கீற்றில் தேட...

கேரள மற்றும் தமிழக உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் அரசியல் வர்க்கத்தின் சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்

தமிழக மற்றும் கேரள மக்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களுக்கிடையில் கடுமையான வெறுப்பையும் பூசலையும் உருவாக்கும் வகையில் பல்வேறு வளர்ச்சிப் போக்குகள் முல்லை பெரியாறு அணையினை மையமாக வைத்துத் தற்போது இரண்டு மாநிலத்தையும் சேர்ந்த அரசியல் வர்க்கத்தினரால் கிளப்பிவிடப்படுகிறது.

தங்களது தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளக் கூடிய கட்சிகளும் இணைந்துள்ளன.

சார்ந்து வாழவேண்டிய கட்டாயம்

கேரளா, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களைப் பொறுத்தவரையில் அவ்விரண்டு மாநில மக்களும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பல்வேறு வி­சயங்களில் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள். இவ்விரு மாநிலங்களின் பூகோள ரீதியான நிலையும் அப்படிச் சார்ந்து வாழ்வதை மிகவும் அவசியமாக்கியுள்ளது. கேரளாவில் வற்றாத நீர் வளத்துடன் 44 -க்கு மேற்பட்ட நதிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் அந்நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கு ஏற்ற சமவெளிப் பிரதேசமாக அம்மாநிலத்தின் பெரும்பான்மை நிலப்பரப்பு இல்லை. ஏற்ற இறக்கங்கள் கொண்ட மலைப் பகுதியாக அம்மாநிலத்தின் நிலப்பரப்பு இருப்பதால் அதில் மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் அரிசி, காய்கறிகள் போன்றவற்றை விளைவிப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே அவற்றிற்குப் பிற மாநிலங்களைச் சார்ந்தே அம்மாநில மக்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

அந்த வகையில் அண்டை மாநிலமாக இருக்கக்கூடிய தமிழகம் அவற்றை அம்மாநில மக்களுக்கு விற்பனை செய்யும் வாய்ப்பினைப் பெரிய அளவில் கொண்டதாக உள்ளது. அதைப்போல் ஆரம்பம் முதற்கொண்டே கல்வி வளர்ச்சி மிகுந்ததாக அம்மாநிலம் இருந்ததால் அம்மாநில மக்களில் குறிப்பிடத்தக்க பகுதியினர் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் சென்று வேலை செய்யும் வாய்ப்புப் பெற்றவர்களாக உள்ளனர். அதனால் அங்கு நடைபெறும் கட்டுமானம், தோட்ட விவசாயம் போன்ற அனைத்திற்குமே பெரும்பாலும் பிற மாநிலத் தொழிலாளரையே சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையில் அவர்கள் உள்ளனர்.

அதைப்போல் தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் விவசாயம் நடைபெறுவதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள பரந்த சமதள நிலப்பரப்பு இங்கு இருந்தாலும் அதில் தொடர்ச்சியாக விவசாயம் செய்வதற்குத் தேவைப்படும் நீர்வளம் போதிய அளவில் இல்லை. தமிழகத்தில் ஓடும் நதிகளில் பெரும்பாலானவை பிற மாநிலங்களில் உருவாகி தமிழகத்திற்குள் வருபவை. சில நதிகள் தமிழ்நாட்டில் உருவானாலும் பிற மாநிலங்களில் ஓடக் கூடியவை. அதனால் அந்த நதிகள் ஓடும் மாநிலங்கள் தாங்கள் உபயோகித்தது போக மீதியுள்ள தண்ணீரை மட்டுமே தமிழகத்திற்கு வழங்க முடியும் என்று கருதும் போக்கு மென்மேலும் வளர்ந்து வருகிறது.

சுயநல அரசியல்

அப்போக்கு அதாகவே அவ்வாறு வளர்ந்து வருகிறது என்று கூற முடியாது. ஏனெனில் விடுதலைக்கு முன்பு வெள்ளையர் நம்மை ஆண்ட போது தமிழகத்தின் பங்கிற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் அந்நதிகளில் இருந்து குறைவின்றிக் கிடைத்து வந்தது. நமது சுதேசி அரசாங்கம் ஏற்பட்ட பின் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன்பின்னர் மாநில அரசியலில் செல்வாக்குப் பெற வேண்டும் என்பதற்காக மாநிலங்களில் செயல்படும் கட்சிகளின் அரசியல்வாதிகள் இப்பிரச்னையைத் தூண்டி தாங்கள் தான் மாநில நலனில் பெரிதும் அக்கறை உள்ளவர்கள் என்று காட்டி சுயநல அரசியல் நடத்தத் தொடங்கினர். அதனால் இப்பிரச்னை பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது.

விடுதலைக்கு முன் நிலவிய நிலைமை அப்படியே தொடர முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும் இரு மாநிலத்தின் தேவைகளையும், நிலத்தின் தன்மைகளையும் கணக்கிற்கொண்டு பரந்த நோக்குடன் அப்பிரச்னைகளைப் பார்க்கும் அவற்றைப் பேசி முடிவு செய்யும் மனப்பான்மையுடைய அரசியல் வாதிகள் ஒரு சிலராவது இருக்க வேண்டும்.ஆனால் அப்படிப்பட்டவர்கள் மருந்திற்குக்கூட இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் இன்றையச் சூழ்நிலை பிரச்னையை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

தமிழக விவசாயிகளின் உணவுப் பொருட்களான அரிசி மற்றும் காய்கறி விற்பனையில் ஒரு முக்கியப் பங்கினை கேரள மக்களின் அப்பொருட்களுக்கான தேவை வகிக்கிறது. கேரளாவின் மலைப் பகுதிகளிலும் உதிரி வேலைகளிலும் எண்ணிறந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். மலையாளமும், தமிழும் சகோதர மொழிகளாக இருப்பதால் மக்கள் இதுபோன்ற வேலைகளிலும் அன்றாட வாழ்க்கையிலும் இரண்டறக் கலந்து பழகுவதற்கு ஏற்ற சூழல் யதார்த்தமாகவே இவ்விரு மாநிலங்களிலும் உள்ளது. தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மலையாளம் பேசும் மக்கள் வசிக்கின்றனர்.

கலாச்சார ஒற்றுமை

பல இடங்களில் கேரள சமாஜம் என்ற பெயரில் கேரள மக்களின் கலாச்சார நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளன. அதைப்போல் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கென ஒரு துறையே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கலை, இலக்கியம் அனைத்திலும் இரு மாநில மக்களுக்கிடையிலான பரிவர்த்தனைகள் மிக அதிகம் உள்ளன. கேரள எழுத்தாளர்களில் பலர் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்கள். இப்போதும் கூடக் கேரளத் திரையரங்குகளில் ஓடக்கூடிய திரைப்படங்களில் பெரும்பாலானவை தமிழ்த் திரைப்படங்களே.

இந்த நிலையில் தேன் கூட்டில் கல்லெறிந்தது போன்ற ஒரு சூழ்நிலை தற்போது முல்லை பெரியாறு அணையினை மையமாக வைத்து கிளப்பிவிடப் பட்டுள்ளது. அந்தச் சூழ்நிலை தற்போது குறிப்பாக கேரள அரசியல் வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரால் திட்டமிட்டு உருவாக்கிவிடப் பட்டுள்ளது. எவ்வாறெல்லாம் இந்த அணை விசயத்தில் தமிழக மக்கள் மீது கேரள மக்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்த முடியுமோ அவ்வாறெல்லாம் வெறுப்பு நெருப்பினைப் பற்ற வைத்து விசிறிவிடும் போக்கு அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் 100 ஆண்டுகளுக்கு மேல் இருந்து கொண்டிருக்கும் நீர்த் தேக்கங்கள் 400 க்கு மேல் உள்ளன. அத்தகைய நீர்த் தேக்கங்களில் 120 க்கும் அதிகமானவை இந்தியாவில் உள்ள நிலையில் தென் தமிழ்நாட்டின் விவசாயத்தின் உயிர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணை எந்த நேரமும் உடையக் கூடும் என்ற பீதியினை உருவாக்கும் வகையிலான பிரச்சாரங்கள் பத்திரிக்கைகள் மூலமும் இணையதளங்கள் மூலமும் நேர்த்தியான விதத்தில் கேரள அரசியல்வாதிகளாலும் அதிகாரவர்க்கத்தாலும் செய்யப்பட்டு வருகின்றன.

அதனைச் செய்வதற்குச் சுற்றுச் சூழல் ஆர்வலர்களுடைய சில கருத்துக்களும் நன்கு ஒருங்கு திரட்டப்பட்டு பீதி மனநிலை அதன் உச்சத்தை எட்டும் வகையில் கேரள மக்களிடையே பரப்பப்படுகிறது. அதுதவிர முல்லைப் பெரியாறு அணை குறித்து வெள்ளை அரசாங்கத்திற்கும் திருவாங்கூர் மன்னருக்கும் இடையில் 1886ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் அன்றிருந்த நமது மன்னரின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட ஒன்று; அந்த அவமானகரமான ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற ஏற்கனவே நிலவிய எண்ணப்போக்கும் வெற்றிகரமாக அவர்களால் புது வேகத்துடன் தூண்டிவிடப் படுகிறது.

தமிழக மக்களுக்கு அக்கறையில்லையா?

அவர்களது ஒட்டுமொத்தப் பிரச்சாரத்தின் போக்கே அணையின் வலுவைப் பற்றியோ அது உடைந்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியோ தமிழக மக்களுக்கு ஒரு அக்கறையும் இல்லை என்று காட்டும் விதத்தில் உள்ளது. அப்படியயாரு சூழ்நிலை இருக்கவே முடியாது என்பது சாதாரண மக்களின் மனதில் எட்ட முடியாத விதத்தில் இந்த வி­மப் பிரச்சாரம் திட்டமிட்டுச் செய்யப்படுகிறது.

கேரள மக்களைப் பொறுத்தவரையில் அணை உடைந்தால் அதனால் பாதிப்பு வரும் என்பது முக்கியமாகக் கருத வேண்டியதாக இருந்தாலும் தமிழக மக்களைப் பொறுத்தவரையில் 2லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பிலான விவசாயத்திற்கும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் பிரச்னைக்கும் மூல ஆதரமாக இருக்கக்கூடிய அந்த அணையின் பாதுகாப்பைத் தமிழக மக்கள் கருதாமல் இருக்க முடியுமா?

ஆனால் இந்த எண்ணம் தோன்றவே முடியாத அளவிற்குக் கேரள மக்களிடையே பொய்ப்பிரச்சாரம் நடைபெறுகிறது. அவர்கள் மேற்கொள்ளும் பிரச்சாரங்களில் பல வி­யங்கள் திட்டவட்டமாக மறைக்கப்படுகின்றன. அணையின் வலுவினை ஆராய்வதற்காக உச்ச நீதிமன்றம் நிபுணர் குழுவை நியமித்தது; பல்வேறு வகை ஆராய்ச்சிகளுக்குப் பின்பு அது உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தது; அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் என்று ஆணையிட்டது போன்ற விசயங்கள் கேரள மக்களின் பார்வைக்கு வரவேவிடாமல் செய்யப்படுகின்றன.

தீர்வுக்கு வழிவகுக்காத தேவையற்ற பிரச்சாரம்

தமிழக அரசியல் வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்சாரமும் முழுக்க முழுக்க நடுநிலைத் தன்மை வாய்ந்ததாக உள்ளது என்று கூற முடியாது. தேவையற்ற விதத்தில் பெரியாற்றில் ஓடும் நீரின் ஆதாரம் தமிழகத்தில் உள்ள சிவகிரி மலையில் தான் உள்ளது என்பதில் தொடங்கி தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் முன்னாள் தமிழகக் குறுநில மன்னர்களில் ஒருவரான பூனைத்தம்பிரானின் ஆளுகை வரம்பிற்குள்ளேயே இருந்தன; வெள்ளையர்கள் இந்த விவரம் புரியாது அது திருவாங்கூர் மன்னரின் ஆளுகைக்கு உள்பட்டது என்று தவறாகக் கருதி அப்பகுதிகள் குறித்து திருவாங்கூர் மன்னருடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர் என்பது போன்ற தற்போதைய பிரச்னையின் தீர்வுக்கு வழிவகுக்காத பழங்கதைகளைப் பேசி பிராந்திய வெறியினை ஏற்படுத்தும் தேவையற்ற பிரச்சாரத்தை இவர்களும் மேற்கொள்கின்றனர்.

ஏகாதிபத்திய நோக்கில் செய்யப்பட்டதல்ல

வெள்ளை ஏகாதிபத்தியம் தனது நலனுக்காக அதன் ஆட்சிக் காலத்தில் பிற நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை விடுதலை பெற்றபின் சீர்தூக்கிப் பார்த்து விரைவில் சரிசெய்வது மிகவும் அவசியம். ஏனெனில் அவை அதன் ஏகாதிபத்திய நோக்கைப் பிரதிபலிப்பவையாகவே பெரும்பாலும் இருக்கும். அதே சமயத்தில் உள்நாட்டில் வெள்ளை அரசும் அத்துடன் இணையாதிருந்த பல்வேறு சமஸ்தானங்களும் செய்து கொண்ட ஒப்பந்தங்களை அவை வெள்ளையரால் அவர்களின் ஆதிக்க வலிமையைக் கொண்டு செய்து கொள்ளப்பட்டவை என்ற அடிப்படையில் அவற்றையும் மாற்றியாக வேண்டும் என்று கருதுவது எந்த வகையிலும் சரியான ஒன்றாக இருக்காது. அந்த ஒப்பந்தத்தின் ­ரத்துக்கள் தற்போது பொது நன்மைக்காகப் பயன்படுகிறதா? இல்லையா? என்பதை மையமாக வைத்தே அது கருதப்பட வேண்டும்.

இந்த முல்லை பெரியாறு ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில் இந்த அணை மூலம் வரும் நீர் எந்த வகையிலும் கேரளாவில் விவசாயத்திற்குப் பயன்படப் போவதில்லை. எனவே அந்த நீர் தமிழக விவசாயிகளின் நலனுக்குப் பயன்படுவதற்குச் சிக்கலின்றி வழிவகுக்கும் ஒப்பந்தத்தை அது வெள்ளையரால் செய்யப்பட்டது என்பதற்காக எப்படியாவது மாற்றியாக வேண்டும் என்று கருதுவது சரியா என்ற எண்ணமே பொறுப்புள்ளவர்களிடம் இருக்க வேண்டும்.

ஆனால் இதற்கு மாறாகக் கேரள அரசியல் வாதிகள் வெள்ளையரால் அன்று வெள்ளையர் ஆட்சியோடு ஒப்பிடும் போது பலவீனமாக இருந்த திருவாங்கூர் மன்னரை அச்சுறுத்தி செய்யப்பட்டதொரு ஒப்பந்தம் என்ற கருத்தின் அடிப்படையில் அதை எவ்வாறாகிலும் மாற்றியாக வேண்டும் என்பதற்காகவே முக்கியமாகப் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கின்றனர். அக்கருத்தை வலுப்படுத்துவதற்காக அணை உடையும் நிலையில் உள்ளது என்ற கருத்தை கேரள மக்களிடையே பரப்புகின்றனர்.

வளர்ச்சி இருந்தவரை பிராந்திய வெறி இல்லை

இப்படி அனைத்து விசயங்களையும் பொறுப்பில்லாமல் பார்க்கும் போக்கு 1976ம் ஆண்டுவரை தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநில அரசியல்வாதிகளுக்கிடையிலும் பெரும்பாலும் இருக்கவில்லை. ஏனெனில் அக்காலகட்டம் வரை ஓரளவு வளர்ச்சித் திட்டங்கள் நாடு முழுவதும் செய்யப்பட்டு வந்தன. அதனால் மக்களில் வாழ்க்கை நெருக்கடிகள் ஒப்பு நோக்குமிடத்துக் குறைவாக இருந்தன.

வளர்ச்சி குன்றி அதன் விளைவாக மக்களிடையே ஒரு பாதுகாப்பற்ற உணர்வு மேலோங்கிய நிலையில் நாடு முழுவதிலும் இருந்த அரசியல்வாதிகளின் போக்கு பெரிதும் மாறியது. அவர்கள் மாநில நலன் என்ற முழக்கத்தை முன்வைத்து சந்தர்ப்பவாத அரசியல் நடத்தத் தலைப்பட்டனர். ஒரு மாநில மக்களின் பின்னடைவிற்குக் காரணம் மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களே என்பது போன்ற பாரபட்ச எண்ணப் போக்கை மக்களது மனங்களில் புகுத்தத் தொடங்கினர். அந்தச் சூழ்நிலையில் தான் இந்த முல்லை பெரியாறு பிரச்னையை மையமாக வைத்து முதன்முதலில் தமிழக, கேரள மக்களுக்கிடையே வேற்றுமை தோன்றுவதற்கான வித்து ஊன்றப்பட்டது.

1976ம் ஆண்டு முல்லை பெரியாறு அணையைப் பார்வையிட்ட மத்திய அரசைச் சேர்ந்த பொறியியல் நிபுணர் ஒருவர் இந்த அணை இன்னும் ஓரளவு பலப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அடிப்படையில் அணை பலமாகவே உள்ளது என்ற கருத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அதனைப் பராமரிக்கும் பணியினை மேற்கொள்வதற்காக நீர்மட்ட அளவை குறைக்கத் தமிழக அரசும் ஒப்புக் கொண்டது. அந்த அடிப்படையில் பல மராமத்து வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. மராமத்து வேலைகள் முடிந்த பின்னர் அந்தக் குறிப்பிட்ட அளவு நீர்மட்ட அளவை அதிகரிப்பதற்காகப் பொறியியல் நிபுணர்கள் பரிந்துரைத்த பேபி அணையினை மராமத்து செய்ய தமிழகப் பொதுப்பணித்துறை முயன்ற போது அங்கு வேலை செய்யப் பொருட்கள் கொண்டு சென்றோரை கேரளாவின் வனத்துறை அனுமதிக்கவில்லை. அதன் விளைவாகச் சிறிய அணையின் பராமரிப்பு வேலை நின்றுவிட்டது. அதனால் நீர்மட்ட அளவையும் 152 அடிவரை உயர்த்த முடியவில்லை.

அச்சூழ்நிலையிலும் கூட கேரள, தமிழக முதலமைச்சர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மூலம் குத்தகைக்கு விடப்பட்ட 8000 ஏக்கர் நிலத்தில் மீன்பிடி உரிமை போன்ற பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. அதன் பின்னர் தங்கள் தங்கள் மாநிலங்களில் மாநில மக்களின் பிரச்னைகளை தீர்க்க முடியாத சூழ்நிலைகள் தோன்றும் போதெல்லாம் மாநில அரசியல் வாதிகள் அதற்கான உண்மைக் காரணத்தை கண்டறிய முயலாது செயற்கையான தொடர்பற்ற பிற காரணங்களை அதுவும் அண்டை மாநில மக்கள் குறித்து வெறுப்பை ஏற்படுத்தும் தன்மைவாய்ந்த காரணங்களைக் கண்டுபிடித்து அதை இடைவிடாமல் கூறி ஆதாயமடையும் அதில் குளிர்காயும் போக்கு வளர்ந்துவிட்டது. அந்தப் பின்னணியில் கேரள, தமிழ்நாட்டு அரசியல் வாதிகளிடமும் இப்போக்கு தோன்றி வளரத் தொடங்கியது.

உச்சநீதிமன்றத் தலையீடு

அதாவது நமது இடத்தில் அணையை வைத்துக் கொண்டு அதை மராமத்து செய்கிறேன் என்ற பெயரில் தமிழ்நாடு இங்கு நாட்டாண்மை செய்து கொண்டிருக்கிறது என்ற எண்ணப்போக்கு கேரள மக்களிடையே கேரள அரசியல் வாதிகளால் பரப்பப்பட்டது. தமிழ்நாட்டிலும் முன்னால் இருந்த அளவிற்கு ஒப்பந்தப்படி நீரைத் தேக்க கேரள அரசை நிர்ப்பந்திக்கவில்லை என ஆளும் கட்சியினரை எதிர்க்கட்சியினரும் எதிர்க்கட்சியாக இருந்த கட்சி ஆளும் கட்சியானவுடன் அப்போதைய எதிர்க்கட்சியினரும் தேர்தல் அரசியல் ஆதாயம் கருதி பொறுப்பில்லாமல் விமர்சனம் செய்யும் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்தன.

இந்தப் பின்னணியில் அணையின் நீர்மட்டத்தைக் குறைந்தபட்சம் சிறிய அணை பராமரிப்பு செய்யப்படாத நிலையிலும் கூடப் பராமரிக்கப்பட்ட 142 அடி என்ற அளவிற்கேனும் கொண்டுசெல்ல வேண்டும் என்று கோரும் வழக்கு ஒன்று உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் பொறியியல் மற்றும் மண்ணியல் வல்லுனர்கள் கொண்ட குழுவினை அமைத்து அணையின் வலுவைச் சோதனை செய்ய வேண்டும்; சோதனை செய்தபின் அது சமர்ப்பிக்கும் அறிக்கையை மையமாக வைத்து அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் கேள்வி முடிவு செய்யப்படும் என்ற தீர்ப்பினை வழங்கினர். நிபுணர் குழுவின் தீர்ப்பு அணை வலுவுடன் இருக்கிறது என்று வந்தவுடன் உச்சநீதி மன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தலாம் என்ற தீர்ப்பினையும் வழங்கியது.

136 அடி 120 அடியான நிலை

அதன் பின்னர் கேரள அரசியல் வாதிகள் சிறிது கூடப் பொதுநல நோக்கின்றி கூடுதல் முனைப்புடன் இந்த அணை வி­சயத்தில் நடந்துகொள்ளத் தொடங்கினர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அணையின் நீர்மட்டத்தை எந்தச் சூழ்நிலையிலும் 136 அடிக்கு மேல் உயர்த்த முடியாது என்று கூறும் சட்டம் ஒன்றினைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றினர். தமிழக அரசியல் வாதிகளும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பினை அமல் செய்ய வைக்கமுடியாத அரசுகள் என அடுத்தடுத்து ஆட்சியதிகாரத்திற்கு வந்த அரசுகளைக் குற்றம் சுமத்தி தேர்தல் அரசியலில் லாபம் ஈட்டும் பாதையில் செயல்படத் தொடங்கின. அந்தப் பிரச்னையே இப்போது இந்த அளவிற்கு முற்றி இப்போது கேரள அரசு 120 அடிக்கு மேல் அணையில் நீரைத் தேக்கக்கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியதோடு உச்சநீதி மன்றத்திலும் அந்த அளவிற்கு மேல் நீரைத் தேக்கக் கூடாது என்று கோரி வழக்குத் தொடர்வதுவரை சென்றுள்ளது. தனது தீர்ப்பை அமுலாக்காத கேரள அரசை எதுவும் செய்ய முடியாத உச்சநீதி மன்றம் அதன் பின்னர் தமிழக அரசு அதனிடம் முறையிட்ட போது பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு கண்டுகொள்ளுங்கள் என்று பிரச்னையை இரு மாநில அரசுகளின் பக்கம் உருட்டிவிட்டு விட்டது.

பேச்சுவார்த்தை வெறும் பேச்சுக்கான வார்த்தையே

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என்ற வாதம் தற்போது உச்ச நீதி மன்றத்தால் மட்டுமல்ல, பிரதமர் உட்பட அனைவராலும் முன்வைக்கப் படுகிறது. தீர்ப்பு வழங்கும் நீதிமன்றங்களுக்கு அதனை அமலாக்க வைப்பதற்குத் தேவையான நிர்வாகமோ, அதிகாரமோ இருப்பதில்லை. அதிகாரம் படைத்த மத்திய அரசோ அதற்குத் தலைமை தாங்கும் கட்சியின் நலனைத் தாண்டி எதுவும் செய்யத் துணிவதில்லை. இந்நிலையில் முரண்பாடற்ற ஒன்றைக் கூறியாக வேண்டும் என்ற அடிப்படையில் அனைவரும் கூறுவதே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என்பதாகும்.

இன்றைய காலகட்டத்தில் அரசியல் வாதிகளின் தரம் மலிந்து தனது பிராந்திய நலன் என்பதைத் தாண்டி சிறிது கூட யோசிக்காதது மட்டுமின்றி மாநில மக்களுக்கிடையில் எப்படியெல்லாம் பிளவினைத் தூண்டி அரசியல் லாபம் ஈட்டலாம் என்ற மனநிலையே மண்டிக்கிடக்கிறது. இந்த மனநிலை கொண்ட மாநில அரசியல்வாதிகளினால் தலைமை தாங்கப்படும் அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் உருப்படியான எந்தத் தீர்வையும் எட்ட முடியுமா என்பதே கேள்விக்குரியதாகும்.

அதாவது ஆட்சியில் இருக்கும் மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டுமென்றால் பரஸ்பரம் சில விசயங்களை விட்டுக் கொடுப்பதன் மூலமே அத்தகைய தீர்வினைக் காண முடியும். அவ்வாறு ஒரு மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் முதல்வர் சில விசயங்களை விட்டுக் கொடுத்து பிரச்னைக்குத் தீர்வுகாண முயன்றார் என்றால் அங்குள்ள எதிர்க்கட்சி அதனைப் பெரிது படுத்தி மாநில நலனுக்கு அவர் குந்தகம் விளைவித்து விட்டதாகப் பிரச்சாரம் செய்து அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது.

அப்படிப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பது நடைமுறை சாத்தியமற்ற ஒன்றே. இதையெல்லாம் கடந்து செயல்படும் நிலையில் பெரிய கட்சிகளின் தலைவர்கள் என்று யாருமே இல்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு சாத்தியமில்லை என்பதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்னையாகும். பேச்சுவார்த்தைகள் எதுவும் பலனளிக்கவில்லை என்ற நிலையில் தான் அது இப்போது நதிநீர் பங்கீட்டு முத்தரப்புத் தீர்ப்பாயத்தில் கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கிறது.

பொதுவாக காங்கிரஸ், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் போன்றில்லாமல் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் கட்சிகளிடம் சற்றுப் பரந்த மனப்பான்மையை எதிர்பார்க்க முடியும் என்பதே மக்களிடமிருந்த பரவலான நம்பிக்கை. ஆனால் கேரளாவிலோ அத்தகைய எதிர்பார்ப்பிற்கு அணுவளவும் இடமில்லாத விதத்திலேயே அங்குள்ள சி.பி.ஐ(எம்). கட்சியின் நிலைபாடு உள்ளது.

மனிதனைக் காட்டிலும் பாம்பும் பல்லிகளும் முக்கியமானவையா?

தற்போது இத்தனை இறுக்கமான நிலை எடுத்துள்ள கேரள அரசு அதன் துணைக்கு சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர் பலரது கருத்துக்களை கையிலெடுத்துக் கொண்டு தனது வாதத்தை வலுப்படுத்த முயல்கிறது. சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களின் வாதம் எப்போதுமே இயற்கையை உள்ளது உள்ளபடி பராமரிக்க வேண்டும்; அதாவது நதிகளுக்கிடையில் அணைகள் கட்டக் கூடாது; அவை அவற்றின் போக்கில் செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அணைகளில் நீரைத் தேக்கி வைப்பதால் பூமிப் பரப்பில் நீரின் அழுத்தம் ஒருபகுதியில் அதிகமாகி பூகம்பங்கள் போன்றவை ஏற்படுகின்றன;  அது மட்டுமின்றி அணை உடைந்தால் அதன் விளைவாகக் காடுகள், வன விலங்குகள், பாம்புகள் போன்றவை அனைத்தும் அழிந்துவிடும் என்பன போன்ற வாதங்களை முன்வைக்கக கூடியவர்கள்.

மேலை நாடுகளைப் பொறுத்தவரையில் சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் பெரும்பாலும் இடதுசாரி இயக்கத்தினரோடு சேர்ந்து செயல்படுகின்றனர். அதற்குக் காரணம் சுற்றுப்புறச் சூழல் மாசு படுவதில் மிகமுக்கியப் பங்கு வகிப்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் உந்து சக்தியாக இருக்கும் லாப நோக்கமே. அதாவது ஆலைக் கழிவுகள், ஆலையிலிருந்து வெளிவரும் புகை ஆகியவற்றை சுத்திகரித்து இயற்கையை மாசு படாமல் பராமரிப்பதற்குச் செலவிட முதலாளித்துவ நிறுவனங்கள் முன்வருவதில்லை. அந்தப் பணத்தையும் லாபமாக ஈட்ட அந்நிறுவனங்கள் விரும்புகின்றன. எனவே முதலாளித்துவத்தை எதிர்த்துச் செயல்படும் இடதுசாரிகளோடு அந்நாடுகளின் சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் இந்த அம்சத்தில் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.

ஆனால் நமது நாட்டிலோ சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் இவ்வாறு முதலாளித்துவ நிறுவனங்களை எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் அணை கட்டாதே; அணுமின் நிலையம் கொண்டு வராதே என்பது போன்ற முழக்கங்களை முன்வைப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். அதாவது அதற்கு எடுத்துக்காட்டுகளாக மேலை நாடுகளில் அணைகள் இப்போதெல்லாம் கட்டுவதில்லை. ஏற்கனவே உள்ள அணுமின் நிலையங்களையும் அவர்கள் மூடிக் கொண்டுள்ளனர் என்று கூறி இங்குள்ள சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் அந்த நாடுகளின் முதலாளித்துவ அரசுகளுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கிக் கொண்டுள்ளனர்.

தேக்கமும் வளர்ச்சியும்

மேலை நாடுகளுக்கும் நமது நாட்டிற்கும் இடையில் தற்போதுள்ள ஒரு பெரிய வேறுபாட்டை அவர்கள் பார்க்கத் தவறுகின்றனர். மேலை நாடுகளில் ஒருபுறம் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. மறுபுறம் உலகமயத்தின் விளைவாக அவர்களின் ஆலைகள் குறைந்த கூலிக்கு ஆள் கிடைக்கும் நாடுகளை நோக்கித் தங்கள் மூலதனத்தைக் கொண்டு செல்கின்றன. அத்தகைய நாடுகளில் நமது நாடும் ஒன்றாக இருப்பதால் இங்கு சில துறைகளில் மேலை நாடுகளைக் காட்டிலும் கூடுதல் தொழில் வளர்ச்சி உள்ளது. இங்கு பெருகிவரும் மக்கட்தொகையின் உணவுத் தேவையை ஈடுகட்ட அணைகள் போன்ற நீர்ப்பாசனத்திற்கு வழிசெய்யும் கட்டுமானங்களைப் பராமரிப்பது அத்தியாவசியத் தேவையாக உள்ளது.

முழுக்க முழுக்க இயற்கையோடு இயைந்த வாழ்க்கை எங்கு சாத்தியமென்றால் எங்கு உணவுத்தேவை போன்றவை அதிகரிக்காமல் இருந்த நிலையிலேயே இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறதோ அங்குதான் சாத்தியம். மனிதனை மனிதன் சுரண்டும் அடிப்படையான முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டு வராமல் இயற்கையை உள்ளதை உள்ளபடி பராமரிக்கவே முடியாது. அந்நிலையில் இயற்கையைப் பராமரிக்காமல் இருப்பதே இன்றைய பிரச்னைகளுக்குக் காரணம் என்பது போன்ற சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களின் கருத்து கேரள சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தினருக்கு நன்கு பயன்படுகிறது.

மேலை நாடுகளைப் பொறுத்தவரையில் அவை விவசாயம் போன்றவற்றில் தன்னிறைவு பெற்றவையாக ஆகிவிட்டன. பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு அந்நாடுகளில் உணவு உற்பத்தி நடைபெறுகிறது. எனவே புதிய அணைகள் கட்டி விவசாய உற்பத்தியைப் பெருக்குவது அங்குள்ள விவசாய முதலாளிகளின் லாபத்தில் கைவைப்பதாக அமையும். எனவே அந்தச் சூழ்நிலையை இங்குள்ள சூழ்நிலையோடு ஒப்பிடுவது முற்றிலும் பொருத்தமற்றதாகும். இயற்கை நிச்சயம் பராமரிக்கப்பட வேண்டியது தான்; எதற்காக என்றால் அதைச் சார்ந்து வாழும் மனிதனின் சுபிட்சமான வாழ்க்கையை பராமரிப்பதற்காகவே.

மேலை நாடுகளைப் போலன்றி நமது நாட்டில் மக்கள்தொகை அதிகரிப்பும் அதைத் தொடர்ந்த உணவுப் பொருள் தேவையும் தொடர்ச்சியாக இருந்து கொண்டுள்ளன. எனவே இங்கு இருக்கும் அணைகளைத் தகர்த்துவிட்டு நீரை அது போகும் போக்கில் ஓட அனுமதித்து இயற்கையின் அழகைப் பார்த்துப் பரவசப்படுவதற்கான சூழ்நிலை இல்லை.

அதாவது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த சமூக அமைப்பில் இயற்கையின் மிக உயர்ந்த உருவாக்கமான மனிதனின் வாழ்க்கையே சிரமம் மிகுந்ததாக இருக்கிறது; அதற்குக் காரணமான ஏற்றத்தாழ்வைப் போக்கி சமூகத்தில் உடமை வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என்ற இரு வர்க்கங்கள் இல்லாத சூழ்நிலையை உருவாக்கிய பின்னரே இயற்கையை அது பாழ்படாத, மாசுபடாத விதத்தில் பராமரிக்க முடியும். இந்த அடிப்படை உண்மையை மறந்துவிட்டு ஏதோ இன்றுள்ள நமது மக்களின் பிரச்னைகள் அனைத்திற்கும் மூலகாரணம் அணைகள், பெரிய தொழிற்சாலைகள், அணுமின் நிலையங்கள் போன்றவையே என்ற கருத்தினை முன்வைப்பது சமூகச் சூழலை ஒட்டுமொத்தமாகப் பார்க்காத அதன் ஒரு அம்சத்திற்கு மட்டும் அதீத முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கும் போக்காகும்.

வக்கிரமாகிப்போன அதிகார வர்க்கம்

சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களின் கருத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் முன்னாள் நீர்ப்பாசானத்துறைச் செயலாளராகவும், அதன் பின்னர் பல நதிநீர் பிரச்னைகளின் தீர்விற்காக நியமிக்கப்பட்ட குழுக்களில் பணியாற்றியவருமான திரு.ராமசுவாமி ஐயர் அவர்கள் படிப்படியாகத் தமிழக மக்கள் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து வரும் நீர் இல்லாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணிப் பார்க்க முடியாத ஒரு வாதத்தை முன்வைக்கிறார். ஆற்று நீர் அதன் போக்கிலேயே விடப்பட வேண்டும் என்று கூறுவதோடு அதையும் கடந்து ஒருபடி மேலே சென்று கேரளா மற்றொரு அணை கட்டலாம் என்று கூறுவதும் அத்தனை சரியானது அல்ல என்று கூறுகிறார். அதாவது இலட்சோபலட்சம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துவிட்டும் அவர்கள் வாழ முடியும் என்ற ஒரு ஈவிரக்கமற்ற கருத்தை முன்வைக்கிறார். அதன்மூலம் நமது நாட்டின் அதிகார வர்க்கம் எத்தனை தூரம் சாதாரண மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளிலிருந்து அன்னியப்பட்டுள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறார்.

புதுப் பிரச்னைகளை ஏற்படுத்தவல்ல புதிய அணை

இந்நிலையில் இந்தப் பிரச்னையின் தீர்விற்காக கேரள அரசால் முன்வைக்கப்படும் மாற்று அணைத்திட்டம் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றே. ஆனால் இன்றுள்ள அரசியல்வாதிகளின் தரத்தையும், பக்குவமற்ற போக்கையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் வெள்ளையருடன் திருவாங்கூர் மன்னர் செய்து கொண்ட 999 ஆண்டு ஒப்பந்தத்தில் இருக்கும் விவசாய நலன் பேணும் அம்சங்களைப் பராமரித்துப் பேணும் விதத்தில் புதிய அணை கட்டும் போது எட்டப்படும் ஒப்பந்தத்தின் ­ரத்துக்கள் அமையுமா? என்பதே முக்கியக் கேள்வியாக எழுந்து நிற்கிறது.

ஏனெனில் நாம் ஏற்கனவே பார்த்தபடி அணை வலுவில்லாமல் உள்ளது; தமிழ் நாட்டிற்கு அணைப் பாதுகாப்பு வி­சயத்தில் அக்கறை இல்லை என்றெல்லாம் பெரிய அளவிற்குப் பிரச்சாரம் செய்வதன் நோக்கமே 999 ஆண்டு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவே என்பது தெளிவாகியுள்ளது. இந்நிலையில் புது அணை கட்டுவது கேரள அரசின் நிபந்தனைகள் மற்றும் நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்ட ஒரு புதிய ஒப்பந்தத்தைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே என்பதும் வெளிப்படையானது. அத்தகைய ஒப்பந்தம் தங்கு தடையற்ற தண்ணீர் வழங்குவதை உறுதி செய்வதாக இருக்குமா என்பதே அடிப்படைக் கேள்வியாக உள்ளது.

இவ்வாறு எந்தவொரு உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை அல்லது நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றின் மூலமான தீர்வும் எட்டப்படாத நிலையில் தென் தமிழக மக்கள் அவர்களுடைய பிரச்னையின் தீர்விற்கு முனைப்புடனும் நடுநிலை மனநிலையுடனும் யாரும் வருவர் என்ற நம்பிக்கையில்லாத நிலையில் தாங்களாகவே தங்களுக்குத் தோன்றும் விதங்களில் போராடத் தொடங்கியுள்ளனர். இதில் அரசியல் ஆதாயம் அடைய முயலும் அரசியல் கட்சிகளின் அறைகூவல்களுக்குப் பெரிய அளவில் செவிமடுக்காது அவர்களாகவே ஒன்று திரண்டு கேரள எல்லையை நோக்கிச் செல்வது என்பது போன்ற இயக்கங்களில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். அத்துடன் கேரளாவிற்குக் காய்கறிகள் ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். சில அரசியல் இயக்கங்கள் அணை அமைந்திருக்கும் இடிக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் சேர்ப்பதே பிரச்னை தீர ஒரே வழி என்றும் கூறுகின்றனர்.

அச்சுதானந்தனின் அப்பட்டமான சந்தர்ப்பவாதம்

கேரளாவிலோ அரசியல் வாதிகளையும் தாண்டி வருந்தத் தகுந்த விதத்தில் கிருஷ்ணய்யர், குரூப் போன்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாநில நலன் என்ற குறுகிய வட்டத்திற்குள் நின்று முழு உண்மையை பார்க்க முடியாதவர்களாக உள்ளனர். கேரள மக்களுக்கிடையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது இப்பிரச்னையை மையமாக வைத்துத் தமிழ் விரோத மனநிலை மேலோங்கியிருப்பதற்கு மற்றொரு முக்கியக் காரணம் கேரளாவில் மிகப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் செயல்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)‡ன் நிலைபாடாகும். எந்தவொரு பிரச்னையிலும் பரந்த மன நிலையோடு ஓரளவேனும் செயல்படுவர் என்று எதிர்பார்க்கப்படும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் நிலை இவ்வி­யத்தில் படுகேவலமானதாக உள்ளது.

கம்யூனிஸ்ட்கள் அடிப்படையில் சர்வதேச வாதிகளாக இருக்க வேண்டியவர்கள். தேசியவாத நிலை எடுத்து முதல் உலக யுத்தத்தின் போது ஜெர்மன் அரசை ஆதரித்த கம்யூனிஸ்ட்களை மாமேதை லெனின் அழுகி நாற்றமெடுக்கும் பிணம் என்று வர்ணித்தார். ஆனால் லெனின் தாங்கிய செங்கொடியைத் தாங்கிக் கொண்டிருக்கும் கேரள சி.பி.ஐ(எம்). கட்சி தேசிய வாதமல்ல அப்பட்டமான பிராந்தியவாதச் சாக்கடையில் புரண்டு கொண்டுள்ளது. அக்கட்சியின் முன்னாள் முதல்வரான அச்சுதானந்தனின் நிலைபாடே இன்று இத்தனை தமிழ் விரோத மனநிலை கேரள மக்களிடம் வருவதற்கு ஒரு முக்கியக் காரணமாக ஆகியுள்ளது. அக்கட்சியின் முக்கியத் தலைவரான அவர் அகிலஇந்திய மனநிலையைக்கூடக் கைவிட்டு, பிராந்திய மனநிலையைக் கையிலெடுத்துத் தேர்தல் அரசியலில் தனது இன்றைய நலனை உறுதி செய்வதே முக்கியம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

மாமேதை லெனின் சந்தர்ப்பவாதம் குறித்து ஒரு அருமையான விளக்கத்தை முன்வைத்தார். அதாவது இறுதி இலக்கைத் தற்காலிக நலனுக்காகக் காவு கொடுப்பதே சந்தர்ப்பவாதம் என்று அவர் கூறினார். அதனை அசலும் நகலும் நிரூபிக்கும் விதத்தில் கடந்தமுறை தோல்வி அடைந்தாலும் கேவலமான தோல்வியாக அது இல்லாமல் போனதற்குக் காரணம் அச்சுதானந்தனே என்று நிலவிய கருத்தின் மூலம் தனக்கு மாநில அரசியலில் கிடைத்துள்ள கூடுதல் வாய்ப்பை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்;அந்தத் தற்காலிக நலனைப் பாதுகாப்பதற்காக பிராந்திய, தேசிய வரையறைகளைத் தாண்டி மனித குலத்தின் இறுதி விடுதலையைச் சாதிப்பது என்ற கம்யூனிஸ்டுகளின் இறுதி நலனைக் காவு கொடுத்துப் பிராந்திய வெறிவாதம் தூண்டப்பட முழுமுதற் காரணமாக ஆகியுள்ளார்.

அதாவது நேரடியாக புது அணை கட்டுவது அணையின் நீர்மட்டத்தை 120 அடி என்ற அளவிற்குக் குறைப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் போராட்டங்களை முன்னெடுக்கிறார். அதற்காக மக்களின் உணர்வினைத் தட்டியெழுப்பும் விதத்தில் உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்.

அடாவடித்தனமான ஆலோசனைகள்

தமிழக அரசியல் வாதிகளில் ஒரு பகுதியினர் பரிந்துரைக்கும் கேரளாவின் இடிக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறை சாத்தியமானதல்ல என்பதோடு ஒரு வகையில் அடாவடித்தனமானதும் கூட. இது மக்களுக்கிடையிலான பிளவினை இன்னும் அதிகப்படுத்தி சாதாரண கேரள மக்களிடம் இன்னும் கூடுதல் தமிழர் விரோத மனநிலையை உருவாக்கும். அதைப் போன்றதே கேரளாவிற்குச் செல்லும் உணவுப் பொருட்கள், காய்கறி ஆகியவற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளும். எந்தவொரு மாநிலத்தையும் மற்றொரு மாநிலம் அச்சுறுத்திப் பணிய வைக்க முடியாது. அவ்வாறு பணிய வைக்க வேண்டும் என்று நினைக்கவும் கூடாது. இதுபோன்ற கோரிக்கைகளை முன் வைப்பதற்கு முன் இடிக்கிக்குப் பதிலாக தமிழகத்தின் வேறொரு மாவட்டத்தை கேரளாவிற்குத் தரத் தமிழ்நாடு முன்வருமா என்ற கேள்வியை இக்கருத்தை முன்வைப்பவர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுப் பார்க்க வேண்டும். உணவுப் பொருள் செல்வதைத் தடுப்பதால் பாதிப்பு நமது விவசாயிகளுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் சேர்த்துத்தான் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

துண்டாடப்பட்டுள்ள வர்க்க ஒற்றுமை

இதுபோன்ற நிலைபாடுகளின் விளைவாக நாம் ஏற்கனவே விவரித்த விதத்தில் மிகப்பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருப்பது இரண்டு மாநிலங்களையும் சேர்ந்த சாதாரண உழைக்கும் மக்களே ஆவர். போக்குவரத்துத் தடுக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் விளை பொருட்கள் தமிழகத்தில் தேங்கி அவற்றைச் சுத்தமாகவே கட்டுபடியாகாத விலைக்கு விற்று அல்லலுறும் நிலையில் தமிழக விவசாயிகளும் அதே சமயத்தில் காய்கறிகளின் வரவு குன்றியதால் விண்ணை முட்டும் அளவிற்கு அவற்றின் விலை உயர்ந்துள்ள சூழ்நிலைக்குக் கேரள மக்களும் தள்ளப்பட்டுள்ள கொடுமை ஏற்பட்டுள்ளது. இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் மாநிலம் விட்டு மாநிலம் வேலைக்குச் செல்லும் சூழ்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வசிக்கும் கேரள மக்களும், கேரளத்தில் வசிக்கும் தமிழக மக்களும் பாதுகாப்பு உணர்வின்றி இருக்கும் அவலநிலை தோன்றியுள்ளது. கேரளாவில் தமிழர் கடைகளும், தமிழகத்தில் கேரள மக்களுக்குச் சொந்தமான நிறுவனங்களும் தாக்கப்படும் கொடுமை எங்கே இரு மாநில மக்களுக்குமிடையில் தீராத வெறுப்பும் பகையும் ஏற்பட்டு விடுமோ என்ற சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது.

இச்சூழ்நிலையில் பேச்சுவார்த்தை போன்றவற்றின் மூலம் பலன் எதுவும் ஏற்படப் போவதில்லை என்பதும் நிதர்சனமாகியுள்ளது. இந்தப் பின்னணியில் பிரச்னையை ஓரளவேனும் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான வழிமுறைகளை யோசிக்க வேண்டும். பிரச்னைக்கான தீர்வு என்று பேசும் போது அதிலும் நமக்கு எந்த மாயையும் பிரமையும் இருக்கக் கூடாது. இதுபோன்ற பிரச்னைகளுக்கான முழுமையான தீர்வு முதலாளித்துவக் கட்சிகளின் தரம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குச் சீரழிந்துள்ள நிலையில் இன்றுள்ள முதலாளித்துவ அமைப்பில்  எட்டப்பட முடியாது. எனவே இந்நிலையில் எந்தத்தீர்வு எட்டப்பட்டாலும் அது தற்காலிகத் தீர்வாகவே இருக்கும்.

இச்சூழ்நிலையில் இதற்கு இப்போது இருக்கும் ஓரே தீர்வு ஏற்கனவே உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் வினியோகத்தைப் பராமரித்து அணையின் பாதுகாப்புக் குறித்த கேள்விகள் அது போன்ற ஒரு நடுநிலை அமைப்பின் மத்தியத்துவத்தின் அடிப்படையில் தேவைப்படும் போதெல்லாம் சரிசெய்யப்பட வேண்டும் என்பதுதான். அதாவது தற்போதைய நிலையே அதாவது தற்போதுள்ள அணையைத் தேவைப்படுமானால் இன்னும் பலப்படுத்தி அதன்மூலம் தமிழக மக்களின் விவசாயத்திற்கு நீர் வழங்கல் உத்திரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதே ஒரே தீர்வாக இருக்க முடியும்.

கருதப்பட வேண்டிய கண்ணோட்டங்கள்

கேரளாவைப் பொறுத்தவரை இந்த நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாது. இருந்தாலும் இதை இடிக்கி அணைப் பகுதிக்குத் திருப்பி விட்டால் அதைப் பயன்படுத்தி கூடுதல் மின்சாரம் தயாரிக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் தண்ணீரைப் பொறுத்தவரை அதன் பிரதான உபயோகம் நீர்ப்பாசனமே தவிர மின்சாரத் தயாரிப்பல்ல. எனவே விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்துத் தண்ணீரைத் தமிழகத்திற்கு வழங்கும் அதே வேளையில் அந்த நீரைக் கொண்டு தமிழகம் தயாரிக்கும் மின்சாரத்தில் கேரளாவிற்குக் கூடுதல் பங்கினைத் தரலாம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கூறியுள்ள கருத்தும் கருதப்பட வேண்டிய ஒன்றே.

இப்பிரச்னையில் மிகவும் எதிரெதிரான மற்றும் கத்தி தீட்டும் அரசியலில் ஈடுபடும் நிலை எடுக்காது ஓரளவு பிரச்னையைப் பெரிதுபடுத்தாமல் அதற்குத் தீர்வுகாணும் விதத்திலான கருத்துக்களைக் கொண்டுள்ளவர்கள் போல் இன்றுவரை காட்சியளிக்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களும் கேரளாவின் முன்னாள் முதல்வரும் தற்போதைய இந்தியப் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.அந்தோணி போன்றவர்களும் ஓரளவு முன்கை எடுத்து இருமாநில மக்களுக்கிடையிலான ஒற்றுமை பாழ்படாதிருக்கும் வகையில் ஒரு தீர்வுக்கு முயற்சிக்கலாம். அந்த அடிப்படையிலான தீர்வு வரும் வரை இரு மாநில மக்களின் ஒற்றுமை பாழ்படாதிருக்கப் பாடுபடுவதே உண்மையான உழைக்கும் வர்க்க இயக்கத்தின் முழுமுதற் கடமையாகும். அதனைச் செவ்வனே செய்யப் பிராந்திய வெறியினைத் தூண்டி அதன்மூலம் அரசியல் ஆதாயம் அடைய முயலும் இரு மாநிலங்களின் அரசியல்வாதிகளையும் அதற்குத் துணை போகும் அதிகார வர்க்கத்தையும் கண்காணித்து அம்பலப்படுத்துவதும் நமது கடமையாகும்.

Pin It

ஊழலுக்கு எதிரான முழக்கத்தை முன்வைத்து மக்களைத் திரட்டியவர் ஜே.பி. - ஆட்சியைப் பிடிக்க ஊழல் முழக்கத்தை கையிலெடுக்கும் அத்வானி

திருடன் ஒருவன் பலர் அவனை விரட்டும் போது ஒரு கட்டத்தில் விரட்டுபவர்களுக்குத் தெரியாமல் அவர்களோடு சேர்ந்து கொண்டு திருடன் திருடன் என்று அவனும் கூறிக்கொண்டு ஓடித் தப்பிக்கும் காட்சியை அடிக்கடி திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். நமது நாட்டின் தற்போதைய அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தால் அக்காட்சி தான் நினைவிற்கு வருகிறது.

பி.ஜே.பி. கட்சியின் முக்கிய தலைவரும் குஜராத் மாநிலத்தின் தற்போதைய முதல்வருமான திரு நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல விரும்பிய போது அவருக்கு அமெரிக்க அரசு விசா கொடுக்க மறுத்தது. அது மட்டுமல்ல அக்கட்சியின் மிக முக்கிய தலைவரான எல்.கே.அத்வானி அவர்கள் லண்டன் சென்ற போது அங்கு கடுமையான மக்களின் எதிர்ப்புகளை அவர் சந்திக்க வேண்டிருந்தது. அப்போது அவர் வெளிப்படையாகவே இந்தியாவில் அவரது கட்சியினரால் நிகழ்த்தப்பட்டதாகக் கருதப்பட்ட சம்பவங்களுக்காக மன்னிப்புக் கோரினார்.

அச்சம்பவங்கள் வேறெவையும் அல்ல. 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின்பு குஜராத்தின் சிறுபான்மை முஸ்லீம் இனத்தவர் மீது சங்பரிவாரத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும் அதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிகழ்வுகளுமே. இப்போதும் அது குறித்த வழக்குகள் முற்றிலும் முடிந்து விடவில்லை.

அத்தாக்குதலில் ஈடுபட்ட 31 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது மிகச் சமீபத்திய செய்தியாகும். அது மட்டுமல்ல அப்போது குஜராத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணிபுரிந்த பட் அவர்கள் சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக அப்போது நடந்த வன்முறையினை பெரிய அளவு கண்டுகொள்ள வேண்டாம் என்று போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் நரேந்திரமோடி பேசியதாகத் தெரிவித்த கருத்து இப்போதும் பி.ஜே.பிக்குப் பெரும் தலைவலியாக உள்ளது.

அதையொட்டி அவர் குஜராத் காவல் துறையால் குற்றம் சுமத்தப்பட்டு கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்திருப்பதும் அவருக்குச் சாதகமாகச் சாட்சியம் அளிப்பார் என்று கருதப்பட்ட ஒருவர் மிக சமீபத்தில் கொலையுண்டிருப்பதும் அக்கொலைக்கு காரணம் சொந்தப் பகை என்று குஜராத் காவல்துறை தெரிவித்திருப்பதும் இப்போது சுடச்சுடப் பத்திரிக்கைகளில் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த வன்முறை குறித்து நரேந்திர மோடி அவர்கள் அப்போது முன்வைத்த ஒரு முத்தாய்ப்பான கருத்தும் மிகவும் பிரபலமானது. அதாவது அவர் நியுட்டனின் மூன்றாவது விதியான ஒவ்வொரு செயலும் அதற்குச் சமமான எதிரான செயல் ஒன்றினை நிச்சயம் விளைவிக்கும் என்ற கருத்தே அது.

அதாவது கோத்ராவில் ரயிலை எரித்து சங்பரிவாரத்தினர் பலரது மரணத்திற்குக் காரணமாக இருந்த சிறுபான்மை முஸ்லீம் இனத்தவர்கள் ரயில் எரிப்பிற்குப் பின் நிகழ்ந்தது போன்ற ஒரு வன்முறையினை எதிர்கொண்டே தீர வேண்டும் என்று பொருள்படும் விதத்தில் அவர் அக்கருத்தை முன்வைத்தார். பி.ஜே.பியின் பல காலம் மறைக்கப்பட்ட பாசிஸ முகக்கூறு இச்சம்பவம் மற்றும் மோடியின் மேற்கூறிய கூற்று ஆகியவற்றின் மூலம் மீண்டும் ஒருமுறை பெரிதும் அம்பலமானது.

மதநல்லிணக்க உண்ணாவிரதம்

இத்தகைய ‘சிறப்பு அம்சங்கள் பொருந்திய’ திரு நரேந்திர மோடி தற்போது கடந்த செப்டம்பர் 17ம் நாளன்று உண்ணாவிரதம் ஒன்றினை மேற்கொண்டார். அதாவது குஜராத் மக்கள் மதவேறுபாடுகள் கடந்து நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக அந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்வதாக அவர் அறிவித்தார்.

ஜன்சேத்னா யாத்திரை முழக்கமும் முனகலும்

இது ஒருபுறமிருக்க அக்கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ரத யாத்திரைப் புகழ் எல்.கே.அத்வானி அவர்கள் ஜன் சேத்னா யாத்ரா என்ற பெயரில் ஒரு யாத்திரையினைத் தொடங்கினார். ஊழலுக்கும் கறுப்புப் பணத்திற்கும் எதிரானதே அது என்று அவர் அறிவித்திருக்கிறார். அந்த யாத்திரையின் போது ஊழலுக்கு எதிராகப் பல மாநிலங்களில் முழங்க முடிந்த அவரால் ஒரு மாநிலத்தில் மட்டும் முணங்கத்தான் முடிந்தது.

ஆம் கர்நாடகாவில் அவரால் அத்தனை உணர்ச்சிப்பூர்வமாக ஊழலுக்கு எதிராக முழங்க முடியவில்லை. அதற்குக் காரணம் அப்போது தான் அவரது கட்சியின் கணக்கைத் தென் மாநிலங்களில் தொடங்கியவரும் வெற்றி மேல் வெற்றிகளைக் கர்நாடகாவில் பி.ஜே.பிக்குக் குவித்தவர் என்று கருதப்பட்டவருமான எடியூரப்பா ஒரு ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஆனாலும் விட்டுக் கொடுக்காமல் அத்வானி கர்நாடகக் கூட்டங்களில் முழங்கினார்: அதாவது எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் ஊழல் செய்தாலும் அவர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவராகவே இருந்தாலும் நான் அதற்கு எதிராக மக்கள் கருத்தைத் திரட்டுவேன் என்று வீராவேசமாக முழங்கினார்.

ஊழலுக்கு எதிரான இந்த யாத்திரையை அவர் தொடங்கிய போதே ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் பி.ஜே.பி. கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் அத்வானியின் யாத்திரை குறித்து பெரிய அளவில் செய்திகள் வெளியிடுமாறு போபாலில் இருந்து வெளிவரும் இந்தி பத்திரிக்கை நிருபர்களுக்கு பணம் கொடுத்து ஏற்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த லட்சணத்தில் ஊழலுக்கு எதிரான இந்த யாத்திரையை ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் பிறப்பிடத்திலிருந்து எல்.கே.அத்வானி அவர்கள் தொடங்கினார். அதாவது ஊழலுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்திற்குப் பின்பு இந்தியாவில் மிகப் பெரிய இயக்கத்தைத் தட்டியயழுப்பிய ஜே.பி. அவர்களை ஒத்த விதத்தில் அடையாளப்பூர்வமாக இந்த இயக்கத்தைத் தான் தொடங்கியதாக உலகிற்குக் காட்ட விரும்பிய அவர் அவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தார்.

அவரது இந்த யாத்திரை ஊழலை மட்டும் எதிர்த்ததாக அறிவிக்கப்பட்டால் அத்தனை எடுபடாத ஒன்றாக ஆகிவிடும்; வி¬சயமறிந்த மக்களில் பலர் நீங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் என்ன வாழ்கிறது என்று கேட்டுவிடுவர் என்ற எண்ணத்தில் அவர் கூடுதலாகச் சேர்த்துக் கொண்ட ஒரு வி¬சயமே சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டுவர வேண்டும் என்ற அந்த யாத்திரையின் மற்றொரு முழக்கம்.

ஊழலே ஊழலை எதிர்ப்பதாகக் காட்டும் போக்கு

இந்தப் பின்னணியில் ஏன் ஊரும் உலகும் அறிந்த பல வெளிப்படையான காரணங்களை அடிப்படையாக வைத்து வகுப்புவாதி என்று கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின் அனைவராலும் கருதப்பட்ட நரேந்திர மோடி அவர் எதைக் குலைத்தார் என்பதற்காக குற்றம் சாட்டப்பட்டாரோ அந்த மத நல்லிணக்க முழக்கத்தை முன்வைத்து உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்?

நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்குப் பணம் வாங்கினார்கள்; வெளி நாட்டிற்கு தன் மனைவி என்று ஒரு பெண்ணை அறிவித்து அழைத்துச் சென்றார் என்பது உள்பட பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நாடாளுமன்ற உறுப்பினர் பலரைத் தன் கட்சியினராகக் கொண்டிருக்கும் நிலையிலும் ஊழலுக்கு எதிராக உலா வருகிறேன் என்று அத்வானி ஏன் அறிவித்து வருகிறார்?

அதுவும் தனது கட்சியின் முன்னாள் முதல்வர் ஒருவர் மீதுஊழல் குற்றச்சாட்டுகள் கொழுந்துவிட்டு எரியும் போதே. தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராகச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவை மிகப் பெரும் வருவாய் இழப்பினை அரசின் கருவூலத்திற்கு ஏற்படுத்தியுள்ளன என்பதெல்லாம் அசைக்க முடியாத உண்மைகள்.

எடியூரப்பாவிடம் பலிக்காத கட்சியின் ஜம்பம்

இருந்தாலும் கூடத் தற்போதைய மத்திய அரசு பி.ஜே.பியைக் காட்டிலும் ஊழல்வாதிகளைச் சற்று கூடுதல் நேர்மையுடன் நாங்கள் கையாண்டிருக்கிறோம் என்று கூறிக் கொள்வதற்கும் இடமிருக்கிறது. ஏனெனில் முதன்முதலில் எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தபோது அவரைப் பதவி விலகக் கோரப் போவதாக பி.ஜே.பி. கட்சியின் தற்போதைய தலைவர் கட்கரி அறிவித்தார்.

ஆனால் எடியூரப்பா அதற்கு மசிந்து கொடுக்காமல் மலைபோல் நின்றார். அவர் அந்த நிலையினை எடுத்தவுடன் கட்கரி மசிந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கூற்றிற்கு இணங்க கட்கரி அதன் பின் தனது வாத்தியத்தை அடக்கி அல்ல, மாற்றி வாசிக்க ஆரம்பித்தார்.

அதாவது அடுத்து கர்நாடகா மாநிலத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் வழங்கும் தீர்ப்பு தங்கள் கட்சியின் ஆட்சி ஊழல் மயமானதா இல்லையா எனத் தீர்மானிக்கும் என்று கூறத் தொடங்கினார்.

சிறையில் பலர்

இந்நிலையில் ஊழல் வாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற அமைப்பாக பி.ஜே.பி. விளங்கிய போது நாங்கள் ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவோ வழக்குத் தொடரவோ தயங்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி நிச்சயம் கூறலாம்.

ஏனெனில் அக்கட்சியின் சுரேஷ் கல்மாடி, அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.கழகத்தின் அ.ராசா, கனிமொழி ஆகியோர் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளதோடு டெல்லி திகார் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்படவும் செய்தனர். இவ்வாறு நாம் கூறும் போது பி.ஜே.பியைச் சேர்ந்தவர்கள் ஒரு வாதத்தை நிச்சயம் முன்வைப்பர். அதாவது 2ஜி ஏலம் விடுவதில் மட்டும் எத்தனை லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. அந்த ஊழலோடு பி.ஜே.பி. கட்சியினர் செய்த ஊழல்களை ஒப்பிட்டுப் பார்த்தால் மலைக்கும் மடுவிற்கும் இடையில் உள்ள வேறுபாடு அல்லவா இருக்கும் என்று அவர்கள் கூறலாம். ஆனால் 2ஜி ஊழலுக்கும் ஊற்றுக்கண் பி.ஜே.பியின் தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கொள்கையே என்பதை யாரும் மறைக்க முடியாது.

காலத்தின் மாற்றம் ஊழலின் பரிமாணத்தைக் கூட்டியிருக்கலாமே தவிர ஊழல் செய்ய முடிவதற்கான அடித்தளம் தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சிக் காலத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது என்பதை அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்து அதன்பின் பதவி விலகிய ஜக் மோகன் அவர்களின் அக்காலத்திய கூற்றுகளை ஊன்றிப் படித்தாலே தெரியும்.

இவ்வாறிருக்கையில் எவ்வாறு அத்வானி அவர்கள் இவ்வளவு பெரிய யாத்திரை ஊழலுக்கு எதிராக என்ற பெயரில் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது நமது மனங்களில் தவிர்க்க முடியாமல் எழும் கேள்வியாக உள்ளது.

பாசிஸத்தைக் கொண்டு வருவதில் பி.ஜே.பிக்கு இருக்கும் கூடுதல் சாதக அம்சங்கள்

இன்று முதலாளித்துவ அமைப்புகளுக்குச் சேவை செய்யும் அனைத்துக் கட்சிகளுமே பாசிஸப் பாதையில் நடை போடக் கூடியவைகளாக உள்ளன. அதாவது எந்தவொரு கட்சியும் சம்பிரதாய அளவிற்குக்கூட ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றிக் கொண்டு சமாளிக்க முடியாத நெருக்கடி சூழ்ந்த நிலையில் இருக்கும் இன்றைய முதலாளித்துவத்தைக் காப்பாற்ற முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனாலும் பாசிஸத்தைக் கொண்டுவருவதற்கான உள்ளார்ந்த வலுவும் திறமையும் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே அளவில் இருக்கிறது என்றும் கூற முடியாது.

அந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சியை விடப் பாசிஸத்தைக் கொண்டு வருவதற்கான உள்ளார்ந்த வலுவும் அதற்கான தொண்டர் பலரும் பி.ஜே.பி. கட்சியிலும் அதன் பரிவாரத்திலும் மிக அதிகம் உள்ளனர்.

பாசிஸப் போக்கின் ஒரு கூறு ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறினால் அது உண்மையாகிவிடும் என்பதாகும். அதையொட்டியே தங்கள் கட்சி பொது வாழ்வின் மதிப்புகளை உயர்த்திப் பிடிக்கும் தனித் தன்மை வாய்ந்த கட்சி என்ற பொய்யை அத்வானி அவர்கள் அவரது கட்சியின் ஆட்சிக் காலத்தில் முன்வைத்தார். மேலும் பாசிஸ அரசியல் வாதிகளின் வேறொரு குணாம்சம் அவர்களைப் பாதிக்கும் கேள்விகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் கண்டுகொள்ளாமல் அதற்குப் பதிலளித்து ஒரு முக்கியத்துவம் கொடுத்து விடாமல் இருப்பதாகும்.

மேலும் தான் கூறுவது பொய்யாகவே இருந்தாலும் அதைப் பேரிரைச்சலுடன் கூறினால் அக்கூச்சலில் அது பொய்யயனக் கூறும் குரல் எடுபடாமல் போய்விடும் என்பதும் பாசிஸ்ட்களின் மற்றொரு யுக்தியாகும். இவற்றைப் பின்பற்றித்தான் தனது வீட்டில் இத்தனை கோளாறுகள் இருக்கும் நிலையிலும் பி.ஜே.பி. யின் தலைவர் அவர்கள் சிறிதும் கூச்சமின்றி இப்பொடியொரு யாத்திரையை ஊழலுக்கு எதிரானது என்ற பெயரில் தொடங்கியுள்ளார்.

ஆட்சியை நிலைப்படுத்த காங்கிரஸ் கையாண்ட தந்திர நடவடிக்கைகள்

அதுதவிர வேறொரு காரணமும் அவரது யாத்திரையின் பின்னணியில் உள்ளது. அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக்குப் பின் தட்டுண்டு தடுமாறி வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியைக் காங்கிரஸ் கட்சி நிலைப்படுத்த முடிந்ததன் பின்னணியில் காங்கிரஸ் கடைப்பிடித்த இரண்டு யுக்திகள் உள்ளன.

ஒன்று பி.ஜே.பி. கட்சி எதிர்பார்த்ததற்கு மாறாக திருமதி சோனியா காந்தி பிரதமர் பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளியது. மற்றொன்று எதிர்பாராத விதத்தில் கட்சி அரசியலில் பல காலம் இருந்து ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகாத ஒருவரை அதாவது திருவாளர் மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்தது.

ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகாதவர் என்பது மட்டும் மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராகக் கொண்டுவரப் பட்டதற்கான காரணம் என்று கூற முடியாது. அதில் வேறொரு ஆழமானதும் அழுத்தமானதுமான வி¬சயமும் இருந்தது. உலகமயச் சூழலில் அந்நிய மூலதனம் வருவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தரவல்ல ஒருவர் பிரதமராக இருந்தால் அது ஆளும் வர்க்கத்திற்கு மிகவும் சாதகமானதாக இருக்கும்; அந்த அடிப்படையில் பல காலம் பொருளாதார நிபுணர் என்ற ரீதியில் உலக நிதி நிறுவனங்களில் பொறுப்புகள் வகித்த மன்மோகன் சிங் அவர்களின் அனுபவமும் வெளிநாட்டு அதிகார வர்க்கத்தினுடனான பரிச்சயமும் அவர் பிரதமராக வந்தால் அது ஒரு மேலான முகத்தோற்றத்தை இந்திய அரசிற்கு வழங்கும் என்பதும் கூட ஒரு முக்கிய கருது பொருளாக அப்போது இருந்தது.

தற்போது தொடர்ச்சியாக நடந்துள்ள பல ஊழல்கள் தற்போதுள்ள இரண்டாவது கட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக்கு மிகப்பெரும் அளவிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளன. அதை உரிய முறையில் பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான ஒரு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே பி.ஜே.பி. தலைவரின் இந்த ரத யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

நமது நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும் அக்கட்சிகளில் ஊரறிந்த உலகறிந்த பல தலைவர்கள் இருந்தாலும், அவர்களில் ஏறக்குறைய அனைவருமே நற்பெயரற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் பதவி ஆசை குறைவின்றி இருந்தாலும் அவர்கள் அனைவரும் இதுபோன்ற யாத்திரை ஒன்றைத் தொடங்காத நிலையில் அத்வானி அவர்கள் மட்டும் இதனைத் தொடங்கியதற்கான காரணம் அவர் ஏதோ மதிப்புமிக்க அரசியலை உயர்த்திப் பிடிப்பவராகத் தொடர்ச்சியாக ஒரு வகைப் பாசிஸத் தனத்தின் மூலம் காட்ட முயல்வதாகும்.

ஏனெனில் இதற்கு முன்பும் அவர் அவரது கட்சி குறித்து ஒரு கருத்தை அவரது கட்சி ஆட்சியில் இருந்த போது முன்வைத்தார். அதாவது பிற கட்சிகளில் இருந்தெல்லாம் வேறுபட்டதொரு கட்சி (A Party with a difference) தன் கட்சி என்று அவர் கூறினார். அதாவது இருக்கும் தலைவர்களிலேயே காந்தியடிகளை ஒத்த தலைவர் தானே என்று காட்டிக்கொள்ள அவர் முனைந்தார்.

காந்தியடிகள், ஜே.பி. போன்றவர்களுக்கும் இவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. சரியாகவோ தவறாகவோ செளரி செளரா சம்பவம் நிகழ்ந்தவுடன் தான் நம்பும் அகிம்சைக்கு எதிரானதாக அவ்வியக்கம் சென்று விட்டது என்று அறிந்த நிலையில் தன் கட்சியிலிருந்து மட்டுமின்றி விடுதலைப் போரில் அவரது கட்சியோடு இணைந்திருந்த அனைத்து வட்டாரங்களில் இருந்தும் எதிர்ப்பு வந்த நிலையில் அந்த எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தச் சொன்னார்.

அவரும் ஜே.பியும் அவர்களுடைய மதிப்பையும் மரியாதையையும் மதிப்புமிக்க அரசியலின் வளர்ச்சிக்காக அவர்கள் எடுத்த நிலைகளையும் மையமாக வைத்தே அவர்களது அரசியலை வளர்த்தெடுத்தனர். அவர்கள் அவர்களது அரசியலைத் தொடங்கிய போது மிகப் பெரிய அமைப்பு ரீதியான வலு அவர்களது இயக்கத்திற்கு இருக்கவில்லை. குறிப்பாக ஜே.பி. சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவராக இருந்த போதும் பல காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில் தான் ஊழலுக்கு எதிரான தனது இயக்கத்தைத் தொடங்கினார். ஊழலுக்கு எதிரான அவரது முழக்கம் அதற்கு ஆதரவாக ஏராளமான மக்களை அவருடன் கொண்டுவந்து நிறுத்தியது. அதன் விளைவாகவே நேருவுக்குப் பின் காங்கிரஸின் அசைக்க முடியாத தலைவராக விளங்கிய இந்திரா காந்தி அவர்களின் ஆட்சியே அகன்றது.

அமைப்பைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கும் போக்கு

அதாவது முழக்கத்தை முன்வைத்து காந்தியடிகளும், ஜே.பியும் ஸ்தாபனத்தை உருவாக்கினர். ஆனால் அத்வானி அவர்கள் தனக்கிருக்கும் ஸ்தாபனத்தை முன்னிறுத்தி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றக் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் அயோத்திப் பிரச்னையை முன்வைத்து அத்வானி அவர்கள் தொடங்கிய பழைய ரத யாத்திரையைப் போல் இந்த ரத யாத்திரை அவருக்கோ அவரது கட்சிக்கோ பெரிய ஆதாயத்தை தேடித்தரப் போவதில்லை. ஏனெனில் காங்கிரஸ் கட்சி உட்பட ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள அனைத்துக் கட்சிகளும் ஏதாவது ஒரு விதத்தில் வகுப்புவாத நிலைகளை எடுப்பவையாக இருந்தாலும் வகுப்புவாத முழக்கத்தை பி.ஜே.பி. முன்வைப்பதற்கும் பிற கட்சிகள் முன்வைப்பதற்கும் ஒரு மிகப்பெரும் வேறுபாடு இருக்கவே செய்கிறது.

பி.ஜே.பி. கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் வகுப்புவாத முழக்கத்தை இடைவிடாமல் சிறிய பெரிய அளவுகளில் விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்து இன்று வரை வைத்துக் கொண்டிருக்கும் பாரம்பரியம் இல்லை. எனவே அந்த முழக்கத்தை முன்வைத்து அரசியல் செய்யும் போது பி.ஜே.பி. கட்சியினருக்கும் சங் பரிவாரத்திற்கும் ஏற்படும் உளப்பூர்வ ஒன்றுதலும் ஈடுபாடும் வேறு முழக்கங்களை வைக்கும் போது அவ்வமைப்பினரிடையே ஏற்படுவதில்லை. மேலும் ஊழலுக்கு எதிரான நிலையைப் பி.ஜே.பி. எடுப்பது ஒரு வே¬சதாரித்தனம் என்பதும் ஓரளவிற்கு மக்களிடையே அம்பலமாகியும் உள்ளது.

எனவே ஊழல் அரசியலால் காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தடுமாறி நிற்கும் சூழ்நிலையில் அவர்களுக்கு இடையிலான ஒற்றுமை குலைந்து அவநம்பிக்கை மேலோங்கியுள்ள பின்னணியில் தனது அமைப்பு ரீதியான வலுவினைக் கொண்டு ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கருதி அவ்வாறு ஆட்சியைப் பிடிப்பதற்கு நம்பிக்கையுடன் பணியாற்ற ஊழியர் களுக்கு உற்சாகம் தருவதற்காக இந்த ரத யாத்திரை பயன்படும் என்ற அடிப்படையில் அத்வானி இதனை மேற்கொள்கிறார்.

சரி, அத்வானி அவர்கள் இத்தகைய உள்நோக்குடன் தனது ரத யாத்திரையைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார் என்றால் நரேந்திர மோடி மதநல்லிணக்க உண்ணாவிரதம் தொடங்கியதன் பின்னணி என்ன?

இனவெறி அமைப்புகள் ஏற்புடையவையல்ல

இரண்டாவது முறை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி ஏற்பட்ட பின்பு பி.ஜே.பி. மீண்டும் ஆட்சிக்கு வருமா என்பதே கேள்விக்குரிய ஒரு வி¬சயமாக ஆகிப் போனது. அதற்குக் காரணம் காங்கிரஸூக்கு எதிராக எந்த வி¬சயங்களையெல்லாம் எடுக்க முடியுமோ அவை அனைத்தையும் எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அக்கட்சி எடுத்த பல நடவடிக்கைகள் ஆகும்.

அதில் ஒன்று அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தின் போது பி.ஜே.பி. எடுத்த எதிர்ப்பு நிலைபாடாகும். அதாவது அக்கட்சியும் அதன் தாய்க்கட்சியான ஜனசங்கமும் காலங்காலமாக எடுத்த நிலைபாடுகள் அனைத்துமே ஒரு அதிதீவிர தேசியவாதத் தன்மை கொண்டவையாகும். அத்தகைய தேசியவாத முழக்கங்கள் ஆளும் வர்க்கத்தினால் அதற்குத் தேவைப்படும் போதெல்லாம் குறைவின்றிப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே வந்துள்ளன. ஆனால் சில சமயங்களில் அத்தகைய முழக்கங்கள் ஆளும் வர்க்கத்திற்குச் சுமைகளாகவும் ஆகிவிடுகின்றன.
அதனால் தான் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் கூட மிதமிஞ்சிய தேசிய இனவெறிவாத அமைப்புகளைக் காட்டிலும் பெயரளவிற்கேனும் தாராளவாத மதிப்புகளைக் கொண்டுள்ளவை எனத் தங்களைக் காட்டிக் கொள்ளும் கட்சிகளை உடனடியாக ஆளும் வர்க்கம் ஏற்றுக் கொள்கிறது. எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் தாராளவாத ஜனநாயகப் பாவனைகளுடன் செயல்படும் கட்சிகளையே ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்தி வருகின்றன. அத்தகைய தாராளவாதப் பாவனையுடன் செயல்படும் கட்சியான காங்கிரஸ் கட்சி இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அதாவது அது விரும்பும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவிபுரியும் என்று கருதிக் கொண்டு வந்ததே அணு ஒப்பந்தம் ஆகும்.

அந்த ஒப்பந்தத்தை பி.ஜே.பி. எதிர்த்தது ஆளும் வர்க்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஏற்புடையதாக இல்லை. பி.ஜே.பியின் அந்நிலைபாடும் அதன் தோல்விக்கு ஒரு காரணமாகும்.

ஜின்னாவிற்குப் புகழாரம் சூட்டப் போய்

இதுதவிர அத்வானி அவர்கள் தனது கட்சி ஆட்சியில் இருந்தபோது மேற்கொண்ட பாகிஸ்தான் சுற்றுப் பயணத்திலிருந்து திரும்பிய போது பாகிஸ்தானின் ஸ்தாபகத் தலைவர் முகமது அலி ஜின்னா குறித்து வெளியிட்ட, அதாவது ஜின்னா சில தகுதிகள் கொண்ட தலைவர் என்ற கருத்து சங் பரிவாரத்தின் அடிப்படையான மனநிலைக்கு உகந்ததாக இல்லை. எனவே அவர் அக்கட்சி அணிகளால் ஓரங்கட்டப்பட்டார். அதாவது பாபர் மசூதி இடிப்பிற்கு வழிவகுத்த அவரது ரதயாத்திரை அவர் குறித்து உள்நாட்டிலும் உலக அரங்கிலும் ஏற்படுத்திய வகுப்புவாதி என்ற முகத் தோற்றத்தை மாற்றுவதற்கு உதவும் என்ற அடிப்படையிலேயே அவர் ஜின்னா குறித்து மேற்குறிப்பிட்ட கருத்துக்களை முன்வைத்தார்.

அது அவர் பதவிக்காக அடிப்படை நம்பிக்கைகளையே தேவை ஏற்பட்டால் கைவிடக் கூடியவர் என்ற எண்ணத்தை அவரது அணிகளிடையே ஏற்படுத்திவிட்டது. அதற்கும் அசராத அவர் தான் பதவி ஆசை இல்லாதவர் என்று காட்டிக் கொள்வதற்கு அதுதான் ஒரு சாதமான சூழல் என்பதை உணர்ந்து கொண்டு பிரதமராகும் ஆசை தனக்கு இல்லை என்று அப்போது டாம்பீகமாக அறிவித்தார். உண்மையில் அவரைப் பிரதமராக்கும் எண்ணம் அவரது கட்சியின் அணிகளுக்கு அப்போது இல்லை.

புனித வேடத்தில் மோடி

அவரது இந்த மனநிலை தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ஊழல் தலைவிரித்தாடும் நிலைமை தோன்றும் வரை நீடித்தது. இந்த நிலையில் தான் நரேந்திர மோடியை அவர் தொடர்ச்சியாக இரண்டு முறை மகத்தான தேர்தல் வெற்றியை அவரது மாநிலத்தில் சாதித்துள்ளதைக் கணக்கிற்கொண்டும் அந்த மாநிலத்தைத் தொழில் வளர்ச்சியில் முன்னிலையில் இருக்கும் மாநிலமாக ஆக்கியுள்ளார் என்ற இடைவிடாதப் பிரச்சாரத்தின் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு தோற்றத்தை முன்னிறுத்தியும் கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகக் கருத வைக்கலாம் என்ற எண்ணம் அக்கட்சியில் சிலருக்குத் தோன்றியது.

ஆனால் அதைப் பயன்படுத்துவதில் அவருக்குப் பல சிக்கல்கள் இருந்தன. தேசிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள பல கட்சிகள் அவர் பிரதமருக்கான வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதை வெளிப்படையாகவே விரும்பவில்லை. கடந்த நாடாளுமன்றத்திற்கான தேர்தலின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு முக்கிய அங்கமான பீஹாரைத் தற்போது ஆட்சி செய்யும் நிதிஷ் குமார், நரேந்திர மோடி பிரச்சாரத்திற்காக தன் மாநிலத்திற்கு வரக் கூடாது என்று வெளிப்படையாகவே பி.ஜே.பி. தலைமையிடம் கூறிவிட்டார். ஏனெனில் அவரது வருகை சிறுபான்மை இனத்தினரின் வாக்குகளை அவரது கட்சி பெறுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்று அவர் கருதினார்.

இந்த நிலையில் ஏதாவது ஒரு புனித வேடம் புனையாமல் அப்பதவிக்கு உகந்தவராக தன்னைக் காட்ட முடியாது என்ற நிலை நரேந்திர மோடிக்கு ஏற்பட்டது. அவ்வாறு புனித வேடம் புனைவதற்கு ஏற்றதொரு பின்னணியும் குஜராத்தில் தோன்றியது. ஒரு முக்கிய சிறுபான்மை முஸ்லீம் இனத் தலைவர் மோடி குறித்து வெளியிட்ட சில அவர் அத்தனை மோசமானவரல்ல என்ற மோடிக்கு சாதகமான கருத்துக்கள் அந்தப் பின்னணியை ஏற்படுத்தியது.

அதைப் பயன்படுத்திக் கொண்டு தானும் தான் ஆளும் குஜராத்தும் மிகவும் மோசமாக அவதூறு செய்யப்படுகின்றோம்; உண்மையில் தானோ தனது மாநில மக்களோ சிறுபான்மை இனத்தவருக்கு எதிரானவர்கள் அல்ல; அதற்கு எடுத்துக்காட்டு சிறுபான்மை இனத் தலைவர் ஒருவரே தன்னைப்பற்றி வெளியிட்டுள்ள தான் நல்லவன் என்ற கருத்து என்று காட்டி தான் ஒரு வகுப்புவாதி அல்ல என்ற தோற்றத்தை பெரிதாகச் சித்தரித்து அரசியல் ஆதாயம் ஈட்டுவதற்காக அந்த உண்ணாவிரதத்தை அவர் மேற்கொண்டார். ஆனால் இந்தச் சூழ்நிலையில் பி.ஜே.பியின் ஆட்சி மீண்டும் வரும் வாய்ப்பு கூடுதல் பிரகாசம் அடைந்த பின்னணியில் அத்வானி அவர்களுக்கும் பிரதமராகும் ஆசை இயற்கையாகவே அரும்பத் தொடங்கியது. எனவே தான் மோடியின் உண்ணாவிரதம் முடிந்த சில தினங்களிலேயே தனது ரத யாத்திரையை அத்வானி தொடங்கினார்.

அதாவது இவ்விரு நிகழ்வுகளும் ஒரு வகையில் பி.ஜே.பி. கட்சித் தலைமைக்கிடையில் பதவிப் போட்டியை மையமாகக் கொண்டு நிலவும் பனிப்போருமாகும். நமது நாட்டின் அரசியல் எத்தனை மோசமாக பாசிஸத் திசை வழியில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை முன்னறிவிக்கும் நிகழ்வுகளே இந்த ரத யாத்திரையும் உண்ணாவிரதமும். சைத்தான்கள் வேதம் ஓதுகின்றன என்ற வாசகத்தையே இவர்கள் முன்வைத்துள்ள மத நல்லிணக்க, ஊழல் எதிர்ப்பு முழக்கங்கள் வெளிப்படுத்துகின்றன.

இதுதவிர அத்வானி அவர்கள் சில காலமாகவே சுவிஸ் வங்கிக் கணக்குகளில் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார். கடந்த தேர்தலின் போதே இந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் அவர் முன்வைத்தார்.

ஏனெனில் அவருக்கு நன்கு தெரியும் சுவிஸ் வங்கியில் ஏராளமான கறுப்புப் பணம் பல இந்திய அரசியல் மற்றும் வர்த்தகப் பிரமுகர்களால் பலகாலமாக வைக்கப்பட்டிருக்கிறது என்பது. இது காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மத்தியல் ஆட்சி ஏற்பட்டவுடன் தோன்றிய வி¬சயமல்ல. காலங்காலமாக இருந்து கொண்டுள்ள வி¬சயம்.

அவ்வாறு இருக்கும் போது அவரது கட்சியின் ஆட்சிக் காலத்தில் இந்தக் கறுப்புப் பணத்தைக் கொணர என்ன முயற்சிகள் அவரது கட்சியால் மேற்கொள்ளப்பட்டன என்ற கேள்வி இயல்பாகவே எவருக்கும் எழும். ஆனால் நாம் ஏற்கனவே பார்த்த விதத்தில் அது போன்ற கேள்விகளைக் கண்டுகொள்ளும் வழக்கம் பாசிஸ அரசியல் வாதிகளுக்கு இல்லை. அப்படி யாரேனும் கூறினாலும் அதற்குச் சம்பந்தமில்லாத வேறொரு வி¬யத்தில் பேரிரைச்சலைக் கிளப்பி அதனை அவர்கள் அமுக்கிவிடுவர்.

இடைவிடாமல் பயன்படும் முழக்கத்தின் தேவை

மேலும் பி.ஜே.பி. கட்சி அதன் அரசியல் அனுபவத்தில் ஒரு படிப்பினையை நிச்சயம் எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கவே முடியாது. அதாவது அது அரசியல் செய்வதற்கு இடைவிடாமல் பயன்படும் முழக்கம் ஏதாவது இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட முழக்கமாக பலகாலமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்னை இருந்தது. ஆனால் அளவிற்கு அதிகமாக அதனை இழுத்து பி.ஜே.பி. அதனை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. பொன்முட்டையிடும் வாத்தை அறுத்து முட்டை எடுத்த கதையாக அது ஆகிவிட்டது.

தற்போது அதன் ஆயுதச் சாலையில் அத்தகைய முக்கிய ஆயுதம் முற்றிலும் இல்லாது போய்விட்டது. அதையொத்த விதத்தில் சக்தி வாய்ந்ததாக இல்லாவிடினும் கருவேப்பிலை போல் எப்போதுமே பயன்பட வல்லதாக இந்த கறுப்புப்பண முழக்கம் ஓரளவு அதற்குப் பயன்படும் தன்மை கொண்டதாக உள்ளது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதைப் போல. அந்த அடிப்படையில் அத்வானி அவர்கள் இதனை எடுத்துள்ளார்.

அதற்கான பின்னணி தற்போது ஏற்பட்டுள்ள மின்னணு சாதன வளர்ச்சியாகும். அது இதுபோன்ற பல திருட்டுத் தனங்களை முற்றிலும் ரகசியமாக வைத்திருக்க முடியாத ஒரு சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளதே. சில காலங்களுக்கு முன்பு ஊடகங்கள் அரசல் புரசலாக இந்தியாவில் எந்தெந்தப் பிரமுகரெல்லாம் சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் வைத்திருக்கிறார் என்ற வி¬யங்களை வெளிப்படுத்தின. அந்தப் பின்னணியில் இந்த முழக்கத்தை அத்தனை எளிதில் இது முடிந்து விடாது என்ற அதீத நம்பிக்கையுடன் அத்வானி அவர்கள் கையில் எடுத்தார்.

கைமாறிய சி.பி.ஐ(எம்)ன் முழக்கம்

ஒரு வகையில் இதற்காக சி.பி.ஐ(எம்). கட்சிக்கு நன்றிக்கடன் பட்டவரே திருவாளர் அத்வானி. அடிப்படை சமூகமாற்ற முழக்கத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்ட அக்கட்சி அது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால் எவ்வாறு நாட்டின் பிரச்னைகளைத் தீர்க்கப் போகிறது என்ற கேள்வி எழும் போதெல்லாம் அதற்குப் பதிலாக கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவோம்; நிலச்சீர்திருத்தம் செய்வோம் என்றே கூறிவந்தது.

நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே இப்போது இருக்கக்கூடிய மிகப்பெரும் பிரச்னை முதலாளித்துவ நெருக்கடியால் ஏற்பட்டுள்ளதாகும். கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்ந்து அரசுத் துறையில் பல நிறுவனங்களை ஏற்படுத்தினாலும் கூட முதலாளித்துவ அரசு எந்திரத்தை அப்படியே பராமரித்துக் கொண்டு அதனைச் செய்யும் போது அவை பல தனியார் முதலாளித்துவ நிறுவனங்கள் வளர்வதற்குத் தேவையான அடிப்படையை உருவாக்குவனவாகவே அமையும்.

தற்போதைய முதலாளித்துவ நெருக்கடி எப்படிப்பட்டதென்றால் சோவியத் யூனியனிலும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிசத்தின் வீழ்ச்சிக்குப் பின் உருவாகிய மிகப்பெரிய சந்தையே குறுகிய காலத்தில் உலக முதலாளித்துவத்தால் பயன்படுத்தி முடிக்கப்பட்டு விட்டது. அந்த நிலையில் கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்ந்து அதனால் செய்யப்படும் முதலீடுகள் இந்திய முதலாளித்துவத்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் கபளீகரம் செய்யப்பட்டு காணாமல் போய்விடும்.

அது மட்டுமல்ல பெருகிவரும் மக்கள் தேவைக்குத் தற்போது உள்ளதற்கு மேலாக ஒரு அங்குல அளவு கூட நிலப்பரப்பை நீட்ட முடியாது. எனவே நிலச் சீர்திருத்தம் நமது பிரச்னைகளுக்கு ஒரு தீர்வாக இனிமேல் ஒருபோதும் இருக்கப் போவதில்லை. இருந்தும் அவர்களது அப்பட்டமான நாடாளுமன்றவாதம் அந்த முழக்கங்களை நோக்கி அவர்களைத் தள்ளியது. அதில் ஒரு முழக்கத்தையே இதுதான் தருணம் என்று அத்வானி அவர்கள் தட்டிப் பறித்துக் கொண்டுவிட்டார். இதுவே, அதாவது தங்களது ஸ்தாபன வலுவினை மூலதனமாகக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ள நிலையில் மக்களின் குறைந்த அளவிலான அரசியல் ஞானத்தில் அதீத நம்பிக்கை வைத்துத் தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டித் தேர்தல் வேலை செய்ய வைப்பதற்காகப் பாசிஸ்டுகளுக்கே உரிய முறையில் பி.ஜே.பி. கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி மற்றும் அத்வானி ஆகியோரால் நடத்தப்படுவதே இந்த உண்ணாவிரதமும் ரத யாத்திரையுமாகும்.

Pin It

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் அந்திமந்தாரை என்ற ஒரு திரைப்படம் வெளிவந்தது. அது அந்த ஆண்டின் சிறந்த தமிழ்மொழித் திரைப்படமாக மத்திய அரசால் கருதப்பட்டு அதற்கான விருதும் அப்படத்திற்கு வழங்கப்பட்டது.

அந்தப்படம் விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் அவருடைய வாழ்வின் கடைசிக் காலத்தில் படும் சிரமங்கள் குறித்தது. அவர் போற்றிப் பராமரித்த மதிப்புகளுக்கும் கருத்துக்களுக்கும் இன்றைய சமூகத்தில் எவ்வாறு இடமில்லாமல் போய்விட்டது என்பதை விளக்கும் கதை.

அதில் ஒரு காட்சியில் அரசியல் வாதி ஒருவரின் முறை தவறிய செயலை எதிர்த்து அறவழியில் போராடும் அவருக்கும் அந்த அரசியல் வாதிக்கும் இடையிலான உரையாடல் ஒன்று வரும். அந்த உரையாடலில் அந்த அரசியல்வாதி அவரிடம் இத்தனை ஆண்டுகாலம் சிறையில் இருந்தவன் என்று நீ மட்டும் பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை; நானும் கூடச் சிறை சென்றவன்தான் என்று கூறுவான்.

அதற்கு அந்த விடுதலைப் போராட்ட வீரர் ஆம் நீயும் தான் சிறை சென்றிருக்கிறாய்; ஆனால் நான் சிறை சென்றதற்கும் நீ சென்றதற்கும் வேறுபாடு உள்ளது. நான் வெள்ளையர் ஆட்சியை அகற்றுவதற்காகப் போராடிச் சிறை சென்றேன். ஆனால் நீயோ கஞ்சா விற்றோ அல்லது கள்ளச் சாராயம் காய்ச்சியோ அதுபோன்ற சமூக விரோத செயல்கள் செய்து சிறை சென்றிருப்பாய் என்று கூறுவார்.

எப்போதோ பார்த்த அப்படத்தின் காட்சிகள் பல மறந்து போன நிலையில் அப்படத்தின் இந்த வசனம் மட்டும் தற்போது தமிழ்நாட்டில் நிலவும் ஒரு குறிப்பிட்ட அரசியல் பின்னணியில் நினைவிற்கு வருகிறது.

நடவடிக்கை அவசியம்

முந்தைய தி.மு.க. அரசாங்கம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பல வழக்குகள் முந்தைய ஆட்சியில் அதிகாரம் செலுத்திய பல அரசியல் பிரமுகர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ளன.

சமீப காலங்களில் இவ்வாறு பழைய பிரச்னைகளைத் தோண்டி எடுத்து ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் ஆட்சியிலிருந்த அரசியல் கட்சிகளுக்கு எதிராக நெருக்கடிகள் கொடுக்கும் போக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே பல மாநிலங்களில் நிலவிக் கொண்டுள்ளது. இதன் பொருள் பழைய ஆட்சியாளர்கள் செய்த முறைகேடுகள் அனைத்தையும் மறப்போம் மன்னிப்போம் என்ற பாணியில் புதிய ஆட்சியாளர்கள் கருத்திற் கொள்ளாமல் விட்டுவிட வேண்டும் என்பதல்ல. மக்களைப் பாதித்த பழைய ஆட்சியாளர்களின் நியாயவிரோத, சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவது தவறு செய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடக் கூடாது என்ற அடிப்படையில் மட்டுமல்ல; அடுத்து வரும் ஆட்சியாளர்களுக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்பதாலும் தான். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நமக்கும் இந்த நடவடிக்கைகளே காத்திருக்கின்றன என்ற எண்ணத்தைத் தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். அதற்காகவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் காழ்ப்புணர்ச்சியே இல்லாமல் முழுமையான நடுநிலைத் தன்மையுடன் மேற்கொள்ளப் படுகின்றன என்று கூறவும் முடியாது.

ஏனெனில் இன்றைய அரசியல் கொள்கைகள் கருத்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள முக்கியக் கட்சிகள் என்று கருதப்படக் கூடிய கட்சிகளால் நடத்தப்படுவதில்லை. எனவே ஆங்காங்கே பழிவாங்கும் நடவடிக்கைகளும் கூடத் தற்போதைய ஆட்சியாளர்களால் எடுக்கப் பட்டிருக்கலாம். அதற்கான வாய்ப்பில்லை என்று கூற முடியாது.

இருந்தாலும் தற்போது தொடுக்கப்பட்டுள்ள முந்தைய ஆளும் கட்சியினருக்கு எதிரான வழக்குகளில் பெரும்பாலானவை ஒரு நடுநிலையான மனதோடு அவற்றை பார்க்கும், அவை குறித்த விபரங்களைப் படிக்கும் அனைவருக்கும் இது முழுமையான பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; இந்த வழக்குகளில் சில அடிப்படைகள் உள்ளன என்ற எண்ணத்தை ஏற்படுத்துவனவாகவே உள்ளன.

இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தப்படுவோரின் கட்சித் தலைமைகள் வழக்கமாக இவற்றை ஆளும் கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கைகள் என்று வர்ணிப்பது புதிதல்ல. அது வழக்கமாக நடைபெறும் ஒன்றே.

ஆனால் தமிழகத்தின் முன்னாள் ஆளும் கட்சியும் தற்போதைய எதிர்க்கட்சியுமான தி.மு.க.வின் தலைவர் திரு மு.கருணாநிதி அவர்கள் இந்த வழக்குத் தொடுக்கும் நடவடிக்கைகளை வர்ணிக்கும் விதம் நமக்கு அந்திமந்தாரை திரைப்படத்தை நினைவிற்குக் கொண்டுவருகிறது.

காரணங்கள்

அதாவது அவர் இது அவசரகால நடவடிக்கைகளை நினைவு படுத்துகிறது என்று ஓரிரு முறைகள் அல்ல பல முறைகள் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார். அவசரகால நிலை 1975 ம் ஆண்டு ஜூன் 25 ல் அன்றிருந்த பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களால் கொண்டுவரப்பட்டது.

அதை அவர் கொண்டுவந்ததற்குப் பொதுவான காரணங்களாக இருந்தவை அதற்கு முன்பு இந்தியாவில் ஏற்பட்ட சில குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் போக்குகளாகும். இந்திய வரலாற்றிலேயே சுதந்திரம் அடைந்ததற்குப் பின் நடத்தப்பட்ட மிகப்பெரும் தொழிற்சங்கப் போராட்டமான 1974 ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் அதற்கான ஒரு முக்கிய காரணமாகும்.

அது மட்டுமின்றி சமூகத்தில் பல்கிப்பெருகிப் போன ஊழல் நடவடிக்கைகளை எதிர்த்து முன்னாள் சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் விடுதலைப் போராட்ட வீரராகவும் இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் தொடங்கிய முழுப்புரட்சி இயக்கமும் அவசரநிலை கொண்டுவரப் படுவதற்கு திருமதி இந்திராகாந்தி அவர்களைக் கொண்டு சென்ற மற்றொரு முக்கிய நிகழ்வாகும்.

இந்தப் பொதுக் காரணங்களைத் தவிர ஒரு உடனடிக் காரணமும் அவசரநிலை கொண்டுவரப் பட்டதற்கு முக்கியப் பின்னணியாக இருந்தது.

அதாவது இந்திராகாந்தி அவர்கள் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ் நாராயண் அவர்கள் தொடுத்த வழக்கும் அதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் அத்தகைய உடனடிக் காரணங்களாக இருந்தன.

ராஜ் நாராயணுக்காக சாந்திபூசன் என்ற தற்போது அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் ஒரு தலைவராக உள்ள வழக்கறிஞர் வாதாடினார். அத்தீர்ப்பு பல முறைகேடான தேர்தல் நடவடிக்கைகளில் திருமதி இந்திரா காந்தி ஈடுபட்டுள்ளார்; அதன் காரணமாக அவர் ரேபரேலியில் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று கூறியது.

அதைத் தொடர்ந்து நாட்டில் தோன்றிய பரபரப்பான சூழ்நிலை இந்திரா காந்தி அவசரநிலையைப் பிரகடனம் செய்யும் சூழ்நிலைக்கு இட்டுச் சென்றது.

அவர் அவசரநிலையைப் பிரகடனம் செய்ததோடு குடியரசுத் தலைவர் பிரதமர் ஆகியோரின் தேர்தல்களைக் கேள்வி கேட்கும் உரிமையை நீதிமன்றங்களுக்கு இல்லாமல் செய்யும் வகையிலும் அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்தார்.

நடவடிக்கைகள்

இந்தப் பின்னணியில் பத்திரிக்கைத் தணிக்கை முறை கொண்டுவரப் பட்டது. நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மிகப் பெரும்பாலோர் மக்கள் இயக்கங்கள் கட்டுவதிலும் தொழிலாளர் இயக்கங்கள் கட்டுவதிலும் முன்னணியில் இருந்தவர்கள். அதாவது ஜார்ஜ் பெர்னான்டஸ் போன்ற பிரபலமான தொழிற்சங்கத் தலைவர்களும் ஜோதிர்மாய் பாசு போன்ற பிரபல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப் பட்டவர்களில் முக்கியமானவர்கள்.

வேறுவழியின்றி எதிர்ப்பு

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஜே.பி. இயக்கத்தின் வீச்சு அதிக அளவில் இருக்கவில்லை. மேலும் அப்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.கழகம் அவசர நிலையை அத்தனைக் கடுமையாக எதிர்க்கவும் இல்லை.

இந்திரா காந்தியின் தலைமையிலான மத்திய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகத் தாங்கள் எதுவும் செய்யப் போவதில்லை என்று தங்களால் முடிந்த வகையிலெல்லாம் மத்திய அரசுக்குக் காட்டிக் கொண்டேதான் அவர்கள் இருந்தனர்.

எடுத்துக்காட்டாக அவசர நிலையை ஒட்டி இந்திரா காந்தி அமுல் செய்த இருபது அம்சத் திட்டம் சஞ்சய் காந்தி அறிவித்த ஐந்து அம்சத் திட்டம் ஆகிய இரு திட்டங்களையும் முழு அளவில் அமுல் படுத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றெல்லாம் கூட அப்போதைய தி.மு.க. தலைமையிலான அரசாங்கத்தின் முதல்வராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் அறிவித்தார்.

இருந்தாலும் தமிழ்நாட்டில் அப்போது சரிவடைந்திருந்த தி.மு.கழகத்தின் செல்வாக்கு அப்போதிருந்த இந்திரா காங்கிரஸால் மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. அப்போது தி.மு.க விலிருந்து எம்.ஜி.ஆர். விலகி தனிக்கட்சி தொடங்கியிருந்தார். அவரது கட்சி 1973ல் நடைபெற்ற திண்டுக்கல் இடைத் தேர்தலில் மாபெரும் வெற்றியும் பெற்றிருந்தது.

இந்த நிலையில் மக்கள் செல்வாக்கை இழந்திருந்த தி.மு.கழகத்தின் ஆதரவு தனக்கு ஒரு பொருட்டல்ல என்று இந்திரா தலைமையிலான காங்கிரஸ் நினைத்தது. அதனால் தி.மு.க.வை அது பெருமளவிற்கு செல்லாக் காசாகவே கருதியது. ஏனெனில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. அரசு எந்திரத்தை பயன்படுத்துவதில் தொடங்கி அனைத்து வகையான முயற்சிகளையும் வெற்றி பெறுவதற்காக மேற்கொண்ட போதிலும் அது வெறுமனே தோற்க மட்டும் இல்லை; ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த படியாக ஓட்டு வாங்கி மூன்றாவது இடத்திற்கே வந்தது.

அதாவது இன்னும் சில ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தால் அதன் வேட்பாளர் பொறுப்புத் தொகையை இழந்திருப்பார் என்ற அளவிற்கான தோல்வியை அது தழுவியது. அந்த வகையில் அத்தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்வி படுதோல்வி என்றே கூறவேண்டும்.

மேலும் காங்கிரஸின் நிலை அதைவிட மோசமாக இருந்தது. அதன் வேட்பாளரான கரு.சீமைச்சாமி என்பவர் பொறுப்புத் தொகையை இழந்தது மட்டுமல்ல அவர் வாங்கிய வாக்குகளோடு செல்லாத வாக்குகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு ஒரு வடஇந்தியப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. சில இடங்களில் இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் வென்றார்; மற்றும் சில வாக்குச் சாவடிகளில் செல்லாத ஓட்டுக்கள் இந்திரா காங்கிரஸ் வேட்பாளரை வென்றன என்று அச்செய்தி காங்கிரஸைக் கேலி செய்தது.

அந்த நிலையிலிருந்த இந்திரா காங்கிரஸூக்கு அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் அதற்கு ஒரு சக்திவாய்ந்த கூட்டணிக் கட்சி தமிழகத்தில் தேவைப்பட்டது. அத்தகைய கட்சியாக எம்.ஜி.ஆர். அவர்களின் அ.தி.மு.கழகம் அப்போது அதன் கண்ணிற்குப் பட்டது.

அதனால் தான் இழந்துவிட்ட செல்வாக்கை குறைந்த அளவிற்கேனும் தக்கவைக்க வேண்டும் என்பதற்காக வேறு வழியின்றி தி.மு.கழகம் அவசர நிலையை எதிர்த்தது. இதுவே அவசர நிலை காலகட்டத்தில் தி.மு.க. எடுத்த காங்கிரஸ் எதிர்ப்பு நிலையின் பின்னணி.

மக்களின் மறதியை மையமாக வைத்து

உண்மை இவ்வாறிருக்க மக்களின் மறதியை வைத்தே காலங்காலமாக அரசியல் நடத்துவதை கைவந்த கலையாகக் கடைப்பிடித்த தி.மு.கழகமும் அதன் தலைவர் மு.கருணாநிதி அவர்களும் அவசர நிலையை மிக முனைப்புடன் கொள்கை ரீதியாக எதிர்த்த ஒரு கட்சி போல் பின்னாளில் காட்டிக் கொள்ளத் தொடங்கினர்.

அதன் தொடர்ச்சியாகத் தான் தற்போது பல்வேறு நில அபகரிப்பு வழக்குகளில் தி.மு.க. முக்கியத் தலைவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில் இந்தக் கைது நடவடிக்கைகளை அவசர நிலைக் காலத்தில் செய்யப்பட்ட கைது நடவடிக்கை களோடு ஒப்பிட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் பேசி வருகிறார்கள்.

அவ்வாறு பேசுவது ஒரு பொருத்தமற்ற செயல் என்பதோடு அது அவசர நிலைக் காலகட்டத்தில் சிறை சென்றவர்களைக் கொச்சைப் படுத்துவதும் ஆகும்.

தற்போது நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளோர் மீது சுமத்தப்பட்ட புகார்கள் குறித்துக் கூறுகையில் தி.மு.க. தலைவர் அவர்கள் முன்வைக்கும் முக்கியமான கருத்து ஒரு சமயத்தில் நிலவிய விலைகளை மையமாக வைத்துத் தங்கள் இடங்களை விற்று விட்டவர்கள் தற்போது அவ்விடங்களின் விலைகள் அதீதமாக உயர்ந்துள்ள சூழ்நிலையில் கூடுதல் பணத்திற்கு ஆசைப்பட்டுக் கொடுக்கும் புகார்களே இவை என்பதாகும்.

இதில் ஒரு சிறிய அளவிற்கு உண்மை இருக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் அதே சமயத்தில் மிகப் பெருமளவு வழக்குகள் வெளிப்படையாகவே ஆதாரம் உள்ளவைகளாகவே உள்ளன.

சொத்துக் குவிப்பு அரசியல்

அதுமட்டுமின்றி இதில் மற்றொரு முக்கியக் கேள்வியும் சம்பந்தப் பட்டுள்ளது. அது பொது வாழ்க்கையின் தரம் மற்றும் மதிப்பு குறித்தது. அதாவது ஒரு கட்சியின் மூத்த தலைவர் தனது கட்சியின் முக்கியத் தலைவர்கள் உள்பட பலர் இந்தக் காலகட்டங்களில் உரிய விலை கொடுத்தோ அல்லது இல்லாமலோ சொத்து வாங்கிக் குவிப்பதிலேயே அக்கறையோடு இருந்திருக்கிறார்கள் என்பது குறித்து கூச்சப்படுபவராக இருக்க வேண்டும்.

பொதுவாக தன்னலமற்று அரசியலில் ஈடுபடுபவர்கள் கைப்பொருள் இழந்தவர்களாகவே இருந்துள்ளனர். அதற்கு மாறாக தி.மு.கழகத்தைச் சேர்ந்த மந்திரிகள் கட்சிப் பிரமுகர்கள் (அதில் அவரது புதல்வர்களும் அடங்குவர்) ஆகிய பலர் சொத்து வாங்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்திருக்கின்றனர் என்பது இவ்வழக்குகளிலிருந்து தெரிய வருகிறது.

இப்படி ஏன் நிகழ்ந்தது என்பதற்கான ஒரு விளக்கத்தைத் தான் அரசியலில் நேர்மையையும் தூய்மையையும் எதிர்பார்ப்பவர்கள் ஒரு தலைவரிடமிருந்து எதிர்பார்ப்பர்.

அப்படிப்பட்ட ஒரு பகுதியினர் இந்த சமூகத்தில் எத்தனை குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் ஒரு நல்ல தலைவராக இருக்கக் கூடியவர் அவர்களது எதிர்பார்ப்பையும் கணக்கிலெடுத்துத் தனது கருத்தைக் கூற வேண்டும்.

அதைவிடுத்து அவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் வாதாடுவது போல நில அபகரிப்பு வழக்குகளில் தொடர்புடைய வர்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்படுபவர்களுக்காகப் பரிந்து பேசியிருப்பது அவர் கட்சி நடத்தும் அரசியலின் தரத்தையே அம்பலப்படுத்துகிறது.

தேன் பானையில் கை வைத்தவன்

இவ்வாறு அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பொது வாழ்க்கையைப் பயன்படுத்தி கூசாமல் சொத்து சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது இக்கட்சி ஆட்சிக்கு வந்த ஆரம்ப காலம் முதற்கொண்டே இருந்து வருகிறது.

இப்போக்கு மறைக்க முடியாத விதத்தில் வெளியில் வந்துவிட்ட நேரத்தில் வெளிப்படையாகவே அக்கட்சியின் பல தலைவர்கள் குறிப்பாக அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் அனைவரும் கணக்குக் காட்ட வேண்டும் என்று அப்போது தி.மு.கழகத்தின் பொருளாளராக இருந்து அதன் பின்னர் அதைவிட்டு விலகி தனிக்கட்சித் தொடங்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் கேட்டார். அப்போது தேன் பானையில் கையை விட்டவன் அதை நக்கத்தான் செய்வான்; தலையில் தடவமாட்டான் என்று அவர்களில் பலர் வெளிப்படையாகவே கூறினர்.

அன்று முதல் இன்று வரை கட்சியின் தலைமைக் குடும்பத்தில் தொடங்கி அடிமட்டம் வரை பதவியைப் பணம் சம்பாதிப்பதற்காகப் பயன்படுத்துவதை எந்த வகையான கூச்சமுமின்றி அக்கட்சியின் தலைவர்கள் செய்து வருகின்றனர்.

மத்திய அமைச்சரவையில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றால் கூட எந்த அமைச்சகம் கூடுதலாகச் சம்பாதிப்பதற்கு வாய்ப்பளிக்கக் கூடியதாக இருக்கிறது என்பதைக் கருதுபவர்களாக இருந்திருக்கிறார்களே தவிர மாநிலத்தின் தேவையை மனதிற் கொண்டு அதற்குந்த அமைச்சரவைகளை கோரிப் பெறுபவர்களாக அவர்கள் இருக்கவில்லை.

அதனால் தான் தமிழ்நாட்டின் பிரதானமான கோரிக்கையே நதிநீர்ப் பங்கீடு என்று இருக்கும் போது அதனை வலியுறுத்தும் நீர்ப்பாசனத் துறையை தி.மு.கழகம் கோரிப் பெறவில்லை.

அதற்கு மாறாகத் தாங்கள் நடத்தும் ஊடகங்களுக்கும் தங்களுக்கும் முறைகேடாகப் பொருளீட்ட வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் தொலைத் தொடர்புத் துறையையே கோரிப் பெற்றனர்.

புது யுக்திகள்

இடங்கள் வாங்குவதில் பல புது முறைகளையும் யுக்திகளையும் அவர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினர். ஒரு பகுதியில் உள்ள ஒட்டுமொத்த இடங்களையும் நிலவும் விலைக்கு வாங்கி அங்கு அரசின் முக்கிய அலுவலகம், பல்கலைக் கழகம் அல்லது ஆராய்ச்சி நிலையம் ஏதாவது ஒன்றை கொண்டுவந்துவிடத் திட்டம் தீட்டி அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த இடங்களுக்கு உருவாகும் கூடுதல் மதிப்பைப் பயன்படுத்தி அவற்றை இன்னும் கூடுதல் விலைக்கு விற்றுச் சம்பாதிக்கும் வழிமுறைகளையும் கையாண்டனர்.

பல கொலை வழக்குகளில் சம்பந்தப் பட்டோர் குறுக்கு வழிகளைக் கையாள்வதன் மூலம் விடுதலை செய்யப்படும் சூழ்நிலை உருவானது.

தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு அதில் பணியாற்றிய அப்பாவி ஊழியர்கள் சிலர் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த குற்றவாளிகளும் தப்பிச் செல்வதற்கு ஏற்ற நிலை உருவாக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் மக்கள் மனதில் தோன்றியிருந்த பீதியைப் பயன்படுத்தி நகர்ப்புறங்களில் மதிப்பு மிக்க இடங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்த பலர் அன்றைய ஆளுங்கட்சிப் பிரமுகர்களால் மிரட்டப்பட்டு குறைந்த விலைக்கு விற்க நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

இவ்வாறெல்லாம் செய்தது மக்களுடைய மனதிலிருந்து நீங்காதிருக்கும் நிலையில் தற்போது நடைபெறும் கைதுகள் அவசர நிலைக்காலக் கைதுகளை ஒத்தவையாக இருக்கின்றன என்று கூறுவது அவசரகால கட்டத்தில் அடிப்படை உரிமைகளுக் காகவும், சிவில் உரிமைகளுக்காகவும், சமூக அவலங்களை எதிர்த்தும் போராடிச் சிறை சென்ற மாபெரும் தலைவர்களை மிக மோசமாகக் கொச்சைப் படுத்துவதாகும்.

அதனால் தான் முன்னாள் முதல்வரின் இக்கூற்று முன்வைக்கப் படுகையில் அந்திமந்தாரை திரைப்பட வசனம் தவிர்க்க முடியாமல் நம் நினைவிற்கு வருகிறது.

இதன் பொருள் இந்த கைது நடவடிக்கைகளில் எந்த வகையான உள்நோக்கமும் ஆளும் கட்சிக்கு இல்லை என்று நாம் கூறுவதாகாது.

தற்போதைய ஆளும் கட்சிக்கு இப்படிப்பட்ட கைதுகளை மேற்கொள்வதில் அரசியல் ஆதாயம் கருதும் உள்நோக்கம் இருந்தாலும் இக்கைது நடவடிக்கைகள் ஒரு வி­சயத்தை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகின்றன.

அதாவது இன்றைய முதலாளித்துவ அரசியலில் அரசியலின் தரம் மட்டுமல்ல அரசியல் தலைவர்களின் கருத்துக்களின் தரமும் சீரழிந்து அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதே அது.

Pin It

சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை 51 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை அனுமதிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் ஒருங்குதிரண்டு அம்முடிவுக்கு எதிரான தங்களது எதிர்ப்புக் குரலை விண்ணதிர முழக்கிக் கொண்டுள்ளன. நாடாளுமன்றம் இதை மையமாக வைத்து முடக்கப்பட்டுவிட்டது.

இதற்கான எதிர்ப்புக் குரல் பல மாநில அரசாங்கங்களிடமிருந்தும் பெரிய அளவில் கிளம்பியது. காங்கிரஸ் கூட்டணியில் இப்போது வரை இடம் பெற்றிருக்கும் மம்தா பானர்ஜி கூட இதை எதிர்த்தார். தமிழக முதல்வரும் இதை அனுமதிக்கப் போவதில்லை என்று எவ்வகைத் தயக்கமுமின்றி அறிவித்தார்.

பல இடங்களில் சில்லரை வணிகர்கள் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டில் ஒரு நாள் சில்லரை வர்த்தகர்களின் கடை அடைப்பும் நடந்தது. இத்தகைய எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து தற்போதைக்குச் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதென்ற தனது முடிவை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இவ்வாறு பல்வேறு கட்சிகளும் பல மாநில அரசாங்கங்களும் இதை எதிர்ப்பதற்குக் காரணமாகக் கூறுவது அன்னிய முதலீடு இந்த அளவிற்குச் சில்லரை வர்த்தகத்தில் வந்தால் உள்நாட்டு வர்த்தகர்கள் பெருமளவிற்குப் பாதிக்கப்படுவர்; அவர்களது வியாபாரம் படுத்துவிடும் என்பதாகும்.

பலகாலமாகப் பேசப்பட்டு வந்த இந்த அனுமதி இப்போது மத்திய அரசால் திடீரென்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சில்லரை வர்த்தகம் பாதிப்புக்கு ஆளாகும் என்ற குரல் ரிலெயன்ஸ் போன்ற பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் அதில் இறங்கிய போதே எழுப்பப்பட்டது. அந்த முழக்கத்தைக் குறிப்பாக இடதுசாரிக் கட்சிகள் பெருமளவு எழுப்பின.

இருந்தாலும் இப்போது ரிலெயன்ஸ் போன்ற நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் அடியெடுத்து வைத்து ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. ரிலையன்ஸ் மட்டுமின்றி ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் பாந்தலூன் போன்ற நிறுவனங்களும் தற்போது சில்லரை வர்த்தகத்தில் நுழைந்துள்ளன. 

இந்நிறுவனங்களின் 4000க்கும் மேற்பட்ட பெரிய கடைகள் நாடு முழுவதும் தற்போது சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்டுள்ளன. பெரிய அளவிற்கு அதனால் சில்லரை வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக அதற்குப்பின் அதே இடதுசாரிக் கட்சிகளிடமிருந்து கூட அங்கலாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

இந்நிலையில் இத்தருணத்தில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு மத்திய அரசால் அனுமதிக்கப்படப் போவதாக அறிவிப்பு வந்துள்ளதன் காரணம் என்ன? இத்தகைய எதிர்ப்பு கட்சிகளால் ஏன் ஏழுப்பப்படுகிறது? இந்தக் கட்சிகள் கூறுவது போல் அன்னிய நேரடி முதலீடு வருவதால் உண்மையிலேயே உள்நாட்டு வர்த்தகம் படுத்துவிடுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டியது நமது கடமையாகும்.

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி

தற்போது இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருடனான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. அதாவது ஒரு டாலர் 52 ரூபாய்க்குச் சமம் என்ற அளவிற்கு அதன் மதிப்பு குறைந்துள்ளது. இவ்வாறு குறைந்துள்ளதற்குக் காரணம் அமெரிக்காவில் 2008ல் தோன்றி இன்று வரை குறையாது நீடித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவப் பங்குச்சந்தை நெருக்கடியாகும்.

இதனால் அமெரிக்க நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் தொடர்ச்சியாகச் சரிந்து கொண்டேயுள்ளன.இந்நிலையில் அமெரிக்கப் பங்குகளை மிகக் குறைந்த விலைக்கு வாங்கும் வாய்ப்பு முதலீட்டாளர்களுக்குத் தோன்றியுள்ளது.

அவ்வாறு முதலீடு செய்வதற்காக இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்கனவே முதலீட்டாளர்கள் செய்து வைத்திருந்த கோடிக்கணக்கான டாலர் முதலீடுகளை அவர்கள் இங்குள்ள பங்குகளை விற்று அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்று கொண்டுள்ளனர்.

அதனால் நமது நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறிப்பாக டாலர் கையிருப்பு பெருமளவிற்குக் குறைந்துள்ளது. இவ்வாறு டாலர் கையிருப்புக் குறைந்தால் டாலரின் மதிப்பு உயரும். அப்போது அத்துடனான ரூபாயின் மதிப்பும் குறையும். அவ்வாறு குறைந்துள்ள அன்னிய செலாவணிக் கையிருப்பை அதிகப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கிறது. அதற்கான ஒரு திட்டமாகத் தான் இந்த அன்னிய நேரடி முதலீட்டை அரசு கொண்டுவர உத்தேசித்துள்ளது.

அன்னிய செலவாணி ஏன் பராமரிக்கப்பட வேண்டும்

இவ்வாறு அன்னிய செலவாணி கையிருப்புக் குறையாமல் வைத்திருக்கப்பட வேண்டும் என்று அரசு கருதக் காரணம் என்ன? அதை அரசு ஏன் எப்படியாவது பராமரிக்க விரும்புகிறது? நமது பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றால் அதற்கு நவீனமயம் மிகவும் அவசியம்.

அப்படிப்பட்ட நவீனமயத்தைக் கொண்டுவர நவீன எந்திரங்கள் அவசியம். நவீன எந்திரங்கள் ஏன் அவசியம் என்றால் அவற்றின் மூலமே பொருட்களின் உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும். அவ்வாறு நமது உற்பத்திச் செலவு குறைக்கப்பட்டால் தான் உலக வர்த்தகத்தில் அன்னிய நாடுகளுடன் போட்டியிட முடியும்; இந்திய முதலாளிகள் அதிக லாபம் ஈட்ட முடியும்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் அத்தகைய போட்டியில் இந்தியா ஈடுபட்டுத் தனது வர்த்தகத்தைப் பெருக்க முடியாமல் போனால் கூட நம்மைச் சுற்றியுள்ள ஆசிய நாடுகள் பலவற்றில் அத்தகைய போட்டியில் ஈடுபட்டு வர்த்தகத்தை மேம்படுத்தி அதிகபட்ச லாபம் ஈட்டவாவது நமது முதலாளிகளால் முடியும்.

அத்தகைய நவீனமயத்தைக் கொண்டுவரத் தேவைப்படும் நவீன எந்திரங்களை வாங்க டாலர் போன்ற அன்னிய நாணயக் கையிருப்பு வேண்டும். மேலும் ரூபாயின் மதிப்பு இவ்வாறு தொடர்ச்சியாகக் குறைந்து கொண்டே சென்றால் நாம் உலக வங்கி போன்ற அமைப்புகளிடமிருந்தும் அன்னிய நாடுகளிடமிருந்தும் வாங்கியுள்ள கடன்களின் மதிப்பும் அதிகரித்துவிடும். அந்தச் சுமையும் மத்திய அரசின் தலைமீது ஏறும்.

மேலும் பொருளாதார ரீதியில் வலுவான நாடாக இந்தியா ஆகி வருகிறது என்று காட்டப்படும் தோற்றமும் மங்கிவிடும்.

இந்தக் காரணங்களினால் ரூபாய் மதிப்பை அதிகரிக்க மத்திய அரசு விரும்புகிறது. அதனால் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டைக் கொண்டுவர விரும்புகிறது.

இரட்டை நிலை

இப்போது நிலவுவது போன்ற ஒரு சூழ்நிலை போராடும் கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கும் போது நிலவினாலும் அக்கட்சியும் நிச்சயமாக இந்த நிலையையே எடுக்கும்.

பி.ஜே.பி. கட்சியைப் பொறுத்தவரையில் அதனுடைய பின்பலம் மார்வாடி வர்த்தகர்கள் என்பதால் அவர்கள் இந்த விகிதாச்சாரத்தைச் சற்றுக் குறைத்து வேண்டுமானால் அன்னிய முதலீட்டைக் கொண்டுவர விரும்பி இருப்பர்.

ஆனால் அவர்கள் தற்போது எழுப்பும் எதிர்ப்பையும் கிளப்பும் கூச்சலையும் பார்ப்பவர்களுக்குக் கனவில் கூட இவர்கள் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டார்கள் என்றே தோன்றும்.

ஆனால் அக்கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டைக் கொண்டுவருவதில் மிகவும் ஆர்வம் காட்டினர் என்பதே உண்மை.

இப்போது எழுப்பப்படுவதைக் காட்டிலும் கூட மிகவும் கூடுதலாக பீதியைக் கிளப்பும் வண்ணம் அப்போது எதிர்ப்புக் கிளம்பியதால் அப்பிரச்னையை அக்கட்சியினர் கிடப்பில் போட்டனர்.

ஏனெனில் பொதுவாகவே பி.ஜே.பி.  காங்கிரஸைக் காட்டிலும் கூடுதலாக அமெரிக்கச் சார்பு மனநிலை கொண்டது என்பதே மக்களிடம் உள்ள கருத்தாகும். எனவே அதைப் பயன்படுத்தி எதிர்ப்பாளர்கள் குறிப்பாக இடதுசாரிக் கட்சியினர் அத்தகைய பீதியை இப்பிரச்னைக்கு எதிராக அன்றைய பி.ஜே.பி. ஆட்சிக்கு எதிராக எழுப்ப முடிந்தது. அதன் விளைவாகவே அது அப்போது கிடப்பில் போடப்பட்டது.

வினோத நிலை

இங்கு நாம் பார்க்க வேண்டிய இன்னொரு வி­சயம் நமது நாட்டின் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் காட்டிலும் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை வலுவானதாக இருந்தும் கூட அமெரிக்க நாணயத்தின் மதிப்பு நமது நாணயத்தின் மதிப்பைக் காட்டிலும் கூடி வருவதாகும். 

இதற்குக் காரணம் அமெரிக்க நாணயமான டாலர் உலகின் அனைத்து நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்படும் உலகளாவிய வர்த்தகத்திற்குப் பயன்படுவதாக இருப்பதே. முதலாளித்துவ அமைப்பில் அன்னியச் செலாவணியின் மதிப்பும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததொரு வகையில் தீர்மானிக்கப் படுகிறது. அதாவது அன்னிய செலாவணி கையிருப்பு அதிகமாக இருந்தால் அதன் மதிப்புக் குறையும்; குறைவாக இருந்தால் அதன் மதிப்புக் கூடும். நமது சந்தையில் பயன்பாட்டுப் பொருட்களின் மதிப்பு எவ்வாறு சரக்கு வரத்து மற்றும் தேவை விதிகளை மையமாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறதோ அதே அடிப்படையில் தான் அன்னிய நாணய மதிப்பும் இங்கு தீர்மானிக்கப்படுகிறது.

இது ஏன் பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று என்றால் பொதுவாக நாணயங்களின் மதிப்பு அதன் மூலம் வாங்கப்பட முடியும் பொருள்களின் மதிப்பை மையமாக வைத்தேத் தீர்மானிக்கப்பட வேண்டும். ரூபாயின் வாங்கும் சக்தி உள்நாட்டில் சிறிதும் குறையாதிருந்தால் கூட அதன் வெளிநாட்டு மதிப்பு அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்தால் கூடிவிடும்; அது குறைந்தால் குறைந்து விடும்.

இந்த வினோதமான நிலையின் காரணமாக இன்னொரு வினோதமான நிகழ்வும் ஏற்படுகிறது. அதாவது நமது நாணய மதிப்புக் குறைந்திருப்பது நமது நாட்டு ஏற்றுமதியாளர்களுக்குச் சாதமான ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அவர்கள் அன்னிய நாடுகளில் தங்களது பொருட்களை விற்பதால் கிடைக்கும் டாலர் போன்ற அன்னிய நாணயங்கள் இந்திய ரூபாய் மதிப்பில் கூடுதல் வருவாயை அவர்களுக்கு ஈட்டித்தரும்.

அதனால் தான் ரூபாயின் மதிப்பு எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் நமது முக்கிய ஏற்றுமதிப் பண்டங்களில் ஒன்றான துணி ஏற்றுமதியாளர்களுக்கு ஏதாவது ஒரு பெயரில் இந்திய அரசு மானியம் வழங்கி அவர்களது ஆதாயம் குறையாமல் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறது.

ஏகபோகங்கள்

இந்த நிலையில் உண்மையிலேயே அன்னிய நேரடி முதலீட்டின் எதிர்ப்பாளர்கள் கூக்குரல் எழுப்புவது போல் சில்லரை வர்த்தகத்தில் வரும் அன்னிய முதலீடு ஒட்டுமொத்த இந்திய வர்த்தகத்தையும் கடுமையாகப் பாதிக்குமா?

நமது சில்லரை வர்த்தகம் உள்நாட்டு வர்த்தகத்தில் ஏகபோகப் போக்கு உருவாகும் போதெல்லாம் பாதிக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளது.

ஆனால் இந்த அமைப்பில் வர்த்தகத்தில் மட்டுமல்ல தொழில் துறையிலும் ஏகபோகங்கள் உருவாவது தவிர்க்க முடியாதது. அதனால் தான் யார் கண்ணிலும் படாமல் கூட சரவணா ஸ்டோர்ஸ், சுபிக்ஸா போன்ற ஒரு கூரையின் கீழ் அனைத்துப் பொருட்களையும் வாங்கலாம் என்ற வகையிலான கூடுதல் முதலீட்டில் நடத்தப்படும் உள்நாட்டுக் கடைகள் தோன்றின.

அந்த உள்நாட்டு ஏகபோக வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களான ரிலெயன்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது கடைகளை இங்கு நிறுவ முன்வந்தன.

அவ்வாறு அவை நிறுவ முன்வந்ததற்கும் குறிப்பான காரணங்கள் உண்டு. உள்ளபடியே இந்நிறுவனங்கள் அனைத்து அம்சங்களிலும் ஏகபோக நிறுவனங்களாக விளங்கின. அவற்றின் விற்பனைப் பொருட்களை அவை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்தன. அனைத்து வகைகளிலும் மிகப்பெரும் மூலதனத்தை அந்நிறுவனங்கள் வர்த்தகத்தில் இறக்கின.

பலகாலம் சில்லரை வர்த்தகத்தைக் கண்டு கொள்ளாதிருந்த ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் அதில் இறங்கியதற்கு முக்கியக் காரணம் உலகமயப் பின்னணியில் 20 சதவிகித இந்திய மக்களிடையே திடீரெனக் கூடிய வாங்கும் சக்தியாகும். 

அதாவது அந்த வாங்கும் சக்தியை கொண்டுள்ளவர்களுக்குக் கூடுதல் வசதிகள் செய்து கொடுத்து அதனைப் பயன்படுத்திச் சம்பாதிப்பதற்காகவே இந்நிறுவனங்கள் தோன்றின.

அக்கடைகளில் சென்று பொருள் வாங்குபவர்கள் வாங்கும் சக்தி அதிகரித்த அந்த 20 சதவிகிதத்தினர் மட்டுமே. அது போக மீதமுள்ள 80 சதவிகித மக்கள் 10, 20 ரூபாய்களைக் கையிலெடுத்துக் கொண்டு கடைக்குச் சென்று அன்றாடம் பொருள் வாங்கும் நிலையில் உள்ளவர்கள் அவர்கள் அக்கடைகளின் பக்கம் செல்வதும் இல்லை;  அவை அம்மக்கட் பகுதியினரைத் தங்களது இலக்காகக் கொண்டிருக்கவுமில்லை.

80% மக்களுக்கான சில்லரை வர்த்தகத்தைப் பாதிக்காது

எனவே அந்த மக்களை இலக்காகக் கொண்டிருக்கக் கூடிய சிறு வர்த்தகம் அன்னிய முதலீட்டின் வரவால் பெரும்பாலும் பாதிக்கப்படப் போவதில்லை.

இப்போது அன்னிய நேரடி முதலீடு சில்லரை வர்த்தகத்தில் வருகிறதென்றால் அதனால் பாதிக்கப்படப் போவது ரிலெயன்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்களே தவிர இன்று கடையடைப்புச் செய்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டுள்ள சாதாரண வியாபாரிகள் அல்ல.

இந்த யதார்த்தமான புரிதல் இன்றி இக்கட்சிகள் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக இப்போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளன. அதாவது ஆளும் கட்சியை அடிப்பதற்கு எந்த ஆயுதம் கிடைத்தாலும் பரவாயில்லை அதைக் கொண்டு அடிப்போம் என்ற அடிப்படையில் இப்பிரச்னையை இவ்வளவு தூரம் கையில் எடுத்துள்ளன.

கூடுதல் விலைக்கு விற்றால் யார் வாங்குவார்

முதலாளித்துவத்தின் அடிப்படை விதி போட்டியே விலையை நிர்ணயிக்கிறது என்பதாகும். விலை நிர்ணயமே வியாபாரத்தின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் தீர்மானிக்கவல்லது.

அப்படியானால் அன்னிய நேரடி முதலீட்டில் சில்லரை வர்த்தகத்தில் தலைதூக்கும் நிறுவனங்கள் விலையைக் கூட்டி பொருட்களை விற்றால் நாளடைவில் அவை அவற்றின் கடைகளை மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அவற்றின் அளவிற்கு இந்தியப் பெரு வர்த்தகம் பொருட்களை குறைத்து விற்காமல் போனால் தான் அவை நெருக்கடியைச் சந்திக்க வேண்டிவரும்.

அவ்வாறு பொருட்களை அன்னிய நேரடி முதலீட்டில் வரும் நிறுவனங்கள் குறைத்து விற்றால் அதனால் பலனடையப் போவது இந்திய வாடிக்கையாளர்களே.

அதாவது ரிலெயன்ஸ் அம்பானியும், சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளின் அதிபதிகளும் அவர்கள் இந்தியர்களாக இருப்பதால் அவர்கள் கூடுதல் விலைக்கு விற்றால் கூட அவர்களது பொருள்களை வாங்கிப் பயன்படுத்துபவர்களாக இந்தியாவின் 20 சதவிகித வாங்கும் சக்தியுள்ள மக்கள் இருக்க வேண்டும் என்பது இவர்களின் எண்ணமா? இக்கேள்வி தவிர்க்க முடியாமல் பகுத்தறிவுள்ள எந்த மனிதனின் மனதிலும் எழவே செய்யும்.

அன்னிய முதலீடு அடிமையாக்குமா?

தாங்கள் ஆட்சியில் இருந்தால் இத்தகைய சூழ்நிலையில் என்ன செய்வோம் என்பதைச் சிந்திக்காமல் ஆளும் கட்சிக்கு எதிராகத் தங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படும் பி.ஜே.பி. போன்ற கட்சிகளைத் தவிர இடதுசாரிக் கட்சிகள் என்று அறியப்படும் கட்சிகள் வேறொரு வாதத்தை அவர்களது அணிகளிடம் எடுத்துக் கூறி அவர்களை இப்போராட்டத்தில் ஈடுபடச் செய்கின்றன.

அவற்றின் வாதம், இவ்வாறு ஒவ்வொன்றிலும் அன்னிய முதலீடுகளை அனுமதித்துக் கொண்டிருந்தால் ஒருநாள் மீண்டும் நமதுநாடு அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கு அடிமையாகிவிடும் என்பதாகும்.

அவ்வாறு அவர்கள் எழுப்பும் வாதத்தில் பொருத்தம் இருந்தால் தன்னைச் சுற்றியுள்ள சிறு நாடுகள் பலவற்றிற்கு நமது நாட்டு முதலாளிகளின் மூலதனத்தைக் கொண்டு செல்வதில் அக்கறையும் முன்முயற்சியும் எடுக்கும் போது இந்திய அரசையும் அவர்கள் கண்டிக்க வேண்டும் அல்லவா? 

ஏனெனில் இவ்வாறு தன்னைச் சுற்றியுள்ள நாடுகளில் இந்திய முதலாளிகளின் முதலீடுகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் அவர்களைப் பொறுத்தவரையில் இந்தியாவும் ஒரு ஏகாதிபத்தியமாகி அவர்களை ஏதாவது ஒரு வகையில் அடிமைப்படுத்த முயலும் நாடாக ஆகிவிடும் வாய்ப்பு உள்ளதல்லவா?

அவர்கள் நியாயமானவர்களாக இருந்தால், வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வைத் தட்டியெழுப்பி விடுதலை பெற்ற நமது மக்கள் நமது நாட்டிடமும் அத்தகைய ஏகாதிபத்தியப் போக்கு வளர்வதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்ற நிலையினை எடுக்க வேண்டும் அல்லவா?

அவ்வாறு எடுக்கவில்லையயனில் அது சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு இரட்டை நிலைதானே? ஆனால் இதுபோன்ற சரியான நிலையை இந்திய வர்த்தகர்கள் மற்றும் முதலாளிகள் விசயத்தில் ஒருபோதும் இந்த இடதுசாரிக் கட்சிகள் எடுத்ததில்லை.

இதுபோன்ற கேள்விகள் எழும் போதெல்லாம் அவர்களுடைய வாதம் அளவு ரீதியில் அமெரிக்கா இந்தியாவைப் போல் எத்தனை மடங்கு பொருளாதார ரீதியாக வளர்ந்த சக்தி என்பதாகவும், அவர்களுடைய மூலதனம் மிகப் பெரிய அளவில் வேறு நாடுகளுக்குச் செல்வதற்கும் அதனுடன் ஒப்பிடுகையில் நமது மூலதனம் சிறிய அளவில் செல்வதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்ற அளவு ரீதியான வேறுபாட்டை மையமாகக் கொண்டதாக மட்டுமே உள்ளது.

வறட்டு வாதம்

மேலும் ஏகாதிபத்தியம் என்பதற்கு மார்க்சியம் கற்றுத்தந்த அந்த வரையறையை அளவு கோலாகக் கொண்டிராமல் குருட்டுத்தனமான வறட்டுச் சூத்திரவாதப் போக்கில் ஏகாதிபத்தியம் என்றால் அமெரிக்கா, அமெரிக்கா என்றால் ஏகாதிபத்தியம் என்ற மனநிலையை அக்கட்சிகளின் அணிகளிடையே ஏற்படுத்துகின்றன. அதில் தங்களது சந்தர்ப்பவாத குருட்டுத்தனமான தேசியவாத அரசியலை மூடிமறைக்கின்றன.

நமது வர்த்தகத்தில் இனிமேல் தான் வால் மார்ட் போன்ற நிறுவனங்கள் தலைதூக்கப் போகின்றன. ஆனால் நேபாளம் போன்ற நாடுகளின் வர்த்தகம் முழுமையுமே ஏறக்குறைய இந்திய வர்த்தகர்களின் கரங்களிலேயே உள்ளது.

இதுபோன்ற கண்ணை உறுத்தும் கேள்விகளுக்கும் பதில் கூற வேண்டியது தங்களது கடமை என்று இந்திய தேசியவாத இடதுசாரிகள் எண்ணுவதில்லை.

அதாவது அமெரிக்க வர்த்தகம் இங்கு வரும்போது மட்டும் அன்னிய மூலதனம் நாட்டை அடிமைப்படுத்தும் என்ற நிலைபாட்டை முன்வைக்கும் இவர்கள் எந்தவொரு நாட்டின் மூலதனம் வேறொரு நாட்டிற்குள் சென்றாலும் அந்த மூலதனம் அந்த நாட்டின் அரசியல் விவகாரங்களில் தலையிடுவது உட்பட அனைத்து விரும்பத்தகாத வேலைகளையும் அதாவது அந்நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கக் கூடிய வேலைகளையும் செய்யும் என்பதைச் சுட்டிக் காட்டுவதில்லை.

ஏகாதிபத்தியங்கள் ஒருகால கட்டத்தில் காலனிகளை ஏற்படுத்திச் சுரண்டக் கூடிய தன்மை பெற்றவைகளாக இருந்தன. அவ்வாறு உலக நாடுகளைத் தங்களுக்கிடையில் பங்கு போட்டுக் கொள்ளவே அவை முதல் இரண்டு உலகப் போர்களையும் தோற்றுவித்தன.

ஆனால் இரண்டாவது உலகப் போரின் முடிவில் தோன்றிய சோசலிச முகாம் பல்வேறு காலனிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. முன்னாள் காலனி நாடுகளில் பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. அந்த நாடுகளில் சுதந்திரம் பெற்ற சூழ்நிலையில் ஆட்சிக்கு வந்த அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்து உள்நாட்டு முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்தன.

அதனால் இந்தியா போன்ற பெரிய நாடுகள் அச்சூழ்நிலையில் எத்தனை அதிகபட்ச வளர்ச்சியைச் சாதிக்க முடியுமோ அத்தனை அதிகபட்ச வளர்ச்சியைச் சாதித்தன.

ஏகாதிபத்திய நாடுகளும் அமெரிக்காவிடமிருந்து படிப்பினை எடுத்துக் கொண்டு போர்கள் மூலம் புதுக் காலனிகளை ஏற்படுத்தும் அந்நாடுகளின் பழைய போக்கை மறுபரீசீலனை செய்தன.

அது இனிமேல் அந்நாடுகளின் முதலாளிகளுக்குப் பெரிய வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தராது என்பதைப் புரிந்து கொண்டன. அதாவது இரண்டு போர்களிலும் நேரடியாக ஈடுபடாமல் பெரும்பாலும் ஆயுத வியாபாரத்தை மட்டும் செய்து பொருளீட்டிய அமெரிக்க முதலாளிகளின் எளிதாக லாபம் ஈட்டும் போக்கைப் பிற ஏகாதிபத்திய நாடுகளும் கற்றுக் கொண்டன.

அதன் விளைவாக உருவானதுதான் ஒப்பந்தங்கள் போட்டு அதன்மூலம் தங்கள் நாட்டு முதலாளிகளின் லாபம் அதிகரிக்க வளர்ச்சியடைந்த நாடுகள் அனைத்தும் பின்பற்றத் தொடங்கிய வழிமுறையாகும்.

அதாவது முழுக்க முழுக்க கச்சாப் பொருட்களின் ஏற்றுமதியை நம்பியே இருக்கக் கூடிய நாடுகள், கச்சாப் பொருட்களை இறக்குமதி செய்து ஆலைப் பொருட்களாக அவற்றை மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்து பெரும் பொருளீட்டிய ஏகாதிபத்திய நாடுகள் என்ற இரண்டாவது உலக யுத்தத்திற்கு முன்பிருந்த சூழல் பெரிய மாற்றம் கண்டது.

அந்தப் போக்கு உலக வர்த்தக அமைப்பின் உலகமயமாக்கல் ஒப்பந்தம் வந்த பின்பு இன்னும் கூடுதலாக அதிகரித்தது.

அதாவது உலகமே முதலாளித்துவ உற்பத்தியின் சந்தையாக மாற்றப்பட்டது. சோசலிச முகாமின் வீழ்ச்சி, உலகம் முழுவதும் ஒரு குடையின் கீழ் அதாவது முதலாளித்துவ அமைப்பின் கீழ் என்ற சூழ்நிலை ஆகியவை அந்த வளர்ச்சிப் போக்குக்குப் பேருதவி செய்தன.

அதாவது உலக நாடுகள் அனைத்துமே உலகச் சந்தையில் தங்களது பொருட்களில் எவற்றையாவது விற்பவையாகவும் பிற நாடுகளின் பொருட்களை தங்கள் நாட்டு மக்களின் உபயோகத்திற்கென்று வாங்குபவையாகவும் ஆகிவிட்டன.

அதுமட்டுமின்றி உழைப்புத் திறனும் உலகச் சந்தையின் சரக்காக ஆகிவிட்டது. அதன் விளைவாக முதலாளித்துவ ரீதியில் உலகம் எத்தனை அதிகபட்ச வளர்ச்சியை ஒரு சமயத்தில் எட்ட முடியுமோ அந்த வளர்ச்சியைத் தற்போது எட்டியுள்ளது.

அதாவது மலிவாக உழைப்புத்திறன் கிடைக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அன்னிய மூலதனம் வருவது ஒருபுறமும், அதே சமயத்தில் இந்தியாவின் 20 சதவிகித மக்களின் வாங்கும் சக்தியைப் பயன்படுத்திச் சம்பாதிக்க வேண்டும் என்ற சூழ்நிலை பல பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு மறுபுறமும் தோன்றியுள்ளன.

அமெரிக்க நெருக்கடி

மிகக் குறைந்த ஜனத்தொகையை வைத்துக் கொண்டு உலக உற்பத்தியின் மிக அதிகப் பயன்பாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தும் நிலையிலிருந்த அமெரிக்கா அந்நாட்டு மக்களின் வேலை வாய்ப்பைப் பறித்துக் கூடுதல் லாபம் கருதி தொழில்களைப் பிற நாடுகளுக்கு எடுத்துச் சென்றது.

அதன் விளைவாக வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக அதிகரித்துள்ள நாடாக அது ஆகியுள்ளது. அதனால் அந்நாட்டு மக்கள் வாங்கும் சக்தியை இழந்து நிற்கின்றனர்.

அந்நிலையில் அதன் வர்த்தக நிறுவனங்கள் அவற்றின் விற்பனைப் பொருட்களைச் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பினைப் பயன்படுத்தி இந்தியாவிற்குக் கொண்டுவர விரும்புகின்றன. இதுவே இன்றுள்ள நிலையாகும்.

அதாவது உலக நாடுகளின் சந்தை உலகமயத்தினால் எப்படி உலகளாவியதாக மாறியதோ அதேபோல் நெருக்கடியும் உலகமயமாகியுள்ளது.

அதாவது முன்பெல்லாம் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்றுமதி குறைவாகவும் இறக்குமதி அதிகமாகவும் இருப்பதால் ஏற்படும் நெருக்கடி, உள்நாட்டுச் சந்தையின் சுருக்கத்தின் காரணமாகத் தோன்றும் வேலையின்மை சார்ந்த நெருக்கடி போன்ற நெருக்கடிகளால் பின்தங்கிய நாடுகள் பெருமளவில் பாதிப்பில் இருந்தன.

தற்போது வேலையின்மை, அன்னியக்கடன் ஆகிய நெருக்கடிகள் முன்னேறிய நாடுகளில் அந்நாடுகள் தலைதூக்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அதில் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாட்டு மக்கள் சந்திக்கும் நெருக்கடி இன்னும் கூடுதலாக ஆகியுள்ளது.

இந்நிலையில் சில்லரை வர்த்தகத்திற்கான 51 சதவிகித நேரடி முதலீடு அந்நாட்டு பெரு வர்த்தக நிறுவனங்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக ஆகியுள்ளது. அவர்கள் வருவதால் அதனை இந்தியாவின் வர்த்தகர்கள் பயன்படுத்த முடியாமல் போகலாம். ஆனால் இந்திய முதலாளிகளும் இந்தியாவைக் காட்டிலும் பின்தங்கிய நாடுகளுக்குத் தங்கள் மூலதனத்தையும், வர்த்தக நிறுவனங்களையும் கொண்டு சென்று கொண்டேயிருப்பர்.

அமெரிக்க வர்த்தகர் மற்றும் முதலீட்டாளர்கள் நலனைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க அரசு எப்படியயல்லாம் இந்திய அரசிடம் செல்வாக்கு செலுத்துமோ அதைப் போல் இந்திய அரசும் அதன் மூலதனம் சென்றுள்ள நாட்டு அரசுகளிடம் செல்வாக்கு செலுத்தும். இது இவர்கள் கூறுவது போல் முதலீடு 100 சதவிகிதமாகி படிப்படியாக ஆகி அவர்களுக்கு நாம் அடிமையாவதில் சென்று முடியுமா என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இந்தியாவும் ஏகாதிபத்தியக் கூறுகள் கொண்டதே

இதன் பொருள் அமெரிக்கா அதன் ஏகாதிபத்தியத் தன்மையை இழந்துவிட்டது என்று கூறுவதாகாது. அமெரிக்கா மட்டுமல்ல மார்க்சியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் இந்தியா உள்பட இன்னும் பல நாடுகளும் அதாவது பின்தங்கிய நாடுகள் என்று ஒரு காலத்தில் அறியப்பட்டவையும் ஏகாதிபத்தியத் தன்மை பொருந்தியவையாகத் தற்போது ஆகியுள்ளன.

ஏகாதிபத்தியம் யுத்தங்களை உருவாக்கும்; அமைதி அவற்றிற்கு அழிவைக் கொண்டுவரக் கூடியது என்ற மார்க்சிய கண்ணோட்டங்கள் மாறிவிட்டன என்பதும் இதன் பொருளல்ல.

ஆனால் உலக அளவில் நாடுகளை மறுபங்கீடு செய்து கொள்ளும் அளவிற்கு உலகளாவிய போரில் ஈடுபட வேண்டிய சூழலில் அவை இல்லை. ஏனெனில் அவ்வாறு ஈடுபட்டுப் பின்தங்கிய நாடுகளின் வளங்களைப் பயன்படுத்திப் பொருளுற்பத்தி செய்து தங்கள் நாடுகளில் விற்பதற்கோ அல்லது பிறநாட்டு சந்தைகளில் கொண்டு சென்று விற்று அதிக ஆதாயம் பெறுவதற்கோ ஏற்ற சூழலில் இப்போது முதலாளித்துவ உலகமே இல்லை.

ஏனெனில் உலகெங்கிலும் முதலாளித்துவம் ஒவ்வொரு நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் எவ்வளவு வளர முடியுமோ அவ்வளவு வளர்ந்துவிட்டது.

பிராந்தியப் பூசல்களும் சண்டைகளும்

எனவே உலகளாவிய போர்களைக் கொண்டுவரும் நிலையில் ஏகாதிபத்தியங்கள் இல்லை. ஆனாலும் ஆங்காங்கே சிற்சில பிராந்திய ரீதியிலான போர்களையும் பூசல்களையும் கொண்டுவருவது அவற்றிற்கு அவசியமாக உள்ளது.

ஏனெனில் அச்சூழ்நிலை நிலவினால் தான் அமெரிக்கா போன்ற நாடுகளின் யுத்தப் பொருளாதாரம் அதாவது ஆயுதத் தயாரிப்பை மிக அதிகமாகக் கொண்டுள்ள அதன் பொருளாதாரம் நீடிக்க முடியும். எனவே தான் குறிப்பாக எண்ணெய்வள நாடுகளின் மீது நேரடி மறைமுக அச்சுறுத்தல் யுத்தங்களை அது நடத்திக் கொண்டுள்ளது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு அம்சம் அந்த முயற்சியில் வளர்ந்துவரும் ஏகாதிபத்திய நாடு என்ற ரீதியில் இந்தியாவை அது தனது இளைய பங்காளியாக ஆக்கிக் கொண்டுள்ளதாகும். அந்தப் பின்னணியில் தான் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது; உலக நாடுகள் அனைத்திடமும் வலியுறுத்திய நிபந்தனைகளை வலியுறுத்தாமல் அமெரிக்க அரசு இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 

இந்நிலையில் இவ்வாறு அமெரிக்க மூலதனத்தின் வருகை இந்தியாவின் வர்த்தகத்தை நிர்மூலமாக்கிவிடும்; படிப்படியாக இந்தியா இன்னும் ஒருமுறை அடிமை நாடாக அதாவது அமெரிக்காவின் அடிமை நாடாக ஆகிவிடும் என்று கூறுவதெல்லாம் யதார்த்தத்திற்குப் பொருந்தாக பூதக் கற்பனைகளாகும்.

தேசிய வெறிவாதம்

இங்குக் குறிப்பாக நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு போக்கு இடதுசாரிக் கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சிகளாலும் விசிறிவிடப்படும் குருட்டுத்தனமான தேசிய வெறிவாதமாகும்.

தேசிய வாதம் இன்று தனது முற்போக்குத் தன்மையை இழந்துவிட்டது மட்டுமல்ல குருட்டுத்தனமான வெறிவாதத்தை விசிறிவிடும் தன்மை கொண்டதாகவும் ஆகிவிட்ட அது பாசிஸம் வருவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்நிலையில் அதனை அம்பலப்படுத்த வேண்டிய இடதுசாரிக் கட்சிகளே நாடாளுமன்ற அரசியல் லாபத்திற்காக அதனை விசிறிவிடும் வரலாற்றுத் தவறினைச் செய்து கொண்டுள்ளன.

எதிர்க்கட்சி அரசியல்

எனவே முதலாளித்துவ உற்பத்தி முறையில் சிறு மூலதனம் அழிந்து பெரு மூலதனம் அதனை அபகரிப்பது என்ற வளர்ச்சிப் போக்கின் அடிப்படையிலேயே இன்று இந்த சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டின் வருகை அமைந்துள்ளது.

இந்தப் போக்கை மத்திய அரசிற்கு எதிராகப் பயன்படுத்தி முதலாளித்துவ எதிர்க்கட்சி அரசியல் செய்ய முடியுமே தவிர சமூகமாற்ற அரசியல் செய்ய முடியாது.

ஏனெனில் இதனால் பாதிக்கப்படப் போவது 80 சதவிகித மக்களுக்கான வர்த்தகத்தில் ஈடுபடும் சிறு வியாபாரிகளாக இருக்கப் போவதில்லை. அப்படியே ஒரு பாதிப்பு வந்தாலும் அது ரிலையன்ஸ், பாந்தலூன், ஆதித்யா பிர்லா போன்ற குழுமங்களினால் சிறு வர்த்தகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பை ஒத்த வகையிலேயே இருக்கும்.

வாங்கும் சக்தியுள்ள 20 சதவிகித மத்தியதர வர்க்கத்தைப் பொறுத்தவரையிலும் அவர்களின் கருத்தாக இருக்கப் போவது எந்தக் கடையில் குறைந்த விலைக்குப் பொருளை வாங்க முடியுமோ அந்தக் கடையில் வாங்குவோம் என்பதாகத் தான் இருக்கப் போகிறது.

மேலும் தவிர்க்க முடியாமல் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களால் வர்த்தகத்தில் தோன்றி வளர்ந்து வரும் இந்தப் போக்கிலும் சில சாதக அம்சங்கள் உழைக்கும் வர்க்க அமைப்புகளைப் பொறுத்தவரையில் நிச்சயம் இருக்கவே செய்யும்.

நூற்றுக் கணக்கில் இந்தக் கடைகளில் தொழிலாளர் வேலைக்கு அமர்த்தப்படும் சூழல் இதன்மூலம் உருவாகும். அவர்களை அணிதிரட்டுவது முதலாளித்துவச் சுரண்டலை அம்பலமாக்குவது அதன்மூலம் சமூகமாற்ற இயக்கங்களுக்கு உருக்கொடுப்பது ஆகியவற்றைச் செய்வதை அது இன்னும் கூடுதலாகச் சாத்தியமாக்கும். எனவே இந்த வி­சயத்தில் நாம் பார்க்க வேண்டியது வர்த்தகம் என்ற பெயரில் நடைபெறும் கொள்ளைக்கு எதிராக அதாவது பொருட்களின் தரத்தை அதிகரிக்காமல் அவற்றின் விலையை மட்டும் கூட்டி விற்கும் இடைத்தரகர் அமைப்பே படிப்படியாக இல்லாமல் செய்யும் அந்த நடவடிக்கையில் மக்களை ஈடுபடுமாறு அறைகூவல் விடுப்பதே தவிர நம்மை இந்தியக் கடைக்காரன் கொள்ளையடித்தால் பரவாயில்லை அன்னியக் கடைக்காரன் கொள்ளையடிக்கக் கூடாது என்று கூறுவதல்ல.

Pin It

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த போது நகத்தில் இட்ட மை உலர்வதற்கு முன்பாகவே தமிழக அ.இ.அ.தி.மு.க. அரசு தாங்கொண்ணாச் சுமைகளைத் தமிழக மக்களின் மேல் சுமத்தியுள்ளது. இதுவரை கண்டும் கேட்டும் இராத அளவிற்குப் பேருந்துக் கட்டண உயர்வு மிக அதிக அளவிற்கு பால் விலை உயர்வு ஆகிய உயர்வுகளை அறிவித்துள்ளது. வெகு விரைவில் மின் கட்டண உயர்வும் வரும் என்று கூறியுள்ளது.

காத்திருந்து ஏற்றிய சுமை

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதியான மாணவர்களுக்கு லேப் டாப் வழங்குவது, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாகவே அரிசி வழங்குவது போன்றவற்றைச் செயல்படுத்தத் தொடங்கி ஒரு மக்கள் ஆதரவு அரசாங்கமாகத் தன்னைக் காட்டிக் கொண்ட அ.இ.அ.தி.மு.க. அரசு அந்தப் பின்னணியில் உள்ளாட்சித் தேர்தல்களையும் நடத்தியது.

அதில் அது எதிர்பார்த்த வெற்றியை அடைந்ததற்குப் பின்பு அது மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை ஒன்றே ஒன்றைத்தான் தெளிவுபடுத்துகிறது. அதாவது இனி அநேகமாக மக்களை 5 ஆண்டுகள் கழித்துத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கிடையில் இப்போது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை குறித்து அவர்களிடையே எழும் முணுமுணுப்பு அதற்குள் இல்லாமல் போய்விடும். எனவே அனைத்துச் சுமைகளையும் இப்போதே மக்கள் தலைமேல் ஏற்றி விடுவோம் என்ற அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவு படுத்துகிறது.

இப்போதைய நிலையில் மக்களின் இதை மையமாகக் கொண்ட கோபம் கிளம்ப வாய்ப்பு இருந்தாலும் அதனைப் பயன்படுத்தி பெரிய மக்கள் போராட்டங்கள் எதுவும் வருவதற்கு வாய்ப்பில்லை என்று அறிந்து கொண்ட பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது போல் தெரிகிறது.

அடையாளப் போராட்டங்களோடு முடிந்துவிட்ட எதிர்ப்பு

அவர் எதிர்பார்த்த படியே தி.மு.கவின் எதிர்ப்பு வீராவேசமான அறிக்கைகளோடு முடிந்துவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பிற கட்சிகளின் எதிர்ப்பு சில அடையாளப் போராட்ட அறிவிப்புகளோடு முடிவுக்கு வந்துவிட்டது. இத்துடன் இனி மக்கள் பால் வாங்கும் போதும், பேருந்தில் ஏறும் போதும் உதிர்க்கக் கூடிய வசைச் சொற்களோடு கொஞ்சம் கொஞ்சமாக இந்த நடவடிக்கை மறக்கப்பட்டு விடும்; அதன் பின் மக்கள் பழகிப் போய்விடுவர் என்ற அரசின் கணிப்பு ஓரளவு சரியானதே என்று காட்டும் விதத்திலேயே நிகழ்வுகள் போய்க் கொண்டிருக்கின்றன.

முக்கிய எதிர்க்கட்சியும் அடுத்து ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதுமான தி.மு.க. போன்ற கட்சிகளைப் பொறுத்தவரை ஒருபுறம் இதை எப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது என்ற எண்ணம் இருந்தாலும் மறுபுறம் கட்டணத்தை ஏற்றிய பழி அ.தி.மு.க. அரசோடு போய்விடும். மிகக் கூடுதலாக இந்த உயர்வுகளைக் கொண்டு வந்திருப்பதால் அடுத்து நாம் ஆட்சிக்கு வந்தாலும் வந்தவுடன் இதுபோன்ற கட்டண உயர்வுகளை உடனடியாகக் கொண்டு வருவதற்கான அவசியம் இராது என்ற அடிப்படையில் உள்ளார்ந்த ஒரு மகிழ்ச்சியும் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

எனவே தான் மக்களை இப்பிரச்னைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடக் கேட்டுக் கொள்ளாமல் அக்கட்சியின் தலைவர் அ.இ.அ.தி.மு.கவிற்கு வாக்களித்ததற்கான பலன்களை மக்கள் அனுபவிக்கத் தொடங்கி விட்டனர் என்று கேலித் தொனியில் கூறியுள்ளார்.

மேலும் தி.மு.க. போன்ற கட்சிகள் எப்போது எந்தப் போராட்டம் எடுத்தாலும் அவற்றின் நோக்கம் அப்போராட்டத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளைச் சாதிக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் தங்களது வலிமையைப் பறைசாற்ற வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் தருவதாகவே இருக்கும். ஏறக்குறைய அனைத்து ஆளும் வர்க்க ஆதரவுக் கட்சிகளின் நிலைபாடும் இதைப்போல் தான் இருக்கும்.

தி.மு.கவைத் தவிர தமிழகத்தில் செயல்படும் மற்ற கட்சிகளின் அணுகுமுறையும் இந்த விலை உயர்வைப் பின்வாங்கச் செய்ய வேண்டும் என்ற திசைவழியை நோக்கியதாகவோ அல்லது மக்களை இத்தனை பாதிப்புகளுக்கு மனம் கூசாமல் ஆளாக்கும் ஆளும் கட்சிக்கு ஒரு படிப்பினை ஊட்டக் கூடிய விதத்தில் மக்களைத் திரட்ட வேண்டும் என்ற அடிப்படையிலோ இல்லை.

வழக்கம் போல் தங்கள் கட்சியின் தொண்டர்களை அணிதிரட்டி இந்த விலை உயர்வுகளைச் சுமத்தியதற்கு எதிராக ஒரு அடையாளப் போராட்டத்தை அதற்குரிய விளம்பரத்தோடு நடத்தியதுடன் அவர்கள் கடமை முடிந்துவிட்ட ஒரு மனநிலையோடு இருக்கின்றனரே தவிர அதைத் தாண்டி எந்த நடவடிக்கையையும் யோசித்ததாகத் தெரியவில்லை.

முதல்வர் குறிப்பிட்ட பேச்சிற்கும் செயலிற்கும் இடையிலான வேறுபாடு

சட்டமன்றத் தேர்தலில் தன்னோடு கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட இக்கட்சிகளின் இந்தக் கண்துடைப்புக் கண்டனத்தைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழக முதல்வர் அவர்கள் நீங்கள் தான் உறுதியாக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கக் கூடியவர்கள் என்றெல்லாம் என்னைப்பற்றி முதலில் கூறிவிட்டு இப்போது அதனை இக்கட்சிகள் கண்டிக்கின்றன என்று கூறியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று இங்கு செயல்படும் கட்சிகளில் முதற்பெரும் கட்சியாக விளங்கக் கூடிய சி.பி.ஐ(எம்). கட்சியைப் பொறுத்தவரை முதல்வர் அவர்கள் கூறியுள்ள படி அவர்களிடம் அக்கட்சியினர் கூறியுள்ளதற்கும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.

ஏனெனில் அவர்கள் ஓரளவு சக்தியுடன் செயல்படும் போக்குவரத்துத் துறையில் வேலை செய்யும் தொழிலாளரிடம் இந்தக் கட்டண உயர்வு பற்றிப் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது அவர்கள் பத்தாண்டு காலமாக பேருந்து கட்டணங்கள் உயர்த்தப் படாததால் அத்துறையில் பணியாற்றும் எங்களுக்கு ஊதிய உயர்வு போன்ற எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை; இப்போது கொண்டுவரப் பட்டுள்ள இந்தக் கட்டண உயர்வு இனிமேல் எங்களது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறோம் என்றே கூறியுள்ளனர்.

எனவே அத்தொழிலாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதத்தில் ஓரளவு கட்டண உயர்வு கொண்டுவரப்பட்டால் பரவாயில்லை என்ற மனநிலையுடன் சி.ஐ.டி.யு. சார்ந்த போக்குவரத்துத் தொழிலாளர் சங்கமும், சி.பி.ஐ(எம்). கட்சியும் இருந்திருப்பதற்கு வாய்ப்புண்டு; அந்தப் பின்னணியில் அது போன்ற கருத்தைத் தமிழக முதல்வரிடம் முன்வைத்திருப்பதற்கும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

பத்தாண்டு காலமாகப் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தவே படவில்லை என்ற கூற்று உண்மையானது அல்ல. அதாவது பேருந்துக் கட்டண உயர்வென்று அறிவித்துக் கட்டண உயர்வு கொண்டுவரப்படவில்லையே தவிர வேறு அனைத்து வகைகளிலும் கட்டண உயர்வுகள் கொண்டுவரப்பட்டேயுள்ளன. அதாவது மாறுபட்ட சேவைகளை அறிமுகம் செய்துள்ளதாகக் கூறி அதற்கான கட்டணம் என்ற பெயரில் பெரிய அளவிற்குக் கட்டண உயர்வு தி.மு.கழக ஆட்சியிலும் கொண்டுவரவே பட்டது.

அதாவது சேவைகள் மிகவும் குறைவாக உள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கு, இருக்கும் பேருந்துகளிலேயே மிகவும் மோசமான பேருந்துகளை இயக்கி அதற்கு மட்டும் பத்தாண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்கும் நடைமுறைப் பின்பற்றப்பட்டது.

அதுதவிர மற்ற பேருந்துகளுக்கான கட்டணங்கள் குறிப்பாக நகரப் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கவே பட்டன. அதனால் சில இடங்களுக்கு நகரப் பேருந்துக் கட்டணங்கள் வெளியூர்ப் பேருந்துக் கட்டணங்களைக் காட்டிலும் கூடுதலாக ஆன வினோத நிலையும் ஏற்பட்டது. குறைந்த கட்டணத்தில் இயங்கிய அப்படிப்பட்ட பேருந்துகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதைத்தவிர அனைத்துப் பேருந்துகளும் தாழ்தளப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், குறைந்த அளவு நிறுத்தங்கள் உள்ள பேருந்துகள் என்று பெயரிடப்பட்டு அவற்றிற்கான கட்டணங்கள் பெருமளவு அதிகரிக்கப்பட்டன. இது யாருக்கும் தெரியாததல்ல.

இதைக் கண்டித்து இந்தவகைச் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்ட போதே அறிக்கைகள் பல விட்டவர் தற்போதைய தமிழக முதல்வர் ஆவார். அதுதவிர சட்டமன்றத் தேர்தலின் போதும் முந்தைய தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை அவரால் கடுமையாக விமர்சிக்கவும் பட்டது.

ஆனால் இப்போது தான் செய்துள்ள மக்கள் விரோத நடவடிக்கையின் தாக்கத்தையும் அழுத்தத்தையும் குறைத்துக் காட்டுவதற்காக முந்தைய ஆளும் கட்சியினால் செய்யப்பட்டதாகவே இருந்தாலும் கூட அந்த அறிவிக்கப்படாத கட்டண உயர்வுகளைத் தற்போதைய ஆளும்கட்சி மூடிமறைக்கிறது. பத்தாண்டுகளாக கட்டண உயர்வு கொண்டுவரப்படாத நிலையில் இந்தப் பொதுத்துறை நிறுவனம் தள்ளாடுகிறது; அது திவாலாகிவிடாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற் கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறது.

அதாவது தி.மு.க. அரசு கூட்டிய தொகைக்கு மேலும் 40 சதவிகிதம் என்ற அடிப்படையில் இந்தக் கட்டண உயர்வு இப்போது கொண்டுவரப் பட்டுள்ளது.

பொதுத்துறைக்கு லாப நோக்கம் பொருந்தாது

போக்குவரத்துச் சேவையைப் பொறுத்தவரையில் அது அரசே நடத்துவதாக உள்ள சூழ்நிலையில் அதை லாபகரமாக நடத்த வேண்டும் என்பது அதனை வழிநடத்தும் கண்ணோட்டமாக இருக்கக் கூடாது. ஒரு சேவை என்ற ரீதியில் அதற்காக அரசு தனது நிதியிலிருந்து நிதி வழங்கி அதனை நடத்தினால் தவறொன்றும் இல்லை.

அதாவது சமூகத்தின் ஒருபகுதி மக்களுக்கு இலவசமாகவே அரிசியை ஒரு அரசு வழங்க முன்வருகிறது என்றால் அத்தகைய உயர்ந்த மக்கள் ஆதரவு மனநிலையுடன் செயல்படும் அரசு என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் அரசு இத்தனை பெரிய கட்டண உயர்வைக் கொண்டுவருவதாக உள்ளது என்பது எப்படிப்பட்ட வாதத்தாலும் சரியானதென்று நிறுவ முடியாததாகும். ஏனெனில் இந்த இலவச அரிசி என்ற பலனைப் பெறும் மக்களும் பயன்படுத்தக் கூடியதே இந்தப் போக்குவரத்துச் சேவை. ஏனெனில் இலவச அரிசி வாங்குவோர் அனைவரும் வேலை எதற்கும் செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்போர் அல்ல.

அவர்களில் பெரும்பாலோர் அமைப்பு ரீதியாக ஒருங்குதிரட்டப்படாத தொழிலாளரே. கட்டுமானத் தொழில் போன்ற தொழில்களில் ஈடுபடும் அவர்கள் அத்தொழில்கள் பெருமளவு நடைபெறும் நகர்ப்புறங்களில் தங்களது வசிப்பிடங்களை வைத்துக்கொள்ள முடியாதவர்கள்.

ஏனெனில் நகர்ப்புறங்களில் உள்ள அளவிற்கு வாடகை கொடுத்து அவர்களால் வசிக்க முடியாது. எனவே வாடகைத் தொகை குறைவாக உள்ள கிராமப் பகுதிகளில் வசித்துக் கொண்டு நகர்ப்புறங்களுக்கு வேலைக்குச் சென்று வருபவர்களே அவர்கள். இந்தப் பேருந்துக் கட்டண உயர்வு அவர்களைப் பெருமளவு பாதிக்கக் கூடியதாகும். இதற்கு உகந்த விதத்தில் உடனடியாகக் கூடுதல் கூலியினை அவர்கள் வேலை செய்யும் இடங்களில் இருந்து அவர்களால் பெற முடியாது. அந்நிலையில் அவர்களைப் பெரும் பொருளாதார சிரமத்திற்கு ஆளாக்கக் கூடியதே இந்தக் கட்டண உயர்வு.

மத்தியதர வர்க்கத்தைப் பாதிக்கும் பால் விலை உயர்வு

பால் விலை உயர்வினைப் பொறுத்தவரை பால் வாங்கிப் பயன்படுத்துவது என்பது ஏழை, எளிய மக்களால் ஏறக்குறைய கைவிடப்பட்ட ஒன்றாகிவிட்டது. ஏழை எளியவர்கள் பால் பொருட்களைப் பயன்படுத்தியது ஒரு கடந்த காலக் காட்சி. இப்போதெல்லாம் தேவைப்பட்டால் கடையில் ஒரு காஃபியோ, டீயோ வாங்கிக் குடித்துவிட்டுச் செல்பவர்களாகவே அவர்கள் ஆகிவிட்டனர். முழுக்க முழுக்க அலுவலகம் செல்லும் நடுத்தர மக்களின் வாழ்க்கைச் செலவினமாகவே பால் ஆகிவிட்டது.

இதன் விலை உயர்வு திட்டமிட்டுச் செலவு செய்தால் மட்டுமே இன்றுள்ள வாழ்க்கைச் செலவுகளை சந்திக்க முடியும் என்ற கட்டாயத்தில் உள்ள நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கவல்லதாகும்.

இந்த விலை மற்றும் கட்டண உயர்வுகள் எந்தப் பின்னணியில் கொண்டுவரப் பட்டிருக்கின்றன என்று பார்ப்பதும் அவசியமானதாகும். அதாவது முந்தைய தி.மு.க. அரசும் அறிவிக்காமல் பேருந்துக் கட்டண உயர்வைக் கொண்டுவந்தது. தற்போதைய அ.தி.மு.க. அரசும் அக்கட்டண உயர்வை எந்தவகையான உறுத்தலுமின்றி வெளிப்படையாக அறிவித்துக் கொண்டுவந்துள்ளது.

முந்தைய தி.மு.க. அரசு மூன்று ரூபாயில் இருந்து 5 ரூபாய் என்ற அளவிற்கு நியாயவிலைக் கடைகளில் விற்கப்பட்ட அரிசியினை ஒரு கிலோ அரிசி 1 ரூபாய் என்ற அளவிற்குக் குறைத்தது. தற்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசோ அந்த 1 ரூபாயும் தேவையில்லை இலவசமாகவே அரிசி வழங்குகிறேன் என்று அறிவித்தது. முந்தைய தி.மு.க. அரசு வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி என்று அறிவித்து வழங்கியது. அதன் பின்னர் கேஸ் அடுப்புகள் போன்றவையும் இலவசமாக ஒரு பகுதி மக்களுக்கு வழங்கியது.

தற்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசு அதுபோல் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றை இலவசமாக மக்களுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. அவ்வாறு வழங்குவதைச் சிறிய அளவில் துவக்கியும் உள்ளது. இந்தக் கட்சிகள் இரண்டின் செயல்பாட்டிலும் ஒரு ஒருமித்த தன்மை இருப்பதை அனைவரும் பார்க்க முடிகிறது.

இன்னொரு போக்கு

அதாவது வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என்று அறிவிக்கப்படும் மக்களுக்கு மிகக் குறைந்த விலையிலோ அல்லது இலவசமாகவோ பலவற்றை வழங்குவது என்ற ஒருமித்த தன்மை இவர்களிடம் உள்ளது. மத்திய அரசின் 100 ரூபாய் வேலைத் திட்டமும் இந்த ரகத்தைச் சேர்ந்தது தான்.

இவ்வாறு ஒருமித்த விதத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களைப் பொறுத்தவரையில் பல திட்டங்களைக் கொண்டுவரும் இந்த அரசாங்கங்களிடம் இன்னொரு போக்கையும் நாம் காண முடிகிறது.

அதாவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பல மண்டலங்களை அமைத்து அங்கு தொழில் தொடங்கும் முதலாளிகளுக்கு இலவசமாகவும் சலுகை விலையிலும் பல அடிப்படை வசதிகளை வழங்கும் போக்கும் இவர்களிடம் உள்ளது.

இதுதவிர பஞ்சாலை முதலாளிகளுக்குப் பல்வேறு வகைகளில் மானியங்கள் வழங்குவதும் இந்த அரசாங்கங்களால் ஒளிவுமறைவின்றிச் செய்யப்படுகிறது. ஒளிவுமறைவின்றி இத்தகைய வசதிகளை பஞ்சாலை முதலாளிகளுக்குச் செய்யும் இந்த அரசாங்கங்கள் மக்களுடைய புலனறிவுக்கு எட்டாத விதத்திலும் பல்வேறு சலுகைகளை முதலாளிகளுக்கு வழங்குகின்றன.

எந்தத்துறை முதலாளிகள் தொழில் நடத்துவதில் சிரமம் என்று பலவற்றை அரசின் பார்வைக்குக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் ஏதாவது ஒரு விதத்தில் வரிக்குறைப்பு, மானியம் வழங்கல் போன்ற வகைகளில் சலுகைகளைத் தங்குதடையின்றி இந்த அரசாங்கங்கள் செய்து தருகின்றன. இந்தப் போக்கு உணர்த்துவது என்ன என்பது கூர்மையாகப் பார்க்கப்பட வேண்டும்.

அதாவது இலவசங்கள் வழங்கப்படும் ஏழை எளியவர்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் கணிசமாக இருப்பவர்கள். அவர்கள் கையில் வாக்குரிமை உள்ளது.

அதை எந்த நடவடிக்கையை மேற்கொண்டாவது தட்டிப் பறிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆட்சிக்கு வருவதில் ஆவலுடன் இருக்கக்கூடிய கட்சிகள் உள்ளன. மானியங்கள், வரிக்குறைப்பு என பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் மற்றொரு மக்கட் பகுதியினர் மிகவும் சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்கள் நிதியாதாரம் பொருந்திய முதலாளிகள்.

அவர்களிடம் ஆட்சிக்கு வர ஆவலுடன் இருக்கக்கூடிய கட்சிகளுக்கு வழங்குவதற்கு ஏராளமான நிதி இருக்கிறது.

எனவே இவ்விரு பகுதியினருக்கும் சலுகைகளை வழங்கி ஒரு பகுதியினரிடமிருந்து நன்கொடைகள் என்ற பெயரில் நிதியினை வசூலித்து அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியினருக்குச் செலவு செய்து தேவைப்பட்டால் ஒரு வாக்கிற்கு இவ்வளவு என்று பணமாகக் கூட வழங்கி தேர்தல் அரசியலை நடத்துவது இக்கட்சிகளுக்கு நல்ல பலனளிக்கும் நடவடிக்கையாக உள்ளது.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் இலவசங்கள் அவ்வாறு இலவசம் வழங்குபவர்கள் மீது நிரந்தரமான விசுவாசத்தை ஏற்படுத்துவதில்லை. இதையே நடைமுறை அனுபவம் நமக்குக் காட்டுகிறது.

இலவசங்கள் அரசியல் வர்த்தகத்திற்கான விளம்பரங்கள்

அவ்வாறு இலவசங்கள் வழங்குபவர் மீது ஒரு மாற்ற முடியாத விசுவாசத்தை ஏற்படுத்தக் கூடியவையாக அவை இருந்திருக்குமானால் இத்தனை பெரிய தோல்வியை தொலைக்காட்சிப் பெட்டி இலவசமாக வழங்கும் அளவிற்குச் சென்ற தி.மு.கழகத்திற்கு அவர்கள் கொடுத்திருக்க மாட்டார்கள்.

இருந்தாலும் ஆட்சிக்கு வர விரும்பும் கட்சிகள் அதைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் உருவாகிவிட்டது.

அதாவது விளம்பரங்கள் உண்மையிலேயே அவை செய்யப்படும் அளவிற்கு வியாபாரத்தைப் பெருக்குகின்றனவா என்று பார்த்தால் அவ்வாறு பெருக்குகின்றன என்று கூற முடியாது. இருந்தாலும் கூட நிறுவனங்கள் அதைச் செய்யாதிருக்க முடியாது.

ஏனெனில் வர்த்தக மேம்பாட்டிற்கு அத்தியாவசியம் என ஆகிவிட்ட ஒன்றே விளம்பரம். அதைப்போல் இலவசம் இத்தனை கொடுத்தேன் என்ற அடிப்படையில் வாக்குகள் விழும் என்று கூற முடியாவிட்டாலும் ஒருவர் செய்வதைக் காட்டிலும் மேலான ஒரு இலவசத்தை மற்றொருவர் வழங்கிக் கொண்டு போவதும் தேர்தல் அரசியலில் அவற்றைச் சாதனைகளாக முன்வைப்பதும் ஜனநாயகம் என்ற போர்வையில் இக்கட்சிகள் நடத்தும் அரசியல் வர்த்தகத்திற்கு ஒரு விளம்பரம் போல் ஆகிவிட்டது.

எனவே தங்களது வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென்றால் அதையும் தாண்டி எதையாவது அதாவது நிச்சயமாக வாக்குகளைப் பெற்றுத் தரும் எதையாவது செய்தாக வேண்டும் என்ற நிலை தோன்றியுள்ளது.

தேர்தல் சமயத்தில் வாக்குகளுக்குப் பணம் கொடுப்பதே அத்தகைய வெற்றியை உத்திரவாதப்படுத்தும் ஓரே வி­சயம் என்ற நிலை தோன்றிவிட்டது. வாக்கிற்குப் பணம் கொடுப்பதில் மிகவும் முனைப்பாகவும், அதிகபட்சப் பணம் கொடுப்பதாகவும் தி.மு.கழகம் விளங்கியது. அதற்குக் காரணம் அதன் தலைமை மற்றும் அதன் உறவினர்களின் குடும்பத்தினர் எளிதில் லாபம் ஈட்டக் கூடிய பல தொழில்களுக்கு அதிபதிகளாக இருந்ததும் ஆட்சி அதற்கு உதவிகரமாக இருந்ததுமாகும்.

அந்தப் பணத்தை அரசிடமிருந்து பல்வேறு சலுகைகளைப் பெறும் முதலாளித்துவ நிறுவனங்களிடமிருந்து பெற்று ஏழை எளியவர்களுக்கு வழங்கி தேர்தல் ஆதாயம் ஈட்டுவது தற்போதைய ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கட்சிகள் என்று கருதப்படும் கட்சிகளுக்கு அத்தியாவசியம் ஆகிவிட்டது.

முறிபடும் தார்மீக முதுகெலும்பு

இதில் இன்னொரு சாதகமும் உள்ளது; அது நீண்டகால பலன் தரும் சாதகமாகும். அதாவது இந்த இலவசங்களுக்கு இரையாகும் ஏழை எளிய மக்களே இழப்பதற்கு ஒன்றுமில்லாத தொழிலாளி வர்க்கம்.

ஆனால் இதுவரை வரலாறு கண்ட இழப்பதற்கு ஒன்றுமில்லாத தொழிலாளி வர்க்கத்திற்கு அது இழந்திராத ஒன்று இருந்தது. இன்றும் மேலை நாட்டு உழைக்கும் வர்க்கத்திடம் அது உள்ளது. அது உழைக்கும் மக்களின் நேர்மை உணர்வும், தார்மீக முதுகெலும்பும் ஆகும்.

இந்த இலவசங்கள் மற்றும் வாக்கிற்குப் பணம் வழங்கும் போக்கு அந்த நேர்மை உணர்வையும் ஏழை எளியவரின் நிமிர்ந்து நின்று அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் உரிமையையும் தட்டிப் பறிக்கும் வேலையைத் திறம்படச் செய்கின்றன. அது இழப்பதற்கு ஒன்றுமில்லாத தொழிலாளி வர்க்கம் சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதில் ஆற்றவல்ல அற்புதமான பாத்திரத்தை ஆற்றவியலாததாக அதனை ஆக்குகிறது. ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு சாதாரண வி­சயமல்ல.

எனவே தான் இந்த மிகப் பெரிய சாதகத்தை இவ்விரு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆளும் வர்க்கத்திற்குச் செய்து தர விரும்புகின்றன.

மத்தியதர வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள்

இவ்வாறு முதலாளிகளுக்கு மானியமாக வழங்குவதற்கும், ஏழை எளியவருக்கு இலவசமாக வீட்டுப் பயன்பாட்டு பொருட்கள் வழங்குவதற்கும் நிதி அரசிற்குத் தேவை.

அதை யாரிடமிருந்து திரட்டுவது. அது ஓரளவு வரி ஏய்ப்பு போன்றவற்றை எல்லாம் மேற்கொண்டதற்கு பின்பு முதலாளிகளும் வர்த்தகர்களும் வழங்கும் வரிப்பணத்தின் மூலம் ஒருபுறம் திரட்டப் படுகிறது.

அவர்கள் தவிர எந்த வகையிலும் வரி ஏய்ப்பு போன்றவற்றைச் செய்ய முடியாத ஒரு மக்கட் பகுதியினர் உள்ளனர். அவர்களிடம் ஓரளவு வாங்கும் சக்தியும் உள்ளது. அதுவும் குறிப்பாக உலகமயப் பின்னணியில் அவர்களிடம் வாங்கும் சக்தி சற்றுக் கூடுதலாகவே உள்ளது. அவர்களிடமிருந்தே இந்த நிதியைத் திரட்டியாக வேண்டும்.

அந்த நிலையில் உள்ள மத்தியதர வர்க்கமே அரசின் இதுபோன்ற விலை உயர்வுகளினால் கடும் பாதிப்பிற்கு ஆளாகக் கூடியதாக உள்ளது. பேருந்துக் கட்டணம் பெருமளவிற்கும், பால் விலை உயர்வு ஏறக்குறைய முழுமையாகவும் வரப்போகும் மின்கட்டண உயர்வு ஒட்டுமொத்தமாகவும் பாதிக்க வைக்கப் போவது அந்த மக்கட் பிரிவினரைத் தான்.

அவர்களைப் பொறுத்தவரை சம்பிரதாயங்களின் கைதிகள். சட்ட மீறல் என்பது அவர்களால் எண்ணிப் பார்க்க முடியாத ஒன்று.

எனவே அவர்கள் தலையில் கை வைத்தால் அடுத்தவருக்குத் தெரியாமல் முணங்குவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். இந்த எண்ணத்தின் அடிப்படையில் தான் அவர்களிடம் உள்ள ஓரளவு வாங்கும் சக்தியைச் சூறையாடும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இயக்கம் கட்டப்பட வேண்டிய முறை

இந்த உண்மையை மக்களிடம் விளக்கி ஒருபுறம் இழப்பதற்கு ஒன்றுமில்லாதவர்களாக உள்ள பாட்டாளி மக்களை நாங்கள் உழைத்து வாழ முடிந்தவர்கள்; நாங்கள் உழைப்பதற்குத் தேவையான வேலை வாய்ப்புகளை முடிந்தால் உருவாக்கித் தாருங்கள்; இல்லாவிட்டால் ஒன்றும் செய்யாது இருங்கள்; அதைவிடுத்து எங்களை இலவசத் திட்டங்களுக்கு ஏங்கும் இரங்கல் மனநிலை கொண்டவர்களாக நீங்கள் ஆக்குவதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறச் செய்ய வேண்டும்.

அடுத்து இதுபோன்ற சுமைகளால் மிகப் பெருமளவு கசக்கிப் பிழியப்படும் நடுத்தர வர்க்கத்தினரை வி­சயங்களை அறிந்திருந்தால் மட்டும் போதாது நம்மை வாட்டி எடுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துவோரை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்று திரண்டு நின்றால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது; அப்படித் திரண்டெழுந்து எதிர்க் குரல் எழுப்பாததனால் தான் ஒரு காலத்தில் கட்டுபடியான செலவில் கிட்டிய கல்வி உள்பட அனைத்திற்கும் கண்மண் தெரியாத விலையினை நாம் இன்று கொடுக்க வேண்டியுள்ளது என்பதை எடுத்துரைத்து இத்தாக்குதலுக்கு எதிராக அணிதிரட்ட வேண்டும்.

இந்த அடிப்படையில் எவ்வளவு தூரம் மக்களைத் திரட்டி இந்தத் தாக்குதலுக்கு எதிராக அவர்களைக் கொண்டுவந்து நிறுத்த முடிகிறதோ அவ்வளவு தூரம் தான் இதில் சிறிதளவு கட்டண அல்லது விலைக் குறைப்பையாவது கொண்டுவர முடியும்.

மேலும் இத்தகு தாக்குதல்கள் இனிமேல் கொண்டுவந்தால் நாம் அதற்கு மிக அதிக விலையாக மக்களின் கோபத்திற்கு ஆளாகி செல்வாக்கை இழக்க வேண்டியிருக்கும் என்பதை ஆளும் கட்சிகளுக்கும் உணர்த்த முடியும். அவ்வாறு உணர்த்துவதன் மூலமே அவை இதுபோன்ற தாக்குதல் நடவடிக்கைகளில் எதிர்காலத்தில் ஈடுபடுவதையும் கட்டுப்படுத்த முடியும்.

இதைச் செய்யாமல் கம்யூனிஸ்ட் என்று தங்களை அறிவித்துக் கொள்ளும் கட்சிகள் அடையாள பூர்வமாகத் தங்களது கட்சியின் தொண்டர்களை மட்டும் வைத்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் பாவனைத் தன்மை கொண்டவையாக ஆகுமே தவிர இப்பிரச்னையின் விளிம்பைக் கூடத் தொட்டவையாக ஆகாது.

Pin It