1) நிதிப் பற்றாக்குறைக்கு போதை மருந்து
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கொரோனா தாக்கம் குறையவில்லை, கூடித்தான் செல்கிறது என்று அரசே புள்ளிவிவரம் தருகிறது. ஆனால் முடக்கத்தைத் தளர்த்தும் முடிவுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் காட்டப்படவில்லை. எல்லாவற்றுக்கும் உச்சமாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை மீண்டும் திறப்பதில் எடப்பாடி அரசு காட்டிய அவசரத் துடிப்பு அருவருப்பாகவே இருந்தது. அரசிடம் பணமில்லை என்றால் நடுவணரசோடு போராடி வாங்க வேண்டும். மக்களிடம் உண்மை நிலவரத்தைச் சொன்னால் சரியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். எடப்பாடியின் அவசரத்துக்கு ஈடு கொடுத்தவர்கள் மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதியர். நீட், எழுவர் விடுதலை போன்றவற்றிலும் இதே சுறுசுறுப்பு இருந்தால் நலம்.
2) ஒப்பந்தப் புள்ளி
தமிழக அரசு நிதிப் பற்றாக்குறையால் தவியாய்த் தவிக்கிறது. கொரோனாவால் செலவு கூடி விட்டது. இந்திய அரசும் போதிய அளவு உதவ மறுக்கிறது. ஏதாவது ஓங்கிக் குரல் கொடுக்கலாம் என்றால் 56 இன்ச்சை நினைத்தால் பயம் வருகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ரேஸ் ஓடியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. எடப்பாடியின் நிலைமை கண்டு இரங்கலாம் என்றால்… இத்தனைக்கு நடுவில் அரசு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) அறிவித்துள்ளது. ஐந்து ஆண்டு சாலைப் பராமரிப்புக்கு 3245 கோடி ரூபாய்! ஏதோ இடிக்குதுல்ல!
3) மார்க்ஸ், எங்கெல்சுக்கில்லாத வாய்ப்பு
கொரோனா முடக்கத்தைப் பயன்படுத்திக் கருத்தரங்குகள், கவியரங்குகள், இலக்கிய உரைகள், வகுப்புகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் இணையவழி நடந்து வருகின்றன. கொரோனாவுக்குப் பிறகும் இந்த வழிமுறை ஓரளவு தொடரும் என்றே நம்புகிறேன். இந்த நேரம் அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் குறித்து கார்ல் மார்க்சுக்கிருந்த ஆர்வம் பற்றி பிரெடெரிக் எங்கெல்ஸ் கூறியதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. தொழில்நுட்ப முன்னேற்றங்களை மார்க்ஸ் ஆர்வத்துடன் தொடர்ந்தாராம்! புதிய கண்டுபிடிப்புகள் தொழிலாளர் வகுப்பின் போராட்டத்துக்கு உதவுமானால் அவர் அடையும் மகிழ்ச்சியே தனி என்பார் எங்கெல்ஸ். இப்போதுள்ள வசதிகள் மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இருந்திருக்குமானால்…? அவர்களுக்கு இல்லாத வாய்ப்பு நமக்கு உள்ளது! என்ன செய்யலாம்?
4) ஈக்வேடார் துயரம்
கொரோனா தொடங்கியதிலிருந்து நான் கவலையோடு கவனித்து வரும் ஒரு நாடு ஈக்வேடார். அவ்வளவு பெரிய பாதிப்பு. நோய்த்தொற்று, சாவுகள் மட்டுமல்ல, இறந்தோர் உடலை வைக்கப் பிணவறை இல்லை. அடக்கம் செய்ய இடுகாடும் இல்லை. பிணங்கள் தெருக்களில் இரைந்து கிடக்கின்றன, கடலில் வீசப்பட்டுக் கரையில் ஒதுங்குகின்றன. கடைசியாக வந்துள்ள செய்திகளின் படி, ஒன்றுக்கும் உதவாத அரசை எதிர்த்து மக்கள் கொதித்தெழுந்து போராடத் தொடங்கியிருக்கின்றார்கள். இதே போன்ற இன்னும் சில நாடுகளும் இருக்கின்றன – அருகிலிருக்கும் பிரேசில் போல! கொரோனாவிடமிருந்து விடுதலை பெறுவதற்கே கொடுங்கோல் அரசுகளிடமிருந்து விடுதலை பெற வேண்டியிருக்கும் என தோன்றுகிறது, இது நமக்கான பாடமும் கூட!