மே மாதம் 30 அன்று, ஆம்பூரில் தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் ஒரு எழுச்சிமிகு மேதினப் பொதுக்கூட்டத்தை நடத்தியது. இதில் ஆம்பூர் வட்டத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பெண், ஆண் தொழிலாளர்கள் பேரார்வத்தோடு பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு முன்னர் ஆம்பூர் தலைமை அஞ்சல் நிலையத்திலிருந்து மாலை 4-30 மணிக்குத் துவங்கி, புறவழிச் சாலை வரை தொழிலாளர்களின் பேரணி நடைபெற்றது. பேரணி நெடுக இதில் பங்கேற்றோர், முதலாளித்துவத்தை எதிர்த்தும், மோடி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், மே தினத்தைப் போற்றியும், தொழிலாளர் ஒற்றுமையை வாழ்த்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
பேரணி ஆம்பூர் இராஜீவ் சிலை, புறவழிச் சாலையை அடைந்தவுடன், பொதுக் கூட்டம் துவங்கியது. தமிழ்நாடு தொழிற்சங்க நடுவத்தின் பொதுச் செயலாளர் தோழர் ஜே.உரூபன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தோழர்கள் மு.பிரதாபன், எஸ்.தேவநாதன், டி.முரளிதாஸ், கபிலன், ஆர்.சங்கரசுப்பு, பாலு, ஆர்.டி.மூர்த்தி, இர.கல்விச்செல்வன், பி.யு.வெங்கடேசன் மற்றும் பல தோழர்கள் உரையாற்றினர்.
தலைமையுரை ஆற்றிய தோழர் உரூபன், இன்று தொழிலாளர் வகுப்பின் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களைக் கடுமையாகச் சாடினார். தொழிற் சங்க உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதையும், அரசாங்கம் முதலாளிகளுடைய தேவைகளை நிறைவேற்றி வருவதையும் அவர் வன்மையாகக் கண்டித்தார். இந்தகைய சூழ்நிலையில் தொழிலாளர்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டியத் தேவையை அவர் எடுத்துக் கூறினார். தொழிலாளர்களுடைய போராட்டங்களை மேற்கொண்டு எடுத்துச் செல்லவும், புதிய சமுதாயம் படைக்கவும் உறுதி ஏற்க வேண்டிய நாள் மேதினம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
கூட்டத்தில் உரையாற்றிய தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர் கபிலன், முதலாளி வகுப்பினரின் இன்றைய தாக்குதல்களை நாம் ஒன்றுபட்டுத் தீவிரமாக எதிர்க்க வேண்டும். முதலாளித்துவ அமைப்பையும், அவர்களுடைய ஆட்சியதிகாரத்தையும் எதிர்த்த போராட்டத்திற்குத் தொழிலாளி வகுப்பினர்தாம், உழவர் மற்றும் பிற வகுப்பினருக்குத் தலைமை தாங்கி நடத்த வேண்டும். முதலாளித்துவ அமைப்பை மாற்றாமல், தொழிலாளர்களுடைய, பிற மக்களுடைய உரிமைகளைப் பெற முடியாது என்பதை அவர் விளக்கிக் கூறினார்.
தமிழ்நாடு தொழிற் சங்க நடுவம் ஏற்பாடு செய்து நடத்திய இந்த வெற்றிகரமான கூட்டத்திற்கு தொழிலாளர் ஒற்றுமைக் குரல் தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.