அண்மையில் முதலமைச்சர் பழனிச்சாமியும், அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், எம்.சி.சம்பத். ராஜேந்திரபாலாஜி ஆகியோரும் லண்டன், அமேரிக்காவுக்குக் கிளம்பி விட்டார்கள். 

ரஷ்யாவுக்குத் தொழிலாளர் நல அமைச்சர் நிலோபர் கபில், இந்தோனேஷியாவுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மொரீஷியசுக்கு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, பின்லாந்துக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், சிங்கப்பூருக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் - உயர்கல்வி அமைச்சர் கே.அன்பழகன், எகிப்துக்கு தமிழ் வளர்ச்சி அமைச்சர் பாண்டியராஜன் என்று 12 அமைச்சர்கள் வெளிநாடுகளில் ஊர் சுற்றக் கிளம்பிவிட்டார்கள்.

அதுவும் பதவி பறிபோக இருக்கும் இறுதிக் காலங்களில் மக்களின் வரிப்பணத்தில் இந்தச் சுற்றுலாவை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த ‘மந்திரிமார்கள்’.

தமிழ்நாட்டில் தொழில்கள் முடங்கின. சிறு, குறு தொழில்களும் வேளாண்மையும் அழிந்து வருகின்றன. 

தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க மாநாடு நடத்திய அதிமுக அரசு அதன் அடிப்படையில், எவ்வளவு முதலீடுகள் வரப்பெற்றன, அவை என்னென்ன தொழிற்சாலைகள், எங்கெங்கே தொடங்கப் பெற்றன போன்ற எந்த ஒரு செய்தியையும் தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துத் தமிழகம் கொண்டு வருவது போலவும், அன்னிய முதலீடுகள் மூலம் தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் தொழிற்சாலைகளைக் கொண்டு வருவது போலவும், அதன் மூலம் பல்லாயிரம் வேலை வாய்ப்புகள் கொடுப்பது போலவும் பிரச்சாரம் நடைபெறுகின்றன தமிழ்நாட்டில். மக்கள் காதில் பூ சுற்றும் வேலை இது.

இவை ஒரு புறம் இருக்க பாஜக அரசின் பிரதமர் மோடி எப்போது பார்த்தாலும் வெளிநாட்டில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறார். குடிக்கக் கூழ் இல்லை இந்தியாவில். இவர் 7,000 கோடி ரூபாய் ரஷ்யாவுக்குக் கடனாகத் தரபோகிறாராம். 

மோடியை ஊர் சுற்ற அனுப்பிவிட்டு ஆர்.எஸ்.எஸ் சமஸ்கிருதத்தை இந்தி வடிவில் நுழைத்து மாநில மொழிகளை அழிக்க முயல்கிறது. 

எடுத்துக்காட்டாக, தொடர்வண்டித் துறையில் மாநில மொழிகளில் தேர்வெழுதலாம் என்பதை மாற்றி இந்தி- ஆங்கிலம் மொழிகளில்தான் தேர்வெழுத வேண்டும் என்று துறை மூலம் அறிவிக்கிறது. மோடிக்கு இது தெரிந்தும், தெரியாதது போல ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், தமிழகத்தில் இருக்கும் அமைச்சர்கள் மாநில மக்கள் பிரச்சினையைப் பார்க்காமல், மாநில மொழியைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல் மக்கள் வரிப்பணத்தில் ஊர்சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது, நாடு அழிவை நோக்கிப் போவதாக மக்கள் கருதுகிறார்கள்.

இந்த ஊர்சுற்றிப் புராணம் இவர்கள் பதவி முடியும் வரை தொடருமா, இல்லையா என்பதை யார் அறிவார் ‘பராபரமே’.

Pin It