கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாதைத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், சுங்கச்சாவடி வசூல், அயோத்யா மேம்பாடு த் திட்டம், கிராமப்புற மேம்பாடு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம், ஹெச்.ஏ.எல். விமான இன்ஜின் வடிவமைப்பு போன்ற ஏழு திட்டங்களில் ரூபாய் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி (ரூ. 7,500,000,000,000) ஊழல் செய்திருப்பதாக அண்மையில் வெளியான மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (சி.ஏ.ஜி - CAG) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் பாரத்மாலா திட்டத்தில் ஒரு கிலோமீட்டர் சாலை அமைக்க 15.37 கோடி ரூபாய் என முடிவு செய்யப்பட்ட நிலையில் ஒப்பந்தப் பணியின் நிறைவில் ஒரு கிலோ மீட்டருக்கு 32.17 கோடி ரூபாய் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.modi 425நாட்டின் முதல் எட்டுவழி விரைவுச் சாலையான துவாரகா நெடுஞ்சாலை கட்டுமானத்தில் ஒரு கிலோமீட்டருக்கு 18 கோடி ரூபாய் திட்டச் செலவு என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஒரு கிலோமீட்டருக்கு 250 கோடி ரூபாய் செலவழிக்கப் பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டமான “ஆயுஷ்மான் பாரத்” திட்டத்தில் 24.3 கோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சிகிச்சையின்போது இறந்த 88,670 நபர்களுக்குப் புதிதாகச் சிகிச்சை பார்த்ததாகக் காப்பீடு பெறப்பட்டிருக்கிறது. 7.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அட்டைகள் ஒரே செல்போன் எண்ணைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெறும் ஏழே ஆதார் அட்டை எண்களை வைத்து 4,761 காப்பீடு அட்டைகள் பதிவு செய்யப் பட்டுள்ளது.

ஐந்து சுங்கச்சாவடிகளில் ரேண்டமாக சர்வே செய்ததில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகளில் விதிமுறைகளை மீறி பயணிகளிடம் 132 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

அயோத்யா மேம்பாட்டுத் திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்குப் பணி கொடுக்கும் போது குறிப்பிட்ட அளவு உத்தரவாதத் தொகை செலுத்தப்பட

வேண்டும். 62.17 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் பெற்ற ஒரு ஒப்பந்ததாரர், உத்தரவாதத் தொகையாக 3.11 கோடி செலுத்த வேண்டிய நிலையில் வெறும் 1.86 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளார்.

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கான நிதியிலிருந்து 19 மாவட்டங்களில் தலா 5 இடங்களில் ஒன்றிய அரசின் விளம்பரப் பலகைகள் வைக்க 2.44 கோடி ரூபாய் செலவழிக்கப் பட்டுள்ளது.

 ஹெச்.ஏ.எல். விமான இன்ஜின் வடிவமைப்பில் தவறு செய்ததன் மூலம் 154 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சி.ஏ.ஜி அறிக்கையில் இடம்பெற்றுள்ள மேற்கண்ட தகவல்கள் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் இதைக் கண்டு கொள்ளவில்லை. ஊழலை எதிர்க்க வந்த உத்தமர் போல் தன்னைக் காட்டிக் கொண்ட அன்னா ஹசாரே போன்றவர்கள் தற்போது இருக்கும் இடமே தெரியவில்லை.

கடந்த ஐ.மு.கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டதில் ரூ.1,76,000 கோடி ‘உத்தேச இழப்பு ‘ என்று சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிட்ட போது ஊடகங்கள் இதை ஊதிப் பெரிதாக்கின. நீதிமன்றமோ தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இறுதியில் நீதி வென்றது. பொய் வழக்குப் பொடிப் பொடியானது.

ஆனால் தற்போது உத்தேச இழப்பு என்றில்லாமல் நேரடியாக எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜனநாயகத்தின் அனைத்துத் தூண்களும் மௌனம் காக்கின்றன.

“சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி” என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கை மறந்து ஆட்சியாளர்களுக்கு அஞ்சியும், அவர்களைக் கெஞ்சியும் பிழைப்பு நடத்தும் ஊடகங்களின் உண்மை முகத்தை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டுவோம்.

INDIA கூட்டணிக் கட்சிகளை ஊழல்வாதிகள் என்று குற்றம் சாட்டும் பா.ஜ.க, கடந்த பத்தாண்டுகளில் சி.ஏ.ஜி அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஏழு திட்டங்களில் மட்டுமின்றி பி.எம் கேர் நிதி, ரபேல் விமான ஊழல், வியாபம் ஊழல், 5ஜி ஊழல் எனப் பல்வேறு ஊழல்களைச் செய்துள்ளது. நாம் ஒவ்வொருவரும் ஒரு ஊடகமாக மாறி ஒன்றிய பாஜக அரசின் ஊழலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி அவர்களை ஆட்சியிலிருந்து விரட்டுவோம்!