பொதுச் சொத்துக்களுக்கு சேதத்தைத் தடுக்கும் சட்டத் திருத்தம் 2015-இன் முதல் வரைவை இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சரகம் மே 20, 2015 அன்று வெளியிட்டுள்ளது. முன்பிருந்த சட்டத்தில் திருத்தங்களை அறிவுறுத்துவதற்காக, உள்துறை அமைச்சரகம் நீதிபதி கே.டி.தாமஸ் குழுவை அமைத்திருந்தது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் அக் குழுவினுடைய பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திருத்தங்களின் மிகவும் முக்கிய கருத்தானது, அது எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்துவதற்காக அரசியல் கட்சி, தொழிற் சங்கம், மாணவர் அல்லது இளைஞர் அமைப்பு, உழவர் அல்லது மகளிர் அமைப்பு போன்ற ஒரு அமைப்பின் முழு தலைமையையே குற்றவாளிகளாக்கி, தண்டிக்க முற்படுகிறது என்பதாகும். "எந்த அமைப்பும் நடத்தும் ஆர்பாட்டம், கடையடைப்பு அல்லது கண்டன வேலை நிறுத்தத்தின் விளைவாக, பொதுச் சொத்திற்கு பாதிப்பு ஏற்படுமானால், அதன் நிர்வாகிகள் குற்றம் அவர்களுக்குத் தெரியாமல் நிகழ்ந்ததெனவும் அல்லது குற்றம் நடக்காமல் தடுப்பதற்காக அவர் எல்லா தடுப்பு நடவடிக்கைகளும் எடுத்திருப்பதாகவும் நிரூபித்தால் அன்றி,  இச் சட்டத்தின் படி, அந்தக் குற்றம் நிகழ்வதற்கு தூண்டியதாக அந்த அமைப்பினுடைய நிர்வாகிகள் கருதப்படுவார்கள் என்றும் அதற்காக அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்களென" என இத் திருத்தம் கூறுகிறது.

முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டத்தின் படி, பொதுச் சொத்து சேதமடைந்த ஒரு ஆர்பாட்டத்தில் பங்கேற்ற எந்த ஒரு நபரையும் கைது செய்து அவருக்கு அபராதம் விதிக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டவர் அந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றார் என்று அரசு காட்டுவது மட்டுமே இதற்குப் போதுமானதாகும். கைது செய்யப்பட்டவர், தான் குற்றவாளியில்லையென நிரூபிக்க வேண்டும்.

தங்களுடைய வாழ்வாதாரத்தின் மீதும், உரிமைகள் மீதும் அதிகரித்துவரும் தாக்குதல்களினால் கொதிப்படைந்து, அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் மீது தங்களுக்குள்ள எதிர்ப்பை பெருகிவரும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்தி வரும் தொழிலாளி வர்க்கமும், உழவர்களும் தான் இந்தச் சட்டத்தின் தெளிவான இலக்காகும். கட்சி வேறுபாடுகளைக் கடந்த அளவில் தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து செப்டெம்பரில் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பாதுகாப்புத் துறை, நிலக்கரி, பிஎஸ்என்எல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி, போக்குவரத்து, நகராட்சி தொழிலாளர்கள் என பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், எதிர்ப்பு வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அரசு ஊழியர்கள், காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நவம்பரில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு வளர்ந்து வருகின்ற தொழிலாளி வர்க்கத்தின், உழைக்கும் மக்களின் போராட்டங்களை நசுக்குவதற்காக முதலாளி வர்க்கமும், அதனுடைய அரசும் அந்த அமைப்புக்களையும், அவற்றின் செயல்வீரர்களையும் குறிவைக்கின்றனர். இந்த புதிய பாசிச சட்டத்தின் முழு நோக்கமும் இதுவாகும்.

தொழிலாளி வர்க்கத்தின், உழைக்கும் மக்களின் அமைதியான ஆர்பாட்டங்களை முறியடிப்பதற்காக, பேருந்துகள், இரயில்கள், அரசு கட்டிடங்கள் போன்றவற்றிற்கு தீவைத்தல் போன்ற அராஜக செயல்களை நடத்துவதற்கு முதலாளி வர்க்கமும், அதனுடைய அரசும் இந்தியாவிலும், உலகெங்கிலும் காவல்துறை உளவாளிகளையும், எடுபிடிகளையும் பயன்படுத்துவது நன்கறிந்ததாகும். பின்னர் இப்படிப்பட்ட செயல்கள், மக்களுடையப் போராட்டங்களை மோசமானதாக சித்தரிக்கவும், காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. எல்லா வகையான எதிர்ப்புக்களையும் குற்றமாக ஆக்குவதே இந்த புதிய சட்டத்தின் நோக்கமாகும். ஆளும் வர்க்கம் செய்ய வேண்டியதெல்லாம், தூண்டிவிட்டு, சில பொதுச் சொத்துகளை சேதப்படுத்தி பின்னர் செயல்வீரர்கள் மீதும் அவர்களுடைய தலைவர்கள் மீதும் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதாகும்.

கொடூரமான இந்தப் புதிய சட்டத்தின்படி, யாரை வேண்டுமானாலும் 6 மாதத்திலிருந்து 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கவும், சேதமடைந்த சொத்தின் "சந்தை விலையை" அபராதமாகப் போடவும் முடியும்.

இந்தச் சட்டம், தொழிலாளி வர்க்கம், உழைக்கும் மக்கள் மற்றும் அவர்களுடைய அமைப்புகளை தன்னுடைய இலக்காகக் கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது. இது ஆளும் முதலாளி வர்க்கம் மற்றும் அதனுடைய அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. 1984 மற்றும் 2002 படுகொலைகளை நடத்தியவர்களையும், 1992-இல் பாபரி மசூதியை இடித்தவர்களையும், மற்றும் பிற மக்களுக்கு எதிராக வெட்ட வெளிச்சத்தில் நடத்தப்பட்ட அரசு பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்களையும் அரசு தண்டிக்க மறுக்கிறது.

இந்த பாசிச சட்டத்திற்கு எதிராக தங்களுடைய சக்திவாய்ந்த குரலை கம்யூனிஸ்டுகளும், தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடைய அமைப்புக்கள் எழுப்ப முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

Pin It