இயற்கைப் பேரிடர் ஒன்று இன்னுமொருமுறை ஏற்பட்டுவிட்டது. இந்த முறை கூடுதலான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இயற்கை இரக்கமற்றது என்பதை எடுத்துக்காட்ட இனி கஜாப் புயலின் பெயரே நினைவிற்கு வரும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் செய்திகளில் பார்க்கும் போதும், நேரில் கண்டவர்கள் கூறக் கேட்கும் போதும் தாங்கொணாத் துயரம் ஏற்படுகிறது.
உடைமையை இழந்து, உறவுகளை இழந்து, வாழ்க்கையை இழந்து, தண்ணீரும் உணவும் இல்லாமல் இருளில் மக்கள் தத்தளிக்கின்றனர். 88,102 ஹெக்டேர் விளைநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்து போயிருக்கின்றன.
தென்னை மர விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட துயரச் செய்தி உள்ளத்தில் புயலாய் வீசுகிறது.
இவ்வளவு வேதனைகளுக்கு இடையில் தமிழ்நாட்டு மக்கள் தவிக்க, அவர்களை முதலமைச்சர் நேரில் வந்து சந்திக்காமல் இருப்பது மக்கள் நலனில் அவர்கள் எந்த அளவிற்கு அக்கறையோடு இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஓடி ஓடிக் கடமையாற்ற வேண்டிய நேரத்தில், களத்தில் இருந்து அமைச்சர்கள் தப்பி ஓடுகிற காட்சிகளையல்லவா நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு அகப்படாமல் ஓடிவிட நினைப்பவர்களுக்கு மக்களைச் சந்திக்கும் துணிவு எப்படி வரும்?
ஜெயலலிதாவைப் போலவே ஒரே ஒரு முறை ஹெலிகாப்டரில் உலாவந்து விட்டு டெல்லிக்குச் சென்றுவிட்டால் போதுமா? அரசு துடிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டாமா?
மக்கள் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள் அவர்களுக்கு அரணாக இருக்க வேண்டிய நேரத்தில், அரசு இப்படி முரணாய்ச் செயல்படுவது வஞ்சக எண்ணத்தைக் காட்டுகிறது. புயலால் இவ்வளவு சேதங்கள் ஏற்பட்டு இத்தனை நாட்கள் ஆன பின்னரும் மத்திய அரசு கொடூரமான மௌனத்தைக் காத்து வருவது பா.ஜ.கவின் கல் நெஞ்சத்தைக் காட்டுகிறது. அந்தக் கல் கரைவதற்கு இன்னும் எத்தனை புயல்கள் வீச வேண்டுமோ?
இயற்கைப் பேரிடரின்போது மனிதர்கள் தங்களுக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒன்றாக இணைந்து ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் அரவணைப்பாகவும் இருந்து வருகின்றனர். இயன்ற உதவிகளைச் செய்து கீழே விழுந்தவனை மேலே தூக்கக் கரம் கொடுக்கிறார்கள். மனிதநேயத்தை வாழவைக்கிறார்கள்.
ஆனால் ஆட்சிப் பொறுப்பில் இருப்போர் பொறுப்பில்லாமல் செயல்பட்டு வருகின்றனர். தன்னுடைய உறவினரின் உயிரைக் காப்பாற்ற நினைத்த மாத்திரத்தில் இராணுவ ஹெலிகாப்டரை வரவழைக்க முடிகிறது. அவர்களால் கொடுக்கவும் முடிகிறது. ஆனால் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்ட பிறகும் கூட நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடமிருந்து முதற்கட்ட நிதியைக் கூடப் பெற முடியவில்லை.
தங்களுக்குப் பாதகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தாமல், தற்போது நிவாரணப் பணிகளையும் விரைந்து முடிக்க முடியாமல் மக்களை வாட்டி வதைக்கின்றனர்.
கஜாப் புயலைத் தேசியப் பேரிடராக அறிவித்துப் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று அரசை வற்புறுத்துகிறோம். இதுவரை தமிழர் உரிமைகள் யாவும் பறிபோயின. தற்போது உடைமைகளும் உயிர்களும் பறிபோயிருக்கின்றன. உரிமைகளைத்தான் காப்பாற்றவில்லை, உயிர்களையாவது காப்பாற்றுங்கள்.