சமீபத்தில் தேசியக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (NCERT) வடிவமைத்துள்ள தேசிய கலைத்திட்டம் (NCF-2005) கீழ்க்கண்ட வழி காட்டும் கொள்கையை வெளியிட்டுள்ளது.

1. பள்ளிக்கு வெளியே வாழ்க்கையுடனான அறிவை தொடர்பு படுத்துதல்.

2. மனப்பாட முறையில் இருந்து கற்றல் விடுபடுவதை உறுதி செய்தல்.

3. பாடப்புத்தகத்தை மையமாகக் கொண்டதாக கல்வி அமையாமல், குழந்தைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவும் விதமாக கலைத்திட்டத்தினை மேம்படுத்துதல்.

4.தேர்வினை நெகிழ்ச்சியானதாகவும், வகுப்பறையை வாழ்வோடு இணைந்ததாகவும் மாற்றுதல்.

இப்படியரு சிறப்பான கொள்கையை வகுக்க ழிசிணிஸிஜி-க்கு உந்து சக்தி எது? இந்தக் கேள்விக்கு விடையாக வருவது, 1993-ல் இருந்து நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுதான். மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப இலாகா, நாடு முழுவதும் உள்ள அறிவியல் இயக்கங்களின் இணையோடு, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 27 முதல் 31 வரை நடத்தி வருகிறது. இம்மாநாட்டின் முக்கிய நோக்கங்களாவன;

1. குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்துதல்.

2. குழந்தைகளிடம் இயற்கையாகவே பொதிந்துள்ள படைப்புத் திறனை வெளிக்கொணர்தல்.

3. குழந்தைகள் வாழும் பகுதியில் உள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வைக் கண்டறிதல்...

ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு பொதுவான தலைப்பு மற்றும் 6 உபதலைப்புகள் தரப்படும். ஐந்துபேர் கொண்ட மாணவர் குழு, ஒரு வழிகாட்டி ஆசிரியரின் துணையோடு 4 மாதகாலம் (ஆகஸ்ட் - நவம்பர்) ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆய்விற்காக மாணவர்கள் மக்களிடம் கருத்துத்தொடர் மூலம் விவரம் வாங்குதல், பேட்டி எடுத்தல், உற்றுநோக்குதல் போன்றவற்றோடு, நூலகங்களுக்குச் சென்று செய்தித்தாள் ஆதாரங்கள், தனது ஆய்விற்கு உதவக்கூடிய சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படிப்பதோடு மட்டுமில்லாமல், குறிப்பெடுத்து தனது ஆய்விற்கு வலுசேர்ப்பார்கள். ஒரு மாணவனோ, மாணவியோ எந்த அளவிற்கு புத்தகங்களைத் தேடிப் படிக்கிறார்களோ அதற்கேற்பவே அவர்களுடைய ஆய்வு சிறப்பானதாக அமையும். ஆய்வு சிறப்பானதாக இருந்தால் மட்டுமே மாணவர்களின் ஆய்வானது தேசிய அளவிலும், இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டிலும் பங்கு பெறும். இம் மாணவர்களின் ஆய்வானது, முனைவர் பட்டம் பெறுபவர்களின் ஆய்வறிக்கைபோலவே, வடிவில் சிறிதாக இருந்தாலும், கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பது போல, சமுதாயப் பிரச்சனைகளைத் தீர்ப்பதாக உள்ளன.

திருப்பூரில் உள்ள ஜெய்னாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஆய்வானது 10 முறை தேசிய அளவிலும், மூன்றுமுறை இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டிலும் கலந்து கொள்ளும் சிறப்பிற்கு என்ன காரணம்? அதற்கு இம்மாணவர்கள் தேடித் தேடி நூலகங்களில் படித்த புத்தகங்கள் தான் என்றால் மிகையாகாது... உதாரணமாக சில ஆய்வுகளைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

1. 2000-ம் ஆண்டில் எஸ். தமீம் சுல்தானா குழுவினர் நிலத்தடி நீரை சேமித்தல் (மழைநீர் சேகரிப்பு) என்ற ஆய்விற்காக, இவை சம்பந்தப்பட்ட 8 புத்தகம் மற்றும் செய்தித்தாள்களைத் தேடிப் படித்துள்ளனர். இந்த ஆய்வானது தேசிய அளவிலும், இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டிலும் கலந்து கொண்டதுடன், மத்திய நீர் வளத்துறை இலாகா, மற்றும் அன்றைய தமிழக முதல்வராலும் பாராட்டும் பரிசும் பெற்றதாகும்.

2. 2001-ம் ஆண்டில் இப்பள்ளி மாணவிகளின் ஆய்வு ‘‘பழங்காலக் கட்டடக்கலை - நவீன காலக் கட்டடக்கலை - ஓர் ஒப்பீடு என்கிற ஆய்விற்காக, கட்டடக் கலை சம்பந்தமாக 14 புத்தகங்களைப் படித்து, குறிப்பெடுத்துள்ளனர். இதன் தேசிய மாநாடு புனா (மகாராஷ்டிரா)வில் நடைபெற்ற போது துவக்க விழாவிற்கு வந்திருந்த டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் இந்த ஆய்வுக் கட்டுரையை வாங்கிப் பார்த்து 2000 வருடங்களுக்கு முன் கரிகால் சோழன் பெருக்கெடுக்கும் வெள்ளம், ஆழம் காண முடியாத மணலுக்கு நடுவே கல்லணைகட்டிய விதம் பற்றி படத்துடன் கூறியதைப் படித்து வியந்து, இச்செய்தியை எங்கிருந்து எடுத்தாய் என்று மாணவி வி. பாரதியைக் கேட்டார். உடனே மாணவி, தமிழக பாசன வரலாறு - ப. கோமதி நாயகம் எழுதிய புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொண்டேன் என்றவுடன் மாணவியை அன்புடன் தட்டிக் கொடுத்துப் பாராட்டியது என் நினைவில் அழியாமல் உள்ளது.

3. 2002-ம் ஆண்டின் ஆய்வாக இப்பள்ளி மாணவி எஸ்.சவீதா ‘‘சமையலறைத் தோட்டம்’’ பற்றிய ஆய்வை மேற்கொண்டனர். இதற்காக வேளாண்மைப் பல்கலைக் கழகம், மற்றும் கோபி சத்தியமங்கலம் விவசாயியைச் சந்தித்ததோடு 12க்கும் மேற்பட்ட நூல்களில் இருந்து விவசாய முறைகளைக் கற்றுக் கொண்டு, பள்ளியிலேயே பஞ்சகாவ்யா உரம், மண்புழு உரம், மூடாக்கு போடுதல் பற்றியெல்லாம் பள்ளியில் பரிசோதனை முறையில் தோட்டம் போட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு தேசிய மற்றும் இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டிலும் கலந்து கொண்டு 2004ல் தூர்தர்ஸனில் ‘மிரீஸீவீtமீனீவீஸீபீ’ என்ற பெயரில் 10 நிமிட திரைப்படமாகவும் வெளிவந்தது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மட்டும் சுமார் 1700 ஆய்வுகள் மாணவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியா முழுவதும் சுமார் 3 லட்சம் மாணவர்கள் இந்த ஆய்விற்காக புத்தகங்களைப் புரட்டியே ஆக வேண்டும். புத்தகத்தைத் தேடிப் படிப்பதற்கு மாணவகளுக்கு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டுகிறது.

Pin It