முந்தைய பகுதிகள்:
1: பாட்டாளி வர்க்கத்தின் தேசியமும் சர்வதேசியமும்
2. தமிழ்த் தேச மக்களின் முன்னணி மீதான விமர்சனக் குறிப்புகள்
***
(1) தோழர் துரைசிங்கவேல் தனது முன்னுரையில் குறிப்பான திட்டத்தின் தேவையை வலியுறுத்துகிறார். 'பொதுமையர் இயக்கங்கள் திட்டம், குறைந்தபட்ச திட்டம், குறிப்பான திட்டம் மற்றும் செயலுத்தி இவைகளுக்கு இடையிலான இயங்கியல் உறவு குறித்தெல்லாம் தெளிவில்லாமல் இருக்கிறார்கள்" என்கிறார். இவ்விமர்சனங்கள் பொதுவாக சரியானதே. அதே நேரத்தில் இந்த திட்டங்களையும் செயலுத்திகளையும் எந்த சமூகத்தில் தீர்மானிப்பது? இந்திய வல்லாதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்ட பல்தேசிய இந்திய தேசியத்திலா? அல்லது மொழிவழி தேசியத்திலா? (அதாவது தமிழ்த் தேசியத்திலா). அதேபோல் சமூகத்தின் அடிப்படை, முதன்மை முரண்பாடுகளை எவ்வாறு தீர்மானிப்பது? அதனை தமிழ்த் தேசியத்தில் நின்று தீர்மானிப்பதா? அல்லது இந்திய பல்தேசிய சமுதாயத்தில் நின்று தீர்மானிப்பதா? இவைகள் பற்றி ஏதும் தெளிவுபடுத்தப்படவில்லை.
இவ்வாறு அறிக்கை பொதுமையர் இயக்கத்திற்கு குறிப்பான திட்டம் தேவை என மிகச் சரியாக குறிப்பிட்டாலும் அதனை தமிழ்த் தேசியத்தில் நின்று தீர்மானிப்பதா அல்லது இந்திய தேசியத்தில் நின்று தீர்மானிப்பதா என்பதை தெளிவுபடுத்தவில்லை. எனவே தான்
'1947க்கு பிறகு தமிழக இந்திய சூழலில்,
இந்திய – சீனப் போர் நிகழ்வில்,
இந்திய - பாக்கிஸ்தான் போர்களின் நிகழ்வில்,
இந்திரா காந்தியின் அவசரநிலைக்கால நிகழ்வில் மற்றும் ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க இந்தியப் படைகளை அனுப்பிய நிகழ்வில் இடைக்கட்டங்கள் மாறின. குறிப்பான திட்டங்கள் மாறின" என்கிறார்.
நாம் எழுப்பும் கேள்வி இதுதான்: தேசிய விடுதலையை முன்வைத்து போராடி வரும் காக்ஷமீர் மற்றும் வடகிழக்கு தேசிய இனங்களுக்கு எது முதன்மை முரண்பாடு? அந்த தேசிய இன விடுதலை இயக்கங்கள் வெற்றி பெறுவதற்கு தங்களது தேசிய இனத்தின் அக, புற முரண்பாடுகளை ஆய்வு செய்வது முதன்மையானதும், முக்கியத்துவம் வாய்ந்ததும், முன்நிபந்தனையும் ஆகும். மாறாக, பல்தேசிய இந்திய அரசின் அக, புற முரண்பாடுகளை ஆய்வு செய்வது என்பது துணை அம்சம் மட்டுமே. நாம் கூட தமிழ்த் தேசியத்தில் நின்றுதான் சர்வதேசிய உறவுகளையும், நிலைமைகளையும், அக, புற முரண்பாடுகளையும் தீர்மானிக்க வேண்டும். தமிழ்த் தேசியத்தின் அடிப்படை, முதன்மை முரண்பாடுகளை கண்டறிய வேண்டும். இந்த அறிக்கை இந்திய தேசியத்திலும் சிக்கிக் கொண்டிருப்பதால் முதன்மை முரண்பாட்டை கணிப்பதில் '1947க்குப் பிறகு தமிழக இந்திய சூழலில்" என குழப்புகிறது.
(2) பக்கம் 18 இல்: 'மக்கள் சனநாயகத்தில் தலைமை தொழிலாளி வர்க்கம் என்றால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவது அல்ல. மக்கள் சனநாயகப் புரட்சியின் எதிரிகளான இந்திய பிராந்திய பெருமுதலாளி வர்க்கம், மூலதன-சாதி நிலக்கிழார்கள், ஏகாதிபத்தியம் அதிகார வர்க்க முதலாளித்துவம் ஆகிய நால்வரையும் அதிகாரத்திலிருந்து தூக்கி எறிந்து, மக்கள் சனநாயகப் புரட்சியின் இயக்கு சக்திகளான தொழிலாளர்கள் தலைமையில் விவசாயிகள், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள் ஆகிய மூன்று வர்க்கங்களும், பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடியினர், மீனவர்கள் ஆகிய சிறப்பு பிரிவினரும் இணைந்த கூட்டுசர்வாதிகாரத்தை நிறுவுவதே மக்கள் சனநாயகத்தின் அரசியல் மூல உத்தி ஆகும்." அறிக்கையில் குறிப்பிடும் இம்மூல உத்தியை செயல்படுத்துவது தமிழ்த் தேசியத்திலா? அல்லது இந்திய தேசியத்திலா? என தெளிவுபடுத்த வேண்டும்.
(3) பக்கம்20இல்:'இடைக்கட்டம் என்பது முரண்பாட்டின் வளர்ச்சியால் உருவாகிறது. குறிப்பாக முதன்மை முரண்பாட்டின் வளர்ச்சியால் உருவாகிறது" என்கிறது அறிக்கை. நமது கேள்வி எதுவெனில் எந்த முதன்மை முரண்பாட்டின் வளர்ச்சியால் இடைக்கட்டம் உருவாகிறது? ஏற்கனவே முதன்மை முரண்பாடு இருப்பது போலவும் அது வளர்வதனால் இடைக்கட்டம் தோன்றுவது பொலவும் அறிக்கை அர்த்தப்படுத்துகிறது. ஆனால் உண்மை என்னவெனில் அடிப்படை அல்லாத முரண்பாடுகளும் கூட முதன்மை முரண்பாடுகளாக தோன்றுவது உண்டு என்பதை பார்க்க மறுக்கும் போக்கு மா-லெ இயக்கத்தில் இன்றும் நீடிக்கிறது என்பதே.
மேலும்,'மேற்கண்ட வடிவங்களிலேயே அடிப்படை முரண்பாட்டில் இருந்து முதன்மை முரண்பாடு எழுகிறது" என்கிறது அறிக்கை. ஆக அடிப்படை முரண்பாட்டில் இருந்து முதன்மை முரண்பாடு தோன்றுவதாகக் கூறுகிறது. சீனாவில் முதன்மை முரண்பாடாய் தீர்மானிக்கப்பட்ட சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான முரண்பாடு அடிப்படை முரண்பாட்டில் ஒன்றாய் இருக்கவில்லை. ஏகாதிபத்தியங்களுக்கும் தேசத்திற்கும் அல்லது நாட்டிற்கும் இடையிலான முரண்பாடு அடிப்படை முரண்பாடுகளில் ஒன்றாய் தீர்மானிக்கப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட ஏகாதிபத்தியத்திற்கும் தேசத்திற்கும் அல்லது நாட்டிற்கும் இடையிலான முரண்பாடு மட்டுமே முதன்மை முரண்பாடாய் தீர்மானிக்கப்படுகிறது. எல்லா ஏகாதிபத்தியங்களையும் ஒரு சேர எதிர்க்க அல்லது முறியடிக்க இயலாது என்பதால் உடனடி எதிரியை முதலில் வீழ்த்துவதற்கு இவ்வாறு தீர்மானிப்படுகிறது. சீனாவில் இவ்வாறுதான் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான முரண்பாட்டை முதன்மை முரண்பாடாக தீர்மானித்தார்கள்.
முதன்மை முரண்பாடு தோன்றுவதற்கான வாய்ப்பை பற்றி மாவோ கூறினார். “உள்நாட்டு புரட்சி யுத்தத்தில் ஏகாதிபத்தியத்தையும் அதனுடைய ஏவல் நாய்களையும் - அதாவது உள்நாட்டு பிற்போக்குவாதிகளையும் -அழிக்கின்ற அளவுக்கு முரண்பாடு வளர்ச்சி பெறும்போது ஏகாதிபத்தியம் தனது ஆட்சியைக் காப்பற்றுவதற்காக அடிக்கடி வெவ்வேறு முறைகளை கையாள்கிறது. ஒன்று ஏகாதிபத்தியம் புரட்சிகர அணிகளைப் பிளவுபடுத்த முயல்கிறது அல்லது உள்நாட்டு பிற்போக்கு கும்பலுக்கு உதவுவதற்கு நேரடியாகவே தனது இராணுவத்தை அனுப்புகிறது. இந்தச் சமயத்தில் ஏகாதிபத்தியமும் உள்நாட்டு பிற்போக்கு கும்பலும் வெளிப்படையாக ஓரணியிலும் மக்கள் எதிர் அணியிலும் நின்று முதன்மை முரண்பாட்டை உருவாக்குகின்றனர். இந்த முதன்மை முரண்பாடு மற்ற முரண்பாடுகளின் வளர்ச்சியைத் தீர்மானிப்பதாக அல்லது செல்வாக்கு செலுத்துவதாக அமைகிறது." (முரண்பாடு பற்றி மாவோ).
ஜப்பானிய ஏகாதிபத்தியம் சீனத்தை காலனியாதிக்கம் செய்யும் நோக்கத்துடன் ஆக்கிரமிப்பு யுத்தம் தொடுத்தபோது மாவோ கூறினார் “சீனத்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான முரண்பாடு முதன்மை முரண்பாடாகி உள்நாட்டு முரண்பாடுகள் இரண்டாந்தர துணை நிலையை அடைந்ததால் சீனத்தின் சர்வதேசிய உறவுகளிலும், உள்நாட்டு வர்க்க உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு அவை தற்போதைய நிலைமையில் ஒரு புதிய வளர்ச்சிக் கட்டத்தை தோற்றுவித்துள்ளது."
மேலும் கூறினார் “சீனாவிற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் இடத்தில் சீனத்திற்கும் ஜப்பானிய ஏகாதியபத்தியத்திற்கும் இடையிலான விசேசமாக வெளிப்படையான கூர்மையான முரண்பாடு இடம் பெற்றுள்ளது. ஜப்பானிய ஏகாதிபத்தியம் சீனாவை முற்றாக வென்று அடிமைபடுத்தும் கொள்கையை மேற்கொள்கிறது. இதன் விளைவாக சீனாவுக்கும் இதர சில ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கும் இடையிலான முரண்பாடு இரண்டாந்தர நிலையை அடைந்துள்ளன. எமது ஐக்கிய முன்னணியின் நோக்கம் ஜப்பானை எதிர்ப்பாக இருக்க வேண்டுமே ஒழிய ஒரே நேரத்தில் எல்லா ஏகாதிபத்திய வல்லரசுகளையும் எதிர்ப்பதாக இருக்கக்கூடாது." (ஜப்பானிய எதிர்ப்புக் கால கட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கடமைகள்).
எனவே ஏகாதிபத்தியத்திற்கும் தேசத்துக்குமான முரண்பாடு அடிப்படை முரண்பாடாக தீர்மானிக்கப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட ஏகாதிபத்தியத்திற்கும் தேசத்திற்குமான முரண்பாடு முதன்மை முரண்பாடாக தீர்மானிக்கப்படுகிறது. மேலும் அடிப்படை முரண்பாட்டில் ஒன்றுதான் முதன்மை முரண்பாடாய் வளரும் அல்லது வரும் என்பது விதி அல்ல. நாம் முதன்மை முரண்பாடாய் தற்போது விவாதித்துக் கொண்டிருக்கும் பாசிசம் அடிப்படை முரண்பாடுகளில் ஒன்றாய் இருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்வது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
எனவே, அடிப்படை முரண்பாடு என்பது சமுதாய மாற்றத்துடன் புரட்சியின் கட்டத்தையும் (Stage), தன்மையையும் (Character) தீர்மானிப்பதாக உள்ளது. ஆகையினால் அது உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாட்டால் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், முதன்மை முரண்பாடு என்பது இப்படி உற்பத்தி அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை. அரசியல் அதிகாரத்தில் வர்க்க அணி சேர்க்கையில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. அதேசமயம் அடிப்படை முரண்பாடுகளில் ஒன்றுகூட முதன்மை முரண்பாடாய் மாறும் அரசியல் வாய்ப்புகளையும் மறுக்கக் கூடாது.
அரசியல் அரங்கிலான வர்க்க சேர்க்கையிலும் அணிவகுப்பிலும் ஏற்படும் அளவு மாற்றங்கள் அரசியல் அதிகாரத்தில் பண்பு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. எனவே முதன்மை முரண்பாடு அரசியல் அரங்கிலிருந்து தீர்மானிக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் அரசியல் அதிகாரத்தில் ஏற்பட்ட பண்பு மாற்றத்தையே பாசிசம் என்கிறோம். எனவே முதன்மை முரண்பாடு அடிப்படை முரண்பாட்டு ஒன்றின் தீவிர வளர்ச்சியாலும் வரலாம். அடிப்படை அல்லாத முரண்பாடும் (உள்நாட்டு, வெளிநாட்டு வர்க்க அணிசேர்க்கையிலும், அணிவகுப்பிலும் ஏற்படும் தீவிர வளர்ச்சியால்) முதன் முரண்பாடாய் வரலாம். ஆக ஒரு பாட்டாளி வர்க்கத்தின் முதன்மையான இலக்கு அல்லது புரட்சியின் முதன்மையான இலக்கு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே. அரசியல் அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து வீழ்த்தப்பட வேண்டிய அதிகார அமைப்பையும், நிறுவப்பட வேண்டிய அதிகார அமைப்பையும் கட்சி திட்டமிடுகிறது. இதனை அரசியல் அரங்கிலிருந்து ஆராய்கிறது, தீர்மானிக்கிறது. இவ்வாறுதான் முதன்மை முரண்பாடு கண்டறியப்படுகிறது.
முதன்மை முரண்பாட்டை தீர்மானிப்பது புரட்சியின் இடைக் கட்டத்தை கண்டறியவும், இடைக்கட்டத்தை தீர்க்க குறிப்பான திட்டம் வைக்கப்படுவதும் புரட்சியின் தேவையாகி விடுகிறது. முதன்மை முரண்பாடு, இடைக்கட்டம், குறிப்பான திட்டம் இம்மூன்றிற்குமான இயங்கியல் உறவு என்பது இத்தகையதே.
(4) பக்கம் 24இல்: “இந்த சூழ்நிலைகளில் நமது குறிப்பான திட்டம் அல்லது வேறுவார்த்தைகளில் கூறுவதெனில் மக்களின் உடனடி கோரிக்கைகள் என்ன? பின்வருவனவற்றைப் பார்போம்" என அறிக்கையில் கூறிவிட்டு, பக்கம் 24 -லிருந்து பக்கம் 26 வரைக்கும் உடனடி கோரிக்கைகளைப் பட்டியல் இட்டுள்ளது. இதில் குறிப்பான திட்டம் என்பதை உடனடிக் கோரிக்கைகள் எனக் கூறுவதில் தவறில்லை. அதே நேரத்தில் மூலயுத்தி முழக்கங்களுக்கும் செயலுத்தி முழக்கங்களுக்கும் வேறுபாடு இல்லாமல் ஒன்றாக வைத்திருப்பது குழப்பமானது. அறிக்கை குறிப்பிடும் 'இந்துத்துவ பாசிசத்தை முறியடிப்போம்!" என்பதை குறிப்பான திட்டத்தின் மூலயுத்தி முழக்கமாகவும், 'அனைத்து அதிகாரங்களும் தேசிய குடியரசுகளுக்கே (மாநிலங்களுக்கே)" என்பதை குறைந்தபட்ச திட்டத்தின் மூலயுத்தி முழக்கமாகவும் கொள்ளலாம். மற்றவை மக்களை தயார் படுத்துவதற்காக வைக்கப்படும் குறைந்தபட்ச திட்ட அல்லது குறிப்பான திட்ட செயலுத்தி முழக்கங்களாகும். இப்படி வேறுபடுத்திக் காட்டுவது அவசியம். இல்லையெனில் இவ்வளவு குறிப்பான திட்டமா? எனக் குழப்பம் வரும்.
(5) முதன்மை முரண்பாடு என்றும் குறிப்பான திட்டம் மற்றும் உடனடி கோரிக்கைகள் என்றும் அறிக்கையின் கீழ்கண்ட பக்கங்களில் உள்ளன. அவை,
- பக்கம் 23 இல்: “இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும் - மொழி வழி தேசியஇனங்கள் மற்றும் பழங்குடிகளுக்கான முரண்பாடே முதன்மை முரண்பாடாக இன்றைய கட்டத்தில் உள்ளது. இதுவே தமிழகத்தில் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும் - தமிழ்த் தேசிய மக்களுக்குமான (உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்) முதன்மை முரண்பாடாக உள்ளது."
- பக்கம் 24 இல்: பக்கம் 24 இல் இருந்து 26 வரையிலுமான பட்டியலில் குறிப்பான திட்டம் அல்லது உடனடி கோரிக்கைகள் 52 கோரிக்கைகள் உள்ளன.
- பக்கம் 28 இல்: “தாராளமயம், தனியார் மயம், உலகமயம் கடந்த இருபதாண்டுகளில் அனைத்து தளங்களிலும் பரவி விரவி வருகிறது. இதுவே இன்று முதன்மை சிக்கலாக முன்வந்துள்ளது. தீர்க்க வேண்டிய முதன்மை முரண்பாடாக முன்நிற்கிறது."
பக்கம் 30 இல்: “இந்துத்துவா பாசிசத்திற்கான வளர்ச்சி இதற்கெதிரான முரண்பாட்டை முக்கிய முரண்பாடாக வளர்த்து வருகிறது."
இவ்வாறு பல முதன்மை முரண்பாடுகளையும், பல குறிப்பான திட்டங்களையும் ஒரே நேரத்தில் அறிக்கை முன்வைத்துள்ளது. ஒரு சிக்கலான வளர்ச்சிப் போக்கில் நிலவும் பல்வேறு முரண்பாடுகளில் எந்த முரண்பாடு பிற முரண்பாடுகளின் வாழ்வையும் வளர்ச்சியையும் தீர்மானிப்பதாகவும், அவற்றின் மீது செல்வாக்கு செலுத்துவதாகவும் இருக்கிறதோ அந்த முரண்பாடே முதன்மை முரண்பாடாகும் என்பதுதான் மார்க்சியம். இந்த கருத்தை உள்ளடக்கிய மாவோவின் மேற்கோளைத்தான் பக்கம் 21 இல் போராளி அறிக்கை எடுத்துக் காட்டுகிறது. அப்படி இருக்க எத்தனை முதன்மை முரண்பாடுகள்? எத்தனை குறிப்பான திட்டங்கள்? இவ்வாறு போராளி அறிக்கை முன்வைப்பது தெளிவற்று குழப்புவதாக இருக்கிறது.
(6) நமது குறிப்பான திட்டம் வரைவு-2016 இல் முன்வைத்த அறிக்கையை 2019 ஜூலையில் கூடிய பொதுமையர் பரப்புரை மன்றத்தின் ஒருங்கிணைப்புக் குழுவில் மாறியுள்ள அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றியுள்ளனர். அதில் நமது குறிப்பான திட்டம் ஆவணம் முன்வைத்த இடைக்கட்டம் அதாவது உலகமய, தாரளமய, தனியார் மய எதிர்ப்பு தொடரும் அதே வேளையில் முதன்மை முரண்பாடு மாறியுள்ளது என்றும், நவீன பார்ப்பனிய-இந்துத்துவ பாசிசக் கும்பலுக்கு எதிரான முரண்பாடே முதன்மை முரண்பாடு என்றும், இக்கட்டம், இடைக்கட்டத்திற்குள் துணைக் கட்டமாக பார்க்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். இவற்றினை ஆராய்வோம்.
உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்பது இரண்டாம் உலகப் போருக்கு பிறகான புதுக்காலனியம் ஆகும். ஏகாதிபத்தியத்தின் வடிவம் மாறியுள்ளேது தவிர உள்ளடக்கம் மாறவில்லை. இதனைத்தான் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஜனநாயகப் புரட்சியாக பெரும்பாலான மார்க்சிய - லெனினிய குழுக்கள் அடிப்படை முரண்பாடாக தீர்மானித்துள்ளன. இது உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்குமான முரண்பாட்டால் தீர்மானிக்கப்படுவதாகும். 1947க்கு முன் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கும் இந்தியாவிற்கும் நிலவிய முதன்மை முரண்பாடுபோல் இன்றைய புதிய காலனிய உலகமயமாக்கலை முதன்மை முரண்பாடாகக் காட்டுவது தவறானதாகும். தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கல் ஆன புதிய காலனியத்தை முதன்மை முரண்பாடாக காட்டுவது பல உலக ஏகாதிபத்தியங்களை ஒருசேர எதிர்த்து ஒரே நேரத்தில் போராடுவதாக இருக்கிறது. அறிக்கை இதனை தெளிவுபடுத்த வேண்டும். அதாவது ஒரு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமா? அல்லது அனைத்து ஏகாதிபத்தியங்களும் எதிரான போராட்டமா? உலக ஏகாதிபத்தியங்களைத் தாங்கி பிடிக்கும் உள்நாட்டு ஆளும் வர்க்கங்கள் எவை என்பதை காட்டி அதற்கு எதிராகப் போராட வேண்டும். இல்லாவிட்டால் காற்றில் கத்திச் சண்டை போடுவதாக அமைந்துவிடும்.
அடிப்படை முரண்பாடுகளைத் தீர்மானிப்பதிலும், குறிப்பிட்ட அரசியல் சூழலில் முதன்மை முரண்பாட்டைக் கண்டறிந்து இடைக் கட்டங்களுக்கான குறிப்பான திட்டம் வைத்து ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் சென்றதிலும் சீனா முன் மாதிரியாகும். காலனிய, அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ சீனத்தில் அடிப்படை முரண்பாடுகளாக சீனத்துக்கும் ஏகாதிபத்தியத்திற்குமான முரண்பாடும், நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட சீன மக்களுக்குமான முரண்பாடும் சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி கட்டம் முழுவதும் மாறவில்லை. அதே நேரத்தில் இக்கட்டம் முழுவதிலும் மூன்று முதன்மை முரண்பாடுகள் தீர்மானிக்கப்பட்டு நான்கு இடைக் கட்டங்களில் குறிப்பான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை, (1) வடக்கு படையெடுப்பு (2) விவசாய புரட்சி யுத்தம் (3) ஜப்பானிய ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தம் (4) புரட்சிகர உள்நாட்டு யுத்தம். இந்நான்கு இடைக்கட்டங்களில் முதல் இரு இடைக்கட்டங்களில் நிலப்பிரபுத்துவத்துக்கும் பரந்துபட்ட சீன மக்களுக்குமான முரண்பாடு முதன்மையாகவும், மூன்றாவது இடைக்கட்டத்தில் ஜப்பானிய ஏகாதிபத்திற்கும், நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட சீன மக்களுக்குமான முரண்பாடும், சீனாவுக்குமான முரண்பாடு முதன்மையாகவும், நான்காவது இடைக்கட்டத்தில் பெரு நிலப்பிரபுத்துவ வர்க்கம், பெரு முதலாளி வர்க்கம் ஆகியவற்றிற்கும் பரந்துபட்ட சீன மக்களுக்குமான முரண்பாடு முதன்மையாகவும் இருந்துள்ளன. ஆக சீனாவில் ஜனநாயகப் புரட்சியானது நான்கு இடைக்கட்டங்களில் முன்னேறி வந்துள்ளது. இவ்வாறு எந்த ஒரு அரசியல் சூழலிலும் இடைக் கட்டத்திற்கு ஒரு துணைக்கட்டம் என்ற தேவை அரசியல் அறிவியலில் தோன்றுவதில்லை.
எனவே, நவீன பார்ப்பனிய - இந்துத்துவ பாசிச கும்பலுக்கு எதிரான முரண்பாடே முதன்மை முரண்பாடு எனத் தீர்மானித்ததில் தவறில்லை. அதே நேரத்தில் உலகமய தாராளமய தனியார்மய இடைக்கட்டத்திற்கு பாசிசத்தை ஒரு துணைக் கட்டமாக கூறுவது கோட்பாட்டு வழியில் தவறானது. பாசிசம், உலகமயம் ஆகிய இரண்டிற்குமான இயங்கியல் உறவை தனித்தனியாக பிரித்துவிடும் தவறை இழைப்பதாக இருக்கிறது.
(7) பக்கம் 34 இல்: “நாம் மாநிலங்களுக்குப் பதிலாக அனைத்து அதிகாரங்களும் பெற்ற சுதந்திர குடியரசுகளுக்கான போராட்டத்தை கூர்மைபடுத்த வேண்டும். இந்திய ஒன்றிய கட்டமைப்பிற்கு மாறாக விருப்ப பூர்வமான கூட்டரசுக்குப் போராட வேண்டும்.” என போராளி அறிக்கை கூறுகிறது. அதற்கான வாய்ப்பு இந்திய துணைக் கண்டத்தில் இல்லை என எமது விமர்சன அறிக்கையின் முன்பகுதியில் “பாட்டாளி வர்க்கத்தின் தேசியமும் சர்வதேசியமும்” தலைப்பில் தெளிவாக விளக்கி இருக்கிறோம்.
(8) அறிக்கை இடைக்கால அரசமைப்பது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. “தமிழ்த் தேச மக்கள் முன்னணி “மோடி 2.0 முதல் பதிப்பு-2019” அறிக்கை மீதான விமர்சன குறிப்புகளில் ஐக்கிய முன்னணி அரசு அமைப்பது பற்றி விவாதித்துள்ளோம்.
(தொடரும்)
- ச.பாரி, தமிழத் தேச இறையாண்மை