ambedkar 243மாணவர் கழகம் நடத்திய கருத்தரங்கில் வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு அம்பேத்கர் சமஸ்கிருத ஆதரவாளரா?

அம்பேத்கர் சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக்க வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் முன்மொழிந்தார் என்று அண்மையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்..ஏ. பாப்டே, பதவி ஓய்வுக்குப் பிறகு சட்டப் பல்கலைக்கழகத் திறப்பு விழாவில் பேசியிருந்தார்.

முரளி மனோகர் ஜோஷி, வாஜ்பாய் அமைச்சரவையில் மனித வளத்துறை அமைச்சராக இருந்த போதும் இதே கருத்தைப் பேசியிருந்தார். பா.ஜ.க. வினரும், ‘சங் பரிவார்’ அமைப்பினரும் சமஸ்கிருதத் துக்கு மட்டும் ஏனைய மொழிகளைவிட கூடுதல் நிதி ஒதுக்குவது பற்றி விவாதங்கள் வரும்போது அம்பேத்கரே சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும் என்று பேசியதாக பதிலளிப்பதை வழக்க மாகக் கொண்டிருக்கிறார்கள்.

இவை அனைத்துமே உண்மைக்கு மாறானவை; அப்பட்டமான பொய் என்று தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 25.4.2021 அன்று மாலை 6 மணியளவில் நடந்த ‘அம்பேத்கர் பிறந்த நாள்’ ‘ஊடகக் கருத்தரங்கில்’ பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விளக்கினார். இது குறித்து அவர் பேசியதாவது:

அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் சமஸ்கிருதத்தைத் தேசிய மொழியாக்கலாம் என்ற கருத்தை முன்மொழிந்தார் என்பது உண்மைக்கு மாறானது; நிர்ணய சபையிலிருந்த வைதிக உணர்வாளர்களிடம் இந்தக் கருத்து வலிமையாக இருந்தது. எம்.கே. மைத்ரா என்பவர் தான் இத் தீர்மானத்தை முன்மொழிந்தார். அம்பேத்கர் முன் மொழியவில்லை. இதற்கு அம்பேத்கர் பதிலளித்துப் பேசிய கருத்துகள் திரித்துக் கூறப்படுகின்றன.

அரசியல் நிர்ணய சபையாயிருந்தாலும்வரைவுக் குழுவாக இருந்தாலும் அதில் உறுப்பினர்களாக இருந்த பெரும்பான்மையோர் பார்ப்பனிய இந்து மதவெறி நிறைந்த பழமைவாதிகளாகவே இருந்தனர்.

தங்களது கருத்துகள் சட்டத்தில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு தீர்மானங்களைக் கொண்டு வந்தார்கள். அவற்றை அம்பேத்கர் நேரடியாக எதிர்த்துப் புறக்கணிக்காமல் சாதுர்யமாக அந்தத் தீர்மானங்களை நீர்த்துப் போக வைத்தார்.

முடிந்த வரை சட்டத்தில் அவை இடம் பெறாமல் பார்த்துக் கொண்டார். அதற்கு அவர் தர்க்கரீதியான வாதங்களை தனது கருவியாக்கிக் கொண்டார். ஒரு பிரச்சினை பிற்போக்குவாதிகளிட மிருந்து வரும்போது உடனே அதை வன்மையாக மறுத்துப் பேசுவதில்லை.

மாறாக, அப்பிரச்சினை குறித்து ஏராளமான செய்திகள் வாதங்களை தனது அறிவாற்றல் கொண்டு அடுக்கிக் காட்டுவார். ஒரு கட்டத்தில் அவர்கள் தங்கள் கோரிக்கையைக் கைவிடச் செய்யும் சூழலை உருவாக்கி விடுவார். உதாரணமாக, மதக் கண்ணோட்டத்தில் பசுவைக் காப்பற்றத் துடித்தவர்கள் பசுக்களைக் காப்பாற்றுவதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து வாதிட்டனர்.

இதை வேறு ஒரு பிரிவினர் எதிர்த்தார்கள். இந்த விவாதங்களில் தலையிடாமல் அம்பேத்கர் ஒதுங்கி நின்று பார்வையாளராகவே இருந்தார். இறுதிக் கட்டத்தில் அடிப்படை உரிமை மனிதர்களுக்கானதே தவிர, விலங்குகளுக்கு அல்ல என்ற வலிமையான ஒரு வாதத்தை முன் வைத்தார்.

பசுக் காவலர்கள் பிடிவாதமாக இருந்ததால் சமரசத்துக்கான ஒரு திட்டத்தை முன் வைத்தார். இந்தப் பிரச்சினையை சட்டத்தில் இணைப்பதற்கு பதிலாக சட்டத்துக்கான வழிகாட்டும் கொள்கைகளில் இணைத்து விடலாம் என்றார். இந்தக் கொள்கைகள் சட்டப் புத்தகத்தில் இருக்கும்; ஆனால் சட்டத்துக்கான உரிமைகளைக் கோர முடியாது.

அதிலும் ‘பசு’வை மட்டும் குறிக்காமல் விவசாயத்துக்குப் பயன்படும் அனைத்து கால்நடைகளையும் விவசாயத்தைப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் காப்பாற்றப்பட வேண்டும் என்று சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். ‘பசுக் காவலர்கள்’ இதை ஏற்றுக் கொண்டார்கள். ‘பசுப் பாதுகாப்பு’ அடிப்படை உரிமைகளில் ஒன்றாக்கி விடும் முயற்சி நீர்த்துப் போகச் செய்யப்பட்டது.

அதேபோல் தான் சமஸ்கிருதத்தைத் தேசிய மொழியாக்க வேண்டும் என்ற தீர்மானம் வந்தபோது அம்பேத்கர் நாசுக்காக இதைக் கையாண்டார். வடநாட்டார் ஆங்கிலத்தை ஏற்க மறுக்கிறார்கள்; தென்னாட்டார் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள்; சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்கி விட்டால் எதிர்ப்பு குறைவாகத் தானே இருக்கும் என்று பார்ப்பனர்கள் முன் வைத்த வாதங்களைக் காது கொடுத்து கேட்டுக் கொண்டார்.

‘நீங்கள் கூறுவது சரி தான்; ஆனால் அதை உடனடியாக எப்படி செயல் படுத்த முடியும்; அதற்கு 3 கட்டங்களைத் தாண்டியாக வேண்டும். ஒன்று சமஸ்கிருதம் தேசிய மொழி என்பதை இந்தியாவில் அனைவரும் ஏற்க வேண்டும்; இரண்டாவது மாநில நிர்வாகத்தில் பணியாற்றுவோர் இம்மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; மூன்றாவது ஆங்கிலம் குறைந்தது 15 ஆண்டுகாலம் அலுவல் மொழியாக நீடித்தால்தான் நிர்வாகத்தை நடத்திச் செல்ல முடியும்.

எனவே 15 ஆண்டுகளுக்குப் பிறகு சமஸ்கிருதத்துக்கு ஆதரவாக அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் தந்த பிறகு மாநிலத்தில் பணியாற்றுவோர் சமஸ்கிருதத்தில் நிர்வாகம் செய்யும் பயிற்சி பெற்ற பிறகு உங்கள் கோரிக்கையை பரிசீலிக்கலாம் என்றார் அம்பேத்கர். வாதங்களை அடுக்கும்போது அதில் உள்ள உண்மைகளை மறுக்க முடியாத நிலையில் சமஸ்கிருத ஆதரவாளர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர். இது தான் நடந்தது.

தொடக்க நிலையிலேயே கடுமையாக எதிர்த்து புறந்தள்ளி விடாமல் நாசூக்காக அணுகி சமஸ்கிருதம் தேசிய மொழியாக்கும் முயற்சியை நிறுத்தினார். நிர்ணய சபையில் அம்பேத்கர் அணுகுமுறை இப்படித் தான் இருந்தது. ஆனால், சமஸ்கிருதத்தின் மீது அம்பேத்கர் தீவிரப் பற்றுக் கொண்டவர் போலவும். அதை தேசிய மொழியாக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம் என்றும் அம்பேத்கரை திரித்து உண்மைக்கு மாறாக ‘சங்கிகள்’ பேசி வருகிறார்கள்.

உண்மையில் சமஸ்கிருதத்தை முறையாகப் பயில அம்பேத்கர் விரும்பினார். வேதம், உபநிடதம் உள்ளிட்ட மூல நூல்களை ஆராய்வதற்கு சமஸ்கிருதத்தைப் படிக்க அவர் விரும்பியபோது பார்ப்பனர்கள் அவருக்கு சமஸ்கிருதத்தைப் பயிற்றுவிக்க மறுத்து விட்டனர்.

‘தீண்டப்படாத’ சமூகத்தில் பிறந்த ஒருவர் சமஸ்கிருதம் படிப்பதை அவர்கள் விரும்பவில்லை. பிறகு ஜெர்மன் நாட்டில் உள்ள ‘பான்’ (bonn) பல்கலைக் கழகத்தில் தான் அவர் சமஸ்கிருதம் கற்றார். இது தான் வரலாறு.

‘சமஸ்கிருதம்’ ஒரு மொழி என்ற எல்லையைத் தாண்டி அதை பார்ப்பன பண்பாட்டின் அடையாள மாகவே அம்பேத்கர் பார்த்தார். ‘தீண்டப்படாதவர்கள் யார்’ என்ற நூலில் அதைத் தெளிவாக விளக்குகிறார். இந்தியா முழுமைக்கும் பேசப்பட்ட மொழி தமிழ்.

‘இந்தியா’ முழுதும் வாழ்ந்தவர்கள் நாகர்கள்; வடநாட்டு நாகர்கள், சமஸ்கிருதப் பண்பாட்டுக்கு அடிமையானார்கள். தென்னாட்டு நாகர்கள் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து தமிழ் மொழியைக் காப்பாற்றினார்கள். சமஸ்கிருதப் பார்ப்பன பண்பாட்டை ஏற்காததே ‘திராவிடம்’ என்றார். ‘திராவிடத்தை’ எதிர்க்கும் சில ‘அம்பேத்கரிஸ்டுகள்’ கூட இருக்கிறார்கள். அவர்கள் அம்பேத்கர் கருத்தை சிந்திக்க வேண்டும். அம்பேத்கர் இவ்வாறு எழுதினார்:

“தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டுமல்ல; அது ஒட்டு மொத்த இந்திய நிலப் பரப்பின் மொழியாகவும் இருந்திருக் கிறது. அது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்ட மொழி. வட இந்திய நாகர்கள் தமிழை கைவிட்டு, அதனிடத்தில் சமஸ்கிருத்தைக் கைக் கொண்டு விட்டனர்.

தென்னிந்தியர்கள் தங்கள் தாய்மொழியான தமிழைக் கைவிடவில்லை. இந்த உண்மையை மனதில் கொண்டால் தென்னிந்தியர்களுக்கு மட்டும் ஏன் திராவிடம் என்று பெயர் சூட்டப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். தாசர்கள் என்பவர்கள் தான் நாகர்கள்.

நாகர்கள் தான் திராவிடர்கள். இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டே இனங்கள் தான். ஒன்று ஆரியர்கள் மற்றொன்று திராவிடர்கள்.” இது தான் ‘சமஸ்கிருதம், ‘திராவிடம்’ குறித்து அம்பேத்கரின் பார்வை, என்றார், விடுதலை இராசேந்திரன்.

கருத்தரங்கில் தமிழ்நாடு மாணவர் கழகத்தைச் சார்ந்த அன்பரசன், ‘ஜாதியை அழித்தொழிக்கும் வழி’ என்ற நூல் குறித்தும், விஷ்ணு, ‘அம்பேத்கரின் பார்ப்பனிய எதிர்ப்பே பவுத்த நெறி’ எனும் தலைப்பிலும், சந்தோஷ், ‘பெண்ணியச் சிந்தனையாளர் அம்பேத்கர்’ எனும் தலைப்பிலும் உரையாற்றினர். கணலி நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It