கீற்றில் தேட...

தமிழகத்தின் ஆளுநராகப் பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்ற பின்னர் தமிழக அரசின் நடவடிக்கைகளில் மூக்கை நுழைத்துக் கொண்டு ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் மாநில உரிமைகளை மீறி வருகிறார். இதனை எதிர்க்கட்சிகள் வன்மையாகக் கண்டித்து வருகின்றன. அண்மையில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் ஆளுநரின் செயல்பாடுகளில் தலையிடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று கூறப்பட்டுள்ளது குறித்து நான்கு அரசியல் கட்சி முன்னணியினரிடம் கருத்து கேட்டபோது அவர்கள் சொன்னவை...

வானதி சீனிவாசன், பா.ஜ.க.

நம்முடைய ஆளுநர் ராஜ்பவனை மக்களுக்குத் திறந்து விட்டிருக்கிறார். மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவிற்கு மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது என்று ஆய்வு செய்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது என்பது ஒன்று. இரண்டாவது அரசியலமைப்புச் சட்டப்படி தவறு என்றால் இங்கிருக்கும் மாநில அரசு அதை எதிர்க்க வேண்டும். ஆக அரசியலுக்காக எதிர்க்கக் கூடிய எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். கவர்னர் எந்த வித த்திலும் மாநில அரசுக்குப் புதிதாக உத்தரவுகள் பிறப்பிப்பதோ, அரசு பிறப்பித்த உத்தரவுகளை மாற்றுவதோ என்று எந்த வேலையிலும் அவர் ஈடுபடவில்லை. பல்வேறு வகைகளில் மக்களுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கவர்னருக்கு, அரசியலுக்காகக் கறுப்புக் கொடிகாட்டுவது என்பதாலும், அவருடைய காரைச் சேதப்படுத்துவது என்பதாலும் தான் ராஜ்பவன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதுவும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி என்ன தண்டனையோ அதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கோபண்ணா, காங்கிரஸ்

அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநருடைய அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அவர் நிர்வாகத்தின் தலைவரே தவிர, நேரடியாக நிர்வாகம் செய்ய முடியாது. அமைச்சரவையினுடைய அறிவுரையின் படி தான் ஆளுநர் செயல்பட முடியும். அத்தகைய அறிவுரை இல்லாமல் தன்னிச்சையாக அவர் செயல்பட முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கென்று அதிகாரங்கள் இருக்கின்றன. பணிகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இப்பணிகளை முதலமைச்சரோ, அமைச்சரோ செய்ய வேண்டும். ஆனால் நிர்வாகத்தை ஆய்வு செய்கிறேன் என்று சொல்லி அப்பணிகளை ஆளுநர் செய்வது அரசமைப்புச் சட்ட த்திற்கு விரோதமானது. ஆளுநர் மாளிகையை நோக்கிய ஊர்வலம் என்பது ஆளுநர் மாளிகையை முடக்குகிற செயலாகக் கருதி அதற்காக ஏழு ஆண்டு சிறைத் தண்டனையைச் சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரிப்பது ஆளுநருடைய ஆணவத்தை வெளிப்படுத்துகிறது.

சிற்பி செல்வராசு, தி.இ.த.பேரவை.

தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் பேசுகிறார் பன்வாரிலால் புரோகித். தி.மு.கவின் வரலாற்று நூல்களை அவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். போராட்டங்களில் நெகிழ்ந்து வந்த வரலாறு, நெருப்பாற்றில் நீந்தி வந்த வரலாறு தி.மு.க. வினுடையது. எதிர்ப்புகள் வளர்ச்சியைக் குறைக்காது எழுச்சியை அதிகப்படுத்தும். ஆளுநர் மாளிகையின் இந்த அறிக்கையின் மூலம் இரட்டை ஆட்சி முறை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அருணன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

யார் முதலமைச்சர் என்று முடிவு செய்து அமைச்சரவையை உருவாக்குவதுதான் ஆளுநரின் பணி. அதன்பிறகு அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் இயங்க வேண்டும். பெரும்பான்மை இல்லாமல் மோடி அரசின் தயவில் இங்கு மாநில அரசு அமைந்திருக்கிறது. ஆளுநர் மாவட்டங்களுக்குப் பயணம் செய்து அங்குள்ள நிலையை மாநிலத்தில் உள்ள பா.ஜ.க தலைமைக்கு விவரங்கள் கொடுக்கப்போகிறார் என்கிற அய்யம் வலுக்கிறது. மாவட்டங்களுக்குச் சென்று மாவட்ட நிர்வாக அதிகாரிகளை நேரில் சந்தித்து திட்டங்களை ஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது. இதுவரை யாரும் செய்ததுமில்லை. இரண்டு கேள்விகள். பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களின் ஆளுநர்கள் ஏன் ஆய்வு செயவதில்லை? இங்கேயே இதற்கு முன் ஜெயலலிதாவின் ஆட்சியில் ஏன் ஆய்வுகள் செய்யபடவில்லை? இது அதிகார மீறல் என்பதற்கு இந்தக் கேள்விகளே சரியான ஆதாரங்கள். பா.ஜ.க. அல்லாத அரசுகளை கவர்னர் மூலம் மிரட்டிப் பணியவைத்து தன்னுடைய காரியங்களைச் சாதித்து கொள்வது அரசியலமைப்பிற்கு விரோதமானது, கூட்டாட்சி முறைக்கு விரோதமானது. ஏற்கனெவே மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது, மாநில சுயாட்சி அழிக்கப்படுகிறது. இன்னும் அந்த நிலையை ஆளுநர் மோசமாக்கிக் கொண்டிருக்கிறார்.