crackers laborsகடந்த நவம்பர் 11 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கான தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார்.

பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கையும் இதுதான். ஆனால் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் இதற்கு முன்பு பலமுறை தங்களின் வாழ்வாதரத்தை இழந்து எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்த போதும் கண்டுகொள்ளாத; அரசு இப்போது பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கான தனி நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பானது வெறுமனே அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது.

இத்தனை நாளாக வெடி மருந்துகளில் உலாவும் தொழிலாளர்களை கண்டுகொள்ளாத அரசு இப்போது அவர்களின் மீது திடீர் கரிசணை வந்தது எப்படி என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து ஆளும் அதிமுக அரசு இத்தகைய அறிவிப்பை செய்திருக்கிறது. ஏற்கனவே கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நலவாரியத்தில் பதிவு செய்து கொண்ட தொழிலாளர்களுக்குப் பல வருடங்களாக பெற்றுக் கொண்ட கேட்பு மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமலும் தொழிலாளர்களுக்கு உரிய பணபலன்களைக் கொடுக்காமலும் காலம் கடத்தி வருகிறது.

பலர் உதவித் தொகை உள்பட பலவற்றிற்கு விண்ணப்பித்து விண்ணப்பித்து அழுத்துப் போய்விட்டார்கள். இத்தனைக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்திற்கு ஆயிரம் கோடிக்கு மேல், கட்டிடப் பணியின் போது தொழிலாளர்கள் நல நிதியாக 1 சதவித தொகையை வசூலிக்கப்பட்டு இருந்தும் இந்நிலைமை என்றால் இப்போது வெற்று அறிவிப்பாக அதுவும் வாக்கு வங்கிக்காக உள்நோக்கத்தோடு அறிவித்திருக்கும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்காக தனி நலவாரியம் என்பது எந்தளவுக்குப் பலன் கொடுக்கும் என்பதே கேள்வி.

தற்சமயம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டிருக்கும் 62.661 உறுப்பினர்களைக் கொண்டு இந்த நலவாரியம் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உரிமம் பெற்று இயங்கிவரும் 1.250 பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் 870 தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் மொத்தம் 1.20.000 தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் அனைவரையுமே நலவாரியத்தின் உறுப்பினர்களாக ஆக்குவதற்கு அரசாங்கம் முயல வேண்டும் என தி இந்து நாளிதழில் ஜனவரி 04 அன்று தலையங்கம் வெளியிட்டிருந்தது.

ஆனால் உண்மையில் பட்டாசுத் தொழிலில் கிட்டதட்ட 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பணிபுரிவதாக பல்வேறு தரப்பில் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் நலவாரியம் அமைக்கும் போது வெறுமனே 1.20.000 தொழிலாளர்கள்தான் எனக் கணக்கிடுவது என்பது எப்படிச் சரியானதாக இருக்கும்? மீதம் இருக்கும் தொழிலாளார்களை என்ன செய்வதாக திட்டம் எனத் தெரியவில்லை.

உண்மையான கணக்கெடுப்பை நடத்தப்பட வேண்டும். அல்லது ஏற்கனவே நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகள், பிரச்சனைகளின் போது சொல்லப்பட்ட தொழிலாளர்களின் புள்ளிவிபரம் என்ன ஆனது என்பதே இங்கு கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது. இதில் தீப்பெட்டித் தொழிலாளர்கள் இன்னும் கணக்கிடப்படவில்லை என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏன் சரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும்? அதேநேரத்தில் அனைத்து பட்டாசுத் தொழிலாளர்களையும் தனி நலவாரியம் அமைப்பதில் இணைக்கப்பட வேண்டும் என ஏன் வலியுறுத்த வேண்டும் என்றால் ஏற்கனவே, கொரோனா காலத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் அமைப்புசாரா ஓட்டுநர்களுக்கும் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வறிவிப்பை பார்த்தால் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு எவ்வித உதவித் தொகையும் வழங்கப்படாது.

அப்படியானால் உண்மையான கணக்குப்படி பார்க்கும் போது இன்னும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாக இருக்கமாட்டார்கள்.

பெரும்பாண்மையான உறுப்பினர்களைத் தவிர்த்துவிட்டு பெயரளவில் குறிப்பிட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் இத்தகைய உதவித் திட்டங்கள் போய்ச் சேருவது சரியான அணுகுமுறைதானா? தொழிலாளர்கள் அனைவருக்கும் பாகுபாடு இன்றி நலத்திட்டங்கள் போய்ச் சேரவேண்டும். அதற்கு முதலில் பட்டாசுத் தொழிலாளர்கள் குறித்த புள்ளிவிபரங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

இன்னொரு விதத்தில் பார்த்தால் நலவாரியத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களைச் சார்ந்த எழுத்தறவு இல்லாதவர்களே அதிகம். அவர்களுக்கு ஒருமுறை நலவாரிய அட்டையை வாங்கிவிட்டால் போதும் என்ற மனநிலையில் இருப்பார்கள்.

அந்த அட்டையின் வழியாக கிடைக்கும் நலத்திட்டங்கள் குறித்த தெளிவும் புரிதலும் கூட பலருக்கு இல்லாமல் தான் இருக்கிறார்கள். அதைவிட இவ்வட்டையை தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதை பலர் மறந்தும் விடுவார்கள்.

பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு நலவாரிய திட்டத்தில் எவ்வித உதவித் தொகையும் வழங்கப்பட மாட்டாது. அப்படிப் பார்க்கும் போது பெரும்பாலான தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படவும் கூடும்.

இதை முறைப்படுத்த அரசுத் தரப்பில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படாது. இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படித் தொழிலாளர்களுக்கு உதவித் தொகைகள் இதர சலுகைகள் தனி நலவாரியம் வழியாகப் போய்ச் சேரும்?

இதற்கு எடுத்துக்காட்டாக, தி இந்து நாளிதழில் ஜனவரி 04 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில், “33 லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்திருந்தாலும் 12.13 லட்சம் பேர் மட்டுமே தங்களைப் புதுப்பித்துக் கொண்டிருந்தனர்.

தங்களுக்கென்று ஒரு நலவாரியம் இயங்குகிறது, அதில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் பதிவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற வழிப்புணர்வு இன்னமும் உடலுழைப்புத் தொழிலாளர்களைச் சென்று சேரவில்லை.

அதன் காரணமாக, உறுப்பினர் பதிவைப் புதுப்பிக்காத கட்டுமானத் தொழிலாளர்களும் அமைப்புசாரா ஓட்டுநர்களும் அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற முடியாமல் தவித்தனர்”

இதுதான் அரசு ஏற்கனவே அமைக்கப்பட்ட நலவாரியங்களின் நிலை. இந்த லட்சணத்தில் புதிதாக பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கான தனி நலவாரியம் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தாலும் அவற்றின் பயன்பாடு, செயல்பாடு என்பது மற்ற நலவாரியங்களைப் போல்தானே இதுவும் செயல்படப் போகிறது எனும் போது அதிருப்தியைத் தான் தருகிறது.

பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கான தனி நலவாரிய அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாக ஏன் பார்க்க வேண்டும் என்றால் இத்தொழிலில் ஆபத்து அதிகம். அதனால் தொழிலாளாகள் அதிகம் பாதிப்பை அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தகைய பிரச்சனைகளை சரிசெய்யும் விதமாக இந்த நலவாரியம் இயங்கினால் உண்மையாகவே பட்டாசு தொழிலாளர்கள் வரவேற்பார்கள். இல்லையெனில் ஏற்கனவே இருக்கின்ற பெயரை மாற்றி புதிகாக உருவாக்கப்பட்ட ஒன்று என்று நினைக்கும் அளவில்தான் இதுவும் இருக்கும்.

ஏனெனில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் மழை காலத்தில் இத்தொழிலில் ஈடுபட முடியாது. அதனால் ஒவ்வொரு வருடமும் தீபாவளி முடிந்ததும் கிட்டதட்ட ஒருமாதம் காலம் வேலையை இழக்கும் அவலம் நேருகிறது.

அதோடு விபத்து காலங்களில் மாதக்கணக்கில் வேலை இழப்பும் நடக்கும். அத்தகைய காலங்களில் தொழிலாளர்களின் வாழ்வாதரத்திற்கான வழி என்ன? என்பதை தெளிவாக வரையறுக்க வேண்டும்.

விபத்தின் போது உயிர் சேதங்களை சந்திக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இப்போது அந்தந்த தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் அவர்களின் போக்கிற்கு இழப்பீடுகள் வழங்கும் முறையை கைவிட்டு அரசுத் தரப்பில் நிலையான ஒரு தொகையை பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலையை மனதில் கொண்டு, அவர்களின் எதிர்கால வாழ்க்கைப் போக்கை நிர்ணயிக்க ஏதுவாக உரிய நிவாரணம் வழங்க வழிகாட்டுதல் மிக மிக அவசியம்.

இதை செய்யாவிட்டால் இப்போது நடப்பது போல் அன்றாடம் பட்டாசு விபத்துக்கள் நடந்த வண்ணம் தான் இருக்கும். இதுபோன்ற நேரங்களில் தொழிற்சாலை நிர்வாகம் கணிசமான தொகையை உயிரிழந்த தொழிலாளர்களுக்கு வழங்கும். ஒருசில தொழிற்சாலைகள் பணம் தருவதாக வெற்று காசோலைகளை கொடுத்துவிட்டு ஏமாற்றி கொண்டிருப்பதும் தொடரத்தான் செய்யும்.

இதற்கென தனியான வழிகாட்டும் நெறிமுறைகளை இந்த நலவாரியங்கள் வழியாக அமைக்காவிட்டால் இப்படியான அறிவிப்பும் வெற்று அறிவிப்பாகத்தான் இருக்கப் போகிறது.

பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கான தனி நலவாரியம் அமைக்க அதற்கென குழுவும் அமைத்து அரசானை கடந்த டிசம்பர் இறுதியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், தொழிலாளர் நலத்துறை அமைச்சரை தலைவராகவும், அரசு பிரதிநிதிகளாக செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை, தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதர இயக்குநர் ஆகியோரும் அலுவல் சாரா உறுப்பினர்களாக வேலையளிப்போர் பிரதிநிதிகளாக பட்டாசுத் தொழிற்சாலை சார்பான பிரதிநிதி, தீப்பெட்டி தொழிற்சாலை சார்பான பிரதிநிதி மற்றும் தொழிற்கூட்ட அமைப்பின் பிரதிநிதி ஆகியோரும், தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக பட்டாசுத் தொழிற்சாலை தொழிற்சங்கத்தின் பிரதிநிதி மற்றும் தொழிற்சங்க பிரதிநிதி ஆகியோர் அடங்கிய வாரியம் அமைப்பதற்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டுள்ளார்.

ஏற்கனவே இதேபோன்ற இதர நலவாரியங்களின் நிர்வாகிகளாக மேற்கண்ட பொறுப்பாளர்கள் அரசின் சார்பில் இருக்கிறார்கள். அதோடு அந்தந்த தொழில் சார்ந்த பிரதிநிதிகளும் இதில் அடங்குவர்.

அந்த நலவாரியங்களின் நிலை நமக்குத் தெரிந்ததுதான். அதேபோல்தான் இந்த நலவாரியமும் செயல்படப் போகிறதா? என்ற ஐயப்பாட்டின் வெளிப்பாடே இக்கட்டுரை.

எந்த நலவாரியம் அமைக்கப்பட்டாலும் அதில் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கு மிகக் குறைவான இடமே அளிக்கப்படுகிறது என்ற உண்மையை மேற்கண்ட பட்டியலில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் பெரும்பாலும் நலவாரிய செயல்பாடுகளின் போது உரிய கருத்துக்களை வழங்குவதற்குக்கூட சரிவர பங்கேற்காத நிலைதான் இதுவரை இருந்துள்ளது.

அதோடு தொழிலாளர் நலத்துறை சார்பில் முறையான கூட்ட ஏற்பாடுகளை கூட்டி, கருத்துக்களை கேட்டு தொழிலாளர்களின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் பெரும் மெத்தனப் போக்கும் தொடர்ந்து இருந்து வருகிறது.

இவற்றை இதுவரை களைந்து நல்ல முறையில் செயல்பட எவ்வித நடவடிக்கையும் முதல் அமைச்சரோ அல்லது துறை அமைச்சரோ செய்யவில்லை என்பதும் கூடுதலாக நாம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய செய்தி.

தற்போது அமைக்கப்பட்டுள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் தலைமையிடம் சென்னையில் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டாசு தேவைகளில் 90 சதவிதத்தை பூர்த்தி செய்யும் இடமாக சிவகாசி பட்டாசுகள் இருக்கின்றன.

அப்படி இருக்கும் பட்சத்தில் இப்போது அறிவித்துள்ள இந்நலவாரியத்தின் தலைமையிடம் சிவகாசியில் அமைக்கப் பெற்றால் அத்தொழிலாளர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தி சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்தானே?

இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் எந்தவிதமான அமைப்பாக இருந்தாலும் அதன் தலைமையிடம் சென்னையில்தான் இருக்க வேண்டும் என்ற குருட்டுத்தனமான சிந்தனையோடு அறிவிப்பு செய்தால் இதனால் பாதிக்கப்பட போவது தொழிலாளர்கள்தானே?

பெரும்பாண்மையாக இருக்கும் தொழிலாளர்களின் நலன் இதில் உள்ளடக்கப்படவில்லை என்பதற்கு இந்நலவாரியத்தின் தலைமையிடம் சென்னையில் அமைக்கப்படுவதை எடுத்துக்காட்டாக சொல்லலாம். அதிகாரிகள் எப்போதாவது கூடும் போது சிவகாசி நகரில் வைத்து கூடி விவாதித்து முடிவுகள் எடுத்தால்தான் என்ன?

இதற்கு மாற்றுக் கருத்து அரசுத் தரப்பில் சொல்லலாம். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் மட்டும் இல்லை. இன்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரவலாக இருக்கிறது. அதனால் இதன் தலைமையிடத்தை சென்னையில் அமைக்க இருக்கிறோம் என்று விளக்கம் கொடுக்கலாம்.

ஆனால் பெரும்பாண்மை எங்கு இருக்கிறது என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்;. விருதுநகர் அண்டை மாவட்டங்களான தூத்துக்குடி, மதுரை என பட்டாசுத் தொழில் சமீப காலமாக விரியத் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே நீண்ட காலமாக கும்பகோணம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

அதை மறுப்பதற்கும் இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் பட்டாசு தயாரிப்பில் குவியலாக இருக்கும் இடம் என்றால் அது சிவகாசிதான்.

ஆயிரக்காணக்கான கோடிகளில் ஆண்டுதோறும் பட்டாசுத் தொழில் வழியாக அரசுக்கு வருவாய் ஈட்டியும் கொடுக்கிறது. அத்தகைய தொழிலை நம்பி இருக்கும் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் போது அதை சிவகாசி நகரிலே அமைப்பதுதானே சரியானதாக இருக்கும்?

- மு.தமிழ்ச்செல்வன்

Pin It