உயர் கல்வி நிறுவனங்களில் நேரடி நியமனத்தின் போது காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத சூழலில் இடஒதுக்கீட்டு முறையை இரத்து செய்வதற்குப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அண்மையில் பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து எழுந்த கண்டனங்களாலும், தேர்தல் நேரம் என்பதாலும் ஒன்றிய கல்வி அமைச்சகம் யுஜிசியின் பரிந்துரையை மறுத்துள்ளது.

இட ஒதுக்கீடு என்னும் சொல்லைக் கேட்டாலே தாங்கிக் கொள்ள முடியாத எரிச்சலும், வெறுப்பும் பார்ப்பனர்களுக்கு ஏற்படுகிறது. ஆண்டாண்டு காலமாகத் தங்களுக்கு மட்டுமே இடங்களை ஒதுக்கிக்கொண்டவர்களால் இன்று போட்டி போட்டுத்தான் அந்த இடத்தைப் பெற முடியும் என்கிற நிலை ஏற்படும் போது, அவர்களால் பொது சமூகத்தில் அனைவரோடும் போட்டி போட முடியவில்லை.

செண்பகம் துரைராஜன் வழக்கு தொடங்கி இன்று யுஜிசி வெளியிட்டிருக்கும் பரிந்துரைவரை இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்குப் பார்ப்பனர்கள் ஒல்லும் வகையெல்லாம் ஓயாது சூழ்ச்சி செய்து வருகிறார்கள். இந்த சூழ்ச்சிகள் பலவிதம். அவை ஒவ்வொன்றும் ஒரு விதம்.

 ஒருபுறம் யுஜிசி மூலம் சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழிக்க சூழ்ச்சி செய்து வருகிறார்கள். மறுபுறம் விஸ்வகர்மா யோஜனா மூலம் மனுநீதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை வேரூன்றச் செய்யத் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார்கள். பார்ப்பனரலாதாரைக் கல்வியிலிருந்து வெளியேற்றவும், குலத்தொழிலைக் கையிலெடுக்கவும் ஒரே நேரத்தில் பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்துவருகிறார்கள்.

“விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்னும் பழமொழிக்கேற்ப, 2024இல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன விளைவுகளை இந்த நாடு சந்திக்கும் என்பதற்கு, அவர்களே யுஜிசி மூலம் கட்டியம் கூறியிருக்கிறார்கள். தேர்தல் நேரக் கணக்குகளால் இன்று யுஜிசியின் பரிந்துரை மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆட்சி அதிகாரம் மீண்டும் பாஜகவினர் கைகளுக்குச் சென்றால் இடஒதுக்கீடு என்னும் சமூக நீதி குழி தோண்டிப் புதைக்கப் பட்டுவிடும்.

இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும் போதே இதரப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும், பட்டியல் சமூகத்தினருக்கும் நியாயமாகக் கிடைக்க வேண்டிய இடங்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைக்கும் சில இடங்களையும் சூழ்ச்சி செய்து நம் மாணவர்களை அவ்விடங்களில் இருந்து விரட்டி விடுகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் உயர்கல்வி நிலையங்களில் இருந்து இடை நின்ற மாணவர்களின் பட்டியலை, மக்களவையில் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் வெளியிட்டார். அப்பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.students discontinued list in iit iim

இடஒதுக்கீட்டின் மூலம் பார்ப்பனல்லாதார் உயர்கல்வி பயில்வதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பார்ப்பனர்கள் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் வன்மங்களை இப்பட்டியலின் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

உயர் கல்வியைத் தொடர முடியாமல் இடைநிற்கும் அவலம் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் நாம் இந்நிலையை மாற்றியமைக்கப் போராடுகிறோம். அதேபோல் மனுநீதியைப் பின்பற்றும் பார்ப்பனர்களும் இந்நிலையை மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள். நாம் இடைநிற்றலைத் தடுக்கப் போராடினால் அவர்கள் உள்ளே நுழைவதையே தடுக்க ஆவன செய்து வருகிறார்கள். இடஒதுக்கீட்டின் மூலம் இடம் பெற்று படிக்க வந்தால்தானே அவர்களை இன்னல்களுக்கு உள்ளாக்கி இடைநிற்கச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. கல்வி நிலையங்களுக்கு உள்ளேயே வராவிட்டால், பார்ப்பனர்களுக்கு இந்த வேலையே இல்லையே. அவர்கள் ஏகபோகமாக அனைத்தையும் அனுபவிக்கலாமே. அதனால் இடைநிற்றல் என்கிற அளவுக்கு வரவிடாமல் இடத்தையே மறுத்து விடுதல் என்கிற செயல் திட்டத்திற்கு வந்திருக்கிறார்கள்.

தலைமுறை தலைமுறையாகப் பட்டப்படிப்பையே படிக்காதவர்கள் இன்னும் இந்நாட்டில் ஏராளமானோர் உள்ளனர். இடஒதுக்கீட்டைப் பெற முடியாமல் இன்னும் எத்தனையோ பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூகங்கள் தவித்து வருகின்றன. அதனால்தான் உரிய சமூகங்களுக்குச் சரியான விகிதத்தில் இடஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பதற்காக ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து நாம் போராடி வருகிறோம். ஜாதிவாரிக் கணக்கெடுப்பை முன்வைத்து நாம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறிச் செல்ல முயன்றால், இடஒதுக்கீட்டு முறையையே ஒழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு, சமூக முன்னேற்றத்திற்குப் பின்னடைவைப் பார்ப்பனர்கள் ஏற்படுத்துகின்றனர்.

எனவே இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வதே சமூக நீதியைக் காக்க விரும்புவோருடைய முதல் கடமையாகும்.

- உதயகுமார்

Pin It