எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் கள்ளக்குறிச்சி. அந்த மாவட்டத்தின் கல்வராயன் மலையில் கோமுகி ஆறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் சேலம் மாவட்ட மலைகளில் பாய்ந்து, மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்ட மலைகளில் சுமார் நாற்பது கிலோ மீட்டர் பயணித்து கோமுகி அணைக்கு வந்து சேருகிறது.
இந்த ஆற்றை சேலம் மாவட்டம் கைகான் வளைவு என்ற கிராமத்தின் அருகே தடுப்பணை கட்டி கால்வாய் மூலம் சேலம் மாவட்ட கல்வராயன் மலையடிவாரத்தில் உள்ள கரியக் கோயில் நீர் தேக்கத்திற்கு கொண்டு செல்ல தமிழக பொதுப்பணி துறை அறிவிப்பாணையையும், மலைவாழ் மக்கள் ஏழு பேரின் நிலங்களை கையகப் படுத்துவதற்கான விளம்பரத்தையும் பத்திரிக்கைகளில் வெளியிட்டுள்ளது.
இதுவும் போதாது என்று எடப்பாடியின் நெருங்கிய நண்பரும், அவரின் பினாமி என்றும், சின்ன எடப்பாடி என்றும் மக்களால் ’செல்லமாக’ அழைக்கப்படும் இளங்கோவன் என்பவர் மூலம் இத்திட்டத்தை நேரடியாக செயல்படுத்த தீவிர முயற்சிகளையும் எடப்பாடி செய்து வருகிறார்.
எடப்பாடி, ஜெ - ஆட்சியில் மந்திரியாக இருந்த வரை சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்த இளங்கோவன், எடப்பாடி முதல்வராக ஆனவுடன் மாநில கூட்டுறவு சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கோமுகி ஆற்றை திசை திருப்பும் எடப்பாடியின் இந்த செயல் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களை மட்டுமல்ல, கடலூர் மாவட்ட மக்களையும் நஞ்சு வைத்து மெல்லக் கொல்லும் துரோகச் செயலாகும்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பருவ மழை பொய்த்து கோமுகி மற்றும் மணிமுத்தாற்றில் தண்ணீர் வராததால் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கிணறுகள் முற்றாக வற்றி விட்டன. ஏரிகளும், குளங்களும் வறண்டு போயின. ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஐநூறு அடிகளுக்கும் கீழே சென்று விட்டது.
விருத்தாசலம் நகரிலும்,அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் பல லட்ச ரூபாய் செலவு செய்து ஆழ்துளை கிணறுகளை அமைத்தாலும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் அவற்றில் உப்பு போன்ற தனிமங்களின் அளவு மிகவும் அதிகமாக உள்ளதால் அதை குடிநீருக்காகவோ, பாசனத்திற்கோ பயன்படுத்த முடிவதில்லை. நிலத்தடி நீர் வற்றிப் போனதால் நிலத்திற்கு அடியில் கடல் நீர் புவனகிரி வரை உள்ளே புகுந்து விட்டது.
கடலூர் மாவட்டத்தில் மேற்கண்ட காரணத்தோடு, நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களில் இருந்து உறிஞ்சி வெளியேற்றப்படும் நீரினாலும் நிலத்தடி நீர் வற்றிப் போய் குடிநீருக்குக் கூட மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது பருவ மழை பொழிந்து இந்த ஆறுகளில் தண்ணீர் வந்து நிலத்தடி நீர் குறைந்த அளவுக்காவது ஊறி கொண்டிருந்தது. கோமுகி ஆற்றை தனது பினாமி நிலங்களுக்கும், தான் வாங்கப்போகும் நிலங்களுக்கும் எடப்பாடி திருப்பி விட்டால் இனி அதுவும் நடக்காது.
துரோகம் செய்வது என்பது எடப்பாடிக்கு புதியதொரு காரியமல்ல. அது அவருக்கு கைவந்தக் கலை. அதற்காக அவருக்கு பாரத ரத்னா விருதே வழங்கலாம். எம்.ஜி.யாருக்கு பிறகு அவரின் ஆசை நாயகியான ஜெயலலிதா அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தார்.
ஜெ-வுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதும் அக்கட்சி எடுப்பார் கைபிள்ளையானது. அப்போது ஜெயலலிதாவின் தலையாட்டி பொம்மை முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் மூலம் அதிமுக-வை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாஜக முயன்றது.
தனது சொத்துக்களுக்கும், அரசியலுக்கும் வாரிசாக ஜெ-வால் அடையாளப்படுத்தப்பட்ட சசிக்கலாவை ஊழல் வழக்கில் சிறைக்குள் தள்ளியது. பாஜக-வின் சதியை முறியடிக்க தினகரன் மூலம் தனது நம்பகமான விசுவாசி என்று நம்பிய எடப்பாடியை முதல்வராக ஆக்கினார் சசிகலா. ஆனால் சசிகலாவின் நம்பிக்கைக்கு மாறாக எடப்பாடி முதல்வரானதும் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ளவும், கட்சியை கைப்பற்றவும் பாஜக-வுடன் பேரம் பேசி ஓ.பன்னீர் செல்வத்தை துணை முதல்வராக்கினார்.
அடுத்து வரும் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெறுமா என்பதில் எடப்பாடிக்கே எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடுவதை போன்று வாராது வந்த மாமணியான முதல்வர் பதவியை பயன்படுத்தி எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு, மக்கள் பணத்தை சுருட்டிக் கொள்ள முற்படுகிறார்.
அதன் ஒரு பகுதியாகத்தான் கோமுகி ஆற்றையும் தனது சொந்த நலனுக்காக அடுத்து வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்குள் கடத்திச் செல்ல முனைந்து செயல்பட்டு வருகிறார்.
பேச்சாற்றலோ, எழுத்தாற்றலோ, மக்கள் செல்வாக்கோ ஏதுமற்ற செல்லாக் காசான, சேலம் மாவட்டத்தை தவிர தமிழகத்தில் வேறு எங்கும் யார் என்றே தெரியாத தன்னை, தமிழகத்தின் முதல்வராக்கிய சசிகலாவிற்கே துரோகம் இழைத்த எடப்பாடிக்கு, தனக்கு ஓட்டுப் போடாத, இனி வரும் தேர்தலில் கூட ஓட்டுப்போடுவார்களா என்பற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு தனது ஒரே ஆற்றலும், கைவந்த கலையுமான துரோகம் இழைப்பதற்கு அவருக்கு யாராவது சொல்லியாத் தர வேண்டும்!
ஆனால் அதிமுக-வை போன்று கைப்பற்றுவதற்கு கோமுகி ஆறும், மணிமுத்தாறும் வாரிசில்லாத சொத்துக்கள் இல்லை. இந்த ஆறுகளின் வாரிசுகளாக, இந்த இரு மாவட்டங்களிலும் பல லட்சக் கணக்கான மக்கள் இருக்கிறார்கள். தமது பூர்வீக சொத்தான இந்த ஆறுகளை கடத்த முயற்சிக்கும் எடப்பாடி தலைமையிலான கொள்ளையர்களுக்கு கட்சி பேதமின்றி மக்கள் விரைவில் தக்க பதிலடி கொடுப்பார்கள்!
- சூறாவளி