“நீரின்றி அமையாது உலகு” என்பது தமிழ்ச் சிந்தனை, உலகின் நியதி. இங்கே உலகு என்பதில் அரசும் அடங்கும்.
மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கியமான ஒன்று நீர். நீரைத் தேக்கிப் பாதுகாப்பது, அதை வகுத்து மக்களுக்கு வழங்குவது அரசின் கடமை. தமிழக அ.தி.மு.க. அரசுக்கு இந்த அறிவு 2015இலும் இல்லை, இப்பொழுதும் இல்லை.
ஒரு மாதத்திற்கு முன்னர் இருந்தே இப்பொழுது பெய்யும் வடகிழக்குப் பருவமழை குறித்தும், அதன் வலிமை குறித்தும் வானிலை ஆய்வு மையம் தெளிவாகச் சொல்லி வந்திருக்கிறது.
வருமுன் காக்க வேண்டும் என்பதனால் ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும், நீர் வழிப் பாதையை செப்பனிட வேண்டும், ஆகாயத் தாமரைகளை அகற்றி கரைகளை வலிமைப் படுத்த வேண்டும். பருவ மழைக்கு முன்னர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்.
இரட்டை இலைக்குச் சண்டை. எம்.ஜி.ஆர் பெயரை வைத்து திருவிழா கூத்தாடிய எடப்பாடி அரசின் கையாலாகாத தனத்தால். இன்று சென்னை மழைநீரில் மிதக்கிறது.
வீடுகளில், தொழிலகங்களில் மழை நீர் புகுந்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அல்லல் படும் அலங்கோலம். முறையாகத் தூர்வாரி நீர்வழிப் பாதையைச் செப்பனிடாத காரணத்தால் மூழ்கிக்கிடக்கும் பயிர் நிலங்கள், மழைநீரோடு கழிவு நீர் கலந்து குப்பைகள் மிதப்பதால் அடிக்கும் நாற்றத்தோடு நோய் பரவும் அபாயம்.
இப்படி தலைக்கு மேல் வெள்ளம் ஏறிய பிறகு எடப்பாடி அறிவிக்கிறார், தாழ்வான பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்ற 1,100 கோடி ஒதுக்கியுள்ளாராம். இப்படி ஒரு முதல்வர்?!
கொடுப்பதும் மழை. கெடுப்பதும் மழை என்கிறார் வள்ளுவர்.
கொடுக்கும் மழையைத் தேக்கி, நெறிப்படுத்தி மக்களுக்குக் கொடுத்திருந்தால் அங்கே மழையின் கெடுதலைத் தவிர்த்திடலாம் என்ற அறிவுடமை இங்கே வள்ளுவரின் நுட்பமான கருத்து.
இதெல்லாம் கருத்தில் கொண்டு, காலம் அறிந்து செயல்படத் தெரியாத ஒருவர் அல்லவா தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார்.
2015ஆம் ஆண்டு பெய்த மழையால் செயலிழந்த சென்னை, இப்பொழுது நீரில் மிதக்கிறது. கடற்கரையில் மணலைக் காணவில்லை. அவ்வப்போது மின்சாரம் காணாமல் போய்விடுகிறது.
எருமை மாட்டின் மேல் மழை. அரசு இயந்திரம் மிதக்கிறது நீரில். செயலிழந்தது அரசு.
நாடே குளிரில் நடுங்குகிறது. ஆனால் தமிழக முதல்வருடன் அமைச்சர்களுக்கும் குளிர்விட்டுப் போய்விட்டது.
‘ஜன்னி’ கண்டிருக்கும் தமிழக அ.தி.மு.க. அரசுக்கு விரைவில் மக்கள் மருத்துவம் பார்க்க இருக்கிறார்கள்.