சீன அரசு வாணவேடிக்கைகள், இராணுவ அணிவகுப்பு, தனது இராணுவ வலிமையைப் பறைசாற்றும் நவீனப் போர்த் தளவாட அணிவகுப்பு ஆகியவற்றின் மூலம் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய 60தாவது ஆண்டினை கொண்டாடிக் கொண்டுள்ளது. அதை ஒட்டி உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ ஊடகங்கள் சீனாவின் வளர்ச்சி குறித்து ஒருபுறமும் அங்கு நிலவும் மனித உரிமையை மதிக்காத போக்குகள் போன்றவை குறித்து மறுபுறமும் எழுதித் தள்ளுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று பல நாடுகளில் செயல்படும் திருத்தல்வாத சமூக ஜனநாயக அமைப்புகள் இப்படிப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 60 ஆண்டுகால ஆட்சி அங்குநிலவும் சீன பாணியிலான சோசலிசத்தின் சாதனை என்றெல்லாம் கூறப்படுவதைக் கண்டும் காணாமல் அக்கூற்றுகளின் பாலான ஒருவகை ஒப்புதலை மறைமுகமாகத் தெரிவிக்கின்றன.
இதுதவிர இந்தியாவில் தற்போது ஒருசில வட்டாரங்களினால் தங்களது சீன விரோதப் பிரச்சாரமும் தீவிரமாகவும் பெரிய அளவிலும் செய்யப்பட்டுக் கொண்டுள்ளது. எல ்லைப் பகுதியில் சீனப் படையினரின் அத்துமீறல் என்பன போன்ற செய்திகள் அவ்வப்போது ஒளிபரப்பப்படுகின்றன. இதுதவிர சீனாவுடன் போர் மூண்டால் அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு நமது இராணுவ வலிமை உள்ளதா என்ற அடிப்படையிலான விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.
இந்த அனுமானங்களும் பயப்பிராந்தியை உருவாக்கும் போக்கும் அவசியமற்றவை மற்றும் ஆதாரம் இல்லாதவை என பிரதம மந்திரி உட்பட அமைச்சர்கள் பலர் கருத்துத் தெரிவித்திருந்தாலும் இந்த துஷ்பிரச்சாரம் குறைந்தபாடில்லை. மிக சமீபத்தில் இந்து வெறிவாத பி.ஜே.பி. அமைப்பின் தலைவரும், வகுப்புவாத அரசியலின் வெளிப்படையான பிரதிநிதியுமான நரேந்திர மோடியும் கூட இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் நேருவிற்குப் பதிலாக வல்லபாய் படேல் பிரதம மந்திரியாக ஆக்கப்பட்டிருந்தால் இராணுவ ரீதியாக சீனாவை எதிர்கொள்ளும் அளவிற்கு இந்தியாவை ஒரு இராணுவ சக்தியாக வைத்திருந்திருப்பார் என்று தனக்கு இறக்கைகள் இருந்திருந்தால் நானும் பறந்திருப்பேன் என்ற பாணியில் பேசியுள்ளார். சர்தார் வல்லபாய் படேல் ஒரு குஜராத்தி என்பதால் அவரைப்பற்றி ஒரு உயர்வான கருத்தை வெளியிடுவதன் மூலம் குஜராத்தி உணர்வினை விசிறிவிட்டு அரசியல் ஆதாயம் தேட அவர் முனைவதை இது ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில் ஒரு உழைக்கும் வர்க்க உணர்வினை உயர்த்திப்பிடிக்கும் இதழ் என்ற ரீதியில் சீனாவின் தற்போதய சமூக அமைப்பு உண்மையில் ஒரு சோசலிச அமைப்பா? சீனாவை ஆட்சி செய்துவரும் கட்சி உண்மையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியா? சீனாவில் தற்போது ஏற்பட்டு வரும் பொருளாதார ரீதியான வளர்ச்சி உண்மையில் வளர்ச்சியா? ஒரு கடுமையான சீன எதிர்ப்புப் பிரச்சாரம் தற்போது இந்தியாவில் கிளப்பிவிடப் பட்டுள்ளதன் பின்னணி என்ன? ஆகியவற்றை ஆய்வு செய்வது நமது தார்மீகக் கடமையாகும்.
உலகமயத்தின் விளைவான சீனாவின் பொருளாதார வளர்ச்சி சீனா தற்போது உலகமயத்தின் பயன்களை முழுமையாக அடைந்து தற்போதைய உற்பத்தித் தேக்க நெருக்கடி உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் சூழ்நிலை தோன்றுவதற்கு முன்புவரை முதாளித்துவப் பொருளாதார அகராதியின்படியிலான மிகப் பெரும் வளர்ச்சியினைப் பெற்றுவந்தது. அதன் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறியீட்டு மதிப்பீடு 13 முதல் 18 சதவீதம் வரை இரட்டை இலக்கங்களில் இருந்தது. இவ்வாறு இரட்டை இலக்க வளர்ச்சி விகிதம் எந்தவொரு நாட்டிலும் இந்த மூன்றாவது உலகப் பொதுநெருக்கடிக் காலகட்டத்தில் சாதிக்க முடியாததாகும். இதுதவிர அதன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான ஏற்றுமதி வர்த்தகம் மிகப் பெருமளவில் அதற்குச் சாதகமானதாக இருந்தது. அதன் விளைவாக சீனாவின் அமெரிக்க நாணயக் கையிருப்பு மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. மேலும் சீனாவின் அமெரிக்கக் கருவூலக் கடன் பத்திரங்கள் வாங்குவதில் செய்யப்படும் முதலீடு ஏராளமாக அதிகரித்தது. அமெரிக்கப் பொருளாதார வல்லுனர்களை அது பெரிதும் அச்சுறுத்தியது.
அதுதவிர அமெரிக்கா முன்பு இந்தியா போன்ற பல வளரும் நாடுகளுக்கு செய்ததைப் போல் பல்வேறு உள்நோக்கம் கொண்ட உதவிகளை சீனா பல ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளுக்குச் செய்து வருகிறது. அவ்வாறு செய்வதன் நோக்கம் அந்நாடுகளில் தனது முதலீட்டைக் கொண்டு செல்வதும் அங்கிருக்கக் கூடிய எண்ணெய் வளம் போன்ற தங்கு தடையற்ற உற்பத்திக்கு அத்தியாவசியமான வளங்களைப் பயன்படுத்தும் உரிமையைப் பெறுவதுமேயாகும். உலகம் முழுவதுமே எண்ணைய் வளத்தைக் கையகப்படுத்துவதில் இந்தியாவை மிஞ்சிய போட்டி நாடாக அந்நாடு விளங்குகிறது. லத்தின் அமெரிக்க நாடுகளுடனான அதன் வர்த்தகமும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
சீன பாணியில் சோசலிச வளர்ச்சி என்ற பொய்த்தோற்றம்
இந்த பொருளாதாரக் குறியீடுகளை மையமாக வைத்துப் பார்த்தால் சீனா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக வளர்ந்திருக்கிறது என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் அனைவரின் மனதிலும் உதயமாகவே செய்யும். சிலர் அச்சமூகத்தில் வளர்ந்து வரக்கூடிய போக்குகளையும் அந்நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்தும் குறிக்கோளையும் பார்க்காதிருப்பார்களேயானால் சிலசமயம் இத்தகைய பிரமிக்கத்தக்க வளர்ச்சி அதாவது அமெரிக்கா இருநூறு ஆண்டுகாலத்தில் அடைந்த வளர்ச்சியை 30,35 ஆண்டுகளில் சோவியத் யூனியன் அடைவதற்கு வழிவகுத்த சோசலிசப் பொருளாதார நடைமுறை சீனாவின் தனித்துவத்திற்கு ஏற்ற விதத்தில் அமலாவதின் விளைவாகவே எட்டப்பட்டிருக்கிறது என்று எண்ணவும் இடமுண்டு.
மாவோ பார்த்த சீனாவின் பிரத்தியேகச் சூழ்நிலை
சீனாவின் பாணி என்ற சொல்லாடல் தற்போது நன்கு நிலைபெற்ற ஒன்றாக ஆகியுள்ளது. அவ்வாறு ஆகியுள்ளதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. ஏனெனில் அத்தகைய சொல்லாடலின் செல்லுபடித் தன்மைக்கான அடித்தளம் மாவோ போன்ற மாபெரும் தலைவர்களால் இடப்பட்டது. அதாவது மார்க்சிய சித்தாந்தத்தின் செல்வாக்கு வட்டத்திற்குள் வந்தபின் தோழர் மாவோ அவர்கள் மார்க்சிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளின் படியிலான ஒரு சோசலிச அமைப்பை அந்நாட்டில் நிறுவுவதற்கான வழிமுறைகளைத் தேடினார். தொழில் ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏறக்குறைய எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே அமலாக்கக்கூடிய தன்மை வாய்ந்ததாக இருந்த மார்க்சியப் பொருளாதாரக் கண்ணோட்டத்தை அப்படியே சீன மண்ணில் அமலாக்குவதில் பல சிக்கல்களும் சிரமங்களும் இருப்பதை அவர் நடைமுறை ரீதியாகவும் பகுப்பாய்வுகளின் மூலமும் கண்டறிந்தார். அதாவது உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் முதலாளி வர்க்கத்தை எதிர்த்து நடத்தப்படும் ஒரு சமுதாயமாற்றப் போரின் மூலம் சீன மண்ணில் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருவது மாவோ அவர்களுக்கு அக்கால கட்டத்தில் ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. அதற்குக் காரணம் அங்கு நன்கு வளர்ந்து நிலைபெற்ற, அமைப்பு ரீதியாக ஒருங்கு திரட்டப்படும் வாய்ப்பினைக் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கம் பெரும் எண்ணிக்கையில் அப்போது இல்லை. அது அடிப்படையில் ஒரு விவசாயப் பொருளாதார நாடாக விளங்கியது. தொழிலாளி வர்க்கம் அப்போதுதான் தோன்றி முளைவிடத் தொடங்கியிருந்தது. அந்நாட்டின் அரசியல் அதிகாரம் ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு முதலாளித்துவ அரசின் கைகளில் இல்லை. மாறாக நாடுமுழுவதும் விரவிப் பரவியிருந்த யுத்தப்பிரபுக்கள் என்று அழைக்கப்படும் நிலப்பிரபுக்களின் கைகளில் சிதறி இருந்தது. அன்றைய சமூகத்தின் மிகப்பெரும் உற்பத்தி சாதனமாக விளங்கிய நிலங்கள் பெரும்பாலும் அத்தகைய யுத்தப்பிரபுக்களின் பிடியில் இருந்தன.
இதுதவிர ஜப்பான் ஏகாதிபத்தியம் சீனாவின் பல பகுதிகளை மஞ்சூரியாவில் தொடங்கி கையகப்படுத்தியிருந்தது. ஒட்டுமொத்த சீன நாட்டையே தனது காலனியாக மாற்றும் முயற்சியிலும் ஜப்பான் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. எனவே சீன விவசாயிகள் யுத்தப்பிரபுக்களை தங்களது எதிரி வர்க்கமாகப் பாவித்திருந்தனர். அதைப்போல் சீனாவில் தோன்றி வளரத் தொடங்கியிருந்த முதலாளித்துவ சக்திகளின் ஒரு பிரிவினர் தங்களது சொந்த நாட்டு வளத்தினைத் தாங்கள் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதைத் தடுக்கும் தன்மை வாய்ந்ததாக இருந்த ஜப்பானின் நாடுபிடிக்கும் ஆசைக்கு விரோதமாக இருந்தனர். அத்தகைய முதலாளிகளின் ஆலைகளில் வேலைசெய்யும் தொழிலாளருக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாடும் இருந்தது. இத்தகைய தொழில் வளர்ச்சியடைந்த மேலைநாடுகள் எவற்றிலும் இல்லாத ஒரு பிரத்யேகச் சூழ்நிலை மாவோவின் முன்பு தீவிரத்தன்மை வாய்ந்ததாக இருக்கக்கூடிய ஜப்பானிய ஏகாதிபத்திய எதிர்ப்பு மனநிலையையும் வாழ்வாதாரங்களை அப்பட்டமாகக் கையகப்படுத்திக் கொண்டு பரந்துபட்ட விவசாய மக்களின் வறுமைக்கும் வேதனைக்கும் மூலகாரணமாக இருந்த நிலப்பிரபுத்துவ எதிர்ப்பையும் சுரண்டலையே ஒட்டுமொத்தமாக மனித சமூத்தில் இருந்து அகற்றுவதற்கு வழிவகுத்த ஒப்பற்ற விஞ்ஞான அடிப்படையிலான மார்க்சியக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலான முதலாளித்துவ எதிர்ப்பையும் ஒருங்கிணைத்து சீன நாட்டில் அப்போது நிலவிய சூழ்நிலைக்கு ஏற்ற விதத்தில் ஒரு சமூகமாற்றத்தைக் கொண்டுவரவேண்டியதன் அத்தியாவசியத் தேவையை முன்னிறுத்தியிருந்தது.
காலாவதியாகிப் போன முதலாளித்துவத்தின் கரங்களில் ஆட்சியா?
உலகெங்கிலும் தோன்றியதைப் போல் நிலவுடமைப் பொருளாதாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பணியை முதலாளித்துவ சக்திகளின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு அதற்கு துணைபுரியும் சக்தியாக தொழிலாளி வர்க்கத்தை நிறுத்துவதா என்பது அவர்முன் எழுந்த முதல் கேள்வியாக இருந்தது. அதே சமயத்தில் ஜப்பானிய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு மக்களிடையே மேலோங்கி இருந்தது. அதனைத் தங்களுக்குச் சாதகமாக முழுமையாக பயன்படுத்தி தங்களது ஆட்சியை நிறுவ முதலாளித்துவம் விரும்பியது. அதனை அவ்வாறான அதன் நோக்கத்தை சாதித்துக் கொள்ள அனுமதித்து அதற்கு துணைபோகும் சக்தியாக இருப்பதா என்ற கேள்வியும் அப்போது எழுந்தது. இதில் நிலப்பிரபுத்துவத்தை முடிவுக்குக் கொண்டுவரும் விசயத்தில் ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவம் வளர்ந்தது போல் எவ்வித எதிர்ப்புமின்றி வளரும் அதன்மூலமாக நிலவுடமையை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு சூழ்நிலை மாவோவின் காலகட்டத்தில் சீனாவில் இருக்கவில்லை. அதாவது நிலப்பிரபுத்துவத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரேசக்தி முதலாளித்துவம் தான் என்ற நிலை இருக்கவில்லை. ஏனெனில் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு மாற்றான சோசலிசப் பொருளாதாரமும் அதனை ஆணித்தரமாக நிறுவிய மார்க்சியப் பொருளாதாரக் கண்ணோட்டமும் ஆரம்ப கால முதலாளித்துவ வளர்ச்சியின் போது இருக்கவில்லை.மார்க்சியம் மட்டுமல்ல அது காட்டிய வழியின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சோவியத் அரசும் மாவோ சீனாவின் சமூகமாற்றப் போரை ஆரம்பித்த காலத்தில் இருந்தது. எனவே வரலாற்று ரீதியாகவும் விஞ்ஞானபூர்வக் கருத்தியலின் அடிப்படையிலும் காலாவதியாகிப்போன முதலாளித்துவத்தின் கரங்களில் ஆட்சியதிகாரம் வர அனுமதிப்பதா என்ற கேள்வியும் தோழர் மாவோவிற்கு இருந்தது.
சீனாவின் தனித்தன்மைக்கு ஏற்ற மார்க்சிஸம்
இந்த நிலையில்தான் சீன சமூகம் முதலாளித்துவ அமைப்பிற்குள் போகாமலேயே ஜனநாயகக் கடமைகளையும் பூர்த்தி செய்து சோசலிசத்திற்கு செல்ல வழிவகுக்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக் கண்ணோட்டத்தை தோழர் மாவோ அற்புதமான விதத்தில் வகுத்தெடுத்தார். பாட்டாளி வர்க்கம் மற்றும் அதன் கண்ணோட்டத்தின் தலைமையில் பரந்த அளவில் விவசாயிகளையும் ஏகாதிபத்திய மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பில் ஆர்வம் காட்டிய தேசிய முதலாளிகளையும் ஒருங்கிணைத்தார். வழக்கமான ஜனநாயகப் புரட்சிகள் அனைத்துமே முதலாளித்துவ ஜனநாயகத் தன்மை வாய்ந்தவையாகவும் முதலாளித்துவ நாடுகளை முன்மாதிரிகளாகக் கொண்டவைகளாகவும் அடிப்படையில் இருந்த வேளையில் அதற்கு மாறாக பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை மனதிற்கொண்டும் சோசலிச சோவியத் யூனியனை முன்மாதிரியாகவும் கொண்ட அதே வேளையில் முதலாளித்துவ சக்திகளின் பங்கேற்போடு அன்றைய காலகட்ட சீன சமூகத்திற்குப் பொருத்தமுடையவையாக இருந்த சில முதலாளித்துவ ஜனநாயகக் கடமைகளையும் பூர்த்தி செய்ய வல்லதொரு ஜனநாயகப் புரட்சியைக் கொண்டுவர விரும்பினார். அதன் விளைவாக ஒரு மக்கள் ஜனநாயகத் தன்மை கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சியினை அன்று நிலவிய சீன சமூக அமைப்பின் தனித்தன்மைக்கு ஏற்ற விதத்தில் மாவோ வளர்த்தெடுத்தார். இந்த ஒரு அற்புதமான, வரலாற்று ரீதியிலான மார்க்சியக் கருவூலத்திற்கான வழங்கலே சீனாவின் தனித்தன்மைக்கு உகந்த வகையிலான மாற்றம் என்ற சொல்லாடலை கருத்தியல் அகராதியில் சேர்த்தது.
சீனபாணியில் சோசலிசம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
தோழர் மாவோ அவர்களால் மார்க்சிசம் இவ்வாறு மிகப் பொருத்தமான விதத்தில் சீனாவில் அவரது காலத்தில் நிலவிய பிரத்தியேக சூழ்நிலைகளுக்கு உகந்த வகையில் கொண்டுவரப்பட்டது. மக்கள் சீனம் அமைக்கப்பட்ட பின்னர் சமூகமாற்றப் போரில் நேசசக்தியாக இருந்த சிறுமுதலாளிகளின் நிறுவனங்கள் அரசால் சமூகமயமாக்கப் படவில்லை; சிறுமுதலாளிகள் தங்களுக்கான அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர். அந்த அமைப்புகளைச் சார்ந்த அவர்களின் பிரதிநிதிகளுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் திட்டமிடும் அமைப்புகளிலும் இடமளிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் கம்யூனிஸக் கருத்தோட்டத்தில் உடன்பாடு உள்ளவர்களாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது.
இன்று பலரும் நினைப்பதுபோல் ஒருவர் இருக்கும் பொருளாதார சூழ்நிலையே அசலும் நகலும் அவரது எண்ணப் போக்குகளை அப்படியே தீர்மானிப்பதில்லை. அதாவது பெருமுதலாளிகள் பெரிய அளவில் முதலாளித்துவ சிந்தனைப் போக்கையும் சிறுமுதலாளிகள் சிறிய அளவிலேயே அப்போக்கினையும் கொண்டவர்களாக இருப்பர் என்ற பொது அறிவுக் கண்ணோட்டக் கருத்து தோழர் மாவோ தலைமையேற்று நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்தவில்லை. அக்கட்சி அவ்வாறு எந்த சமூகசக்தியின் மனநிலையையும் அப்படியே நிறுத்தி வைத்துப் பார்க்கவில்லை. ஒவ்வொரு சக்தியின் மனநிலையினையும் அதன் ஓட்டத்தில் பார்த்தது. பொதுவாக சிறுமுதலாளிகளின் மனஓட்டம் ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பில் தாங்கள் தற்போது இருக்கும் சிறுமுதலாளிகள் என்ற நிலையிலிருந்து மாறி எவ்வாறு பெருமுதலாளிகளாவது என்ற அடிப்படையிலேயே இருக்கும். ஆனால் தனியுடமையின் வளர்ச்சிக்கு எதிரானதொரு சமூக அமைப்பில் அந்த மனநிலையை நிலைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். ஆனால் அச்சூழ்நிலையிலும் கூட சிறு நிறுவன அதிபர்களிலும் கூடக் கம்யூனிஸ மனநிலை உள்ளவரே அவர்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் சிறு முதலாளிகளிடம் கொண்டு செல்வதற்கு அது உகந்ததாக இருக்கும். மேலும் குட்டி முதலாளித்துவ ஊசலாட்டங்களைப் படிப்படியாக முறியடித்து, சகல உரிமைகளும், சமூகத்தின் சலுகைகளும் பெறும் தொழிலாளராக இருப்பதே மாறியுள்ள சமூகச் சூழ்நிலையில் சிறுமுதலாளிகளாக இருப்பதை விடப் பாதுகாப்பானதும் மேலானதும் என்ற எண்ணப் போக்கையும் அதன் மூலமே உருவாக்க முடியும்.
இந்த அடிப்படையிலேயே சோசலிச அமைப்பை நோக்கிய விரைந்த பயணம் மாவோவின் தலைமையில் நடந்து கொண்டிருந்தது. சமுதாய மாற்றம், ‘மிகப் பெரிய வளர்ச்சியை முன்னெடுப்பது’ மற்றும் மகத்தான கலாச்சாரப் புரட்சி ஆகிய நடவடிக்கைகளால் இன்னும் வலிமைப் படுத்தப்பட்டு மக்களிடையேயான சமூக ஈடுபாடு எந்த வகையான முதலாளித்துவச் சறுக்கலுக்கும் இடம் கொடாத வகையில் தொடர்ச்சியாகப் பராமரிக்கப்பட்டது. சமூக வளம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் உரிய முறையில் உகந்த வகையில் பகிர்ந்தளிக்கப்படும் சோசலிச சமூக அமைப்பை நோக்கி சமூகம் வெகுவேகமாகச் செல்ல உத்வேகமளிக்கப்பட்டது.
டெங்சியோபிங் என்ற கருப்புப் பூனையினைக் கவர்ந்த முதலாளித்துவ எலி
ஆனால் அவருக்குப்பின் அங்கு ஆட்சியதிகாரத்திற்கு வந்த டெங்சியோபிங் தலைமை சீனாவின் தனித்தன்மைக்கு உகந்த விதத்தில் என்ற எந்த சொல்லாடலை பயன்படுத்தி மகத்தான சமூகமாற்றத்தையும் அதன்மூலம் மார்க்சிய லெனினிய கருவூலத்திற்கு ஒரு சிறப்பான வழங்கலையும் தோழர் மாவோ செய்தாரோ அதே சொல்லாடலைப் பயன்படுத்தி நடைமுறை ரீதியில் சீனாவின் பொருளாதார வளத்தை மேம்படுத்துகிறேன் என்ற பெயரில் சீன சோசலிச சமூக அமைப்பின் அடித்தளத்தையே அடித்துத் தகர்த்து நிர்மூலமாக்கும் முதலாளித்துவ பாணியிலான சீர்திருத்தங்களை கொண்டுவந்து, பூனை கறுப்பாய் இருந்தால் என்ன வெள்ளையாய் இருந்தால் என்ன அது எலியைப் பிடித்தால் போதும் என்ற கூற்றினை முன்வைத்து சீனபாணி வளர்ச்சிப் பாதை என்ற பெயரில் நாட்டைச் சீரழிவுப் பாதைக்குத் திசை திருப்பியது.
ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி அதில் சீனா அடைந்த பலன்
சோசலிசப் பொருளாதார அமைப்பின் இடைத்தரகர் இல்லாத நிலையினால் மலிவான விலையில் உருவான இடுபொருட்களைக் கொண்டு, சோசலிசக் கட்டமைப்பு தொழிலாளரிடையே ஊட்டி வளர்த்திருந்த பொறுப்புடன் வேலை செய்யும் போக்கையும் பயன்படுத்தி மலிவான செலவில் உற்பத்தி செய்யப்பட்ட நுகர்வோர் பொருட்களை வேறெந்த நாடும் விற்க முடியாத மலிவான விலையில் மேலைநாடுகளுக்கு விற்று தனது ஏற்றுமதி வர்த்தகத்தை சீனா வளர்க்கத் தொடங்கியது. பொருளாதாரம் மாற்றப்பட்டதன் மூலம் மக்களின் தேவையைக் குறிக்கோளாகக் கொண்டு பொருள் உற்பத்தியினை நடத்தும் போக்கு கைவிடப்பட்டு லாபத்தை நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவப் பொருளாதாரம் அறிமுகம் செய்யப்பட்டது. டெங்சியோபிங் மறைந்த பின்பும் அவரது இந்த முதலாளித்துவ நடைமுறைகளே இன்று அங்கு இன்னும் அதிகமான விதத்தில் அமலில் இருந்து வருகின்றன.
மேலைநாட்டு முதலாளிகள் தங்களது கனரக இயந்திர உற்பத்திப் பொருட்களையும் நுணுக்கமான மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த உயர் தொழில்நுட்பப் பொருட்களையும் தங்களது சொந்த நாட்டு மக்களின் வாங்கும்சக்தி முதலாளித்துவச் சுரண்டலினால் சூறையாடப்பட்டு அடிமட்டமாகக் குறைந்த நிலையில் அந்நியநாட்டுச் சந்தைகளில் விற்று அதிகபட்ச லாபநோக்கை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினர். அதற்காக அவர்கள் அறிமுகம் செய்த உலகமயம் சீனாவின் நுகர்பொருள் ஏற்றுமதிக்கான உலகச் சந்தையின் கதவுகளை அகலத் திறந்துவிட்டது. இதனை முழுமையாகப் பயன்படுத்தியே நாம் மேலே விவரித்த பொருளாதார வளர்ச்சியினை சீனா சாதித்துள்ளது. இந்த பிரத்தியேக சூழ்நிலையைத் தவிர எந்த சோசலிசக் கண்ணோட்டமும் அதன் வளர்ச்சிக்கு வழிவகுக்கவில்லை. சீனாவில் மட்டுமல்ல; இத்தகைய வாய்ப்புகள் உலகமயத்தின் மூலமாக பிரேசில், இந்தியா போன்ற நாடுகளுக்கும் ஏற்பட்டன. முன்னெப்போதும் இல்லாத முதலாளித்துவ ரீதியிலான வளர்ச்சியை இந்தியாவும் உலகமயத்தின் மூலமாக அடைந்தது. எனவே சீனாவில் தோன்றிய வளர்ச்சிக்கும் சோசலிசத்திற்கும் ஒரேயொரு தொடர்பைத்தவிர வேறு எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது சோசலிசப் பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கிய அடித்தளம் சீனாவில் முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் மொத்த விற்பனைக்கு ஆளாகியுள்ளது என்ற ஒன்றைத் தவிர சீனா தற்போது அடைந்துள்ள வளர்ச்சிக்கும் சோசலிசத்திற்கும் வேறெந்ததொரு தொடர்பும் இல்லை.
கொள்ளைக்கார முதலாளித்துவத்தின் தோற்றம்
முன் முயற்சியுடன் தொழில் நடத்துபவரை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் விசேசப் பொருளாதார மண்டலங்களை அமைத்து முதலாளிகளின் வளர்ச்சியையும் மாவோவின் பாதையில் இருந்து தடம்புரண்ட சீனம் ஊக்குவித்தது. மற்ற பாரம்பரிய முதலாளித்துவ நாடுகளிலாவது நாட்டின் வளத்தையும் மக்களின் உழைப்பையும் பல தலைமுறைகளாக சுரண்டிச் சேர்த்தப் பணத்தை, அதாவது பரம்பரை சொத்து என்று கூறப்படும் சொத்து சார்ந்த மூலதனத்தை அடித்தளமாக வைத்து நான் அந்தப் பணத்தை முதலீடு செய்தே வளர்ந்தேன் என்ற ஒப்புக்காவது கூறமுடிந்த முதலாளிகள் இருந்தனர். அவர்கள் தங்கள் சுரண்டலை சமூக ரீதியாக ஓரளவு அதன் மூலம் நியாயப்படுத்தவும் முடிந்தவர்களாக இருந்தனர். ஆனால் சோசலிசப் பொருளாதார அமைப்பு நிலை கொண்டிருந்த சோவியத் யூனியன் மற்றும் சீன நாடுகளில் அவ்வாறு முதலாளிகள் உருவாகும் வாய்ப்பே இல்லை. நேற்று முன்தினம் வரை சோசலிச அமைப்பின் நிர்வாகத்தில், சோசலிச மனநிலையின்றி அதிகார வர்க்கக் கூறுகளுடன் கட்சியிலும் மக்களிடமும் விழிப்புணர்வு மங்கியிருந்ததைப் பயன்படுத்தி ஊழல் மயமாகி இருந்த அரசு நிர்வாகிகளில் பலரே திடீரென மோசடிகள் மற்றும் பகற்கொள்ளைகளை ஒத்த செயல்கள் மூலம் இந்த நாடுகளில் புது முதலாளிகளாகப் பரிணமித்து வளர்ந்தனர். எனவே ஒரு கொலைகார, கொள்ளைக்காரத் தன்மையே இந்த முதலாளித்துவத்தின் கூறுகளில் மண்டிக் கிடக்கிறது.
படிக்கும் இராமாயணமும் இடிக்கும் பெருமாள் கோயிலும்
இந்த அளவிற்கு சீரழிந்துவிட்ட சீனச் சமூக அமைப்பை வழிநடத்தும் பொறுப்பிலிருக்கக் கூடிய கம்யூனிஸ்ட் கட்சியும் எத்தனை சீரழிந்ததாக ஆகியிருக்கும் என்பது யாரும் யூகிக்க முடியாததல்ல. டெங்சியோபிங் தலைமை தோன்றியபோதே அக்கட்சியின் சீரழிவுப் பாதைக்கு அடித்தளம் இடப்பட்டுவிட்டது.
அவ்வாறு அந்த சீரழிவுப் பாதையில் நடைபயிலும் அக்கட்சி இன்று எத்தனை தூரம் அதன் சீரழிவுப் பாதையில் பல மைல் கற்களைப் பதித்துள்ளதென்றால் எந்த நாட்டில் முதலாளித்துவ மனநிலையே சமூகத்தின் அனைத்துப் பகுதியினரிடமிருந்தும் களை எடுக்கப் படவேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் மகத்தான கலாச்சாரப் புரட்சி உரிய வீரியத்துடனும் விவேகத்துடனும் நடத்தப்பட்டதோ அந்த நாட்டில் அந்த மகத்தான நிகழ்வை முன்நின்று நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முதலாளிகளும் உறுப்பினர்கள் ஆகலாம் என்ற முடிவு கடந்த காலத்தில் நடந்த ஒரு கட்சிக் காங்கிரஸ்ல் எடுக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் ஒரு பாசிஸக் கட்சி
இவ்வாறு முதலாளிகளும் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானால் ஒட்டுமொத்தத்தில் முதலாளித்துவ ரீதியிலான வளர்ச்சிக்கு முன்னுரிமை சமூகத்தில் வழங்கப்படும் சூழ்நிலையில் அவர்களே நாளடைவில் கட்சியில் அதிக சக்தி வாய்ந்தவர்களாகவும் ஆகிவிடுவர். தொழிலாளிவர்க்க உணர்வு மட்டுமல்ல; பாரம்பரிய முதலாளித்துவ நாடுகளில் முதலாளிகளிடம் இருக்கும் ஒருசில மதிப்புகளும் கூட இல்லாதவர்களாக இருக்கும் அவர்களின் ஆதிக்கம் கட்சியில் வேரூன்றிவிட்டால் கட்சி பெயரளவில் கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறிக் கொண்டு ஒரு பாசிஸ்ட் கட்சியாக மாறிவிடும். மேலும் கட்சிகள் குறித்த மார்க்சியக் கண்ணோட்டத்தின் படி முதலாளிவர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்க பலகட்சிகள் இருக்க முடியும். ஏனெனில் முதலாளிகள் ஒவ்வொருவரும் ஒருவருக்கெதிராக மற்றொருவர் ஒரே சந்தையினைப் பிடிப்பதற்காகப் போட்டியிடும் போக்கினைக் கொண்டவர்கள். எனவே அப்போட்டியினை மையமாகவைத்து விவசாயத்துறை, உற்பத்தித்துறை, சேவைத்துறை போன்ற பலதரப்பு முதலாளிகளின் நலன்களையும், பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டவையாக இருக்கும் நாடுகளில் பிராந்திய, தேசிய முதலாளிகளின் நலன்களையும் கருத்திற்கொண்டு செயல்படும் பல்வேறு முதலாளித்துவக் கட்சிகள் இருக்க முடியும். ஆனால் உழைக்கும் வர்க்கத்தைப் பொறுத்தவரை அதன் உண்மையான அடிப்படை நலன் சுரண்டலிலிருந்தான விடுதலை. அதை அடிப்படையாகக் கொண்ட ஒரே கட்சியே பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி நடைபெறும் சோசலிசத்தில் இருக்க முடியும்.
சீனாவிலும் இப்போதுவரை கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் ஒரே கட்சியாக உள்ளது. அந்நிலையில் அக்கட்சி மேலே விவரித்த முதலாளித்துவ வளர்ச்சிப் போக்குகளினால் பாஸிசத் தன்மை வாய்ந்ததாக மாறும் பட்சத்தில், பாரம்பரிய ஜனநாயக நாடுகளின் உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் பெயரளவிலான உரிமைகளைக் கூட அனுபவிக்க முடியாதவர்களாக சீனாவின் மக்கள் ஆகிவிடும் அவலநிலையும் நிச்சயம் உருவாகிவிடும்.இதனை மனதிற்கொண்டே தற்போது பல கட்சி ஜனநாயகம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பலரால் அந்நாட்டில் எழுப்பப்பட்டு வருகிறது. மறைந்திருந்து தாக்கிய குருஷ்சேவ், டெங்சியோபிங் வைரஸ்கள்
இவ்விடத்தில் ஒரு வாதம் முன்வைக்கப்படலாம். இத்தனை முதலாளித்துவ சீரழிவு மனநிலை கொண்டவராக உங்களால் வர்ணிக்கப்படும் டெங்சியோபிங்கும் மாவோவின் தலைமையில் இயங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவில் இடம் பெற்றிருந்தவர்தானே; இந்த மனநிலை நிச்சயமாக ஒரே நாளில் அவரிடம் உருவாகியிருக்க முடியாதல்லவா? அப்படியானால் இந்த மனநிலையின் கூறுகளைக் கொண்டவரை அடையாளம் கண்டு அம்பலப்படுத்தாமல் மாவோ எவ்வாறு தன்னுடன் வைத்திருந்தார் என்ற கேள்வி எழலாம்.இதை ஒத்த ஒரு கேள்வி ஸ்டாலினுக்குப் பின் குருச்சேவ் தலைமை பல முதலாளித்துவ ரீதியான மாற்றங்களை சோவியத் பொருளாதாரத்தில் கொண்டுவந்த போதும் எழுந்தது. ஏனெனில் அவரும் ஸ்டாலின் தலைமையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் இருந்தார். உண்மையில் இத்தகைய தந்திரமிக்க முதலாளித்துவ வாதிகளின் சீரழிந்த சில்லரைத் தன்மைவாய்ந்த சிந்தனைப் போக்குகள் ஸ்டாலின் , மாவோ போன்ற மாபெரும் சிந்தனையாளர்கள் மற்றும் செயலூக்கவாதிகள் கருத்து மற்றும் நடைமுறை ரீதியாக பிரதிபலித்த ஒளிப்பிரவாகத்தினை ஒத்த கதிர் வீச்சுகளின் முன்பு இருந்த இடம் தெரியாமல் புதைந்து இருந்தன. அதாவது சமூகத்தை மறைந்திருந்து தாக்கக் காத்திருக்கும் வைரஸ் கிருமிகளாக மறைந்து கிடந்தன. இதில் ஒரு சுவையான விசயம் என்னவென்றால் மாவோவைப் பொறுத்தவரையில் மாவோவின் பேரறிவிற்கு டெங்சியோபிங்ன் குள்ளநரித்தனம் முழுமையாகத் தென்படாமலும் போய்விடவில்லை. அவர், காதுகேட்கும் திறன் குறைந்தவராக இருந்த டெங்சியோபிங் பற்றி நகைச்சுவை ததும்ப ஒருமுறை கூறினார்: டெங்சியோபிங்ற்கு ஒருவர் பேசுவதை அருகில் அமர்ந்து கேட்டாலே பேச்சு சரியாகக் கேட்காது இருந்தாலும்கூட நான் பேசும் போது பெரும்பாலும் அவர் தூரத்திலேயே இருப்பார் என்று.
மேலே நாம் பார்த்தவைகளில் இருந்து ஒன்றினை நாம் புரிந்து கொள்ளலாம். அது சீனாவில் தற்போது இருப்பது சோசலிசப் பொருளாதாரமும் அல்ல, அங்கு செயல்படுவது ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியும் அல்ல என்பதே. சீனாவில் தற்போது உள்ள பெரிய பொருளாதார வளர்ச்சி என்று சோசலிச விரோதிகளாலும் சோசலிசத்திற்கு உள்ளிருந்தே கொல்லும் பிணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமூக ஜனநாயக சக்திகளாலும் வர்ணிக்கப்படும் பொருளாதார வளர்ச்சி அது முன்னெடுத்துச் செல்லும் முதலாளித்துவப் பாதை தவிர்க்க முடியாத விதத்தில் சமூகத்தில் தோற்றுவிக்கும் பல்வேறு சமூக அவலங்களை சீனா சோசலிசப் பாதையிலிருந்து திசைமாறியதிலிருந்து தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறது. சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த முதலாளித்துவ ரீதியிலான மாறுதல்கள் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் போன்ற சமூக ரீதியிலான விசயங்களில் மட்டுமின்றி அரசின் வெளியுறவுக் கொள்கையிலும் பெரும் மாறுதல்களைத் தோற்றுவித்துள்ளது.
அசுர வேகத்தில் வளரும் முதலாளித்துவச் சீரழிவுகள்
பொருளாதாரம் லாபநோக்கை அடிப்படையாகக் கொண்ட ஏற்றுமதி சார்ந்த தேவைகளுக்கு முன்னுரிமை தரும் பொருளாதாரமாக மாறி வருவதால் உள்நாட்டில் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை தரும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் கண்ணோட்டம் கைவிடப்பட்டு வருகிறது. பொதுவாக சோசலிசப் பொருளாதாரத்தின் இலக்கு உள்நாட்டில் மக்களின் உணவு, உடை போன்ற தேவைகளையும், பிற நுகர்பொருள் தேவைகளையும் உள்ளடக்கியதாகவே அடிப்படையில் இருக்கும். எனவே தான் மக்களின் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க அவற்றை உற்பத்தி செய்வதற்கான தேவையும் அதிகரித்து தொடர்ச்சியான தொழில்மயமும், வேலை வாய்ப்புகளும் பராமரிக்கப்படும். தற்போது ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி பெருமளவு நடைபெறுவதால் ஏற்றுமதிகள் அதிகரிக்கும் வேளைகளில் நகர்ப்புறத் தொழிற்சாலைகளுக்கு கிராமப் புறங்களைவிட்டு தொழிலாளர் இடம் பெயர்வதும், தற்போது உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு ஏற்றுமதி குறையும் சூழ்நிலைகளில் வேலையின்மை வளர்ந்து கிடைக்கும் கூலிக்கு வேலை செய்ய எங்கு வேண்டுமானாலும் இடம் பெயர்ந்து செல்லும் கூலி அடிமை அவலமும் ஏற்பட்டுள்ளது. அதாவது சமூகத்தின் அனைத்து செல்வங்களையும் உருவாக்குபவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் நடத்திய கெளரவம் மிக்க வாழ்க்கை பறிபோய் உள்ளது. அனைத்து முதலாளித்துவ அமைப்புகளையும் ஆட்டிப் படைக்கும் வேலையின்மை, விலை உயர்வு போன்றவை பெருமளவு அங்கும் தலை காட்டியுள்ளன.
சோசலிசம் உருவாக்கிய தூய்மையான நகரங்கள் எங்கே?
திட்டமிட்ட விதத்தில் நடக்கும் சோசலிசப் பொருளாதார அமைப்பில் தொழிற்சாலைகள் வசிப்பிடங்களை ஒட்டியிராத நிலையும், தொழிற்சாலைக் கழிவுகள் சுகாதாரக் கேடு விளைவிக்காத வண்ணம் வெளியேற்றப் படுவதும் மிகச் சுலபமாகவே நடைபெறக் கூடியவை. பெரும்பாலும் சுற்றுப் புறச்சூழல் மாசுபாடு தொழிற்சாலைக் கழிவுகளால் முதலாளித்துவ நாடுகளில் ஏற்படுவதற்குக் காரணம் கழிவுகளைச் சுத்திகரிக்கச் செலவிடவேண்டி வரும் தொகையினையும் முதலாளிகள் லாபமாகச் சம்பாதிக்க விரும்புவதனாலேயேயாகும். அத்தகைய லாப நோக்கம் இல்லாததால் சோசலிச நாடுகளில் சுற்றுப் புறச்சூழல் மாசுபடுவது என்பது அறவே இல்லாத பல நகரங்கள் இருந்தன. சோசலிசம் இருந்த வேளையில் உலகின் மிகத் தூய்மையான நகராக ரஷ்யாவின் மாஸ்கோ இருந்தது. அதன்பின்னர் மக்கள் சீனத்தின் தலைநகரமான பெய்ஜிங் இருந்தது. ஆனால் தற்போது சீனத்தில் சுற்றுப்புற சூழலில் தலைகாட்டியுள்ள மாசுப் பரவல், அடிக்கடி நிகழும் சுரங்க விபத்துக்கள் போன்றவை சீனாவின் இந்த முதலாளித்துவ வளர்ச்சிக்கு பல வகைகளில் முட்டுக் கொடுத்துவரும் முதலாளித்துவ ஊடகங்களால் கூட மூடிமறைக்க முடியாமல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுதவிர சமூக உற்பத்தியின் பலன்கள் சமூக மக்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் சோசலிச சூழ்நிலை மாறி ஒருசில முதலாளிகளின் தொப்பையை நிரப்பும் போக்கு வளர்ந்தும் வளர்க்கப்பட்டும் வருவதால் சமூகத்தில் பரவலாக வறுமையும் சுரண்டலும் பற்றாக்குறையும் மலிந்து போய்க் கொண்டிருக்கின்றன. கண்ணுக்குத் தெரியாமல் இருந்த லஞ்சம், சமூகம் முழுவதும் தலை விரித்தாடும் அவலநிலை வெட்ட வெளிச்சமாக நிலவுகிறது. கலாச்சார ரீதியாக விபச்சாரம் போன்ற போக்குகள் மலிந்துள்ள நிலையும், அழகிப் போட்டிகள் என்ற பெயரில் அரைநிர்வாண நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் பெருமளவு அதிகரித்துள்ளன.
தன்னலவாத வெளியுறவுக் கொள்கை
எந்த ஒரு சோசலிச நாட்டின் வெளியுறவுக் கொள்கையும் எந்தவொரு நாட்டிலும் ஏகாதிபத்தியத் தலையீடு இல்லாமல் அதனைத் தடுக்கும் அரணாக விளங்கும் தன்மையைக் கொண்டதாகவே இருக்கும். ஆனால் ஈராக்கின் மீது அமெரிக்கத் தலையீட்டைச் சாத்தியமாக்கிய தீர்மானம் ஐ.நா.வில் விவாதத்திற்கு வந்த வேளையில் அதனைத் தன் கைவசம் உள்ள வீட்டோ அதிகாரத்தைக் கொண்ட சீனா தடுத்திருக்க முடியும். அதனைச் செய்வது குறித்து சீனா அப்போது நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. மேலும் நேபாளத்தில் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) கட்சியினால் நடத்தப்பட்ட இயக்கங்களும் கூட எந்தவகையான சகோதரத்துவ ஆதரவினையும் சீனாவிலிருந்து பெற முடியவில்லை. மாறாக அனைத்து முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளின் பாணியில் யாருடைய கை மேலோங்குகிறதோ அவர்களிடம் உறவு வைத்துக் கொண்டு தன் நலனை அதாவது பூனை எலியைப் பிடிக்கிறதா என்ற சுயநலனைப் பார்ப்போம் என்ற கோட்பாடற்ற நடைமுறையினையே சீனாவின் தற்போதைய தலைமை வெட்கமின்றிப் பின்பற்றிக் கொண்டுள்ளது.
செத்த பாம்பாயிருந்த தலாய் லாமாவின் வாலில் இருந்த உயிரைத் தலைக்கு வரச் செய்த முதலாளித்துவ வழி
இந்தப் போக்கு சீனாவுடன் ஒரு சுயேட்சைக் குடியரசாக இடம் பெற்றிருந்த திபெத் நாட்டிலும் தீவிரமான சேதத்தினை விளைவித்துள்ளது. மக்களின் மூடநம்பிக்கையை மையமாக வைத்து வளர்ச்சிப் பாதைக்குக் குறுக்கே நின்ற தலாய் லாமா போன்ற மதவாத சக்திகள் பலகாலம் சோசலிச ரீதியிலான வளர்ச்சியினால் பலனடைந்தவர்களும், தலாய் லாமாவிற்கு பின்பலமாக இருந்த நிலவுடமை சக்திகளின் பண்ணையடிமைச் சுரண்டலில் இருந்து விடுதலைபெற்றவர்களுமான திபெத்திய மக்களால் புறக்கணிக்கப்பட்டே வந்தனர். சீனாவிற்கு எதிரான அவரது பல அறைகூவல்களை அவர்கள் பலகாலம் செவிமடுக்கவில்லை. ஆனால் திபெத்தை ஒரு மிகப்பெரும் சுற்றுலா தளமாக மாற்றத் திட்டமிட்டு அதற்கான சாலை வசதிகள் அனைத்தையும் இன்றைய சீன அரசு முன்னுரிமை கொடுத்து உருவாக்கியுள்ள சூழ்நிலையில் அதே திபெத்திய மக்கள் சீன அரசிற்கு எதிராகப் போராட்டப் பாதையில் குதித்துள்ளனர்.
அதாவது அவர்களைப் போராட்டப் பாதையில் இறக்கிவிட தலாய் லாமாவால் முடிந்துள்ளது. அதன் காரணம் இப்போது தோன்றி வளர்ந்துவரும் சீனாவின் முதலாளித்துவப் போக்குகளே. அதாவது சோசலிசப் பொருளாதாரத்தில் தலைதூக்காதிருந்த இன உணர்வுகள் தற்போது தலை தூக்கியுள்ளன. தலாய் லாமா போன்ற விசம சக்திகளால் அவை கெட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.அதற்குச் சாதகமாக அமைந்துள்ளது திடீரென உடனடிக் காரணமேதுமின்றி பலரும் கூறுவது போல் மக்களின் அடிமனதில் நிலை கொண்டிருந்த இன உணர்வு அதாகவே பீறிட்டு வெளிப்பட்டுள்ளதல்ல. சுற்றுலாத் தளமாக திபெத் வளர்ச்சியடைந்தால் சுற்றுலாப் பயணிகள் மூலம் அதாவது விடுதிகள், பொழுதுபோக்கு வசதிகளை அங்கு செய்துதருவதின் மூலம் வரும் வருமானம் அனைத்தும் இன்றுள்ள பாரபட்சச் சூழ்நிலையில் ஹன் சீனக் குடியினைச் சேர்ந்தவர்களுக்குச் சென்றுவிடும்; தலைமுறை தலைமுறையாக திபெத்தில் வசித்து வந்த தங்களுக்கு அந்த வருவாய் கிட்டாது என்ற அச்சமும், முதலாளித்துவம் உருவாக்கிய வருவாய் ரீதியிலான சிந்தனைப் போக்குமே இந்தவகைப் போராட்டங்கள் தோன்றுவதற்கு சாதகமாக அமைந்துள்ளன. இக்கண்ணோட்டமே திபெத்தில் புதிதாக முளைத்துள்ள உடமை வர்க்கத்தை இனவெறியை முன்னிலைப் படுத்தி கிளர்ச்சிகளில் ஈடுபடச் செய்துள்ளது. எனவே உள்ளடக்கத்தில் சோசலிசத்தின் அனைத்துக் கூறுகளையும் இழந்து நிற்கும் இன்றைய சீன சமூக அமைப்பு ஒரு சோசலிச அமைப்பு என சீன கம்யூனிஸ்ட் கட்சியினால் முன்வைக்கப்படுவதும், அக்கட்சி தன்னை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாகக் காட்டிக் கொண்டு மாவோவின் தலைமையில் இருந்த உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்நாளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு 60 ஆண்டு நிறைவுதினக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் ஒரு மோசடியே தவிர வேறெதுவும் அல்ல.
சோசலிச வாடைக்கெதிராகக் கூட பிரச்சாரம் மேற்கொள்ளும் ஊடகங்கள்
இத்தகைய சோசலிசம் மறைந்துவிட்ட நிலையில், வெற்றுப் பெருங்காய டப்பாவாக சோசலிசத்தின் இறுதிகட்ட வாடைமட்டும் வீசிக் கொண்டிருக்கும் சீன நாட்டை அது இன்னும் ஒரு சோசலிச நாடு என்று உணர்வு மற்றும் அறிவு மட்டக் குறைவினால் எண்ணிக் கொண்டிருக்கும் மக்களிடையே அதுகுறித்த வெறுப்பைத் தூண்டுவற்காக பி.ஜே.பி. போன்ற கட்சிகள் முயல்கின்றன. சோசலிசம் கம்யூனிஸம் போன்ற விஞ்ஞானபூர்வ சமூக முன்னேற்றக் கருத்துக்களை எதிர்கொள்ள முதலாளித்துவத்தால் வேறெந்த விஞ்ஞானபூர்வக் கருத்துக்களையும் முன்வைக்க முடிவதில்லை. அதனால், அவை வெறித்தனத்தைத் தூண்டவல்ல தேசிய, பிராந்திய, மொழி, இன வாதங்களையே அக்கருத்துக்களுக்கெதிராக முன் வைக்கின்றன. அந்த அடிப்படையில் அவ்வாறு அது மூட்ட நினைக்கும் சீன எதிர்ப்பு நெருப்பிற்கு அருணாச்சலப் பிரதேசத்தில் தலாய் லாமா மேற்கொண்ட சுற்றுப் பயணத்திற்கு சீன அரசு தெரிவித்த எதிர்ப்பு எண்ணெய்யாகப் பயன்பட்டுக் கொண்டுள்ளது. இது போன்ற விசயங்களில் சோசலிசப் பாதையைக் கைவிட்டு முதலாளித்துவப் பாதையில் வெகுவேகமாக நடைபோட்டுக் கொண்டிருக்கும் சீனாவும் சரி, ஏகாதிபத்தியக் கூறுகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவும் சரி இவ்விரண்டு நாடுகளுமே அருணாச்சலப் பிரதேச மக்களின் உள்ளக்கிடக்கை என்ன என்பதற்கு ஒரு மதிப்பும் தராமல் ஆதிக்கவாதப் போக்குகளுடனேயே செயல்படுகின்றன. தலாய் லாமா சுற்றுப் பயணத்தின் மூலம் அவரது புத்த மதவாதத்தைப் பயன்படுத்தி அருணாச்சலப்பிரதேச மக்களின் மனநிலையைத் தன்பக்கம் திருப்ப இந்தியா முயல்கிறது. முதலாளித்துவப் போக்குகளை ஊக்குவித்ததன் காரணமாக உருவாகி வளர்ந்துள்ள திபெத்திய தேசிய உணர்வு இதுவரை செத்த பாம்பாக இருந்த தலாய் லாமாவிற்கு புத்துயிர் கொடுத்துள்ளது. அதனைப் பயன்படுத்தி புது மெருகுடன் வலம்வரும் அவரை எவ்வாறு அருணாச்சலப்பிரதேசத்தில் உலாவர இந்தியா அனுமதிக்கலாம் என்று சீனா குமுறுகிறது.
பாம்பும் நோகாமல் பாம்பை அடித்த கம்பும் நோகாமல்
இந்த நிலையில் எதிர்க் கட்சிகளின் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா திராணியற்றதாக உள்ளது என்ற வாதத்தை எதிர்கொள்ளும் விதத்திலும், அதேசமயத்தில் ஊடகங்கள் உருவாக்கிக் கொடுத்துள்ள சீன எதிர்ப்பு மனநிலையைப் போக்கிவிடாமல் எதிர்காலத்தில் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலும் இந்தியாவின் தற்போதைய அரசாங்கம் ஒரு நிலைபாட்டினை எடுத்துள்ளது. பெரிய அளவில் சீன அச்சுறுத்தல் எதுவுமில்லை;எதிர்க் கட்சிகளும், ஊடகங்களும் பொறுப்புடன் இவ்விசயத்தில் நடந்து கொள்ளவேண்டும் என்ற பெரிய மனிதத் தன்மை வாதத்தில் பிரதமரும், உள்துறை அமைச்சரும், வெளியுறவுத்துறை அதிகாரிகளும் ஈடுபடுகின்றனர்.
ஆனால் அவர்கள் வெறுப்புப் பிரச்சாரம் ஊடகங்கள் மற்றும் எதிர்க் கட்சியினரால் எந்த நோக்குடன் செய்யப்படுகிறது என்பதை அம்பலப்படுத்த விரும்பவில்லை. 62ம் ஆண்டு இந்தியசீன யுத்தத்தின் போது சாதரண மக்களிடையே உருவாக்கி வளர்க்கப்பட்ட சீனவிரோத மனநிலையைப் பயன்படுத்த, ஒரு தீவிர தேசியவாத உணர்வினைத் தட்டியயழுப்ப, அந்நாட்டிற்கும், சோசலிசக் கருத்திற்கும் எதிரான ஒரு துவேசத்தையும் குஜராத்தி உணர்வினையும் தூண்டும் வகையில் நேருவிற்கு எதிராக சர்தார் வல்லபாய் படேலை நிறுத்தி அரசியல் ஆதாயம் பெற பி.ஜே.பி. கட்சி முயல்கின்றது.
மேலும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் உலக முதலாளித்துவத்தின் பங்கும் பகுதியுமாக உள்ள இந்திய முதலாளித்துவம் பற்றிக் கொள்வதற்கு வசதி செய்துதரும் விதத்தில் முதலாளித்துவ ஊடகங்கள் சீனாவின் உருவில் ஒரு எதிரியை முன்நிறுத்துகின்றன. அதன்மூலம் அவை தற்போது ஒரு சீன எதிர்ப்புப் பிரச்சாரத்தை முடுக்கிவிடவும் தேவை ஏற்படும் போதெல்லாம் உள்நாட்டுப் பிரச்னைகளைத் திசைதிருப்பிவிட, அதனை நீருபூத்த நெருப்பாக மக்கள் மனதில் நிலை நிறுத்தவும் முயல்கின்றன.
- மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு