தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் 2020-21ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதை சுட்டிக்காட்டி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போத்தியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2006ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டுவிட்டது.

பல்கலைக் கழக மான்யக் குழு, இதை துணை வேந்தர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய நிலையிலும் 13 தேசிய சட்டப் பல்கலைக் கழகங்கள் அதை மீறி செயல்பட்டுள்ளன.

ஏற்கனவே மருத்துவ உயர் படிப்புக்கான ‘அகில இந்திய தொகுப்பில்’ பிற்படுத்தப் பட்டோர் இடஒதுக்கீட்டை மறுத்தார்கள். இப்போது சட்டப் படிப்பிலும் கைவைத்து விட்டார்கள்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் நாங்கள் தான் கொடுத்தாம் என்று கூறும் பா.ஜ.க.வினர் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு களில் அலட்சியம் காட்டும் நடுவண் ஆட்சி, உயர் ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டில் மட்டும் தீவிரமாகவும் செலுத்தி வருகிறது.

புதுவை ‘ஜிப்மர்’ மருத்துவக் கல்லூரியிலேயே நடப்பு ஆண்டிலேயே உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்த உத்தரவிட்டுள்ளதோடு அதற்காக மருத்துவக் கல்லூரி இடங்களையும் 200லிருந்து 249 ஆக உயர்த்தியிருக்கிறது.

பொதுவாக மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடம் ஒதுக்கும்போது அதற்கான கட்டமைப்புகளை விரிவாக்க குறைந்தது ஓராண்டு காலம் ஆகும். அதைப் பற்றி கவவைலப்படாமல் அந்த அதீத ஆர்வத்துடன் இந்தப் பிரச்சினையில் நடுவண் ஆட்சி செயல்பட்டு வருகிறது.

விடுதலை இராசேந்திரன்

Pin It