இந்து மதத்தை ஆட்டம் காணச் செய்தவர்கள் இருவர். ஒருவர் தந்தை பெரியார், அடுத்தவர் அண்ணல் அம்பேத்கர்.

தந்தை பெரியார் திராவிட இயக்கத்தின் ஆணிவேர். நாகர்கள் திராவிடர்கள் என்றும், திராவிடர் - தமிழர் என்பது இரண்டு சொற்கள், ஒரே பொருள் என்றும், ஆரியத்தை எதிர்த்தது திராவிட இனம் என்றும் நிறுவியுள்ளார் அறிஞர் அம்பேத்கர்.

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற அமைப்புகள் மூலம் திராவிடச் சித்தாந்தத்தை எதிர்த்து நின்ற ஆரியப் பார்ப்பனியம், இப்பொழுது புரிந்து கொண்டது திராவிடத்தை வெல்ல முடியாது என்று.

அதனால் தன்னுடன் சேர்த்து அழிக்கும் சூழ்ச்சியைக் கையில் எடுக்கிறது அது.  இதைச் “சேர்ந்தாரைக் கொல்லி’’ என்பார் திருவள்ளுவர்.

நெருப்பு எந்தப் பொருளில் சேர்ந்தாலும், அந்தப் பொருள் அழிந்துவிடும். பவுத்தத்தை எதிர்த்து அழிக்க முடியாத பார்ப்பனியம்; பவுத்தத்தில் சேர்ந்து, அதைத் தன்வயப் படுத்திக் கொண்டு மூலபவுத்தத்தை ஏறத்தாழ அழித்துவிட்டது.

அது போல இப்பொழுது தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரின் வலிமை வாய்ந்த திராவிடச் சித்தாந்தங்களை எதிர்க்க முடியாமல் அவர்களுக்கு இந்துச் சாயம் பூச முயல்கிறது ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்.

நானும் திராவிடன்தான் என்கிறார் எச்.ராஜா. நான் இந்துவாகச் சாக மாட்டேன் என்று சூளுரைத்து, பவுத்தராக மாறிய அம்பத்கருக்குக் காவிச்சாயம் பூசத் தொடங்குகிறார்கள்.

இந்துத்துவாவின் மதத்தை எதிர்த்துப் பேசிய பெரியாரையும், எழுதிய அம்பேத்கரையும் தமிழ்நாட்டில் வாழும் பெரும்பான்மை இந்துக்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இதைத் ‘திராவிட மாடல்’ என்றும் சொல்லலாம்.

அதனால் சேர்ந்தாரைக் கொல்லும் சூழ்ச்சி வலையைக் கையில் எடுக்கிறது சங்க்பரிவாரம். தமிழ் நாட்டில் அது எடுபடாது என்பது உண்மைதான்.

கருப்புக்கு முன்னால் காவியால் நிற்க முடியாது.

இருந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கையாவும் நாம் இருக்க வேண்டும்!

Pin It