2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அமைந்தது. இந்த ஆட்சி பத்தாண்டுகள் தொடர்ந்தது. ஆனால் காங்கிரசுத் தலைமையிலான இந்த ஆட்சியில் ஒன்றிய அரசில் பெரும் ஊழல்கள் வெடித்துச் சிதறின. அலைக்கற்றை, நிலக்கரி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் எனப் பல ஊழல்கள் தொடர் வரிசையில் நின்றன. 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் வாஜ்பாய்  தலைமையில் பாஜக படுதோல்வியுற்ற பிறகு மீண்டும் பாஜக 2014இல் தனித்து ஆட்சியமைக்கும் அளவிற்குச் செல்வாக்குப் பெற்றதற்கு இந்த ஊழல்களே காரணங்களாக அமைந்தன.

நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிசு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில்  பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதிலும் பொதுத் துறை பங்குகளை விற்பதிலும் அலைக்கற்றை போன்ற தகவல் தொழில் நுட்பச் சேவைகளை விற்பதிலும் ஒன்றிய  அரசு உரிய கவனம் செலுத்தவில்லை. இவைகளைப்  பொதுத் துறையிலேயே வைத்துக் கொண்டு அதன் இலாபத்தைப் பெருக்கிக் கல்வி சுகாதாரம் மற்றும் சமுதாய நலத் திட்டங்களைச் சிறப்பான முறையில் நிறைவேற்றி யிருக்கலாம் என்றார். சான்றாக நிலக்கரி ஊழலில் பல லட்சம் கோடி அளவிற்கு ஊழல்கள் நடைபெற்று, தற்போது ஒன்றிய அரசின் உயர் அலுவலர்க்குச் சிறைதண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் அமைச்சர், பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.  மும்பை யில் இருந்து வெளி வரும் அரசியல் பொருளாதார ஏட்டில் பல புள்ளிவிவரங்களோடு ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்கள் மின் பற்றாக்குறையால் வேளாண் தொழில் கட்டமைப்புத் துறைகளில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டது. இந்த நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் எடுத்த தனியார் நிறுவனங்கள் ஊக வணிக நோக்குடன் அதிக விலை கிடைக்கும் என்ற நோக்கில் நிலக்கரியை எடுக்காமலேயே வைத்திருந்தனர். இதனால் மாநிலங்களில் இயங்கி வரும் மின் உற்பத்தி நிறுவனங்கள் அதிக விலைக்கு நிலக்கரியை வாங்கி உற்பத்தியில் ஈடுபட்டன. இதன் காரணமாக சராசரியாக ஒவ்வொரு இந்தியருக்கும் மின்கட்டணம் ரூ.1 முதல் 2 வரை வரை உயர்ந்தது என்று இவ்வேடு சுட்டியுள்ளது.

இதே போன்று காங்கிரசின்  நாடாளுமன்ற உறுப்பினர்  சுரேஷ் கல்மாடி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தலைவராக இருந்த போது பல விளையாட்டுகளுக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கியபோது பல கோடி ஊழல்கள் நடைபெற்றன என்பதை நீதிமன்றம் வழியாக மெய்ப்பிக்கப்பட்டது. தரமற்ற விளையாட்டு அரங்குகளைக் கட்டியதையும் பல வெளிநாட்டு விளை யாட்டு வீரர்களுக்கு உரிய தேவையான  வசதிகளைச் செய்யவில்லை என்றும் பல நாடுகள் இந்தியாவின் மீது வெளிப்படையாகக்  குற்றம் சாட்டின. இதுபோல்தான் பல ஊழல்கள் தலைவிரித்தாடின. தற்போது ப.சிதம்பரத்தின் மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதும் வருமானவரித்துறையும் அமலாக்கத்துறையும் பல வழக்குகளைப்  போட்டுள்ளன. இவர்கள் மீது ஹவாலா மோசடி வழக்கும் தற்போது விசாரணையில் உள்ளது. அலைக்கற்றை ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா அண்மையில் புலனாய்வு விசாரணை மன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறைக்குத் தெரிந்த பல தகவல் களை வழக்கில் மறைத்துவிட்டது என்று வெளிப்படை யாகக் குற்றம் சாட்டினார்.

சான்றாக அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சர்களாக இருந்த பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலோடுதான் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது என்று வாதிட்டார். பொதுவாக நேரு காலத்தில் இருந்து, பல ஊழல்கள். நேரு சாஸ்திரி இந்திரா காந்தி போன்ற தலைவர்கள்,  பிரதமர்களாக இருந்த நேரத்தில் நடைபெற்ற பல ஊழல்களில் பிரதமர் அலுவலகம் எந்த நிலையிலும் குற்றச்சாட்டிற்கு உள்ளானது இல்லை. ஊழல்கள் பெருகுவதற்கு முதன்மையான காரணம் 1991இல் பிரதமர் நரசிம்மராவும் நிதியமைச்சர் மன்மோகன்சிங்கும் தாராளமய-தனியார்மய-உலகமய திட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்திய காரணத் தினால், ஒன்றிய அரசில் உள்ள அமைச்சரவை ஒவ் வொன்றிலும் தங்களுக்குச் சாதகமான  முடிவுகளை  எதிர்நோக்கிப் பல உள்நாட்டு-பன்னாட்டு  நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின. இவர்கள்  பல தரகர்களையும் உருவாக்கினார்கள்.

சான்றாக  டாடா நிறுவனம் வெளிப் படையாகவே நீரா ராடியா என்பவரைப்  பணியமர்த்தி அரசின் கொள்கை முடிவுகளை மாற்ற முயன்றார் என்பதைப் பல ஆதாரங்களுடன்  பல ஊடகங்கள் வெளியிட்டன. ரிபப்ளிக் என்ற ஆங்கிலத் தொலைக்காட்சியைத் தற்போது நிறுவி செய்திகளை வெளியிட்டு வரும் அர்னாப் கோஸ்வாமி உயர் பதவிகளில் இருப்பவர்களின் பல ஊழல்களைச் செய்தி ஒளி ஊடகங்கள் நடுநிலையோடு வெளிப்படுத்தவில்லை பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுடனும் அரசியல் தலைவர்களுடனும் இந்த ஊடகங்கள் பணத்திற்காகத் தங்கள் செய்திகளையே நடுநிலையோடு வெளியிடவில்லை என்று குற்றம் சாட்டி, புதிதாக ஒளி ஊடகத்தை நிறுவியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எண்ணற்ற தனியார் நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் ஒன்றிய அரசின் வரிச் சலுகைகளைப் பெறுவதற்கும் மற்ற அடிப்படை வசதி களைக் குறைந்த விலையில் பெறுவதற்கும் தாராளமாகப் பெரும் பணத்தைச் செலவிட்டன என்பதை அமெரிக்காவின் என்ரான் நிறுவனம் 1990களில் வெளிப்படையாக கூறியது. அரசியல்வாதிகளை-உயர் அலுவலர்களைச் சரிபடுத்துவதற்காகவும் தங்களுக்குச் சாதகமான முடிவுகளை  எடுப்பதற்காகவும் ரூ.1000 கோடியை ஒதுக்கியதை இந்நிறுவனம் வெளிப்படை யாகவே செய்தியாக வெளியிட்டது. ஒன்றிய அரசு ஊழலில் ஊறித் திளைக்கும்போது, மாநில அரசுகளும் தங்கள் தங்கள் பங்கிற்கு ஊழல் நிறைந்த நிர்வாக அமைப்பை உருவாக்கின.  இன்றைக்கு எந்த நிர்வாகத்திலும் உழல் இல்லை என்று வெளிப்படையாகவே எந்த மாநிலமும் முன்வந்து சொல்ல இயலாத நிலைக்கு இந்த உலகமயமாதல் தனியார்மயமாதல் தாராளமயமாதல் கொள்கை அரசியல் தலைவர்களை ஊழல்வாதிகளாக மாற்றிவிட்டது.

சான்றாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 1999ஆம் ஆண்டு மனித மேம்பாட்டு அறிக்கையில் பெருகி வரும் உலக ஊழலைக் கடுமையான முறையில் சுட்டிக்காட்டி உலக அளவில் இதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தது. குற்றவாளிகள் தான் உலகமயமாதலில் பயன்களைப் பெருமளவில் அனுபவித்து வருகின்றனர். கட்டுப்படுத்தப்படாத மூலதனச் சந்தை, தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள் குறைந்த செலவில் போக்குவரத்து வசதிகள் கிடைப்பதால் தடையற்ற முறையில் வேகமாக வளர்ந்து வரும்  போதைப் பொருள் சந்தை வணிகம் பெருகி வருகிறது. ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்குத் தேவையான புத்தகங்களுக்கும் வேளாண் வளர்ச்சிக்குத்  தேவையான விதைகளுக்கும் மாற்றாக கருப்புப் பணமும் ஆயுதங்களும்தான் எளிதாகப் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. உலக ஒட்டு மொத்த வருமானத்தில் 2.5 விழுக்காட்டிற்குச் சமமான அளவிற்குப் பன்னாட்டு அளவில் கருப்புப் பண நடமாட்டம் இருப்பதாகப்  பன்னாட்டு நிதியம் கணக்கிட்டுக் குறிப்பிட்டுள்ளது. இவ்விதக் குற்றவியல் நடவடிக்கைகள் கணினி விசைப் பலகை யின் பொறியைத் தொட்டு இயக்குவதன் வழியாக  ஒருசில நொடிகளிலேயே நடந்தேறி வருகின்றன.

இதனடிப்படையை ஆய்ந்து பார்த்தால் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக இவ்வகை குற்ற நடவடிக்கைகள் வழியாக வரும் வருமானம் ஆண்டிற்கு ரூ.67 இலட்சம் கோடியைக் கடந்து குற்றவாளிகளின் ஆதிக்கம் ஒரு சக்திவாய்ந்த மையமாக வளர்ந்து வருகிறது. பன்னாட்டளவில் குற்றங்களை நடத்திவரும் இத்தகைய கும்பல்கள் அரசியலை வணிகத்தைக்-காவல்துறையை-இணையதளத்தைத் திறன்மிக்க வகையில் குற்ற அமைப்புகளாக மாற்றித் தங்களின் குற்ற நடவடிக்கைகளின் எல்லையை மிக ஆழமான முறையில் விரிவுப்படுத்தி வருகின்றன.

மேற்குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில்தான் இன்றைக்கு உலகில் மூன்று விதமான பொருளாதார அமைப்புகள் இயங்கி வருகின்றன. ஒன்று அரசு சார்ந்த வேளாண் தொழில் சேவையில் ஈடுபட்டு நாட்டு வருமானத்தை உற்பத்தி செய்யும் பிரிவினர் உருவாக்கும் பொருளாதார அமைப்பு, உற்பத்திக் காரணிகளைத் தங்கள் வசப்படுத்திக் கொள்ளப் போட்டியிடும் உள்நாட்டுப் பன்னாட்டு நிறுவனங்கள், தொழில் சட்டத்தில் இருந்து வரிச்சட்டம் வரை தங்களுக்கு அரசு ஆதரவாக  இருப் பதற்காக கொடுப்படும் கையூட்டுகளை வைத்துப் பணத்தை மென்மேலும் பெருக்கி கருப்புப் பண பொருளாதாரத்தை உருவாக்கும் இரண்டாம் அமைப்பு. கணக்கில் வராத பணத்தையும் மற்ற விலைமிக்க தங்கம் வைரம் போன்ற பொருள்களைக் கடத்துவதும் இறக்குமதி செய்வதும்  இத்தகைய நாட்டு விரோத, பொருளாதார விரோத நடவடிக்கைகளை உலக அளவில் அந்தந்த நாடுகளில் உள்ள வங்கிகளில் மற்ற பொருளாதார போலி அமைப்புகளில் இந்தப் பணத்தை எடுத்துச் சென்று கருப்புப் பணப் பேரரசை உருவாக்கும் படித்த தொழில் நுட்பம் அடங்கிய மூன்றாவது அமைப்பாகும். இந்த மூன்று அமைப்புகளில் இரண்டு மற்றும் மூன்றாவது அமைப்புகள்தான் உலகமயமாதல் கொள்கையைப் பயன்படுத்தி இந்தியாவிலும் உலக அளவிலும் ஊழல்களைச் செய்து வருகின்றன. 

2014ஆம் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளில் பிரதமர் மோடி தனது கருப்புப் பணத்தைக் கைப்பற்றி எழைகள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 இலட்சம் செலுத்துவேன் என்றும், ஆண்டுக்கு ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்றும் குறிப்பிட்டார். ஆனால் இந்தக் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளில் ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பால் ஏழை நடுத்தர வர்க்கத் தினர்தான் அலைகழிக்கப்பட்டனர். வங்கிகளின் வாசல் களிலேயே 134 பேர் இறந்தனர். தமிழ்நாட்டில் அண்மை யில் கைது செய்யப்பட்ட  சேகர் ரெட்டி போன்றவர்கள் பழைய ரூ.500 ரூ.1000 நோட்டுகளுக்குப் பதிலாகப் புதிய நோட்டுகளை எளிதாக மாற்றி வெற்றி கண்டனர். இது ஒரு பெரு வெள்ளத்தின் சிறு துளியாகும்.

இதனால் இன்றுவரை ஒன்றிய அரசு வெளிப்படை யாகக் கருப்புப் பண நடவடிக்கையால் அரசிற்கு வந்த மொத்தக் கருப்புப் பணத்தொகையின் அளவை வெளியிட மறுக்கிறது. காரணம் பிரதமருக்கு நெருங்கிய குஜராத் நண்பர்களான அம்பானி, அதானி போன்றவர்களே பொதுத்துறை வங்கிகளில் இலட்சங் கோடி அளவில் கடன் பெற்றுத் திரும்ப அளிக்காமல் வெளிப்படையாகவே  இயங்கி வருகின்றனர். கோதாவரி ஆற்றுப்படுகையில் அம்பானி  நிறுவனம் எரிவாயுவைத் திருடிய வழக்கு, அதானிக் குழுமம் 300 கோடி முதலீட்டைப் போலியாகச் செய்து ரூ.3000 கோடி அளவிற்கு வரிச்சலுகைகளைப் பெற்றது போன்ற பல ஊழல் குற்றச்சாட்டுகளை மும்பையில் இருந்துவரும் அரசியல் பொருளதார ஏடு வெளியிட்டது. ஒன்றிய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற அறைகூவலையும் விடுத்தது. ஊழல் நடவடிக்கைகளில் கூட நீதிமன்றங்கள் சரிவர இயங்க வில்லை என்பது ஊழல் வழக்குகள் விசாரணையின் போதும் தீர்ப்பின்போதும் கீழமை நீதிமன்றங்களில் இருந்து உயர்-உச்ச நீதிமன்றங்கள் வரை பல முரண் பாடுகளும் முரண்பட்ட தீர்ப்புகளும் வெளி வந்துள்ளன.

சான்றாக கீழமை நீதிமன்ற நீதிபதி குன்கா அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மீது வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதமும் ஊழல் பணத்தில் வாங்கிய சொத்துகளைக் கைப்பற்றவும் நடவடிக்கைகள் எடுக்கவும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கினார். 2014 செப்டம்பர் மாதம்  உடனடியாக உச்ச நீதிமன்றம் வரை சென்ற ஜெயலலிதா 22 நாட்களிலேயே பிணையில் வெளிவந் தார். அன்றைய தலைமை நீதிபதி தத்து இந்தப் பிணை விசாரணையை வெளிப்படையாகவும் மேற்கொள்ள வில்லை வெளிப்படையாகவும் தீர்ப்பை வழங்கவில்லை.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ஜெயலலிதாவின்  மேல் முறையீட்டு மனுவினை கர்நாடக உயர்நீதிமன்றம் 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி குமாரசாமி நீதிபதி குன்காவின் தீர்ப்பினை அடியோடு மாற்றி, ஜெயலலிதா சசிகலா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தார். கர்நாடக அரசு 2015 ஜூன் திங்களில் நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போதே ஜெயலலிதாவிற்கு எதிராக வாதாடிய பின்பு பாஜகவின் வலியுறுத்தியதால் மாற்றப்பட்ட பி.வி.ஆச்சார்யா எல்லாம் நினைவிலிருந்து (All From Memory) என்ற தனது நூலை வெளியிட்டார். அந்நூலில் கர்நாடக பாஜக அரசும் ஜெயலலிதாவின் ஆள்களும் எவ்வாறு தன்னை மிரட்டினார்கள் என்பதை வெளிப்படையாகக் குறிப்பட்டுள்ளார்.

இந்நூலைப் புதுதில்லியில் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்ட கால வரையறைக்குள் ஆச்சார்யா தனது வாதுரையை எழுத்துவடிவில் அளித்ததோடு வாதங்களை முன்வைத் தார். இந்த வழக்கு 2016 ஜூன் 7 அன்று நிறைவு செய்யப்பட்டு விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்று மாதங்கள் இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிடவில்லை. ஜெயலலிதா செப்டம்பர் 2016 உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். 75 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 5 2016 அன்று மறைந்தார். வழக்கின் இறுதித் தீர்ப்பு 21 ஆண்டுகளுக்குப் பிறகு 14 பிப்ரவரி 2017 அன்று, சசிகலா இளவரசி சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா நான்காண்டு சிறைத்தண்டனையும் தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு நீதிபதி குன்காவின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய ஆச்சார்யா அண்மையில் ஆங்கில இந்து இதழில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

அக்கட்டுரையில் சட்டப்படி  உச்சநீதிமன்றம் ஜெயலலிதா இறந்துவிட்டார் என்ற காரணத்திற்காக அவரது குற்றச் செயலுக்குத் தணிப்பை (abatement) வே) அளித்தது தவறு. இந்திய உரிமையியல் சட்டத்தில் இது போன்று தணிப்பு அளிப்பதை அனுமதிக்கவில்லை இந்த அவசர தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட இயல் நெறிகளில் இல்லவே இல்லை (Order XXII Rule 6 of the Code of Civil Procedure in unambiguous terms states that there will be no abatement of an appeal if the death is after judgment is reserved. It further clarifies that such judgment pronounced shall have the same force and effect as if the judgment was delivered on the date on which the arguments were concluded…. The abrupt conclusion of the Supreme Court that the appeal against Jayalalithaa has abated ignores the above said principle of law. It is also relevant to note that the case was never posted for further hearing after the death of the accused. the Hindu, April, 18, 201) என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறாக 21 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்குவதில் காலம் கடத்தி, ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தீர்ப்பு வழங்கியதால், சசிகலா அவரது உறவினர்கள் மட்டும் சிறைத்தண்ட னைக்கு உள்ளானதும் பல ஐயங்களைச் சட்ட வல்லு நர்கள் மத்தியிலே ஏற்படுத்தியுள்ளது. சாதிக்கு ஒரு நீதியா? என்ற வினாவும் எழுகிறது.

எனவே ஊழல் எப்படியெல்லாம் புரையோடியிருக்கிறது என்பதை நிர்வாக-நீதிமன்ற-சட்டமன்ற நடவடிக்கைகள் உறுதி செய்கின்றன. 2013இல் உருவாக்கப்பட்ட லோக்பால் சட்டம் பிரதமர் மோடி அரசை உச்ச நீதிமன்றம் கண்டிக் கின்ற அளவிற்கு சாக்குப் போக்குக் காட்டி இன்றுவரை நடைமுறைபடுத்தாமல் இருப்பது யாருக்காக? என்ற கேள்வியும் எழுகிறது. ஊழலின் உறைவிடம் எதிர்கட்சி கள்தான் என்பதைப் போன்ற  தோற்றத்தை அளிப்பதற்கு  மோடி வருமானவரித் துறையினரையும் அமலாக்கத் துறையினரையும் மத்தியப் புலனாய்வு துறையினரையும் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகள் உண்மையோ என்று ஐயங்கொள்கிற அளவிற்கு, லோக்பால் சட்டம் நடைமுறைக்கு வராமல் காலம் தாழ்த்தப்படுகிறது. ஊழல் முழு அளவில் ஏழைகளையும் நடுத்தர வர்க்கத்தின ரையும்தான் பெருமளவில் பாதித்து வருகிறது. ஊழல் பொருளாதாரத்தின் அடிப்படை நெறிகளையே சிதைத்து வருகிறது. கள்ளச்சந்தை கருப்புப்பணம் போன்ற  நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் விலைவாசி உயர்வைப் பற்றிக் கவலை கொள்வதே இல்லை. இதற்கு நேர்மாறாக நடுத்தர வர்க்கம் ஏழைகள் விவசாயிகள் பெருமளவிற்குப் பணவீக்கத்தாலும் புதிய புதிய வரிகளாலும் பாதிக்கப் படுகின்றனர்.

இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்தியா வின் 53 விழுக்காடு செல்வமும் சொத்துக்களும் 1 விழுக்காடு பெரும் பணக்காரர்களிடம் முடங்கியிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் சுழற்சியையே முடக்கிப் போட்டுள்ளது. இந்த நிலைகளை எல்லாம் கொஞ்சமாவது மாற்றிட ஒன்றிய அரசிற்கு முற்போக்கான லோக்பால் சட்டமும், மாநிலங்களுக்கு லோக்ஆயுக்தா சட்டங்களும் முழுத் தீர்வாக அமையுமா என்ற வினாவும் எழுகிறது. ஊழல் முதலாளித்துவத்தின் ஒரு தீமை (Corruption is an evil of capitalism) என்றார் மாவோ. வாடி வதங்கி வாழும் பெரும்பான்மையான மக்களின் மீதுதான் இந்த முதலாளித்துவத்தின் தீமையும் சீண்டிப்பார்க்கிறது.

Pin It