மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியே மக்களாட்சியாகும். இதில் உள்ளாட்சியும் அடங்கும்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்பட 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள், 338 ஊராட்சி ஒன்றியங்கள் போன்றவைகளின் மூலம் ஏறத்தாழ 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பதவியேற்று உள்ளாட்சி நிர்வாகத்தைச் செயல்படுத்தி வருகிறார்கள்.

இவர்களுக்கான பதவிக் காலம் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதியுடன் முடிவடைந்து, அதன் பிறகு இன்று வரை உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவில்லை.

இதனால் மாநகரம், நகரம், ஒன்றியம், கிராமங்கள் உள்பட எந்த மக்களுக்கான பணியும் நடைபெறவில்லை.

தொடக்கத்தில் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுக் கொண்டு தேர்தலை நடத்தலாம் என்று நினைத்த அ.தி.மு.க. ஆட்சி, அச்சின்னம் கிடைத்தும் தேர்தலை நடத்தவில்லை.

இதைத் தொடர்ந்து நீதிமன்ற நெருக்கடியால் தேர்தலை நடத்த முன் வந்ததாகச் சொல்லிக் கொண்ட ஆட்சியாளர்கள், தொகுதி வரையரைகள் சரியாக இல்லை, சரிசெய்ய வேண்டும் என்று காரணம் காட்டித் தொடர்ந்து தேர்தலைத் தள்ளிப்போட்டனர்.

மீண்டும் நீதிமன்றத் தலையீட்டினால் தேர்தலை நடத்துவதாகச் சொன்ன ஆட்சியாளர்கள் அதற்கு மாறாக உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை வழக்கம் போல் மேலும் 6 மாத காலம் நீட்டிக்கும் வகையில் மசோதா சட்டப் பேரவையில் முன் வைக்கப்பட்டுள்ளது.

இப்படித் தேர்தலை நடத்தாமல், தனி அதிகாரிகளின் மூலம் ஆட்சியை நடத்திவிடலாம் என்று நினைக்கும் அ.தி.மு.க. அரசு, தேர்தலைச் சந்தித்தால் தோல்வி நிச்சயம் என்ற பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அஞ்சுகின்றனர்.

மக்களாட்சியில் இது ஒரு ஜனனாயகப் படுகொலை.