tha.pandiyan1எந்தவோர் உயிரிழப்புமே ஈடு செய்ய முடியாததுதான். ஆனால்,காலம் அதன் போக்கில் அந்த வெற்றிடத்தை ஏதோவொன்றின் அல்லது பலவற்றின் மூலம் நிரப்பிவிடும்.

ஆனால், தமிழகப் பொதுவுடைமை இயக்கத்தில் தோழர் தா. பாண்டியனின் இடத்தை இட்டுநிரப்ப இயலுமா என்பதை உடனடியாக யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது.

காலங்காலமாக உலகம் முழுவதுமே கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே படிப்பாளிகள், விவரமானவர்கள், எளிய மக்களுடன் இருப்பவர்கள் என்பது அறிவிக்கப்படாதவொன்றாக இருந்துவந்திருக்கிறது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில்தான் எவ்வளவு அறிவாளிகள், சிந்தனையாளர்கள், கொள்கை - கோட்பாட்டாளர்கள்... இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் தோன்றிய காலந்தொட்டே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். நம்முடைய காலத்தின் நல்முத்தாகத் திகழ்ந்தவர் தோழர் தா.பா.

தீவிரமான படிப்பாளி, எழுத்தாளர், அரசியல், வரலாறு மட்டுமல்ல, ஆங்கில இலக்கியங்களிலும் தமிழ் இலக்கியங்களிலும் தேர்ந்த வாசிப்பு, வாசிப்பு மட்டுமல்ல, அவற்றைச் சீராக மேற்கோளிடுதல், தமிழிலும் ஆங்கிலத்திலும் மடை திறந்தாற்போன்ற நல்ல மேடைப் பேச்சு. கம்யூனிசம் என்றாலும், கம்பராமாயணம் என்றாலும், ஷேக்ஸ்பியர் என்றாலும். Presence of mind, ஒரு செய்தியாளனாக நான் அறிய, எத்தகைய அரசியல் சூழ்நிலையிலும் எந்த நேரத்திலும் எந்தக் கேள்விக்கும் தயக்கமே இல்லாமல் உடனுக்குடன் மிகக் கூராக - கூறாகப் பதிலளிக்கக் கூடிய மிகச் சில தலைவர்களில் ஒருவர் தா.பா.

தா.பாவின் எழுத்துகளும் பேச்சுகளும் ஏராளம். அவர் எழுதி வெளிவந்த நூல்களின் பட்டியலும் அவருடைய கட்டுரைகளும் எண்ணற்றவை. அவருடைய நூல்களில் தலைசிறந்த, காலத்தை வென்றும் பேசப்படக் கூடிய, மேற்கோள் காட்ட வேண்டிய தேவையுள்ள நூல் - பொதுவுடைமையரின் வருங்காலம்?

கார்ல் மார்க்ஸின் 200-வது ஆண்டு விழாக் காலத்தில் தோழர் தா. பாண்டியன் எழுதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸால் வெளியிடப்பட்ட நூல், பொதுவுடைமையரின் வருங்காலம்?

பொதுவுடைமையரின் வருங்காலம் என்னவாக இருக்கும், கேள்விக்குறி என்றால் கேள்விக்குறியான (வ) தன்காரணங்கள் - உலக அளவிலும் இந்திய அளவிலும் - என்னென்ன? இந்தக் கேள்விக் குறியை வியப்புக் குறியாக மாற்றுவதற்குச் செய்ய வேண்டியது என்னென்ன? என்பதை - இயக்கத்தில் தொழிற்பட்ட ஒரு கம்யூனிஸ்டாகவே இருந்தாலும் தள்ளிநின்று - காய்தல் உவத்தலின்றி வெளிப்படையாக விவாதப் பொருளாக்கியிருக்கிறார் தா.பா. இதற்கே ஒரு தனித் துணிச்சல் வேண்டும். இப்படியரு நூலை எழுதுவதற்கான எல்லாத் தகுதிகளையும் பெற்றிருந்தவர் அவர்.

இடதுசாரி அரசியலின் பின்னடைவு பற்றி எப்போதுமே இந்த நாட்டின் அறிவுத் துறையினர் கவலைப்பட்டே வந்துள்ளனர், வருகின்றனர். கருத்துவேறுபாடுகள் இருப்பினும் இடதுசாரிகளின் தோல்விகள் பற்றியும் பற்றாக்குறைகள் பற்றியும் ஆற்றாமையுடன் எழுதியும் வருகின்றனர். இந்த வகையில் மறைந்த பத்திரிகையாளர் பிரஃபுல் பித்வாய் (2015-ல்) எழுதிய ‘த பீனிக்ஸ் மொமென்ட் - உயிர்த்தெழும் தருணம்’ என்ற நூல் குறிப்பிடத் தக்கது.

2014 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எழுதப்பட்ட இந்த நூல், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின்னடைவுகள் பற்றி மட்டுமின்றிக் கடந்த காலங்களில் இழைத்த தவறுகள் பற்றியெல்லாமும் விரிவாக விவாதிக்கிறது. பொதுவுடைமைச் சிந்தனையின் இருப்பு மட்டுமின்றி ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு பற்றியும் பேசுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடுகள், செயல்பாடுகள் பற்றி இயக்கத் தோழர்கள் அல்லது தலைவர்கள் அவ்வப்போது சில விமர்சனங்களை எழுப்பியபோதிலும் ஒன்று அவை புறக்கணிக்கப்பட்டன, அல்லது சகிக்க முடியாத தருணங்களில் சம்பந்தப் பட்டவர்கள் கட்டங்கட்டப்பட்டனர், படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில்தான் தா. பாண்டியன் இந்த நூலை எழுதினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர உறுப்பினர், மூத்த தலைவர். பல நேரங்களில் கட்சியின் முடிவு எடுக்கும் தருணங்களை நேரில் பார்க்கவும், வரலாற்றில் பார்த்தவர்கள் சொல்லிக் கேட்கவும் வாய்ப்புகளைப் பெற்றவர். இப்படியரு நூலை எழுதுவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தவர் அவர்.

விருப்பு வெறுப்பின்றி, கம்யூனிஸ்ட்கள் அனைவரும் சுயபரிசோதனை செய்துகொள்வதற்கான கேள்விகளை அடுக்கும் இந்த நூலில், தா. பாண்டியன் எழுப்பியுள்ள அத்தனை கேள்விகளும் அப்படியே இருக்கின்றன, விடைகளையும் விளக்கங்களையும் விவாதங்களையும் தீர்வுகளையும் எதிர்நோக்கி, அவருடைய நினைவாக.

நூலின் முதல் இயலின் தலைப்பே ‘கேள்விகள்’தான். ‘கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவிழந்து வருவது ஏன்?’ என்ற கேள்வியில் தொடங்கி நாற்பத்தியொரு கேள்விகளை எழுப்பியுள்ளார் தா. பாண்டியன்.

1917-ல் புரட்சியின் மூலம் ரஷியாவில் ஆட்சியமைத்து 1990 வரை நீடித்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நிலைகுலைந்ததும் மீண்டும் முதலாளித்துவமும் ஆன்மிகமும் பலம் பெற்றது ஏன்? என்று தொடங்கும் அவர், தொடர்ச்சியாகப் பல நாடுகளிலும் கம்யூனிஸ்ட் அரசுகள் வீழ்ந்ததும் சர்வதேச கட்டுக்கோப்பை இழந்ததும் ஏன்? என்று வினவுகிறார்.

பொதுவுடைமைத் தத்துவத்துடன் முரண்படுவதான, பொதுவான தனிமனித மனநிலை சார்ந்தும் சில கேள்விகளை எழுப்பும் தா.பா., மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் புரட்சிக்குத் தயாராகும் உழைப்பாளர்கள், புரட்சிக்குப் பின், அவரவர் முன்னேற்றத்தில் குறியாக இருப்பதும் கடவுள் கருணையால் வரம் கிடைக்கலாம் என்றும் லாட்டரியில் கோடீசுவரராகலாம் என்றும் நம்புவதும் ஏன் என்கிறார்.

வீடு, கூலி உயர்வு, பிள்ளைகளுக்குப் படிக்க, வேலைகளுக்கு வாய்ப்பு எனக் கேட்போர் ஏன் சமதர்ம சமுதாயம் கேட்பதில்லை? தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும் தங்களுக்குள் உயர்வு தாழ்வை விட்டுக்கொடுப்பதில்லையே, சமத்துவம் எவ்வாறு வரும்? எங்கும் தொழிலாளி வர்க்கத்தை ஓரணியில் திரட்ட முடியவில்லையே, எங்கும் தொழிலாளி வர்க்கப் புரட்சி நடக்கக் காணோமே ஏன்?

முறைப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளில் சாதி, மதச் சார்புத் தொழிற்சங்கங்கள் பெருகியிருப்பதுடன் அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா தொழிற்சங்கத்தில் அதிகளவிலானோர் சேர்ந்திருப்பதால் தொழிலாளர்களே கம்யூனிஸ்ட்களை நிராகரித்துவிட்டார்கள் எனக் கருதலாமா? சோசலிச நாடுகளின் உதவியுடன் உருவான பொதுத்துறை நிறுவனங்களான என்.எல்.சி., பெல், ரயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனங்களில்கூட கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான சங்கங்கள் வலுவிழந்து சாதிச் சங்கங்கள் தோன்றியது ஏன்? என்றெல்லாம் கேள்விகளை வரிசையிடும் தா.பா., கம்யூனிஸ்ட் தலைவர்களும் செயல்வீரர்களும் தியாக, ஒழுக்கசீலர்களாகவும் குணக்கேடற்றவர்களாகவும் இருந்தாலும் பரவலாக வெற்றி பெறாததன் காரணம்தான் என்ன? என்கிறார்.

காலங்காலமாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் முன்னர் வைக்கப்பட்டு, இதுவரையிலும் திருப்திகரமான விடையளிக்கப்படாத முக்கியமான கேள்வியன்றைத் தா. பாண்டியனும் பட்டியலிட்டுள்ளார் - இந்தியாவில் மாதந்தோறும் ஏதாவது ஒருவகை உறுதிப்படுத்தப்பட்ட ஊதியம் பெறுகிறவர்களைவிட, தங்கள் வாழ்நாளில் ஒரு நாள்கூட நூறு ரூபாய் நோட்டைத் தொட்டுப் பார்க்காத மக்களின் எண்ணிக்கையே அதிகம். இதை மறந்து, மாத ஊதியம் பெறுவோருக்கு மேலும் ஊதியம், பஞ்சப்படி, ஓய்வூதியம் பெற்றுத் தரவே போராடிவருவது சரிதானா?

இவ்வாறு பல நூறு கேள்விகளை எழுப்பும் இளைய தலைமுறையினர், கம்யூனிஸ்ட் கட்சியிலும் குழுப் போக்கு, சாதிப் பிடிப்பு, மதச்சடங்கைக் கடைப்பிடிப்போர், பாலியல் குற்றம் புரிவோர், சட்டமன்ற - நாடாளுமன்ற, இதர பொதுப் பதவிகளை வைத்துப் பணம் பண்ணுகிறவர்களைத் தடுப்பீர்களா? என்றும் கேட்கிறார்கள் என்று தா.பா. குறிப்பிடுகிறார். இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுமே விரிவான விவாதத்துக்கும் தனித்தனியே நீண்டதொரு கட்டுரை எழுதுவதற்குமானவை.

மார்க்ஸுக்கு முன்னரும் பல்லாயிரம் ஆண்டுகளாகச் சான்றோர்களும் மதத் தலைவர்களும் சமத்துவத்தை வேண்டியும் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்று கேட்கும் அவர், சமத்துவம் என்பதே சாத்தியம்தானா? என்றும் வினவுகிறார்.

“மார்க்ஸ் எழுதி நூற்றைம்பது ஆண்டுகள்தான் கழிந்திருக்கின்றன. அதற்குள் அதை நிறைவேற்ற முயன்று உலகில் ஆறில் ஒரு பகுதியான ரஷியாவில், 1917 புரட்சியில்,வெற்றி கண்டது. 1918-ல் ஜெர்மனியில் நடந்த புரட்சி நசுக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏகாதிபத்தியம் வலுவிழக்கப் பத்தொன்பது நாடுகளில் சமத்துவம் விரும்பும் அரசுகள் அமைந்தன.

1949-ல் உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவில் சமத்துவம் வேண்டும் அரசு அமைந்தது. 1990-க்குப் பிறகு சோவியத் அரசின் குலைவுக்குப் பிறகு எண்ணற்ற சமத்துவ அரசுகளும் குலைந்தன. கம்யூனிஸ்ட் கட்சிகளும் வலுவிழந்தன. இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில்,இருந்ததையும் இழந்து புதியது எதையும் பெறாமல் அவலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிற்கிறதே, ஏன்?”

மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா தவிர்த்து, 1952 முதல் 2016 வரையிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளால் அமைக்கப்பட்ட அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்குபெற்ற கூட்டணிகள் எதுவும் தேர்தல் முடிந்து ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்ததில்லையே, ஏன்? என்றொரு கேள்வியையும் முன்வைக்கிறார்.

தோழர்கள் பி.சி. ஜோஷி, எஸ்.ஏ. டாங்கே, சிங்காரவேலர், மணலி கந்தசாமி தொடக்கம், ‘மேற்கு வங்க அரசு பற்றி மக்கள் குறை கூறுவதற்காக வேதனைப்படுகிறேன்’ என்று கூறியதற்காகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மாமுனிவர் - கம்யூனிஸ்ட் துறவி என்று வர்ணிக்கப்பட்ட திரிபுராவின் முன்னாள் முதல்வர் நிரூபேந் சக்ரவர்த்தி, சோமநாத் சாட்டர்ஜி, தற்கொலை செய்துகொண்ட உ.ரா. வரதராஜன் எனத் துயரக் கதைகளின் நாயகர்களைப் பற்றியும் கூறுகிறார்.

“மார்க்ஸ் காலத்தில் உழைப்பாளர்களின் ‘ரத்தத்தை உறிஞ்சி’ உபரி மதிப்பைப் பெற வேண்டியிருந்தது. ஆனால், இன்று உறிஞ்சப்படுவதையே உணர முடியாத அளவுக்கு சுரண்டல் முறையில் விஞ்ஞானத் தொழில்நுட்பம், முதலாளிக்கு ஆயுதமாகக் கிடைத்துவிட்டது - இதனால் சுரண்டும் முதலாளியை, உழைக்கும் மக்கள் நேரில் பார்ப்பது அரிது, எனவே எதிர்ப்பு உணர்வு தோன்றுவதும் அரிதாகிவிட்டது.”

தா.பா. சொல்வதைப் போல உள்ளபடியே இன்று ஒட்டுமொத்த உழைப்பாளர்களின் மனநிலையே முற்றிலுமாக மாறித்தான் போய்விட்டது. தாங்கள் யார்? என்பதேகூடத் தெரியாத அளவில் நுகர்வியத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள் அவர்கள்.

பெரு நிறுவனங்களில் பணிபுரிவோரும் வெறும் கூலி அடிமைகள்தான் என்பதை இடதுசாரிகளின் பிரச்சாரத்தில் அந்தச் சரியான உணர்வு உருவாக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பும் தா.பா., சம்பள உயர்வுகளைப் பெறும் மத்தியதரத் தொழிலாளர்கள், புதிய வசதி பெற்ற புதிய வர்க்கமாக வளர்ந்துவிட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

ஊழியர்களின் உரிமைகளுக்காகப் போராடிய இடதுசாரிகள் அவர்களுடைய சமுதாயக் கடமைகளை வலியுறுத்துவதில் முழுத் தோல்வியைச் சந்தித்துள்ளனர் என்று குறிப்பிடும் தா.பா., அவர்களைக் கடமையில் ஈடுபடுத்த முடியாதுபோன இடதுசாரி தொழிற்சங்கங்கள், அவர்களின் உரிமைகள், ஊதிய உயர்வுகளுக்குப் போராடும்போது, பாடுபடும் மக்களின் அனுதாபத்தை, ஆதரவை இழக்க நேரிடுகிறது என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்தக் குற்றச்சாட்டை மிக இயல்பாக எல்லாராலுமே உணர முடியும். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், எல்ஐசி, வங்கிகள் போன்ற பொதுத் துறை நிறுவனங்கள், போக்குவரத்துக் கழகங்கள் என எந்த இடத்திலாவது அலுவலர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் மக்களுக்கு இணக்கமாக -pepole friendly - இருக்கிறார்களா? சுருக்கமாகச் சொன்னால் சீருடை (எந்தச் சீருடையாக இருந்தாலும் சரி) அணிந்த துறைகளைச் சேர்ந்த எவரேனும் மக்களுக்கு இணக்கமானவர்களாக இருக்கிறார்களா, அபூர்வமான சில விதிவிலக்குகளைத் தவிர? லட்சங்களிலும் பல்லாயிரங்களிலும் ஊதியம் பெறும் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் பணியாற்றும் எத்தனை ஆசிரியர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள்?

நெருக்கடி முற்றிய காலங்களிலெல்லாம் அதிலிருந்து மீண்டெழ முதலாளித்துவம், பழைய நடைமுறைகளைக் கைவிட்டுப் புதிய முறைகளைக் கைக்கொள்ளக்கூடிய நிலையில், இடதுசாரித் தலைமையோ சிந்திக்கவும் செயலை மாற்றவும் மறுப்பதை இன்றைய சரிவுக்கான முக்கியமான காரணம் என்று மிகச் சரியாகவே பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

தா. பாண்டியன் குறிப்பிட்டுள்ளபடியே 1917 முதல் 1945 வரை, அதன் பின்னர் 1962 வரையிலும் எல்லா நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் விஞ்ஞானிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எனப் புகழ்பெற்ற பலர் இருந்து வந்துள்ளனர். ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை?

இந்தியாவிலும் தமிழகத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒருகாலத்தில் எத்தனை டாக்டர்கள், பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள் இருந்தனர்,ஆனால், இன்றைக்கு? இருக்கிறார்கள், ஆனால் கட்சிகளுக்கு வெளியே. அவரவர் அவரவர் அளவில், கம்யூனிஸ்டுகளுக்கான இலக்கணத்துடன், செயல்பட்டுக்கொண்டு ஒதுங்கியிருக்கிறார்கள்.

சோவியத்தின் சீர்குலைவு பற்றி கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைக் குழுக்கள் கூடி விவாதித்துக் காரணங்களை விளக்காதது ஏன்? சோவியத் நாட்டுக்குப் பல்வேறு நாடுகளின் தூதுக் குழுக்களில் சென்று வந்த கட்சித் தலைவர்களால் எதையும் உணர முடியவில்லையா? கம்பூச்சியாவில், அல்பேனியாவில், வட கொரியாவில் கம்யூனிஸ்ட் லட்சியம் மாசுபடுத்தப்பட்டது எவ்வாறு? என்றெல்லாம் கேள்வி எழுப்பும் தா.பா., பல இடதுசாரி இயக்கங்கள் தங்களது மாநாட்டை, விவாதங்களை நடத்துகிற முறையில் மரபு தவறக் கூடாது என்று செக்கு மாடு மாதிரி நடந்த வட்டத்திலேயே நடக்கிறார்கள், ஊர் போய்ச் சேர மாட்டார்கள் என்று எரிச்சலடைகிறார்.

கடந்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் பல்வேறு விஷயங்களை தா. பாண்டியன் நினைவூட்டியுள்ளார். 1925-ல் கான்பூரில் நடந்த கட்சி மாநாட்டில், இப்படியொரு மாநாடு நடந்ததே அப்போது யாருக்கும் தெரியாது, தலைமை வகித்த சிங்காரவேலர், ரஷியாவில் போல்ஷ்விக் கட்சி மாதிரியையோ, அதன் நடைமுறைகளையோ பின்பற்றத் தேவையில்லை, இந்திய நிலைமைக்கேற்ப, வறுமையில் உழலும் விவசாயிகள் நிறைந்த நம்நாட்டில்,கொடியில் கலப்பைச் சின்னத்தை இடம் பெறச் செய்யலாம் என்று கூறியிருக்கிறார்.

இவ்வாறு கட்சியின் வரலாற்றில் அடுத்தடுத்து இந்தியச் சூழலில் சிந்திக்கப்படாமலேயே பல முடிவுகள் எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய முடிவுகள் மீதான கேள்விகள் பலவற்றை முன்வைக்கும் அவர், தொடக்கத்திலிருந்தே கட்சி ஒருமித்த கருத்துடையதாக உருவெடுக்க முடியாமல் போய்விட்டது; இவர்களின் தீவிர இடதுசாரிக் கருத்து, ஒவ்வொரு காலகட்டத்திலும் தேசிய இயக்கத்துடனும் சோசலிச இயக்கத்துடனும் சமூக சீர்திருத்தவாதிகளுடனும் சேர்ந்து இயங்கவிடாமல் தனித்துப் பிரித்து, ரகசியக் குழு போல இயங்க வைத்துவிட்டது என்கிறார்.

1942-ல் வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தைச் சென்னையில் கூடிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரும் ஆதரிக்க நினைத்தபோது, ஒட்டுமொத்த தேச உணர்வுக்கு எதிராக, ரஷிய முடிவுக்கேற்ப, மும்பையில் ரகசியமாக செயல்பட்டுவந்த மத்திய தலைமை, எதிர்க்கும் முடிவை எடுத்தது.

1948, பிப்ரவரி 27, 28 தேதிகளில் அவசரப்பட்டு, யதார்த்த நிலைக்குப் புறம்பாக, கொல்கத்தா காங்கிரஸில் எடுக்கப்பட்ட புரட்சி முடிவு, கட்சிக்கு அமைப்பு ரீதியிலும் தத்துவார்த்த ரீதியிலும் ஏற்படுத்திய பின்னடைவையும் (இதனால் கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோத இயக்கமென சுதந்திர இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது, தலைவர்களும் தொண்டர்களும் தலைமறைவு வாழ்க்கைக்குச் செல்ல நேரிட்டது) அதன் பின் ஆறு மாதங்களில் ஏற்கத்தக்கதல்ல என்று கட்சியால் நிராகரிக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்துள்ளார் அவர்.

1962-ல் இந்திய - சீன எல்லைப் பிரச்சினை, சர்ச்சை, படையெடுப்பு எனத் தொடர்ந்து போருக்கு சம்பந்தமேயில்லாத கம்யூனிஸ்ட் கட்சி பலிகடாவானது. கட்சியில் என்றுமில்லாத வகையில் தலைவர், பொதுச் செயலர் என நியமனம், ஆளுக்கொரு நிலைப்பாடு, தொடர்ந்த புகைச்சல்கள், கம்யூனிஸ்ட் கட்சி இரண்டுபட்டது என வரிசைப்படுத்தும் தா.பா., கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

மனிதர்கள் ஏற்கும் கொள்கை, லட்சியம், பங்கேற்பை வைத்தே முற்போக்கு, பிற்போக்கு தீர்மானிக்கப்பட வேண்டும்... ஒரு வர்க்கத்தின் குணத்தை மதிப்பிடுவது என்பது மார்க்சிய சிந்தனைக்கு அடித்தளம்.

ஆனால், தனிமனிதர்கள் பிறந்த வர்க்கத்தை வைத்து அல்லது கொண்ட கொள்கை, செயலை வைத்தே அவரது சமூக குணத்தை மதிப்பிட வேண்டும். இயக்கங்களில் தலைமைப் பொறுப்பை ஏற்போர் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார் பாண்டியன்.

மனிதர்களை, இயக்கங்களை மதிப்பிடும்போது, மார்க்ஸ், லெனினைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்திப் பல மேற்கோள்களைக் காட்டும் தா.பா., கம்யூனிஸ்ட் கட்சியில் செயலர்களாக வருபவர்கள் கூறுவதே மார்க்சியம் என்ற ஒரு தவறான நம்பிக்கை, கட்சியைக் காப்பாற்ற உதவாது என்று குறிப்பிடுவதுடன் கர்ப்பூரி சக்ளத்வாலாவின் கதையையும் விவரித்துள்ளார்.

‘எடுத்த எடுப்பிலேயே புரட்சி என்றெல்லாம் பேசுவதைத் தவிர்த்து அரசியல் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்’ என்று லெனின் அனுப்பிய கடிதம், உளவுத் துறையிடம் சிக்கிக் கிடைக்காமல்போக, எம்.என். ராயின் வழிகாட்டுதல் என்ற பேரில்தான் காங்கிரஸ் - காந்தியடிகள் எதிர்ப்பு நிகழ்ந்ததாகவும் கூறுகிறார் தா.பா.

மண்ணைப் பற்றிக் கவலைப்படாமல் சர்வதேசியம் என்ற கோட்பாட்டை யாந்திரீகமாகக் கட்சி பின்பற்றியதை முதல் கோணல் என்று குறிப்பிடும் அவர், பிரதமர் நேருவை மவுண்ட் பேட்டனின் கையாள், வளர்ப்பு நாய் என்றெல்லாம் கேலிச் சித்திரம் வெளியிட்ட கட்சிப் பத்திரிகை, அவர் சோவியத் சென்றபோது சமாதான வெண்புறா பறப்பதாகச் சித்திரம் வரைந்ததையும் கூறுகிறார்.

ஆதிக்க - அடிமைத்தன சாதிப் பிரச்சினையைக் கட்சி முறையாகக் கையாளவில்லை என்பதுடன், ஆதிக்க சாதிகளை எதிர்த்தால் வர்க்க அமைப்பு பிளவுபடக் கூடும் என வாதிட்டது சரியா என்றும் கேட்கிறார்.சகல அரசியல் போக்குகளுக்கும் தன் பதாகையின் கீழ் இயங்க இடம் கொடுத்த காங்கிரஸ் கட்சிதான், இந்தியாவை மதச்சார்பற்ற, சமதர்மக் குடியரசு என அரசியல் சட்டத்திலும் எழுதியது.

ஆனால், அந்தக் கட்சியுடனான கம்யூனிஸ்ட் கட்சியின் உறவு பற்றிய சிக்கல் இன்னமும் நீடிக்கிறது. தவறான அடிப்படைப் புரிதல் காரணமாக லோகியா, ஜெயப்பிரகாசர், அம்பேத்கர், ஜோதிபாய் புலே, பெரியார் எனப் பலருடைய இயக்கங்களுடனான முரணுக்கான காரணத்தைக் கண்டறிந்தால் கம்யூனிஸ்ட் கட்சியின் சரிவுக்கான காரணத்தையும் அறியலாம் என்று கோடிடுகிறார் தா.பா.

இந்தியாவில் நிலவும் சாதிப் படிநிலை தொடர்பாக - இதன் தொடர்ச்சியாக அம்பேத்கர், பெரியார் இயக்கங்கள் தொடர்பாக - கம்யூனிஸ்ட் இயக்கம் கொண்டிருந்த நிலைப்பாடுகள் பற்றியும் கேள்வி எழுப்புகிறார் தா.பா.

இந்தியா, பாகிஸ்தான் பிரிக்கப்படுவதை ஒப்புக்கொண்டதும் ஆறு மாதங்களில் அதைத் தவறெனக் கைவிட்டதும் எனத் தொடங்கி, இந்த கம்யூனிஸ்ட் கட்சிதான் காலந்தோறும் எத்தனையெத்தனை குழப்பமான நிலைப்பாடுகளை எடுத்துவந்திருக்கிறது? கைவிட்டு வந்திருக்கிறது?

மண்டல் குழு அறிக்கையை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரித்து வாக்களித்தது, ஆனால், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஆண்ட மேற்கு வங்கம்தான் கடைசியாக அமல்படுத்த ஒப்புக்கொண்டது. இன்றைக்கு மத்தியிலுள்ள பாரதிய ஜனதா அரசு முன்னெடுத்த பொருளாதார ரீதியில் பிற்பட்ட உயர் சாதியினருக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீடு விஷயத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த ஆதரவு நிலை அனைவரும் அறிந்ததே.

பல்வேறு விஷயங்களில் இந்தியாவில் வாக்கு அரசியலில் ஈடுபடும் பிரதானமான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடுகள், பல நேரங்களில் கேலிக்குரியவையாக இருப்பதை சாதாரண அரசியல் பார்வையாளர்களால் மட்டுமல்ல, மக்களாலேயேகூட உணர முடியும்.

இலங்கைப் பிரச்சினைகளில் இதுவரை எத்தனை வினோதமான நிலைப்பாடுகளை எல்லாம் இங்கிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்து வந்திருக்கின்றன? இலங்கையிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியோ முள்ளிவாய்க்கால் படுகொலைக்காக ராஜபட்சவைப் பாராட்டியது.

ராஜிவ் கொலைவழக்கில் சிறையில் இருப்பவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்றவர் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத், விடுவிக்க வலியுறுத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா. அவைத் தீர்மானத்தில் கியூபா உள்பட பொதுவுடைமை பேசும் எத்தனையோ நாடுகள், இலங்கைக்கு ஆதரவான நிலையெடுத்தன.

ஜோதிபாசுவைப் பிரதமராக்கக் கூடிய வாய்ப்பு வந்தபோது, மூன்று பேரோ நான்கு பேரோ கூடி எடுத்த முடிவின்படி, அதை நிராகரித்ததை, வரலாற்றில் ஏற்பட்டிருக்கக் கூடிய ஒரு பெருந்திருப்பத்தைக் கைவிட்டதை எவ்வாறு ஒப்ப முடியும்? என்ற கம்யூனிச ஆதரவாளர்களின் கேள்வியையும் தா.பா. பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

சோவியத் ரஷியாவின் முன்னேற்றமும் வீழ்ச்சியும், தகவமைத்துக் கொண்ட சீனாவின் முன்னேற்றம் பற்றியெல்லாம் விரிவான கருத்துகளை முன்வைக்கும் தா.பா., முதலாளித்துவ முறையில் உற்பத்திக்கு சம்பந்தமில்லா விளம்பரச் செலவு, லஞ்சம், வரி ஏய்ப்பு, நிறுவனர்களின் செலவுகள் பற்றியெல்லாம் குறிப்பிட்டு, விவாதத்தைத் தொடக்கிவைக்கிறார்.

கம்யூனிஸ்டுகள் தனித்து தங்கள் சொந்த பலத்தால் மட்டும் இந்தியாவில் எங்கும் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்ற உண்மை நிலவரத்தை ஏற்றாக வேண்டும் என்கிற தா.பா., இதுவரையிலான தேர்தல் முடிவுகள் பற்றிச் சுருக்கமான ஆய்வொன்றையும் முன்வைக்கிறார்.

மார்க்சியத்தின் அடிப்படையான விஷயங்கள் அல்லது கோட்பாடுகளின் மீது தா. பாண்டியன் எழுப்பும் கேள்விகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, விரிவாக விவாதிக்கப்பட்டு, ஏற்ற உத்திகள் வகுக்கப்பட வேண்டியவை. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் கால முதலாளித்துவம், தொழிற்சாலைகள், தொழிலாளி வர்க்கம், உபரி மதிப்பில் நேரிடும் மாற்றங்கள், சமூகத் தன்மை பெறும் முதலாளித்துவம் தொடர்பானவை இவை.

இந்தியாவின் வினோதச் சிக்கலான மதம், சாதிப் பிரச்சினைகள், மாநில மக்களின் மன நிலையைப் புரிந்துகொள்ளாமல் மத்திய அமைப்பால் திணிக்கப்படும் முடிவுகள், புறக்கணிப்புகள், பிரச்சினைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காத வறட்டுத்தனம், இந்தியச் சூழலுக்கு முன்னுரிமையளிக்காதது, தனிநபர், தலைவர்கள்சார் குழு மனப்பான்மை... என எண்ணற்ற தடங்கல்கள். நூலில் எண்ணற்ற தகவல்கள், ஏராளமான கேள்விகள்.

“இந்தியாவில் ஆட்சிக்கு வந்துவிட்ட ஒரு சக்தி, தத்துவ அடிப்படையில் முதல் எதிரியாக நிற்கும் பொதுவுடைமை இயக்கத்தை, முற்றாக ஒழித்துக்கட்ட, சகல அதிகார சாகசங்களையும் கடவுள்களின் துணையோடு, மத, சாதி பக்கபலத்தோடு, கார்ப்பரேட் படையோடு, தாக்கிக் கொண்டிருக்கிறபோது, இனியும் தயங்குவது சரியல்ல என்ற முடிவுக்கு வந்ததால் எழுத முற்பட்டோம்.

“நூலில் கூறப்பட்டதை மட்டுமின்றி அனைத்தையும் விவாதிக்க வேண்டும், விவாதிப்பதற்கே ஒரு கட்சி இருக்க வேண்டும் அல்லவா? அதுதான் நூலின் நோக்கம்.

“மார்க்சிய சிந்தனையாளர்கள் அனைவரும் வக்கனை பேசிக் கொண்டிராமல் ஒற்றைப் பேரியக்கத்தில் ஒன்றுதிரள வேண்டும். மக்களிடம் நம் கருத்துகள் சென்றடைய அறிவியல் அளித்துள்ள தொடர்புக் கருவிகள், தொலைக்காட்சி சாதனங்களை இயக்க வேண்டும். தொழிற்சங்க இயக்கம் அரசியல் பயிற்சி மையமாக மாற வேண்டும், விவசாயம் செழித்தாலன்றி சமுதாயம் வாழவே முடியாது என்பதால் அதை மேம்படுத்தத் திட்டம் வகுத்து நீர்வளம் காத்து அனைவருக்கும் கிடைக்க வழிவகுக்க வேண்டும், இவற்றைச் செய்து முடிக்க அரசியல் அதிகாரத்தைப் பெற்றாக வேண்டும், அதற்காக இந்தப் பேரியக்கம் வலுப்பெற வேண்டும். புது வழி காண்பதும் புதியதோர் உலகம் படைப்பதுமே கடமையாகும்.”

“சமூக சீர்திருத்த இயக்கங்கள் அனைத்தும், வளர்ச்சியின் காரணமாக மாறியுள்ள சூழ்நிலையில், சாதிபேதமற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க முற்போக்குப் பாதைக்கு வந்தாக வேண்டும். மாறாக, சாதிக்கென்று ஒரு கட்சி, சாதிக்கென்று ஒரு தொழிற்சங்கம் என்ற பிளவுப் பாதையில் நடப்பது, நீட்சேக்கும் அவனால் தன் குருவெனக் கூறப்பட்ட மநுவுக்கும்தான் தங்களையும் அறியாது செய்யும் சேவையில் முடியும். கடந்தகால சறுக்கல்களை மறந்து, புத்துலகு காண பொதுவுடைமை இயக்கத்தோடு சேர்ந்து போராட வேண்டிய வரலாற்றுக் கடமை வந்திருப்பதை உணர வேண்டும்.”

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்மையான ஒரு ஜனநாயக, அரசியல் கட்சி என்பதை மக்களால் நம்பப்பட்டு ஏற்கப்படும் வகையில் துணிந்து திருத்தியமைக்க வேண்டும் என்றும் நூலின் நிறைவில் தா. பாண்டியன் வலியுறுத்துகிறார். இது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிக்கும்கூட பெரிதும் பொருந்தும்.

இந்த நூல் வெளிவந்த காலத்தில் உயிர் எழுத்து இதழில் மார்க்ஸ் -200 தொடருக்காக எழுதிய அறிமுக - விமர்சனத்தில், நூலில் பூடகமாகக் குறிப்பிட்டுள்ள பல விஷயங்களைப் பற்றி அடுத்த பதிப்பில் வெளிப்படையாக தா.பா. தெரிவித்தால் பலரும் அறிந்துகொள்ள உதவியாகஇருக்கும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

மேலும், இந்த நூலின் தொடர்ச்சியாக இரண்டாவது பகுதியன்றை இன்னமும் விலாவாரியாக எழுத வேண்டும் என்று அண்மையில் மறைந்த ஈரோடு டாக்டர்வி. ஜீவானந்தம், அவருடைய நெருங்கிய தோழரான தா.பா.விடம் வலியுறுத்திவந்தார். காலம் இருவரையுமே பறித்துக்கொண்டுவிட்டது.

இந்த நூலின் முன்னுரையில் தா.பா. கூறியிருப்பதைப் போல, பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நூலை அவர் எழுதியிருக்க வேண்டும். பொதுவுடைமை பேசும் பல்வேறு தளங்களில் பெரும் விவாதத்துக்கு விட்டிருக்க வேண்டும்.

தெளிவுக்கு வந்திருக்க வேண்டும். அவர் எழுதிய எழுத்துகள் அத்தனையும் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன. எவ்வளவோ எழுதியிருந்தாலும் இந்த நூலில் வரைந்துள்ள அவருடைய எண்ணங்களும் எழுத்தும்தான் மறைந்த தோழர் தா. பாண்டியனின் அறைகூவல்.

தோழர் தா.பா.வின் நினைவுகளோடு பொதுவுடைமையரின் வருங்காலமும் வெகுமக்களின் எதிர்காலமும் சிறக்கட்டும்.

- எம். பாண்டியராஜன்

Pin It