஒரு பத்து நாட்கள் நான் ஒரு மருத்துவமனையில் இருந்த அனுபவத்துடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரை அது. அதில் நான் குறிப்பாகச் சுட்டிக் காட்டியிருந்தது இதுதான். இந்த முப்பதாண்டுகளில் பெரிய அளவில் நிலைமை மாறி இருந்தது. அதிக அளவில் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளையும் கிராமப்புறங்களையும் சேர்ந்த மருத்துவர்களை இப்போது காணமுடிந்தது. ஒப்பீட்டளவில் மருத்துவர் - நோயாளி உறவு மிகவும் ஜனநாயகப்பட்டிருந்ததை விளங்கிக் கொள்ள முடிந்தது. எளிதில் அணுகக் கூடியவர்களாக மருத்துவர்கள் இப்போது உள்ளனர்.

கட்டாய ‘நீட்’ நடைமுறைக்கு வந்தால் இன்னும் சில ஆண்டுகளில் இந்த நிலை முற்றிலும் மாறும். மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள், ஜனநாயகப்பாடுகள் (democratisation) என்பன முற்றிலும் அழியும். அடித்தள மக்கள் முற்றிலும் அந்நியப்பட நேரிடும். இதுதான் எல்லாவற்றிலும் மோசமான பின்விளைவாக அமையும்.

Pin It