குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் இனப்படுகொலை நிகழ்ந்த 2002ம் ஆண்டைத் தொடர்ந்து கடந்துபோன துக்ககரமான 10 வருடங்களில் மோடியின் அரசு இயந்திரம், பாஜக வின் செல்வச் செழிப்பு, குஜராத் இந்துக்களின் மோடி ஆதரவு ஆகியவற்றை பயன்படுத்தி பல்வேறு மட்டங்களில் மோடியை பொது அரங்கிற்கு கொண்டு வருவதற்கான பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கென அனைத்துவிதமான அரசியல் அஸ்திரங்களும் பொருளாதார செலவீனங்களும் இந்தியாவிலும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயினும் இந்த முயற்சிகள் யாவும் எவ்வித பலனையும் தரவில்லை என்றே சொல்ல வேண்டும்.

மோடிக்கு விசா தர 6 வருடங்களுக்கு முன்பே அமெரிக்கா மறுத்து விட்டது. பிரிட்டனோ மோடியின் வருகைக்கு மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்த பின்பே அனுமதித்தது. இந்தியாவிற்குள்ளும் விரும்பிய மாநிலத்திற்குள் வருகை தர முடியாத நிலைமை மோடிக்கு! இந்தியாவில் பாஜக ஆளும் சில மாநிலங்களுக்கு மட்டுமே மோடி சென்று வர முடிகிறது.

முஸ்லிம்கள் அல்லது மதச்சார்பற்ற இந்து பெருமக்கள் போதுமான எண்ணிக்கையில் வாழுகின்ற மாநிலங்களான அஸ்ஸாம், மேற்கு வங்கம், பீஹார், உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களில் மோடி கால் வைக்க முடியாத நிலை தான் குஜராத் கலவரம் நிகழ்ந்து 10 ஆண்டுகள் கடந்த பின்பும் நிலவுகிறது.

தமிழகத்தில் ஜெயலலிதா மோடிக்கு ஆதரவு தருவதன் காரணமாக மிகுந்த பாதுகாப்புகளோடு அரசு விழாக்கள் அல்லது சில தனிப்பட்ட உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மோடியால் முடிகிறது. அதுவும் திருடனைப்போல கமுக்கமாக வந்து செல்கிறார். அவர் தமிழகத்தில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அவருக்கு தமிழக மக்களிடம் கிடைக்கும் மரியாதை என்ன என்பது தெரியும்.

ஆயினும் நாம் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் மோடியால் சகஜமாக வந்து செல்ல இயலாத நிலைதான் உள்ளது.

இந்தியாவில் முன்னிலை ஊடகங்கள், உச்ச நீதிமன்றம், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை 2002 முஸ்லிம் இனப்படுகொலையில் இருக்கும் மோடியின் பங்கைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. கெடு வாய்ப்பாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஏனோ மோடி மீது சி.பி.ஐ. விசாரணை வைக்க முன் வரவில்லை. இது மோடிக்கு சாதகமாக இருக்கிறது.

மோடியின் கொடுஞ்செயல்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு மிகச் சிரமத்திற்கிடையேதான் சென்றடைகின்றன. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் வசிக்கும் பெரும்பாலான இந்துக்களும், குஜராத்தி இந்துக்களும், பாஜக ஆதரவாளர்களும் மோடியின் ‘கொடுங்கோலன்' இமேஜை மாற்ற விரும்புகின்றன. இவர்களிடம் இருந்து பெருமளவிலான நிதிகள் பாஜக மற்றும் இந்துத்துவா இயக்கங்களுக்கு வருகின்றனர்.

இவர்கள் பெருளாதார வளத்துடனும், அமெரிக்கா, பிரிட்டன் அரசியல்வாதிகளுடனும் நல்ல தொடர்பிலும் இருக்கின்றனர். இந்த அரசியல்வாதிகளின் தொடர்புகள் மூலம் அவ்வப்போது மோடிக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்த தொடர்ந்து இவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக மற்றும் மோடிக்கு உதவும் வகையில் முஸ்லிம்களின் எதிரிகளான யூதர்களிடமும் இவர்களது தொடர்புகள் ஆழமாக உள்ளன.

இதுபோன்ற தொடர்புகளாலும், பெரும் பொருளாதாரப் பின்னணியோடும் இவர்கள் செயல்பட்டு வந்துபோதிலும் 2002ல் மோடியின் மீது படிந்துவிட்ட கொடுங்கோலன் என்ற கறையை துடைத்தெரிய இயலவில்லை என்பதுதான் யதார்த்தம்!

ஏனெனில் 2002 முஸ்லிம் இனப்படுகொலை சம்பவத்தில் மோடிக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் மோடி மீது ஏற்பட்டு விட்ட கறையை மறைக்க முயற்சிப்பது மிகக் கடினமானது.

இதன் மூலம் நாம் சொல்ல வருவது யாதெனில், முஸ்லிம்கள் மோடிக்கு எதிரான போராட்டத்தை வீரியம் குறையாமல் முன்னெடுக்க வேண்டும்; ஊடகங்கள் மோடிக்கு எதிராக அழுத்தத்தை தொடர்ந்து கொடுத்து வர வேண்டும். இதன் கார ணமாக மோடி குஜராத் எல்லைக்குள்ளேயே முடக்கப்பட வேண்டும். இது படித்த மற்றும் அறிவுஜீவி முஸ்லிம்களின் பொறுப்பாகும்.

மோடியின் குற்றங்களுக்காக மோடியை சட்டத்திற்கு முன்னால் இழுத்து வந்து நிறுத்துகிற வீரியமான காரியங்களில் இறங்கவில்லை என்றால் முஸ்லிம்கள் வாழ்வதில் அர்த்தமில்லை!

பாஜகவுக்குள் இண்டு பிரிவினர் உண்டு. ஒன்று மோடியை பாஜகவின் அரசியல் நம்பிக்கையாக கருதும் ஒரு பெரும் கூட்டத்தினர், மற்றொன்று மோடியை கண்மூடிப் பின்பற்றும் ஆதரவாளர்கள். பாஜக உடைந்தால் மோடியின் பக்கம் சாயும் பிரிவினர் இவர்கள். ஆனால் பாஜகவின் மூத்த முக்கிய தலைவர்களோ, முஸ்லிம்களும், மதச்சார்பற்ற இந்துக்களும் மோடியை மன்னிக்காதவரை அவர் (2002க்கு முன் இருந்த) பழைய நிலைக்கு திரும்ப முடியாது என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர்.

இதன் காரணமாகவே ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படுகிறது என்றும், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களுக்கு பாஜக தள்ளப்படுகிறது என்பதையும் இவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். இதனடிப்படையில்தான் சமீபத்திய உ.பி., மேற்கு வங்கம், பீஹார், அஸ்ஸாம், கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ‘கிங் மேக்கர்'களாக முஸ்லிம்கள்தான் இருக்கிறார்கள் என்ற செய்தி பாஜகவுக்கு கெட்ட செய்தியாக தெரிகிறது.

இந்தியாவில் மாநிலக் கட்சிகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்ற முக்கிய கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்டுகள், திமுக போன்ற கட்சிகள் அரசியல் நிர்பந்தங்களின்போது கூட பாஜகவையோ, மோடியையோ அரவணைக்க தயக்கம் காட்டி வருகின்றன. இதற்கு காரணம் மோடியையும், பாஜகவையும் முஸ்லிம்கள் மன்னிக்கத் தயாரில்லை என்பதுதான்.

இக்கட்சிகள் யாவும் முஸ்லிம்களின் வாக்குகளின் மூலம் பெரும்பாலும் வெற்றி பெறும் கட்சிகள். அதனால் முஸ்லிம்களின் ஆதரவை அவை இழக்கத் தயாரில்லை.

கடந்த காலங்களில் பாஜகவோடும் பாபரி மஸ்ஜித் இடிப்புக்குக் காரணமான கல்யாண்சிங்கோடும் கூட்டணி வைத்த மேற்கண்ட காட்சிகளில் சில அதன் மூலம் அடைந்த அரசியல் வீழ்ச்சியை அறிந்து வைத்துள்ளன.

ஆக, முஸ்லிம் சமுதாயம் அறிவுப்பூர்வமாக கச்சிதமான அரசியல் தந்திரங்களை கையாள வேண்டும். மோடியின் கொடூர முகத்தை வெளிப்படுத்தியபடியே அருக்கு எதிரான சிந்தனைகளை மக்கள் மையப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மோடிக்கு எதிரான செய்திகளை இஸ்லாமியப் பத்திரிகைகள் முக்கியத்துவத்துடன் வெளியிட வேண்டும். இதன் மூலம் மோடியை குஜராத் எல்லைக்குள்ளேயே நிறுத்த வேண்டும்.

எப்பொழுதெல்லாம் மோடியின் ஆதரவாளர்கள் (டைம் பத்திரிகை, ஃப்ருக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட் போன்று) தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் மோடியை நல்லவராக காட்ட முற்படுகிறார்களோ, மோடிக்கு முக்கியத்துவத்தை உருவாக்கித் தர முயற்சிக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் முஸ்லிம்களும் தங்களுக்கு ஆதரவான சக்திகளை திரட்ட வேண்டும்.

மதச்சார்பற்ற இந்துக்கள், நடுநிலை சிந்தனையாளர்களை அதிகளவில் இணைத்து மோடியின் ஆதரவாளர்களை எதிர் கொள்ள வேண்டும்.

இந்த லாபியை தொடர்ந்து முஸ்லிம்கள் செய்து வர வேண்டும். குஜராத்திற்கு வெளியே கால் வைக்க மோடிக்கு அருகதை இல்லை என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும். நீதி கிடைக்காத குஜராத் முஸ்லிம்களுக்கு இது மன ஆறுதலைத் தரும்.

மோடியைப் புகழும் டைம் பத்திரிகை!

அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் வசித்து வரும் இந்துத்துவா சிந்தனை கொண்டவர்களால் மோடியை சிறந்த தலைவராக சித்தரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. அங்குள்ள அரசியலிலும், ஊடகங்களிலும் இந்துத்துவாவினர் செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள் என்பதற்கு உதராணமாக சமீபத்திய அமெரிக்க ‘டைம்' பத்திரிகை வெளியிட்ட செய்தி ஆதாரமாக உள்ளது.

‘மோடி என்றாலே வணிகம் என்று பொருள். ஆனால், அவரால் இந்தியாவை வழி நடத்த முடியுமா?' என்ற தலைப்பிட்டு மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளது டைம் பத்திரிகை (ஆசிய பதிப்பு)

மேலும், மோடி ஒரு சர்ச்சைக்குரிய, லட்சிய உறுதி கொண்ட, நல்ல அரசியல்வாதி என்றும் மோடியின் சாத்பாவ்னா உண்ணாவிரதம் மாநிலத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்தது என்றும் எழுதியுள்ளது டைம் பத்திரிகை.

முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்துவாக்கள் நடத்திய இனப்படுகொலையின் அதிர்ச்சி 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் விலகாத நிலையில், இரு சமூகங்களுக்கிடையில் சமய நல்லிணக்கம் என்ற பாலத்தை எழுப்பி தன்னை பரிசுத்தமாக்கிக் கொள்ளும் முயற்சியை எடுத்து வருகிறார் மோடி என மோடியை நல்லவராக சித்தரிக்க முயல்கிறது டைம் பத்திரிகை.

இச்செய்திகளுக்கான உபயம் நிச்சயமாக அமெரிக்க இந்துத்துவாக்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையில் டைம் பத்திரிகையை குஜராத் முஸ்லிம்கள் கண்டித்துள்ளனர். அதோடு பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இமெயில்கள் மூலம் டைம் பத்திரிகைக்கு கண்டனத்தை தெரிவிக்குமாறும் அவர்கள் உலக முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவின் ப்ருக்கிங்ஸ் இன்ஸ்ட்டிடியூட் என்ற ஆய்வு நிறுவனமும் மோடியைப் புகழ்ந்திருக்கிறது.

இதுபோன்று மோடி நல்லவராக சித்தரிக்கப்படும்போதெல்லாம் அவரது கொடூர முகத்தை மக்கள் மத்தியில் நினைவூட்டிக் கொண்ட இருக்க வேண்டும். இதனை முஸ்லிம்களும், மதச்சார்பற்ற சக்திகளும் செய்ய வேண்டும்.

முஸ்லிம்களை கொத்துக் கொத்தாக படுகொலை செய்த ஒருவரை டைம் பத்திரிகை எப்படி பெருமைப்படுத்த முடியும்?

Pin It