குற்றவாளிகள் இருவகையாகப் பிரித்துப் பார்க்கப் படுகிறார்கள்.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோர் பெருங்குற்றவாளிகள். அதற்குக்கீழே உள்ளவர்கள் இளங்குற்றவாளிகளாகக் கருதப்படுகிறார்கள்.

இளமையில் வறுமையின் காரணத்தால் படிக்க முடியாதவர்கள், படிப்பைத் தொடர முடியாதவர்கள், குழந்தைத் தொழிலாளர்களாக ஆக்கப்படுபவர்கள், பெற்றோரின் அரவணைப்பில் இருந்து ஒதுக்கப் படுபவர்கள், போதைப் பொருளுக்குத் தள்ளப்படுபவர்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இளம் குற்றவாளிகள் உருவாகின்றார்கள். கடத்தப்படும் குழந்தைகளும் கூட இப்படி ஆக்கப்படுகிறார்கள்.

இவர்களைச் சமூக அளவீடுகளால்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, திட்டமிட்ட குற்றவாளிகளாகக் கருத இடமில்லை.

இவர்கள் திருத்தப்பட வேண்டும் என்பதற்காக நீதி மன்றங்களால் வைக்கப்படும் இடம், சிறுவர் சீர்திருத்த இல்லம்.

இரண்டு நாள்களுக்கு முன் சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லம் போர்க்களம் போல் ஆகியுள்ளது.

அங்கே வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் 74 பேர்கள். அவர்களுக்குள் இரு அணிகள் உருவாகி, அடிதடி என தாக்குதல்கள் நடத்த 33 பேர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்கள், 4 பேர்கள் தங்கள் கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்கள்.

இந்த அளவுக்கு சிறுவர்கள் மனம் இறுகிப்போய் உள்ளன என்றால் காரணம் என்னவாக இருக்க முடியும்? அவர்களைப் பராமரிக்கும் காவலர்கள் நடத்தியவிதமும், கொடுத்த நெருக்கடிகளும், அழுத்தங்களுமே காரணமாக இருக்கமுடியும்.

அந்தச் சிறுவர்களை நல்வழிப்படும் இல்லமாக அது இல்லை. குற்றங்கள் வளர்வதற்கான சூழலே அங்கு நிலவியுள்ளது. இதற்கான முழுபொறுப்பும் காவலர்களையே சாரும்.

தமிழ்நாட்டில் நாளும் கொலைகள், கொள்ளைகள் நடந்து கொண்டு இருக்கும் நீண்ட பட்டியலில், இந்த இளம் சிறுவர்களும் சேர்கின்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கான முழுபொறுப்பும் அரசையே சாரும். இந்நிலை இனியும் தொடரக்கூடாது.    

Pin It