இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அமெரிக்காவிற்குச் சென்று வந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு விசா மறுக்கப்பட்டவர் அவர் என்பது வரலாறு. காலங்கள் மாறி மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு அமெரிக்கா சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது.

இந்தியாவில் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க ஆலோசித்து வருகின்றனர். பாஜகவை எதிர்த்து இணைய முடியாதவர்கள் எல்லாம் இணைய வேண்டும் என்று பார்ப்பனர் தவிர்த்த அனைத்துத் தரப்பினரும் விரும்புகிறார்கள் என்றால், இந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சி எந்த அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

உள்நாட்டில் மனித உரிமை மீறல், ஜனநாயகப் படுகொலை, மதவாதம் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் மோடி அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு விசா மறுத்த அதே நாடு இப்போது வரவேற்கிறது என்றால், அந்த நாட்டினருக்கு இருக்கும் அரசியல் நிர்பந்தம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். சீனாவையும் இரஷ்யாவையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை அவர்களுக்கு. அது அந்த நாட்டின் அரசியல். நாம் அதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை.obama and modiவியப்பு என்னவென்றால் அந்த நாட்டின் எதிர்க்கட்சி கூட அல்ல ஆளுங்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, அதுவும் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா அவர்களே மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் உரிமை கேள்விக்குள்ளாகி இருப்பதைச் சுட்டிக்காட்டி CNN என்னும்‌ பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்ததுதான்.

பாஜகவுக்கும் நரேந்திர மோடிக்கும் எதிராக கருத்துச் சொல்பவர் எல்லாம் ஆன்ட்டி இந்தியர்கள் என்றும் அவர்களுடைய மத அடையாளத்தை வைத்து இந்து விரோதிகள் என்றும் அடையாளப்படுத்துவது

இந்தியாவில் இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இங்குள்ளவர்களுக்கு இது பழகி போனது. இன்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவையும் அதேபோல் அவருடைய பெயரில் இருக்கக்கூடிய “உசைன்” என்பதைச் சுட்டிக்காட்டி, அதனால்தான் அவர் மோடியை விமர்சிக்கிறார் என்று இப்போது பாஜகவினர் சொல்லத் தொடங்கி விட்டனர். இதைத் தொடங்கியது, பெயர் தெரியாத சமூக ஊடகத்தினர் அல்ல, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் - அசாம் மாநிலத்தின் பாஜக முதல்வர் ஹிமான்தா பிஸ்வா சர்மா. ஒபாமாவின் கூற்று எவ்வளவு மெய் என்பதை ஓரிரு நாள்களிலேயே பாஜகவினர் மெய்ப்பித்து விட்டார்கள்.

இந்தியாவில் மோடி ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை ஆய்வுகளாக, புள்ளி விவரங்களோடு வெளியிட்டு வந்த அமெரிக்கா, அய்ரோப்பாவைச் சேர்ந்த சில நிறுவனங்களும் இது போன்ற அவதூறுகளுக்கு உள்ளாகின. அதைச் செய்தது பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியோ, சங்க் பரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ அல்ல, இந்தியாவினுடைய குரலாக ஒலிக்கக் கூடிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான்.

அதே வழியில் அமெரிக்காவின் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஒபாமாவையும் இன்று நிதி அமைச்சரும், பாதுகாப்புத் துறை அமைச்சரும், மற்ற பாஜகவினரும் அவதூறு செய்கிறார்கள். இந்தியாவில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்காவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மோடியிடம் கேள்வி எழுப்பிய, Wall Street Journal எனும் பத்திரிக்கையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சப்ரினா சித்திக்கையும் தொடர்ந்து இதே போன்று தாக்கி வருகின்றனர். இதை அமெரிக்க அரசே கண்டித்திருக்கிறது.

இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களையும் பத்திரிக்கையாளர்களையும் மத அடையாளத்தைப் பயன்படுத்தித் தாக்கி வந்த பார்ப்பன, பாஜக, சங்க் பரிவார கும்பல், இந்திய எல்லையைக் கடந்து தங்களை எதிர்ப்பவர்களை எல்லாம் மத அடையாளத்தைக் கொண்டு அவதூறு பரப்பும் மட்டமான அரசியலை உலக அரங்கில் அரங்கேற்றி வருகின்றன.

 சிறுபான்மையினர் உரிமை பறிக்கப்படுவது குறித்து ஒபாமா பேசியிருக்கிறார். அவர் வெளிநாட்டுக்காரர். அவருக்கு இவ்வளவுதான் தெரிந்திருக்கிறது. உள்ளூர்க்காரர்களான நமக்குத்தானே மொத்த உண்மையும் தெரியும். இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை மட்டும் பறிக்கப்படவில்லை. இந்துக்கள் என்று நம்பவைக்கப் பட்டிருக்கும் பார்ப்பனர் அல்லாதார் அனைவருடைய உரிமையும் முன்னேற்றமும் இந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் பாதிப்பு அடைந்திருக்கிறது. அதனால்தான் பார்ப்பனர்கள் மோடியின் ஆட்சி தொடர வேண்டும் என்று யாகம் நடத்துகிறார்கள், தொடர்ந்து உலக நாடுகளுடனும், பெரு நிறுவனங்களுடனும் தரகு வேலை பார்த்துவருகிறார்கள். இந்த அமெரிக்கப் பயணமும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.

கோலாகலமாகக் காட்டப்பட்ட மோடியின் அமெரிக்கப் பயணம் உண்மையில் அலங்கோலமானது!

- மா.உதயகுமார்

Pin It